தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


Home » » உச்ச நீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி

உச்ச நீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி



காவிரியில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைக் கர்நாடக அரசும், கர்நாடகக் கட்சிகளும் எப்பொழும் பொருட்படுத்துவதில்லை. அவற்றை நிறைவேற்றுவதில்லை. உச்சநீதிமன்றமும், நீதிமன்ற அவமதிப்புச் செய்யும் கர்நாடக முதலமைச்சரைத் தட்டிக் கேட்பதில்லை; தட்டிக் கொடுக்கிறது.

காவிரித் தீர்ப்பாய்த்தின் இறுதித் தீர்ப்பு 05.02.2007 அன்று வந்தது. அத்தீர்ப்பு தமிழ்நாட்டை வஞ்சித்து விட்டது. மோசடித் தீர்ப்பு என்று கூறி அதன் நகலைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி எரித்துப் போராடியது. தமிழக உழவர் முன்னணியும் இப்போராட்டத்தில் ஈடுபட்டது. திருச்செந்தூரில் இப்போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, நிபந்தனைப் பிணையில் வெளியில் வந்து, 4 ஆண்டுக்குப் பிறகே வழக்கலிருந்து விடுதலை ஆயினர். இடைக்காலத் தீர்ப்பில் 205 .மி. (டி.எம்.சி) தண்ணீரைக் கர்நாடகம் தமிழகத்திற்குத் திறந்துவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இது மிக மிகக் குறைவானது. 1934ஆம் ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்பட்டதிலிருந்து 1974ஆம் ஆண்டுவரை ஐம்பதாண்டுகளில் ஓர் ஆண்டுக்கு சராசரியாக 361.3 .மி. தண்ணீர் கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு வந்துள்ளது. இடைக்காலத் தீர்ப்பு இதை மிகவும் குறைத்து 205 .மி. என்று கூறியது. இறுதித் தீர்ப்பு அதையும் குறைத்து 192 .மி. என்று கூறியது. இந்தத் தீர்ப்பையும் கர்நாடக அரசு செயல்படுத்த மறுத்தது.

இறுதித் தீர்ப்பு தொடர்பாகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் போட்ட வழக்கில், இறுதித் தீர்ப்பை உடனே அரசிதழில் வெளியிட்டு செயல்படுத்துமாறு உச்சநீதிமன்றம் இந்திய அரசுக்கு ஆணையிட்டது.

அவ்வாணையைச் செயல்படுத்தாமல் இந்தியஅரசு காலம் கடத்தி வந்தது. மீண்டும் உச்சநீதிமன்றம் 2013 பிப்ரவரி 20க்குள் இறுதித் தீர்ப்பை நடுவண் அரசின் அரசிதழில் வெளியிடுமாறு கெடு விதித்தது. அதன்பிறகு இந்திய அரசு 19.02.2013 அன்று காவிரி இறுதித் தீர்ப்பைத் தனது அரசிதழில் வெளியிட்டது. அத்தீர்ப்பை செயல்படுத்துவதற்கான பொறியமைவாய் காவிரி மேலாண்மை வாரியமும், அவ்வாரியத்திற்கு உதவியாய் காவிரி ஒழுங்குமுறைக் குழுவும் உடனடியாக அமைக்க வேண்டும் என்று இறுதித் தீர்ப்பில் கூறியிருந்தது. அவ்விரண்டு அமைப்பையும் அமைத்து அவற்றையும் அதே 19.02.2013 அரசிதழில் இந்திய அரசு வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், அக்குழுக்களை இந்திய அரசு அமைக்கவில்லை.

காவிரி இறுதித் தீர்ப்பின் ஒரு பாதியை அரசிதழில் வெளியிட்டு விட்டு மறுபாதியை வெளியிடாமல் விட்டுவிட்டது நடுவண் அரசு. அதாவது பாதிக்கிணறு தாண்டிய கதையாகக் குழிக்குள் விழுந்து கிடக்கிறது காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு.

மேலாண்மை வாரியம் அமைத்திட ஆணையிடுமாறு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுப் போட்டது. அதற்கு அவசரம் இல்லை, அடுத்த ஆண்டு அசல் வழக்கு வரும்போது எடுத்துக் கொள்ளலாம் என்று கூறி 05.08.2013 அன்று அம்மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். அதற்கு உச்சநீதிமன்றம் கூறிய காரணம், “இப்பொழுது மழைபெய்து இரு மாநிலங்களிலும் தண்ணீர் நிறைய இருக்கிறது.” என்றது.

இரு மாநிலங்களுக்கிடையே மரபு வழிப்பட்ட உரிமை பற்றிய வழக்கு இது. உரிமைச் சிக்கலில் நீதியை நிலைநாட்ட வேண்டிய உச்சநீதிமன்றம், இப்பொழுது தண்ணீர் இருக்கிறது, அவசரமில்லை என்று கூறியது சரியா? 1974ஆம் ஆண்டிலிருந்து காவிரி உரிமை கர்நாடகத்தால் பறிக்கப்பட்டு, பெரும் பொருள் இழப்புகளுக்கும் உயிர் இழப்புகளுக்கும் உள்ளாகி வாழ்வுரிமை பாதிக்கப்பட்டுள்ளனர் தமிழ் மக்கள்.

மூன்று அணைகள் கட்டுவது பற்றிய திட்டத்தைக் கர்நாடக அரசு வெளியிட்டபின் மறுபடியும் ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது தமிழக அரசு. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து அதன் பொறுப்பில் கர்நாடக - தமிழக காவிரி அணைகளின் நீர் நிர்வாகத்தை உடனடியாக ஒப்படைக்க வேண்டும். இல்லாவிடில் புதிய அணைகள் கட்டி ஒரு சொட்டுத் தண்ணீர்க் கூட தமிழ்நாட்டிற்கு வராமல் கர்நாடகம் தடுத்துவிடும். எனவே மேலாண்மை வாரியம் உடனே அமைக்கவும் 2013 சனவரி 31க்குள் கர்நாடகம் தரவேண்டிய 26 .மி. பாக்கித் தண்ணீரைத் திறந்து விடவும் ஆணையிட வேண்டும் என்று தமிழக அரசு கோரியது.

அதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 03.12.2013 அன்று அளித்த மறுமொழியும் கூறிய முடிவும் அதிர்ச்சி தரத்தக்கது. நீதிக்குப் புறம்பானது.

நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் நீதிபதிகள் மதன் பி.லோகுர், குரியன் சோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு பின்வருமாறு கூறியது. நீதிபதி லோதா தான் முடிவை வெளியிட்டார்.

உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்குமுறைக் குழு அடங்கிய இரு அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை அவசரமாக விசாரிக்க வேண்டியதில்லை. தமிழக அரசின் இந்த மனுவுக்கு நடுவண் அரசும் கர்நாடக அரசும் நான்கு வாரங்களுக்குள் விடை அளிக்க வேண்டும். அணை கட்டுதல் போன்ற பெரும் திட்டங்களை நடுவண் அரசின் அனுமதியைப் பெறாமல் ஒரு மாநில அரசு நிறைவேற்றிவிட முடியாது. எனவே அச்சம் வேண்டாம்.

தமிழகத்திற்குத் தண்ணீர்த் தருவதைப் பார்த்துக் கொள்ள இடைக்கால ஏற்பாட்டினை (காவிரி மேற்பார்வைக் குழு) உச்ச நீதி மன்றம் செய்துள்ளது.

கர்நாடகம் தனது ஆளுகைக்குட்பட்ட இடத்தில் எதைச் செய்தாலும் அதைத் தமிழகம் எதிர்க்கக் கூடாது. மழை நன்கு பெய்து நீர்வரத்து சீராக உள்ளது. போதிய நீர் கிடைப்பதைக் கடவுள் கவனித்துக் கொள்வார். அண்டை மாநிலத்துடன் தமிழக அரசு எதற்கெடுத்தாலும் சச்சரவில் ஈடுபடக் கூடாது.

கர்நாடக அரசு பரிசீலிக்கும் நீர்ப்பாசனத் திட்டங்களால், தமிழக நலன் பாதிக்கப்படும் என்று தமிழக அரசு அச்சம் கொள்ள வேண்டாம். சனவரி வாக்கில் வரும் அசல் வழக்குடன் சேர்த்து இதை விசாரித்துக் கொள்ளலாம்.” (தினமணி, The Hindu - 04.12.2013)

தண்ணீர்ப் பற்றாக்குறை காலத்தில் நீதிகேட்டு உச்சநீதிமன்றத்திற்குப் போனபோது இரு மாநிலங்களிலும் தண்ணீர் போதிய அளவில்லை மழை பெய்யட்டும் என்றார்கள்; இப்போது கர்நாடக அணைகளில் நிறையத் தண்ணீர் இருக்கிறது, தமிழகத்திற்கு உரிய பங்கு நீரைத்தர ஆணையிடுங்கள் என்று கோரினால், அதுதான் தண்ணீர் இரு மாநிலங்களிலும் இருக்கிறதே அவசரம் என்ன என்று கேட்கிறார்கள்.

பற்றாக்குறை இருந்தால் மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது; உபரி நீர் வந்தால் மேலாண்மை வாரியம் தேவை இல்லைஎன்பதுதான் உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடோ?

உச்சநீதிமன்றம் கட்டப்பஞ்சாயத்துக்கும் குறைவாக நடந்து கொள்வது வேதனை அளிக்கிறது.

அடுத்து, கடவுள் பார்த்துக் கொள்வார் என்று நீதிபதிகள் கூறினால், சிக்கலுக்குத் தீர்வு தேடிக் கோயிலுக்குப் போகலாமே, உச்சநீதிமன்றம் போக வேண்டியதில்லையே! நல்ல வேளை அவ்வாறான அறிவுரையைத் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் வழங்கவில்லை.

புதிதாக அணைகள் கட்ட கர்நாடகத்திற்கு அவ்வளவு விரைவாக இந்தியஅரசு அனுமதி வழங்காது என்பது போல் ஒரு கருத்தை உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கர்நாடகம் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை எப்பொழுதாவது மதித்து செயல்படுத்தியிருக்கிறதா?

காவிரி ஆணையத்தைக்கூட்ட மறுத்துவந்த இந்திய அரசுக்கு ஆணையத்தைக்கூட்ட கட்டளை இடுமாறு கேட்டு, 2012இல் தமிழகஅரசு தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம், ஆணையத் தைக் கூட்டுமாறு ஆணையிட்டுவிட்டு அதுவரை இடைக்கால ஏற்பாடாக 1 நாளைக்கு ஒரு நொடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்திற்குக் கட்டளை இட்டது.

உடனடியாகக் கர்நாடகத்தில் ஒரு சொட்டுத் தண்ணீர்க்கூடத் திறந்துவிடக் கூடாது என்று அரசியல் கட்சிகள், உழவர் அமைப்புகள் அனைத்தும் போராடின. கிருஷ்ணராஜ சாகரில் மதகுகளில் மறியல் செய்தனர். ஒரு சமரசத் திட்டமாக முன்னாள் பிரதமரும் முன்னாள் கர்நாடக முதல்வருமான தேவகௌடா, மூன்று நாளுக்கு மட்டும் உச்சநீதிமன்றம் சொன்னபடி தண்ணீர்த் திறந்து விடுங்கள். பிறகு நிறுத்திக் கொள்ளலாம் என்றார். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காங்கிரசுக்காரரான இப்போதைய முதல்வர் சித்தராமையா உச்சநீதிமன்றம் சொன்னதற்காகத் தண்ணீர் திறந்து விட வேண்டியதில்லை. ஒரு சொட்டுத் தண்ணீர்க்கூட திறந்து விடக்கூடாது என்றார். அச்செய்தி ஏடுகளில் வந்தது.

ஓர் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மூன்று நாள் மட்டும் நிறைவேற்றி விட்டுப் பின்னர் நிறைவேற்ற வேண்டாம் என்று ஒரு முன்னாள் பிரதமர் சொன்னது நீதிமன்ற அவமதிப்பு என்று உச்ச நீதிமன்றம் தன் விருப்பப்படி (Suo Moto) வழக்குத் தொடுத்திருக்கலாம். உச்ச நீதிமன்றம் அவ்வாறு செய்யவில்லை? ஒரு சொட்டுத் தண்ணீர்க்கூட விடக்கூடாது என்று கூறிய சித்தராமையா மீது உச்ச நீதிமன்றம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

இரண்டு நாள் மட்டும் ஏதோ ஓரளவு தண்ணீர் திறந்துவிட்டு மூன்றாம் நாளிலிருந்து கர்நாடகம் கிருஷ்ணராஜ சாகரை மூடிவிட்டது. அப்போது பா..-வின் செட்டர் முதலமைச்சராக இருந்தார். உச்ச நீதிமன்றத்தால் அவரைக் கட்டுப்படுத்த முடிந்ததா? அந்த முதல்வர் மீது உச்ச நீதிமன்றம் தானாகவே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்திருக்கலாமே! குறைந்தது, உச்ச நீதி மன்றத்தில் வந்து மன்னிப்புக் கேட்கக் கோரியிருக்கலாமே! எதுவுமில்லை!

பிறகு எந்தத் தகுதியில் உச்ச நீதிமன்றம். இப்போது, புதிய அணைகள் உடனடியாக கட்ட முடியாது என்கிறது?

எல்லாவற்றையும்விட மிகப்பெரிய அநீதி என்னவெனில் அண்டை மாநிலத்துடன் அடிக்கடி சண்டைச் சச்சரவு வைத்துக் கொள்ளாதீர்கள் என்று தமிழ்நாட்டிற்கு நீதிபதி லோதா அறிவுரை வழங்கியதுதான்!

அவருடைய அறிவுரையில் இன்னொன்றும் கவனத்திற்குரியது. கர்நாடகம் தனது ஆளுகைக்குட்பட்ட இடத்தில் எதைச் செய்தாலும் அதைத் தமிழகம் எதிர்க்கக் கூடாது என்று நீதிபதி லோதா கூறினார். அடாவடி செய்பவனுக்கு அரவணைப்பு; அடங்கிக் கிடப்பவனுக்கு அதட்டல்! மிரட்டல்! என்ன நீதியோ?

கர்நாடகம் 26 .மி.. தண்ணீரை நடப்புப் பருவத்திற்குத் தரவேண்டும் என்றும் அதற்கு ஆணையிடுமாறும் தமிழக அரசு கேட்டதற்கு, அதற்கெல்லாம் இடைக்கால ஏற்பாடாக காவிரி மேற்பார்வைக் குழு அமைத்துள்ளோம்; அது பார்த்துக் கொள்ளும் என்று கூறி உச்ச நீதிமன்றம் ஒதுங்கிக் கொண்டது. ஆனால் நடந்த உண்மையென்ன? உச்ச நீதிமன்றம் அமைத்த இடைக்கால - காவிரி மேற்பார்வைக் குழு தான் 26 .மி. தண்ணீரைக் கர்நாடகம் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்றது. அதற்குக் கர்நாடக அதிகாரிகள் - அதெல்லாம் திறந்துவிட முடியாது என்று அக் கூட்டத்திலேயே சொல்லிவிட்டு வந்து விட்டார்கள்.

இந்த உண்மைகள் தமிழக அரசின் மனுவில் இருந்தும் அதையெல்லாம் சட்டை செய்யவில்லை உச்ச நீதிமன்றம். கர்நாடகம், தன் மீது சினங்கொண்டுவிடக் கூடாது என்பதில் மட்டுமே உச்ச நீதிமன்றம் கவனமாக இருந்தது.


கர்நாடகத்தின் இத்தனை அடாவடித்தனங்களுக்கும் உச்ச நீதிமன்றம் ஒத்துப்போவது ஏன்? இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று இந்திய அரசு, தமிழகத்திற்கெதிராகவும் கர்நாடகத்திற்காதரவாகவும் நடந்து கொள்வது! இரண்டு, தமிழக அரசும் தமிழகக் கட்சிகளும் உரிமைக் காப்பிற்கான மக்கள் எழுச்சியை உண்டாக்காதது.

அடுத்த பகுதி 

காவிரிச்சிக்கல் - ஓர் முழுமையான வரலாறு
  1. காவிரி தமிழரின் செவிலித்தாய்
  2. நடுவர் மன்றத் தீர்ப்பு கூறுவது என்ன?
  3. ஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு
  4. உச்சநீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி
  5. இந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்
  6. போராட மறுக்கும் பெரிய கட்சிகள்
  7. நம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு
  8. மக்கள் என்ன செய்கிறார்கள்?
  9. “காவிரிக் குடும்பம்” எனும் இனத்துரோக அமைப்பு
  10. கங்கை - காவிரி எனும் பித்தலாட்ட சூழ்ச்சித் திட்டம்
  11. பன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதில்லை? 
  12. எப்போது வெல்வோம்? என்ன போராட்டம் நடத்துவது?
Share this video :

0 கருத்துகள்:

Post a Comment

 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger