தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது! தமிழ்நாடு அரசு தகுந்த முறையில் வாதிடவில்லை! பெ. மணியரசன் அறிக்கை!

காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது! தமிழ்நாடு அரசு தகுந்த முறையில் வாதிடவில்லை! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை! 

நடுவண் அரசின் நீர்வளத்துறைச் செயலாளர் சசிசேகர் தலைமையிலான காவிரி மேற்பார்வைக் குழு, இன்று (19.09.2016), 21.09.2016 முதல் ஒரு நாளைக்கு ஒரு நொடிக்கு 3,000 கன அடி தண்ணீர் வீதம் 10 நாட்களுக்குக் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டுமென்று முடிவு வழங்கியுள்ளது. இந்த மேற்பார்வைக் குழு கர்நாடகத்திற்கு அஞ்சி அம்மாநிலத்தின் மனம் நோகாமல் வழங்கிய தீர்ப்பு இது! 3,000 கன அடி தண்ணீர் சம்பா சாகுபடிக்கு சிறிதளவுகூட போதாது. இது ஒருதலைச்சார்பான தீர்ப்பு!

ஏனெனில், காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள பற்றாக்குறைக் காலப் பகிர்வுத் திட்டத்தின் அடிப்படையில், இப்பொழுது கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரில் தமிழ்நாட்டிற்குரிய விகித நீரை கணக்கிட்டு அந்த அடிப்படையில், ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்று மேற்பார்வைக் குழுக் கூறியிருந்தால், அது சட்டப்படியான ஒரு முடிவாக இருக்கும். அவ்வாறான கணக்கை மேற்பார்வைக் குழு கவனத்தில் எடுத்துக் கொள்ளவே இல்லை!

காவிரி மேற்பார்வைக் குழு தன் சார்பில் ஒரு வல்லுநர் குழுவை கர்நாடகத்திற்கு அனுப்பி, அங்குள்ள காவிரி நீர்த்தேக்கங்களில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்ற உண்மையை அறிந்து, அதை அடிப்படையாகக் கொண்டு, பற்றாக்குறைப் பகிர்வு விகிதப்படி தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டிருக்க வேண்டும். காவிரி மேற்பார்வைக் குழு தனது கடமையில் தவறியிருக்கிறது!

தமிழ்நாடு அரசு உருப்படியாக வாதம் செய்கிறதா என்றால், அதுவும் இல்லை!
கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய பாக்கித் தண்ணீர் 64 டி.எம்.சி. என்றும், அதைத் திறந்துவிட ஆணையிட வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசு வாதிட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோல், தமிழ்நாடு அரசு வாதிட்டிருந்தால் அது சரியான வாதமல்ல!

தற்போது, கர்நாடக அணைகளில் இருக்கின்ற தண்ணீரில் பற்றாக்குறைப் பகிர்வுத் திட்டப்படி எவ்வளவு திறந்துவிட வேண்டும் என்பதை முதன்மைப்படுத்தி வாதிட்டு, அதற்கு வலு சேர்க்கும் வகையில் கர்நாடகம் தர வேண்டிய பாக்கித் தண்ணீரின் அளவை கூறியிருந்தால், தமிழக அரசின் வாதம் வலுவாக இருந்திருக்கும்.

பொதுவாகவே கடந்த ஆகத்து 22-ஆம் நாள் முதல் இன்றுவரை, தமிழ்நாடு அரசு காவிரி வழக்கில் கடைபிடித்திருக்கும் வாத முறைகள் முன்னுக்குப்பின் முரண்பட்டும் முதன்மைப்படுத்த வேண்டிய தர்க்கத்தை முதன்மைப்படுத்தாமல் பின்னுக்குத் தள்ளியும் வந்திருப்பது தெரிகிறது. இவ்வழக்கு வாதங்கள் இராணுவ இரகசியங்கள் அல்ல. இவற்றை முழுமையாக தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்.

கர்நாடகப் பொதுப்பணித்துறை தனது இணையதளத்தில், அம்மாநிலத்திலுள்ள காவிரி அணை நான்கிலும் 19.09.2016 அன்று 26.17 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளதாகக் குறைத்துக் காட்டியுள்ளது. இவ்வழக்கு 05.09.2016 அன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது, 51 டி.எம்.சி. தண்ணீர் இருப்பதாக கர்நாடக அரசுத் தரப்பு கூறியது. அதன்பிறகு, 12.09.2016 அன்று உச்ச நீதிமன்றத்தில் 41 டி.எம்.சி. இருப்பதாகக் கூறியது. இப்போது, 26.17 டி.எம்.சி. இருப்பதாகக் கூறியுள்ளது. இவை அனைத்தும் தவறானத் தகவல்கள்! அவர்களின் பொய்க்கணக்குப்படியே பார்த்தால்கூட, கடந்த 14 நாட்களில் 25 டி.எம்.சி. தண்ணீர் எங்கே போனது?

நான்கு அணைகளிலும் உள்ள நீர் மட்டுமின்றி, 437 ஏரிகளை நீர்த் தேக்கங்களாக விரிவுபடுத்தி அவற்றில் சேமித்து வைத்துள்ள தண்ணீரையும் கர்நாடகத்தின் கணக்கில் சேர்க்க வேண்டும். அதற்காகத்தான், தமிழ்நாடு அரசு தனது பொதுப்பணித்துறை அதிகாரிகளை கர்நாடகத்திற்கு அனுப்பி அங்குள்ள காவிரி நீர்த்தேக்கங்களில் உள்ள தண்ணீரை கணக்கெடுத்து அதை உச்ச நீதிமன்றத்திலும் காவிரி மேற்பார்வைக் குழுவிலும் தாக்கல் செய்ய வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்தது.

ஆனால், தமிழ்நாடு அரசு உழவர்களின் ஓலக்குரலை கண்டு கொள்ளவே இல்லை! சரியான முன் தயாரிப்பு இல்லாமல், இறுதித் தீர்ப்பில் மாத வாரியாக வழங்கப்பட்ட நீரின் அளவை மட்டும் கவனத்தில் வைத்துக் கொண்டு, இவ்வளவு பாக்கி – அவ்வளவு பாக்கி என்று சத்தற்ற வாதம் செய்து வருகின்றது.

நாளை (20.09.2016) உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு வரவுள்ளது. அதில், சரியான தர்க்கத்தை முன்வைத்து வாதாடி தமிழ்நாட்டு உரிமையை நிலை நாட்ட - சம்பாவிற்கு உரிய தண்ணீரைப் பெற தமிழ்நாடு அரசு முழுமூச்சாக முன் தயாரிப்புப் பணியில் இறங்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்களை சிறையில் அடைக்காவிட்டால் தமிழ்நாட்டில் இதற்கு எதிர்வினைகள் உருவாவதைத் தவிர்க்க முடியாது! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!



தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்களை
சிறையில் அடைக்காவிட்டால் தமிழ்நாட்டில் இதற்கு எதிர்வினைகள் உருவாவதைத் தவிர்க்க முடியாது!



காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
தோழர் பெ. மணியரசன் அறிக்கை! 


பெங்களுருவில் நேற்று (10.09.2016) தமிழ் இளைஞர் ஒருவர், கன்னட வெறியர்களால் அடித்து, மிதித்து, மண்டியிடச் செய்து, மன்னிப்புக் கேட்க வைத்து, கர்நாடகாவிற்கு “ஜே” போட சொல்லி, அத்துடன் நிறைவடையாமல் மேலும் மேலும் தாக்கி செத்த நாயை இழுப்பது போல், இழுத்துச் சென்று தெருவில் போட்டுவிட்டுப் போன கொடும் காட்சியை ஊடகங்களில் கண்டு உள்ளம் கொதிக்கிறது.

அந்தத் தமிழ் இளைஞன் செய்த குற்றம் என்ன? சட்டப்படி தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய காவிரி நீரை அடைத்து வைத்துக் கொண்டுள்ள கர்நாடகம், உச்ச நீதிமன்றம் ஒரு பிரிவு தண்ணீரை தமிழ்நாட்டிற்குத் திறக்க உத்தரவிட்டவுடன் அதைக் கண்டித்து கர்நாடகாவில் முழு அடைப்பை நடத்தியது. அதை முகநூலில் இந்தத் தமிழ் இளைஞர் விமர்சித்திருந்ததாகக் கூறுகிறார்கள். இதனால் ஆத்திரமடைந்து பழிவாங்குவதற்கு அந்த இளைஞனை, பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டமுள்ள சாலையில் மேற்கண்டவாறு தாக்கி சித்திரவதை செய்து இழிவுபடுத்தியுள்ளார்கள்.

நாம் தொடர்ந்து சொல்லி வருவது, காவிரிச் சிக்கல் கன்னடர்களைப் பொறுத்தவரை தண்ணீர் சிக்கல்ல, அது இனச்சிக்கல் என்பதாகும். கன்னடர்களைப் பொறுத்தவரை தமிழ் இனத்தை பழிவாங்கும் சிக்கல்தான் காவிரிச் சிக்கல். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களும், அனைத்து கட்சிகளும், உழவர் இயக்கங்களும் இந்த உண்மையை உணர வேண்டும்.

காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை 1991 திசம்பரில், இந்திய அரசு அரசிதழில் வெளியிட்ட போது, அப்போதிருந்த பங்காரப்பாவின் காங்கிரசு ஆட்சி, அதைக் கண்டித்து கர்நாடகத்தில் முழு அடைப்பு நடத்தியது. அந்த முழு அடைப்பின்போது, கன்னட வெறியர்கள் காலங்காலமாக கர்நாடகத்தில் வாழ்ந்து வரும் அப்பாவித் தமிழர்கள் பலரை இனப்படுகொலை செய்தார்கள். தமிழர்களின் வீடுகளை, வணிக நிறுவனங்களை பல்லாயிரக்கணக்கில் எரித்தார்கள்; சூறையாடினார்கள். தமிழ்ப் பெண்களை மானபங்கப்படுத்தினார்கள். 2 இலட்சம் கர்நாடகத் தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு ஓடி வந்தார்கள். எந்த வித ஆத்திரமூட்டலிலும் ஈடுபடாத கர்நாடகத் தமிழர்கள் அப்போது கன்னட இன வெறியர்கள் இவ்வாறு தாக்கப்பட்டார்கள்.

இப்பொழுது உச்ச நீதிமன்றம் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரை, திறந்துவிட ஆணையிட்ட உடன், உடனே ஆத்திரமடைந்து மாநில அரசின் ஆதரவுடன் முழு அடைப்பு நடத்தி, தமிழ்நாட்டு பதிவெண் கொண்ட வாகனங்களைத் தாக்கி சேதப்படுத்தினார்கள். அடுத்த கட்டமாகத் தமிழ் இளைஞரைத் தாக்கியுள்ளார்கள். அந்த இனவெறிக் கயவர்களை இதுவரை கர்நாடகக் காவல்துறை கைது செய்யவில்லை. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. மாறாக, தமிழர்களுக்கு எதிரான கன்னட இனவெறித் தாக்குதலை கர்நாடக அரசும், காவல்துறையும் மறைமுகமாக ஊக்குவிக்கின்றன.

தமிழ் இளைஞர் கொடூரமாகத் தாக்கி இழிவுபடுத்தப்பட்டக் காட்சியை தொலைக்காட்சியிலும், சமூக வலைத்தளங்களிலும் பார்த்த இலட்சக்கணக்கானத் தமிழ்நாட்டு இளைஞர்கள் இரத்தம் கொதித்துப் போய் உள்ளார்கள். இது 1991 திசம்பர் அல்ல! 2016 செப்டம்பர் என்பதை கன்னட இனவெறியர்களுக்கு எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறேன்.

கர்நாடக அரசு அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கவில்லையென்றால், இது போன்ற தாக்குதல்கள் தொடர்ந்தால். அதற்கான எதிர்வினைகள் தமிழ்நாட்டிலும் பீறிட்டுக் கிளம்பும். வினை விதைத்தவன் வினையை அறுவடை செய்ய வேண்டிய நிலை தமிழ்நாட்டில் உருவாகும். எனவே, கர்நாடக அரசு உடனடியாக தமிழ் இளைஞர்களைத் தாக்கிய கயவர்களை உரியக் குற்றப்பிரிவின் கீழ் கைது செய்து, சிறையிலடைக்க வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டு அரசு, அண்டை மாநிலங்களில் தமிழினம் தாக்கப்படும் போது வேடிக்கைப் பார்க்கக் கூடாது. தமிழ் இளைஞனைத் தாக்கியக் கயவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க, தமிழ்நாடு அரசு கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டிலுள்ள மக்களும், இயக்கங்களும் காவிரிச் சிக்கலில் தமிழின உரிமைச் சிக்கலாக உணர்ந்து, இன அடிப்படையில் ஒன்று திரள வேண்டும் என்ற உண்மையை இனியாவது உணர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

உச்ச நீதிமன்றத்தைக் கண்டித்து நடந்த முழு அடைப்பை ஆதரித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது உச்சநீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? தோழர் பெ. மணியரசன் கேள்வி!


உச்ச நீதிமன்றத்தைக் கண்டித்து நடந்த முழு அடைப்பை
ஆதரித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது உச்சநீதிமன்றம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யாதது ஏன்?

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் 
தோழர் பெ. மணியரசன் கேள்வி!


காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் 05.09.2016-இல் கொடுத்த தீர்ப்பைக் கண்டித்து நேற்று (09.09.2016) கர்நாடகம் முழு அடைப்பு நடத்தியுள்ளது. இந்த முழு அடைப்பை ஆதரித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிக்கை வெளியிட்டார். அவ்வறிக்கை ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அத்துடன் அந்த முழு அடைப்புக்கு ஆதரவாக மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் முதலமைச்சர் சித்தராமையா விடுமுறை விட்டுள்ளார்.

மண்டியா மாவட்டத்தில் சாலைகளில் டயர் உள்ளிட்ட பல பொருட்களைப் போட்டு கொளுத்தி, நாள் முழுவதும் நெருப்பெறியச் செய்தார்கள். கிருஷ்ணராஜ சாகர் அணைக்குள் அத்துமீறிப் புகுந்து தமிழ்நாட்டிற்குத் திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரை தடுத்து நிறுத்த மதகுகளை மூடுவதற்கு முயன்றார்கள். தமிழ்நாடு பதிவெண் கொண்ட சரக்குந்துகள் கன்னட வெறியர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட சட்ட விரோதக் காரியங்களில் ஈடுபட்ட யார் மீதும் கர்நாடகக் காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை. இந்த சட்ட விரோதக் காரியங்கள் அனைத்தும் ஊடகங்களில் காட்சிகளாக, செய்திகளாக வெளி வந்துள்ளன. இந்த சட்ட விரோதக் காரியங்களை மற்றும் உச்ச நீதிமன்றத்தைக் கண்டிக்கும் போராட்டத்தை முதலமைச்சர் சித்தராமையா ஆதரித்து அறிக்கை வெளியிட்டும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்தும் குற்றச் செயல்களில் ஈடுபட்டோரை கைது செய்ய மறுத்தும் செயல்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தானே முன்வந்து முதலமைச்சர் சித்தராமையா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு வழக்குப் பதிவு செய்யாததன் காரணமென்ன என்ற கேள்வி தமிழ்நாட்டிலுள்ள ஏழரைக் கோடித் தமிழர்களின் நெஞ்சில் எழுந்துள்ளது.

சேதுக்கால்வாய் விரிவாக்கத் திட்டத்தை ஆதரித்து 2007ஆம் ஆண்டு நடந்த முழு அடைப்பை அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி ஆதரிக்கிறார் என்று காரணம் கூறி, அவரது ஆட்சி கலைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அப்பொழுது எச்சரித்ததையும் தமிழர்கள் நினைவில் வைத்துள்ளார்கள்.

தாமதமானாலும் இனியாவது உச்ச நீதிமன்றம் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


காவிரி உரிமை மீட்க டெல்டா மாவட்டங்களில் 1000 இடங்களில் சாலை மறியல்! காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு




காவிரி உரிமை மீட்க
டெல்டா மாவட்டங்களில்
1000 இடங்களில் சாலை மறியல்!


காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு


காவிரி உரிமை மீட்புக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம், இன்று (20.08.2016) தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார்.
தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. சி. அயனாவரம் முருகேசன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, மனித நேய மக்கள் கட்சி வணிகப்பிரிவு மாநிலச் செயலாளர் திரு. கலந்தர், மனித நேய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. அகமது கபிர், மீத்தேன் திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் பாரதிச்செல்வன், தமிழக உழவர் முன்னணி தமிழ்நாடு தலைவர் திரு. சி. ஆறுமுகம், தமிழக உழவர் முன்னணி இலால்குடி வட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. நகர். செல்லையா, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர் தோழர் ப. சிவவடிவேலு, தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. செகதீசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்தாய்வில் பங்கேற்றனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
கலந்தாய்வுக் கூட்ட முடிவுகள்
--------------------------------------------------
இவ்வாண்டு சம்பா சாகுபடிக்குக் காவிரி நீர் வராது என்று மறைமுகமாக உணர்த்துவது போல், தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி செயலலிதா காவிரி டெல்டா மாவட்டங்களில் நேரடிப் புழுதி விதைப்பிற்கு நிதி உதவித் திட்டத்தை அறிவித்துள்ளார்.

தொடர்ச்சியாகக் கடந்த ஐந்து பருவங்களில் ஐந்து இலட்சம் ஏக்கர் குறுவை சாகுபடிக்குரிய காவிரி நீரை தமிழ்நாட்டு முதலமைச்சரால் கர்நாடகத்திடமிருந்து பெற முடியவில்லை.
இந்திய அரசை வலியுறுத்தி அல்லது இந்திய அரசின் மீது செல்வாக்கு செலுத்தி, 2013லிருந்து இன்று வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடவும் தமிழ்நாட்டு முதலமைச்சரால் முடியவில்லை.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்திட தமிழ்நாட்டு முதலமைச்சரால் முடியவில்லை. தமிழ்நாட்டு முதலமைச்சர்க்கு இதற்கான ஆற்றல் இல்லை என்பதா அல்லது தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லை என்பதா என்பது புரியாத புதிராக உள்ளது!
காவிரி நீர் தொடர்பாக அவ்வப்போது தலைமை அமைச்சர்க்குக் கடிதம் எழுதுவது, உச்ச நீதிமன்றத்தில் மனுப் போடுவது போன்ற அலுவலக எழுத்தர் அணுகுமுறையை (Clerical Approach) மட்டுமே காவிரி நீர் பெறுவதில் தமிழ்நாடு முதலமைச்சர் கைக்கொண்டுள்ளார்.
கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்துக் கர்நாடக அணைகளில் உள்ள நீரில் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்குரிய பங்கு நீரைக் கேட்கும் அரசியல் நடைமுறையை (Political Approach) செல்வி செயலலிதா கைக்கொள்ளவே இல்லை.
இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்களைக் காவிரி நீர் பெறுவதற்காக மட்டும் நேரில் சந்தித்து, கர்நாடக அணைகளில் உள்ள காவிரி நீரில், தமிழ்நாட்டுக்குரிய பங்கு நீரைத் திறந்துவிட ஆணையிடுமாறும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியமும் ஒழுங்குமுறைக் குழுவும் அமைக்குமாறும் தமிழ்நாடு முதலமைச்சர் ஒருமுறைகூடக் கோரவில்லை.
உச்ச நீதிமன்றத்திலாவது விழிப்போடு திறமையாக வாதாடித் தமிழ்நாடு அரசு அதன்வழி நீதியைப் பெற்றதா? இல்லை. 2013-இல் தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் இன்னும் விசாரணையே தொடங்கவில்லை. 2016 மார்ச்சு 28 அன்று உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு காவிரி வழக்கை 19.07.2016க்கு தள்ளி வைத்த போது, இவ்வளவு நீ்ண்ட காலத் தள்ளிவைப்பைத் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் எதிர்க்காமல் ஏற்றார். அதன் பின்னர் 18.10.2016க்கு தள்ளி வைக்கப்பட்டது. காவிரி வழக்கில் தமிழ்நாடு அரசின் உச்ச நீதிமன்றச் செயல்பாடு மிக மோசமானது.
தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி செயலலிதா காவிரி நீர் பெறுவதில் இவ்வளவு அலட்சியமாக இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
கர்நாடக முதலமைச்சர்க்குக் கண்டனம்
----------------------------------------------------------------
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இவ்வாண்டு தென்மேற்குப் பருவமழை குறைவென்றும் கர்நாடகத்தில் காவிரி நீர்த் தேக்கங்களில் உள்ள தண்ணீர் கர்நாடகத்தின் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் போதாதென்றும், தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடகத்தில் உள்ள காவிரி நீர்த் தேக்கங்களில் உள்ள தண்ணீர் கர்நாடகத்திற்குப் போதுமா போதாதா என்பதல்ல பிரச்சினை! கர்நாடக அணைகளில் இருக்கின்ற தண்ணீரில் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய பங்கு நீரைத் தர வேண்டும் என்பதே இங்குள்ள பிரச்சினை!
கர்நாடகத்தில் காவிரி அணைகளில் தேங்கியுள்ள நீரில் ஓர் ஆண்டுக்குக் கர்நாடகத்திற்குரியது 270 டி.எம்.சி; தமிழ்நாட்டிற்கு 192 டி.எம்.சி; கேரளத்திற்கு 30 டி.எம்.சி. கர்நாடக அணைகளில் இப்போது இருப்பில் உள்ள நீரில் மேற்கண்ட விகிதப்படியான பங்கு நீரைத் தமிழ்நாட்டிற்குக் கர்நாடகம் திறந்துவிட வேண்டும்.
கர்நாடகத்தில் பருவமழை இவ்வாண்டு பத்து விழுக்காடு குறைவு என்கிறார் சித்தராமையா. இந்தக் கணக்கு உண்மையானது என்று ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டால்கூட, பற்றாக்குறைக் காலத்தில் தண்ணீர் பகிர்வுக்குக் காவிரித் தீர்ப்பாயம் காட்டியுள்ள வழியைத்தான் பின்பற்ற வேண்டும். பத்து விழுக்காடு பருவமழை குறைவு என்றால், தனக்குரிய காவிரி நீரில் கர்நாடகம் 5 விழுக்காடு குறைத்துக் கொள்ள வேண்டும்; தமிழ்நாடு 5 விழுக்காடு குறைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவே!
2016 சூன் – 10 டி.எம்.சி, சூலை – 34 டி.எம்.சி., ஆகஸ்ட்டு – 50 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்து விட்டிருக்க வேண்டும். இதில் 5 விழுக்காடு நீர் மட்டுமே குறைத்து விடுவித்திருக்க வேண்டும்.
இந்திய விடுதலைநாள் விழாவில் பெங்களூரில் சித்தராமையா பேசும்போது, கர்நாடக காவிரி நீராவாரி நிகம் 430 ஏரிகளில் காவிரி நீர் நிரப்பும் திட்டத்தைச் செயல்படுத்துகிறது என்றார். கர்நாடக நீர்த் தேக்கங்களில் நீர் நிரம்பி விடாமல் இருக்கவும், அணை நீர் இருப்பைக் குறைத்துக் காட்டவும் இவ்வாறான ஏரிகளை விரிவாக்கி நிரப்பிக் கொள்கிறது கர்நாடகம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் ரூ. 5,912 கோடி மதிப்பீட்டில் புதிய அணை கட்டப்படும் என்றும் சித்தரமையா அவ்விழாவில் அறிவித்தார். வெள்ளப்பெருக்கு காலத்தில் கர்நாடக அணைகள் நிரம்பி மிச்ச நீர் மேட்டூருக்கு வருவதையும் தடுத்துத் தேக்கிக் கொள்ளப் புது அணை கட்டவுள்ளார்கள்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி அமைக்க வேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க விடாமல் தடுக்கிறது கர்நாடகம்.
காவிரிச் சிக்கலில் கர்நாடக அரசு கடைபிடிக்கும் சட்ட விரோதச் செயல்கள் மற்றும் தமிழ்நாட்டு உரிமைப் பறிப்பு வன்செயல்களைக் காவிரி உரிமை மீட்புக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்திய அரசுக்குக் கண்டனம்
----------------------------------------------
இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்ச் சிக்கல் சட்டம் – 1956இன்படி காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டிய அதிகாரமும் பொறுப்பும் இந்திய அரசிடம் உள்ளது.

ஆனால், நடுநிலை தவறி மறைமுகமாகக் கர்நாடகத்தின் சட்ட விரோதச் செயல்களுக்குத் துணை போகும் இந்திய அரசின் நயவஞ்சகச் செயலைக் காவிரி உரிமை மீட்புக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
என்ன செய்ய வேண்டும்?
-----------------------------------------
காரைக்கால் உள்பட தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களுக்குப் பாசன நீராகவும், 20 மாவட்டங்களுக்குக் குடிநீராகவும் பயன்பட்டு தமிழ்நாட்டின் உயிராதாரமாய் உள்ளது காவிரி.
நடப்பு சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கோரியும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்குமுறைக் குழு இந்திய அரசு அமைத்திட வலியுறுத்தியும், காவிரி உரிமையை நிலைநாட்ட தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு அரசியல் தளத்திலும், மக்கள் களத்திலும் துடிப்புடன் செயல்பட வலியுறுத்தியும் போராட வேண்டிய உடனடித் தேவை உள்ளது.

1. தமிழ்நாடு அரசு காவிரி நீர் பெற தவறியதைக் கண்டித்தும் உடனடியாக காவிரி நீர் பெற செயல் தளத்தில் இறங்க வலியுறுத்தியும்
2. இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும்
3. உச்ச நீதிமன்றத் தீர்ப்பளித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்புத் தெரிவிக்கும், தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்புப்படி தமிழ்நாட்டுக்குரியத் தண்ணீரைத் திறந்துவிட மறுக்கும், அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்படும் கர்நாடக அரசை இந்திய அரசு கலைக்க வலியுறுத்தியும்..
2016 – செப்டம்பர் 23 – வெள்ளி அன்று காவிரி டெல்டா மாவட்டங்களில் கிராமங்கள் – நகரங்கள் உட்பட 1000 இடங்களில் மக்கள் தன்னெழுச்சி சாலை மறியல் போராட்டம் நடத்துது என்று காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்துள்ளது. இது குறித்து, கிராமம் கிராமமாக விரிந்த அளவில் பரப்புரைகள் மேற்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டது.


தமிழ்நாடு அரசின் செயலற்ற தன்மையால் காவிரி வழக்கு 4 மாதம் தள்ளிப் போனது. ============================== காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கண்டனம்.

                                                                                                                                                                              
தமிழ்நாடு அரசின் செயலற்ற தன்மையால்
காவிரி வழக்கு 4 மாதம் தள்ளிப் போனது!
காவிரி உரிமை மீட்புக் குழு 
ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கண்டனம்!

காவிரி வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் சூலை 19 ஆம் நாளுக்கு ஒத்திவைத்து விட்டது என்ற செய்தி டெல்டா மாவட்டங்களின் உழவர்கள் தலையில் இடி விழுந்தது போல் அதிர்வை உண்டாக்கி விட்டது. சூன் மாதம் தொடங்கும் குறுவைப் பட்டத்தில் இவ்வாண்டாவது சாகுபடி தொடங்கலாம் என்றிருந்த உழவர்களின் எதிர்பார்ப்பைப் பொசுக்குவது போல் உள்ளது இந்த ஒத்திவைப்பு.

2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் நாள் காவிரி இறுதித் தீர்ப்பு வந்தது. இன்றுவரை அத்தீர்ப்பைச் செயல்படுத்த முடியாது என்று மறுக்கிறது கர்நாடக அரசு, காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு தொடர்பாகத் தமிழ்நாடு, கர்நாடம், கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் அதே 2007 இல் வழக்குத் தொடுத்தன. ஒன்பதாண்டுகள் கடந்தும் இதுவரை உச்ச நீதிமன்றம் அவ்வழக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்கவில்லை.

2013 பிப்ரவரி 19 ஆம் நாள் இந்திய அரசு காவிரித் தீர்ப்பைத் தனது அரசிதழில் வெளியிட்டது. அத்தீர்ப்பைச் செயல்படுத்தும் பொறியமைவுகளான காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைக்காமல் ஏட்டுச் சுரைக்காய்போல் வஞ்சகமாக அரசிதழில் வெளியிட்டது அன்றைய காங்கிரசு ஆட்சி.

2013 மார்ச்சு மாதம் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைக்க இந்திய அரசுக்குக் கட்டளை இடுமாறு கோரியது. அவ்வழக்கு இதுவரை விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

இந்திய அரசு மறைமுகமாகக் கொடுத்த துணிச்சலில் ஊக்கம் பெற்று காவிரி இறுதித் தீர்ப்பை நிறைவேற்ற மறுத்து வந்த கர்நாடக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் காலவரம்பற்று விசாரணையைத் தள்ளி வைத்தது மேலும் ஊக்கம் கொடுத்தது. அந்தத் துணிச்சலில் கர்நாடக அரசு மேக்கேதாட்டுப் பகுதியில் காவிரியில் புதிதாக மூன்று அணைகள் கட்டி 50 ஆமிக (டிஎம்சி) அளவிற்குத் தண்ணீர் தேக்கத் திட்டமிட்டு உலக அளவில் ஏலம் கோரி – அவ்வேலையில் மும்முரம் காட்டியது.

கர்நாடகம் காவிரியில் புதிய அணைகள் கட்டத் தடை கோரித் தமிழ்நாடு அரசு 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டது. அவ்வழக்கும் விசாரிக்கப் படாமல் நிலுவையில் உள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்த கர்நாடகத்தின் அப்போதைய ப.ச.க. முதலமைச்சர் செகதீசு செட்டர், இப்போதைய காங்கிரசு முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் மீது தமிழ்நாடு அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்தது. அவ்வழக்குகளும் விசாரிக்கப்படாமல் ஊறப் போடப்பட்டன.

கடந்த 19.03.2016 அன்று உச்ச நீதிமன்றம் காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் தொடர்ந்து விசாரித்து விரைந்து தீர்ப்பளிக்க நீதிபதி ஜே. செலமேசுவர் தலைமையில் நீதிபதி ஆர்.கே. அகர்வால், நீதிபதி அபய் மனோகர் சப்ரே ஆகியோரைக் கொண்ட மூன்று நீதிபதிகள் அமர்வை அமைத்து, அது 28.03.2016 அன்று விசாரணையைத் தொடங்கும் என்று அறிவித்தது.

28.03.2016 அன்று இந்த மூன்று நீதிபதிகள் அமர்வு கூடி வழக்கு விசாரணையை 2016 சூலை 19 ஆம் நாளுக்குத் தள்ளி வைத்து விட்டது. வழக்கு விசாரணையைத் தள்ளி வைக்கும் மனநிலையில் நீதிபதிகள் மூவரும் இருந்துள்ளார்கள். வேறொரு முக்கிய வழக்கு இருப்பதாகக் கூறியுள்ளார்கள். கர்நாடக வழக்கறிஞர் பாலி நாரிமன் வழக்கைத் தள்ளி வைக்கலாம் என்று கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் அவ்வழக்கில் நேர்நின்ற மூத்த வழக்கறிஞர் ராகேசு துவேதி எந்த மறுப்பும் சொல்லவில்லை. நீதிபதிகள் சூலை 19 க்கு வழக்கைத் தள்ளி வைத்து விட்டார்கள். தமிழ்நாடு வழக்கறிஞர் குறுவை சாகுபடி அவசரத்தைச் சுட்டிக் காட்டி கடுமையாக வாதிட்டிருந்தால் 4 மாதங்களுக்கு வழக்கை ஒத்தி வைக்கும் அவலம் நேர்ந்திருக்காது.

காவிரி டெல்டாவில் சூன் மாதம் குறுவை சாகுபடி ஐந்து இலட்சம் ஏக்கரில் தொடங்க வேண்டிய அவசர அவசியம் இருக்கும் போது, குடிநீருக்குக் கூட மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் எடுக்க முடியாத அளவிற்கு நீர்மட்டம் அன்றாடம் வேகமாகக் குறைந்து வரும் நிலையில் (28.03.2016 நீர்மட்டம் 58 அடி ) மூன்றரை மாதங்களுக்கு மேல் சூலை 19 க்கு வழக்கைத் தள்ளி வைப்பதைத் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் எப்படி ஏற்றுக் கொண்டார்? தமிழ்நாடு அரசின் வழிகாட்டல் இதில் என்னவாக இருந்தது?

தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு வேளாண் அமைச்சர், தமிழ்நாடு தலைமைச் செயலாளர், பொதுப் பணித்துறைச் செயலாலர் ஆகியோரே டெல்ட்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடி பாதிக்கப்படுவதற்குப் பொறுப்பேற்க வேண்டிவர்கள்.

காவிரிச் சிக்கலில் தமிழ்நாடு அரசின் செயலற்ற தன்மையைக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் விரைவு மனுப்போட்டு கோடைக் கால விடுமுறைக்கு முன் வழக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்கிட ஏற்பாடு செய்திடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

இணையம்:www.kaveriurimai.com
பேச: 76670 77075, 94432 74002

           

தஞ்சையில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்!



உழவர் பாலனைத் தாக்கிய காவலர்களைக் கைது செய்து சிறையில் அடை !
உழவர் தற்கொலைகளைத் தடுக்க தமிழ்நாட்டை தனி உணவு மண்டலமாக்கு !
தஞ்சையில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக் குழு  ஆர்ப்பாட்டம்

உழவர் பாலனைத் தாக்கிய காவலர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கக் கோரியும்உழவர் தற்கொலைகளைத் தடுக்க தமிழ்நாட்டைத் தனி உணவு மண்டலமாக்க வேண்டுமெனக் கோரியும்தஞ்சையில்,காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில்நேற்று (24.03.2016) காலைஉழவர் ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

·         டிராக்ட்ர் எந்திரத்தை பறிமுதல் செய்கிறோம் என்ற பெயரில்பாப்பாநாட்டில் உழவர் பாலன் மீது கொடுந்தாக்குதல் நடத்திய காவல்துறை ஆய்வாளர் குமாரவேல் மற்றும் காவலர்களை மீது குற்றவழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்,

·         உழவர்களின் வேளாண் கடன்களை முழுவதுமாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்,

·         அரியலூரில் தற்கொலை செய்து கொண்ட உழவர் அழகர் குடும்பத்திற்கு - இழப்பீடு வழங்க வேண்டும்,

·         குண்டர்களை வைத்து கடன் வசூல் செய்யும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைக் கண்டறிந்து அவற்றின் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,

·         இந்திய அரசு நியமித்த முனைவர் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான தேசிய உழவர் ஆணையம்” அளித்துள்ள பரிந்துரையின்படி - உற்பத்திச் செலவில் 50% கூடுதலாக வைத்து வேளாண் விளை பொருட்களுக்கான கொள்முதல் விலையையும்சந்தை விலையையும் நிலைநிறுத்த வேண்டும்,

·         பதுக்கல் – ஊக பேரம் – செயற்கையான விலை வீழ்ச்சி – விலை உயர்வு உள்ளிட்டவைகளுக்கு வாய்ப்பு அளிக்கும் இணையதள வணிகத்தைத் தடை செய்ய வேண்டும்,

·         தமிழ்நாட்டை தனி உணவு மண்டலமாக்க வேண்டும்,

·         சர்க்கரை ஆலைகளில் ஒரு டன் கரும்புக்கான விலை ரூ. 2,750-இல் ரூ. 750 பிடித்தம் செய்யாமல் முழுத் தொகையையும் உழவர்களுக்கு வழங்க வேண்டும்

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துகாவிரி உரிமை மீட்புக் குழு சார்பில்தஞ்சை தொடர்வண்டி நிலையம்அருகில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில், காவிரி உரிமை மீட்புக் குழுவில் உறுப்பு வகிக்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும், உழவர்களும் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும்தமிழ்த் தேசியப் பேரியக்கத்தலைவருமான தோழர் பெமணியரசன் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை கோரிக்கை முழக்கங்களை எழுப்ப, ஆர்ப்பாட்டத் தோழர்கள் அதை விண்ணதிர எதிரொலித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், உழவர் கோரிக்கைகளைத் தீர்மானங்களாக முன்மொழிந்து, தமிழக விவசாயிகள் சங்கத்தஞ்சை மாவட்டத் தலைவர் திருமணிமொழியன் பேசினார். மூன்று மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. வலிவளம் மு. சேரன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளர் திருகாவிரிதனபாலன்தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர்கள் திருஅயனாபுரம் சிமுருகேசன்திரு. சதா முத்துக்கிருட்டிணன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசுதமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் துணைச் செயலாளர் திரு. செகதீசன், இந்திய சனநாயகக் கட்சித் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. சிமியோன் சேவியராஜ், தலைமைக் கழகப் பேச்சாளர் திரு. ஆ.வி. நெடுஞ்செழியன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இலரா.பாரதிச்செல்வன்மனித நேய மக்கள் கட்சி வணிகப்பிரிவுத் தலைவர் திரு. ஜெ. கலந்தர், மனித நேய சனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. அகமது கபீர், விடுதலைத் தமிழ்ப்புலிகள் இணைச் செயலாளர் திரு. சி. அருண் மாசிலாமணி ள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர்.


ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் பேசிய தோழர் பெ. மணியரசன், கடன் நிலுவை தொகைக்காக உழவர்களைஅவமானப்படுத்துவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உழவர் பாலன் தாக்கப்பட்டுள்ளார். அரியலூர் உழவர்அழகர் தர்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபோல் ஒரு சில நிகழ்வுகள் தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வெளிச்சத்திற்கு வராத துயரங்கள் ஏராளம்.

கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் 2,422 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தேசியக் குற்றஆவணக் காப்பகம் (NCRB) கூறுகிறது. ஏன் இந்த நிலைமை?

உழவர்கள் உற்பத்தி செய்யும் விளைப்பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்காததால்தான் உழவர்கள்கடன்சுமையில் சிக்கி வாழ்க்கையை இழக்கிறார்கள். வேளாண் விளை பொருட்களுக்கு உற்பத்தி செலவோடு சேர்த்து கூடுதலாக 50 சதவீதம் விலை நிர்ணயிக்க வேண்டும்.

ஒரு மாதத்திற்கு 2 இலட்சம் டன் அரிசியை பொது வழங்கலுக்குத் தமிழ்நாடு அரசு இந்திய அரசிடமிருந்து வாங்குகிறது. அவை அனைத்தும் பஞ்சாப்அரியானாகர்நாடகாஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் உற்பத்தியானவை. எட்டு கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாடுதமிழ்நாட்டு உழவர்களுக்குதமிழ்நாட்டு வணிகர்களுக்கு சந்தையாக இல்லைவெளி மாநிலங்களுக்குச் சந்தையாக இருக்கிறது.

எனவேதமிழ்நாட்டு வேளாண் விளை பொருட்களுக்கு சந்தை மதிப்பு கிடைக்கும் வகையில் தமிழ்நாட்டைத் தனி உணவு மண்டலமாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு தனி உணவு மண்டலம் ஆனால்வெளி மாநில உணவுப் பொருட்கள் தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் தமிழ்நாட்டுச் சந்தைக்கு வர முடியாது. தமிழ்நாட்டுக்கு பற்றாக்குறையை உள்ள தவசங்களை (தானியங்களை) தமிழ்நாடு அரசு முடிவு செய்துவெளி மாநிலங்களிலிருந்து வாங்கிக் கொள்ளலாம். ஏற்கெனவேஇந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் ஒரு தனி உணவு மண்டலமாகத்தான் இருந்தது. பின்னர்தான் அந்நிலை மாற்றப்பட்டது.

தமிழ்நாட்டைத் தனி உணவு மண்டலமாக்கினால்தான், இங்குள்ள உழவர்களுக்கு லாபகரமான விலை கிடைக்கும். வெளிச்சந்தையிலும் நெல்லுக்கு அதிக விலை கிடைக்கும் என்று தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உழவர்களும், பெண்களும் திரளாகப் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.












==============================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==============================
இணையம்:www.kaveriurimai.com
==============================
பேச: 76670 77075, 94432 74002
==============================
 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger