தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


மார்ச் 28 அன்று, கர்நாடக அரசின் பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம் - காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு!




========================================
காவிரி டெல்டா மாவட்டங்களில் - மார்ச் - 28 அன்று 
========================================
காவிரி அணை கட்ட நிதி ஒதுக்கிய...
கர்நாடக அரசின் பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம்! 
========================================
காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு! 
========================================

காவிரி டெல்டா மாவட்டங்களில் வரும் மார்ச் 28 ஆம் நாள், காவிரியின் குறுக்கே அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசின் வரவு செலவுத் திட்ட நகலை எரிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று காவிரி உரிமை மீட்புக்  குழு அறிவித்துள்ளது.

காவிரிச் சிக்கல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க, காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம், நேற்று(16.03.2016) மாலை, தஞ்சையில் நடைபெற்றது. 

தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, மூன்று மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திரு. வளிவளம் மு. சேரன் தலைமையேற்றார். காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த.மணிமொழியன், திருச்சி மாவட்டத் தலைவர் திரு. ம.ப.சின்னத்துரை,  
காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு. காவிரி தனபாலன், தமிழக உழவர் முன்னணி செயற்குழு உறுப்பினர் திரு. சி.ஆறுமுகம், ஏரிப்பாசன - கால்வாய்ப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. புரவலர் விசுவநாதன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஆலோசகர் பொறியாளர் கோ. திருநாவுக்கரசு, தென்பெண்ணை கிளை வாய்க்கால் கோரும் உழவர் அமைப்பு ஆலோசகர் திரு. ஒசூர் கோ.மாரிமுத்து, மூத்த பொறியாளர்கள் சங்கத் தலைவர் திரு. திருச்சி செயராமன், தமிழ்த் தேசியப் பேரியக்க மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் திரு. அயனாவரம் சி. முருகேசன், மனித நேய மக்கள் கட்சி வணிகப்பிரிவுத் தலைவர் திரு. கலந்தர், இந்திய சனநாயகக் கட்சி மாவட்டத் தலைவர் திரு. சிமியோன் சேவியராஜ், விடுதலைத் தமிழ்ப்புலிகள் பொறுப்பாளர் திரு. புலவர் தங்கராசு உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள், விவசாய சங்கப்  பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது. அதை தடுக்க விவசாயிகள் பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் காவிரி பிரச்சினையில் மேலும் சிக்கல் ஏற்படுத்தும் வகையில், மேக்கேத்தாட்டுவில் அணை கட்டுவதற்கான திட்டப்பணிகளுக்காக கர்நாடக அரசு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தனது பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.

மேலும் அங்கு அணை கட்டுவதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடமிருந்து தடையில்லா சான்று பெறவில்லை.

இப்படி சட்டவிரோதமாக மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுத்து வரும் கர்நாடக அரசை கண்டித்தும், அணை கட்டுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வருகிற 28-ந் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்ட தலைமையிடங்களில் கர்நாடக அரசின் பட்ஜெட் நகலை எரிக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

மேலும் அடுத்த மாதம்(ஏப்ரல்) 5-ஆம் நாள், விவசாய பிரதிநிதிகள் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். அப்படி அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவர்களை பதவி விலகக் கோரி வலியுறுத்துவோம். 

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் தெரிவித்தார்.

==============================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==============================
இணையம்:www.kaveriurimai.com
==============================
பேச: 76670 77075, 94432 74002
==============================

கர்நாடக நிதிநிலை அறிக்கையில் மேக்கேத்தாட்டு அணை கட்ட நிதி ஒதுக்கியிருப்பதை இந்திய அரசு நீக்கச் செய்ய வேண்டும்!



கர்நாடக நிதிநிலை அறிக்கையில்
மேக்கேத்தாட்டு அணை கட்ட
நிதி ஒதுக்கியிருப்பதை இந்திய அரசு
நீக்கச் செய்ய வேண்டும்!
---------------------------------------------------------------------------------

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள்!

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று (13.03.2015), கர்நாடக சட்டப்பேரவையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கான திட்டத் தயாரிப்புப் பணிகளுக்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளார். 

இவ்வாறு அவர் மேக்கேத்தாட்டுப் பகுதியில் அணை கட்டுவதற்கு, நடுவண் அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதல் பெறவில்லை. காவிரின் குறுக்கே மேக்கேத்தாட்டு மற்றும் இராசிமணல் பகுதிகளில் கர்நாடக அரசு, புதிய அணைகள் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டுமென்று, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு, விசாரணையில் உள்ளது. காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பும் உச்ச நீதிமன்றப் பரிசீலனையில் உள்ளது. 

இந்நிலையில், கர்நாடக அரசு மேக்கேத்தாட்டுவில் புதிய அணை கட்ட நிதி ஒதுக்கி இருப்பது, முற்றிலும் சட்ட விரோதச் செயலாகும். இந்திய அரசு, உடனடியாக இதில் தலையிட்டு, கர்நாடகத்தின் நிதிநிலை அறிக்கையிலிருந்து மேக்கேத்தாட்டு அணைக்கான நிதி ஒதுக்கும் பகுதியை நீக்கிடச் செய்ய வேண்டும். இல்லையெனில், இந்திய அரசமைப்புச் சட்டம், உச்ச நீதிமன்றம் என்பவையெல்லாம் தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாக்கும் தகுதியற்றவை என்ற முடிவுக்கு தமிழக மக்கள் வரவேண்யிருக்கும்.

கர்நாடக அரசு, தமிழ்நாட்டிற்கு காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பின்படி ஒரு தடவை கூட தண்ணீர் திறந்துவிட்டதில்லை. கர்நாடக அணைகள் நிரம்பிய பின் ஓடி வரும் மிகை நீர்தான் மேட்டூருக்கு வந்து கொண்டிருக்கிறது. அத்தண்ணீரையும் தடுத்து தேக்கிட, புதிய அணைகள் கட்ட முனைகிறது கர்நாடகம். உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடுத்த நிலையிலும், கர்நாடக அரசு தனது அணைகட்டும் பணியை நிதிநிலை அறிக்கையிலேயே கூறியிருக்கிறது. 

தமிழ்நாட்டின் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் பேராபத்து சூழ்ந்துள்ள இந்நிலையில், தமிழக முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி, இச்சிக்கலை சந்திப்பதற்கான ஒருமித்தத் தீர்வைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், அனைத்துக் கட்சிக் குழுவினரை தில்லிக்கு அழைத்துச் சென்று, பிரதமரைச் சந்தித்து, கர்நாடகத்தின் திட்டத்தை தடுத்து நிறுத்த அரசியல் அழுத்தம் கொடுக்கவும் களத்தில் இறங்க வேண்டும்.

மேக்கேத்தாட்டுவில் புதிய அணை கட்டும் திட்டத்திற்கு கர்நாடக அரசு, நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்திருக்கும் நிலையில், அடுத்தகட்டப் போராட்டம் பற்றி கலந்தாய்வு செய்ய, காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம், வருகிற 16.03.2015 – திங்கள் அன்று மாலை 4 மணிக்கு, தஞ்சாவூரில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 


இன்னணம்,
பெ.மணியரசன்,
ஒருங்கிணைப்பாளர்,
காவிரி உரிமை மீட்புக் குழு.

நாள் : 13.03.2015

மேக்கேதாட்டு முற்றுகைப் பேரணியில் சென்றவர்கள் மீது தமிழக அரசு வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது! - தோழர் பெ. மணியரசன் அறிக்கை!



========================================
மேக்கேதாட்டு முற்றுகைப் பேரணியில்
சென்றவர்கள் மீது தமிழக அரசு வழக்குப்பதிவு
செய்திருப்பது கண்டனத்துக்குரியது!
========================================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
========================================

கர்நாடக அரசு தமிழகத்திற்கு எதிராக, காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் இரண்டு சட்ட விரோத அணைகள் கட்டுவதைத் தடுத்திடும் நோக்கத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கிருட்டிணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையிலிருந்து 7.03.2015 அன்று முற்பகல் நடைபயணமாகச் சென்று மேக்கேதாட்டுவில் முற்றுகைப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டோம்.
முறையாக அனுமதி கேட்டு தேன்கனிக்கோட்டை காவல் ஆய்வாளரிடம் விண்ணப்பம் கொடுத்தோம்.  அனுமதி மறுத்து அவர் கடிதம் கொடுத்தார். 
இவ்வாறான மக்கள் திரள் சனநாயகப் போராட்டங்கள் நடைபெறும்போது காவல்துறை அனுமதி மறுத்தாலும் போராட்டக்காரர்களைக் குறிப்பிட்ட இடத்தில் கூடவிட்டு சிறிது தொலைவு ஊர்வலமாக நகர்ந்த பின், அவர்களை முன்தடுப்பு நடவடிக்கையாகக் கைது செய்து மண்டபங்களில் வைத்து மாலையில் விடுவிப்பது வழக்கமாக உள்ளது. இந்த அணுகுமுறை போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்குமான மோதலைத் தவிர்த்து வருகிறது. 
இதேபோல் தான் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் 7.3.2015 அன்று தேன்கனிக் கோட்டை மணிக்கூண்டிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டவர்களைச் சிறிது தொலைவிலேயே ஜவளகிரி சாலையில் முன்தடுப்பு கைது செய்து மூன்று மண்டபங்களில் அடைத்தனர். 
காவல்துறை கைது செய்த போது எந்த அத்துமீறலும் வன்முறையும் இடம் பெறவில்லை.  ஆண்கள், பெண்கள் அனைவரும் கைதுக்கு உடன்பட்டு தாமாகவே காவல்துறையினரின் ஊர்திகளில் ஏறிக் கொண்டனர். அன்று மாலை 6 மணியளவில் அனைவரையும் விடுவித்தனர். 
ஆனால் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமையில் அந்தப் பேரணியில் கலந்து கொண்ட 95 பெண்கள் உட்பட 1286 பேர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 147,188 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து முதல்தகவல் அறிக்கை தயார் செய்திருப்பதாக இன்று நாளிதழ்களில் செய்தி வெளிவந்துள்ளது.  இது பற்றி கிருட்டிணகிரி மாவட்ட காவல்துறை அதிகாரியிடம் கேட்டதற்கு அவரும் உறுதி செய்திருக்கிறார்.
தமிழகத்தின் உயிர் பிரச்சினையான காவிரி நீர் உரிமை பிரச்சினையில் சனநாயக வழியில் பேரணி சென்ற உழவர்கள், உணர்வாளர்கள் ஆகியோர் மீது தமிழகத்திலுள்ள நடைமுறைக்கு மாறாகக் குற்றவழக்கு பதிவு செய்திருப்பது வேதனை அளிக்கிறது.  காவிரித் தீர்ப்பாயம், உச்சநீதிமன்றம் ஆகியவை கொடுத்த தீர்ப்புகளைக் குப்பைக் கூடையில் தூக்கிவீசிவிட்டு தமிழகத்தின் காவிரி உரிமையை மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டிக்கும் வகையிலும், நடுவண் அரசிடம் கோரிக்கை வைக்கும் வகையிலும்  பேரணியில் சென்றவர்களை தமிழக அரசு பழிவாங்கும் நோக்கத்தோடு வழக்குப் பதிவு செய்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
தொடர்ந்து சட்டவிரோதமாக நடந்து கொண்டு தமிழ்நாட்டின் காவிரி உரிமையைப் பறித்துவரும் கர்நாடகத்திடம் நற்சான்று வாங்குவதற்காகத் தமிழக அரசு தனது சொந்த மக்களையே பழிவாங்குகிறதா என்ற ஐயத்துக்குத் தமிழக அரசுதான் விடையளிக்க வேண்டும். 

7.3.2015 தேன்கனிக் கோட்டை பேரணியில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதுமிருந்து புறப்படத் தயாராக இருந்த உழவர்களையும், உணர்வாளர்களையும் கணக்கெடுப்பதற்காக 5.3.2015 லிருந்தே தமிழகமெங்கும் காவல்துறை கண்காணித்து விசாரித்து ஓர் உளவியல் நெருக்கடியைக் கொடுத்தது.
முறைப்படி தனியார் வாடகை ஊர்திகளில் அவர்கள் புறப்படத் தயாரானபோது அந்த ஊர்தி எண் உட்பட பல விவரங்களைக் கேட்டு அங்கங்கே காவல்துறையினர் நெருக்கடி கொடுத்தனர். இப்போது அறவழியில் பேரணி சென்ற உழவர் இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள், தமிழ்த் தேசிய இயக்கங்கள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் மீதும், தனித்தனியே கலந்து கொண்ட உணர்வாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது. 

தமிழக முதலமைச்சர் அவர்கள் இதில் தலையிட்டு இவ்வழக்குகளைக் கைவிடுமாறு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

இவண்,    
பெ.மணியரசன் 
ஒருங்கிணைப்பாளர், 
காவிரி உரிமை மீட்புக் குழு.
============================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
============================
பேச: 76670 77075, 94432 74002
============================

“ஆயுதம் ஏந்தாத கொரில்லாப் போராளிகளாக மாறி அணைக் கட்டுமானத்தை உடைப்போம்” தேன்கனிக்கோட்டை தமிழர் திரளில் தோழர் பெ.மணியரசன் முழக்கம்!

“ஆயுதம் ஏந்தாத கொரில்லாப் போராளிகளாக மாறி அணைக் கட்டுமானத்தை உடைப்போம்”
தேன்கனிக்கோட்டை தமிழர் திரளில் தோழர் பெ.மணியரசன் முழக்கம்!










ஆயிரக்கணக்கான உழவர்களும், தமிழின உணர்வாளர்களும் திரண்டு நிற்க, கிருட்டிணகிரி மாவட்டத்தின் தேன்கனிக்கோட்டை நகரம், மிரண்டு நின்றது நேற்று (08.03.2015). காவிரியைத் தடுக்க கர்நாடகம் அணைக்கட்ட திட்டமிட்டுள்ள மேக்கேத்தாட்டுவிற்குச் சென்று முற்றுகைப் போராட்டம் நடத்தத் திரண்ட, தமிழர்களின் கூட்டமே, அவ்வாறு திணறடித்தது.

பல்வேறு உழவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் – இயக்கங்கள் உறுப்பு வகிக்கும், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், நேற்று காலை நடைபெற்ற முற்றுகைப் போராட்டம் நடத்த, அழைப்பு விடுக்கப்பட்டு, தமிழகமெங்கும் அதற்காக விரிவான பரப்புரை இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டன.

காலை 10 மணி தொடங்கி, காவிரி டெல்டா மாவட்டம் மட்டுமின்றி, சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தமிழின உணர்வாளர்கள், வாகனங்களை எடுத்துக் கொண்டு தேன்கனிக்கோட்டைக்கு வரத்தொடங்கினர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், இளைஞர்கள் என எழுச்சி முழக்கங்களுடன் குவிந்த அனைவரும், முற்றுகைப் போராட்டப் பேரணிக்கு அணிவகுத்து நின்றனர்.

காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவருமான தோழர் பெ.மணியரசன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் பேராசிரியர் சின்னசாமி, மூன்று மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திரு. வலிவளம் மு.சேரன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு. காவிரி தனபாலன், தமிழக உழவர் முன்னணி அமைப்பாளர் திரு. சி. ஆறுமுகம், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் புரவலர் திரு. பூவிசுவநாதன் உள்ளிட்ட பல்வேறு உழவர் அமைப்புத் தலைவர்களும், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அய்யனாவரம் சி. முருகேசன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஆலோசகர் பொறியாளர் திருநாவுக்கரசு, மனித நேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் திரு. மன்னை செல்லச்சாமி, இந்திய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. சிமியோன் சேவியராஜ் ஆரோக்கியராசு, காங்கிரசுக் கட்சி தஞ்சை மாவட்ட முன்னாள் தலைவர் திரு. நாஞ்சி வரதராசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கிருட்டிணகிரி மாவட்டத் தலைவர் திரு. ரமேசு, விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் தோழர் சக்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தோழர்களும் என பல்லாயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்றனர்.

போராட்டத்தையொட்டி, மேக்கேத்தாட்டு அணைக்குச் செல்லும் சாலைகளில் மூன்று மாவட்டங்களைச் சோந்த காவல்துறையினர் குவிக்கப்பட்டு, அச்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது. கலவரத் தடுப்பு வஜ்ரா வாகனங்கள் நிறுத்தப்பட்டு, சாலையில் மூன்றடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டது.

“காவிரி நமது குருதி ஓட்டம்! காவிரி நமது வளர்ப்புத் தாய்! கன்னடச் சிறையில் காவிரித்தாய் கதவை உடைத்து விடுதலை செய்வோம்” உள்ளிட்ட எழுச்சி முழக்கங்குடள் பேரணி தொடங்கியது. சாலைகளின் இருபுறமும் பொது மக்கள், வீடு – அலுவலகங்களின் மேல்மாடியில் நின்று, பேரணியைக் காணக் குவிந்து கிடந்தனர். நேரம் செல்ல செல்ல, அந்த சாலையில் 5000 பேர் கூடிவிட்டனர். அவரவர், அமைப்புப் பதாகைகள், கொடிகளுடன் அணிவகுத்து நின்ற போது, மக்கள் கடலாக அவ்விடம் காட்சியளித்தது.

‘பாரத மாதா’ என்றாலே, சாந்தமான ஒரு பெண் கையில் இந்தியக் கொடியுடன் நிற்கும் படம் நினைவுக்கு வரும். ஆனால், ஒரு கையில் தமிழீழத் தமிழர் என்ற பெயரைத் தாங்கிய தலை, இன்னொரு கையில் தமிழ்நாட்டுத் தமிழர் என்ற பெயரைத் தாங்கிய தலை, ஒரு கையில் மனுதர்மம், இந்துத்துவ மதவெறி, ஆரிய இனவாதம் என்ற வாள், காவிரி உரிமை – முல்லைப் பெரியாறு உரிமை உள்ளிட்ட உரிமைகளை காலில் மிதித்துக் கொண்டு நிற்கும் ஆக்கிரோசம் என புதிய வகைக் ‘காளி’ உருவமாக ‘பாரத மாதா’ படம் ஒன்றை, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் வடிவமைத்து, இந்தியத் தேசியத்தை அம்பலப்படுத்திக் காட்சிப்படுத்தியிருந்தனர். ‘இந்தியா ஒழிக!’ என்ற முழக்கத்துடன், அப்படம் ஆர்ப்பாட்டத் தோழர்களால் கிழித்தெறிந்து, கொளுத்தப்பட்டது.

பேரணியை, காவல்துறையினர் தடுத்த போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.முருகன் உள்ளிட்ட தோழர்கள் காவல்துறையின் தடுப்பு அரண்கள் மீது ஏற, அவர்களை காவல்துறையினர் கீழே இழுத்துப் பிடித்துத் தள்ளிக் கைது செய்தனர். சற்றோப்ப 25க்கும் மேற்பட்ட காவல்துறை வாகனங்கள் மற்றும், அரசுப் பேருந்துகளைக் கொண்டு தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, நகரின் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

“தோழர்களே! இது இறுதிப் போராட்டமல்ல. இது தொடக்கம் தான். கர்நாடக அரசு காவிரியைத் தடுக்க அணை கட்ட முயன்றால், ஆயுதம் ஏந்தாத கொரில்லாப் போராளிகளாக மாறி, நாம் அணைக் கட்டுமானங்களைத் தகர்ப்போம்! அதற்குத் தயாராகுங்கள்!” என முழங்கினார், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன். அதை ஆமோதித்து, போராட்டத் தோழர்கள் கரவொலி எழுப்பினர்.

தமிழ்நாட்டுத் தமிழர்களின் இந்த எழுச்சிமிகுப் போராட்டம், நிச்சயம் வரலாற்றுப் போக்கை மாற்றும்! காவிரியைக் காக்கும்!
 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger