தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


கர்நாடக நீர்ப்பாசன நிறுவன திட்டங்களுக்கு ஜெயலலிதா எதிர்ப்பு!





கர்நாடக அரசின் காவிரி நீர்ப் பாசன நிறுவனத்தின் திட்டங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அர்காவதி மற்றும் ஹேமாவதி நதிகளில் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்களுக்கு அவர் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை எழுதிய கடிதத்தின் விவரம்:
   கர்நாடக மாநில அரசின் நிறுவனமான ‘‘காவிரி நீர்ப் பாசன நிறுவனம்’’,  அர்காவதி நதியை சீரமைத்து புதுப்பொலிவு ஏற்படுத்தவும், ஹேமாவதி நதி கால்வாய்களை நவீனப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டுள்ளது.
  அதில், ஹேமாவதி நதியின் இடது கரை கால்வாய், வலது கரை கால்வாய் மற்றும் வலது கரை உயர் மட்ட கால்வாய்களை நவீனப் படுத்துவது பற்றி கூறப்பட்டுள்ளது.
   தேசிய நீர் பாதுகாப்பு திட்டம் மற்றும் தேசிய நீர் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் இந்த திட்டங்கள் நடப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஹேமாவதி கால்வாய்களை நவீனப்படுத்த நீர்ப்பாசன திட்டத்தின் உதவியை பெற உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
    அர்காவதியை சீரமைக்கும் திட்டமும், ஹேமாவதி கால்வாய்களை நவீனப்படுத்தும் திட்டமும் கர்நாடக அரசின் புதிய திட்டங்களாகும். இந்த திட்டங்களின் செயல்பரப்பு நோக்கம் என்ன என்று தெரியவில்லை.
    மேலும், ஹேமாவதி கால்வாய்களை நவீனப் படுத்துவதன் மூலம் கர்நாடகா அரசு எடுக்கும் தண்ணீர் அளவு கணிசமாக அதிகரிக்கும். இதன் மூலம் காவிரி நதிநீர் ஆணையம் இறுதி தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதை விட கூடுதல் ஆயக்கட்டு பணிகளை கர்நாடகம் விரிவுபடுத்த முடியும்.
   கர்நாடக அரசின் இந்த புதிய திட்டங்கள் காரணமாக காவிரியில் இயற்கையாக வரும் தண்ணீர் அளவில் பாதிப்பு ஏற்படும். இது தமிழக நீர்ப்பாசனத் திட்டங்களை மிகக் கடுமையாக பாதிக்கும். எனவே இது காவிரி நதி நீர் ஆணையத்தின் இறுதி உத்தரவுக்கு எதிரானது.
   காவிரி இறுதித் தீர்ப்பை அமல்படுத்துவதை கண்காணிக்க தற்காலிக குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு அமைத்து இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த நிலையில் காவிரி இறுதித் தீர்ப்பை மீறும் வகையில் கர்நாடக மாநில அரசு நடந்து கொள்வது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
   கர்நாடக அரசு காவிரியில் புதிய திட்டங்கள் செயல் படுத்துவதை அனுமதிக்க கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை கர்நாடகா எந்த புதிய திட்டத்தையும் செயல்படுத்த கூடாது என்று தடுக்க வேண்டும்.
   மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய நீர் வள அமைச்சகத்துக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும் என்று மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன். அதோடு காவிரி இறுதி உத்தரவை திறமையாக அமல்படுத்து வதை உறுதி செய்ய காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு தாங்கள் உத்தரவிட கேட்டுக்கொள்கிறேன்.
 காவிரி நீர் மேலாண்மை வாரியம்: காவிரி இறுதி தீர்ப்பை கர்நாடக அரசு அடிக்கடி மீறாத வகையில் இருப்பதை உறுதி செய்வதற்கு, உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை கர்நாடகா அரசு காவிரி படுகையில் எந்த புதிய திட்டத்தையும் செயல்படுத்த அனுமதிக்க கூடாது. இதில் நீங்கள் தலையிட்டு கர்நாடக அரசுக்கு அறிவுரை கூற வேண்டும்.
   மேலும், அர்காவதி நதி சீரமைப்பு திட்டத்தையும், ஹேமாவதி கால்வாய்களை நவீனப்படுத்தும் திட்டங்களையும் நிறுத்தி வைக்குமாறு காவிரி நீர்ப் பாசன நிறுவனத்துக்கு அறிவுரை வழங்கும்படி கர்நாடக மாநில அரசை கேட்டுக் கொள்ளலாம்.
  எனவே, காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையத்தையும் விரைவில் அமைக்க கேட்டுக் கொள்கிறேன் என்று தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
காவிரியில் அணைக்க கட்ட, கர்நாடக அரசை, மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் நீர் மின்நிலையம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதை நிறைவேற்ற அனுமதிக்கக் கூடாது என்றும் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடக அரசு காவிரியில் 3 அணைகளைக் கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டால், அது கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் கூறியவாறு, இன்னும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை.
அதனால் அணைகள் கட்டுவதற்கு கர்நாடகம் ஆலோசி்த்தால், மத்திய அரசு உடனடியாக தடுக்க வேண்டும்.
திமுக ஆட்சியில் இருந்த காலத்திலேயே, மேகதாது திட்டத்தை தேவகௌடா கர்நாடக முதல்வராக இருந்தபோது, ஒரு கலந்துரையாடல் கூட்டத்தில் தெரிவித்தார்.
அப்போதே எதிர்த்துள்ளேன். இப்போதும் அதே நிலையில்தான் உள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.



காவிரியில் புதிய அணை: தமிழக எம்.பி.க்கள் அமளி



காவிரியில் புதிய திட்டங்களை செயல்படுத்த கர்நாடக அரசை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று மக்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் குரல் கொடுத்து அமளியில் ஈடுபட்டனர்.
மக்களவை அதன் தலைவர் மீரா குமார் தலைமையில் புதன்கிழமை தொடங்கியதும் கேள்வி நேரமின்றி முக்கிய பிரச்னைகளை உறுப்பினர்கள் எழுப்ப அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது காவிரி நதி விவகாரம் குறித்து மக்களவை அதிமுக தலைவர் எம். தம்பிதுரை பேசியது:
"கர்நாடகத்தின் மேக்கேதாட்டு பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே நீர்மின் திட்டத்தை அம்மாநில அரசு செயல்படுத்தவுள்ளது. இது குறித்து காவேரி நீராவாரி நிகமா நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரங்களில் அர்க்காவதி நீர்த்தேக்கத்தைப் புதுப்பித்துப் புனரமைக்கவும் ஹேமாவதி கால்வாயை நவீனப்படுத்தவும் தகுதிவாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்னள. இது தொடர்பாக பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரை காவிரி டெல்டா பகுதிகளில் எவ்வித திட்டங்களையும் செயல்படுத்த கர்நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது' என்று தம்பிதுரை வலியுறுத்தினார்.
அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தை பாஜக, இடதுசாரி கட்சிகள், திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தம்பிதுரையின் பேச்சுக்கு ஆட்சேபம் தெரிவித்து, பாஜக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.
அதைப் பார்த்ததும் அதிமுக உறுப்பினர்கள் பி. குமார், கே. ஆனந்தன், ஓ.எஸ். மணியன், சி. ராஜேந்திரன், சி. சிவசாமி, பி. வேணுகோபால், கே. சுகுமார், மதிமுக உறுப்பினர் கணேசமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் பி. லிங்கம் மையப் பகுதியின் ஒரு புறத்திலும் திமுக உறுப்பினர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், தாமரைக்கண்ணன், ஆதிசங்கர், ஹெலன் டேவிட்சன் ஆகியோர் மறுபுறத்திலும் "காவிரியில் புதிய திட்டம் தொடங்க கர்நாடகத்தை அனுமதிக்கக் கூடாது' என்று குரல் கொடுத்தனர்.
அப்போது பேசிய டி.ஆர். பாலு, "காவிரியில் புதிய திட்டம் தொடங்கப்படும் அறிவிப்பை கர்நாடக மாநில சட்ட அமைச்சர்தான் வெளியிட்டுள்ளார்.
இது, மாநிலங்களிடையே ஓடும் நதி நீரை கீழ் பகுதியில் உள்ள மாநிலம் பெற மறுக்கும் செயல்' என்றார்.
அப்போது குறுக்கிட்ட மீரா குமார், "கச்சத்தீவு பிரச்னையை எழுப்ப மட்டுமே உங்களுக்கு அனுமதி அளித்தேன்' என்றார். அதை ஏற்க மறுத்த பாலு, தொடர்ந்து காவிரி விவகாரத்தை எழுப்பினார்.
 அவருக்கு ஆதரவாக தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜே.எம். ஹாரூண், பி. விஸ்வநாதன், சித்தன் ஆகியோர் குரல் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து தமிழகம், கர்நாடக மாநிலங்களைச் உறுப்பினர்கள் பரஸ்பரம் "எங்கள் மாநில நலன்களைக் பாதுகாக்க வேண்டும்' என்று மையப் பகுதியில் குரல் எழுப்பினர். இந்த அமளியால் மக்களவை அலுவல் சுமார் 15 நிமிஷங்கள் பாதிக்கப்பட்டன.

காவிரியில் கர்நாடகம் அணை கட்டக்கூடாது - தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை!



காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகம் புதிய அணை கட்டுவதால் தமிழகத்தில் விவசாயம் பாதிக்கும் என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து, முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
புனல் மின்சார திட்டத்தை அமல்படுத்துவதற்காக மேக்கேதாட்டு என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணைகளை கட்டுவதற்கு தீர்மானித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. மிகவும் முக்கியமான இந்தப் பிரச்னையை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
மேக்கேதாட்டு என்ற இடத்தில் புனல் மின்சார நிலையம் அமைப்பதற்காக காவிரி ஆற்றின் குறுக்கே மூன்று அணைகளை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டிருப்பதாக கர்நாடக மாநில சட்டத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கை பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், ஹேமாவதி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் உள்ள உபரி தண்ணீரை குடிநீர் திட்டங்களுக்காக பயன்படுத்திக் கொள்ள ரூ.500 முதல் ரூ.600 கோடி வரை செலவிட திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேக்கேதாட்டு அருகே கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ள அணைகள் குறித்த புதிய திட்டங்கள் ஏதும் காவிரி நீர் பங்கீட்டு ஆணையத்தின் இறுதி உத்தரவில் கூறப்படவில்லை.
மொத்த தண்ணீரும் நுகர்வதற்குத்தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்று காவிரி நீர் பங்கீட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகவே, கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே அமைக்கத் திட்டமிட்டுள்ள அணைகள் சட்டத்துக்கு புறம்பானது. இது தமிழகத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்து விடும்.
விவசாயம் பாதிக்கும்: கர்நாடக அரசின் புதிய திட்டத்தால் காவிரியில் பாய்ந்து வரும் தண்ணீர் அளவு பாதிக்கப்படுவதோடு, தமிழகத்தின் விவசாயத்தையும் பெருமளவு பாதிக்கும். மேலும், காவிரி நீர் பங்கீட்டு ஆணையத்தின் இறுதி உத்தரவுக்கும் கர்நாடக அரசின் புதிய திட்டம் முரணானது. காவிரி நீர் பங்கீட்டு ஆணையத்தின் இறுதி உத்தரவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது இன்னமும் மத்திய அரசால் செயல்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில், கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே புதிய அணைகளை கட்ட தீர்மானித்திருப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு முற்றிலும் எதிரானது. கூட்டாட்சி முறையின் கீழ் இரு மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆற்றின் குறுக்கே ஆற்றின் தண்ணீருக்கு ஆதாரமாக இருக்கும் மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்டுவது என்பது அனுமதிக்க முடியாதது.
சிவசமுத்திரம், மேக்கேதாட்டு ஆகிய இடங்களில் மின்சார திட்டங்களை கர்நாடக அரசு தானாகவே முன்வந்து செயல்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஏற்கெனவே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
சிவசமுத்திரம், மேக்கேதாட்டு, ஒகேனக்கல், ராசிமணல் ஆகிய திட்டங்களில் புனல் மின்சார திட்டங்களை தேசிய புனல் மின்சார கழகம் அல்லது உரிய தகுதி வாய்ந்த மத்திய மின்சார உற்பத்தி நிறுவனம் மூலம் செயல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடலாம் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்கு முறை குழு ஆகியவற்றை காவிரி நீர் பங்கீட்டு ஆணையத்தின் இறுதித் தீர்ப்பின்படி அமைக்க மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரி தங்களிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். ஆனால், இதுவரை அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில், தமிழக அரசின் முன் அனுமதி ஏதும் பெறாமல் காவிரியின் குறுக்கே புனல் மின்சார திட்டங்களை நிறைவேற்ற கர்நாடக அரசு முன்வந்திருப்பதை தாங்கள் தலையிட்டு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத வரையில், நிரந்தர கண்காணிப்பு நடைமுறைகள் செய்யப்படாத வரை காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு எந்தத் திட்டங்களையும் நிறைவேற்ற மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் அனுமதி எதுவும் வழங்கக் கூடாது என்று உத்தரவிடுமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த விஷயத்தில் தங்களிடம் இருந்து சாதகமான பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன் என்று தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger