தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


Home » » இந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்

இந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்



இந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகளும் தமிழகத்திற்கெதிரான ஓர வஞ்சனைகளும் 1970களிலிருந்தே பிரதமர் இந்திரா காந்தி காலத்திலிருந்தே தொடங்குகின்றன.

1924 காவிரி ஒப்பந்தத்தின்படி, கர்நாடகம் புதிய அணை கட்டுவதென்றால் தமிழகத்தின் ஒப்புதல் பெற்றுத்தான் கட்ட வேண்டும். 1968 இல் ஏமாவதி அணை கட்டும் பணியைக் கர்நாடகம் தொடங்கியது. தமிழகத்தின் ஒப்புதலைக் கேட்கவில்லை. அப்போது அண்ணா முதல்வர், கலைஞர் கருணாநிதி பொதுப்பணித் துறை அமைச்சர். தமிழக அரசு ஏமாவதித் திட்டத்தை எதிர்த்தது. இருதரப்புப் பேச்சுகள் பலனளிக்கவில்லை. 1971ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசும், தஞ்சை மாவட்ட உழவர்களும் வழக்குப் போட்டனர். புதிய அணைகள் கட்டக்கூடாது,  1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பவை கோரிக்கை.

காங்கிரசு பிளவுபட்டு இந்திராகாந்தி தலைமையில் ஒரு பிரிவும் நிஜலிங்கப்பா தலைமையில் இன்னொரு பிரிவும் செயல்பட்டது. நிஜலிங்கப்பா கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர். அம்மாநிலத்தில் மக்கள் செல்வாக்குப் பெற்றவர். 1972இல் கர்நாடகச் சட்டப் பேரவைக்குத் தேர்தல் வந்தது. இந்திரா காந்தியின் தென்னகத் தளபதியாக விளங்கிய கர்நாடகத் தலைவரான தேவராசு அர்சு வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என்பதற்காக, கர்நாடகத்திற்கு எதிராகத் தமிழக அரசு போட்டிருந்த உச்ச நீதிமன்ற வழக்கைத் திரும்பப் பெறுமாறு தமிழக முதல்வர் கருணாநிதியிடம் இந்திரா காந்தி வலியுறுத்தினார்.

வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள், நான் காவிரிச் சிக்கலைத் தீர்த்து வைக்கிறேன்’’ என்று உறுதி கொடுத்தார் இந்திரா. கருணாநிதியும் 1972இல் வழக்கைத் திரும்பப் பெற்றார். உழவர்கள் போட்ட வழக்கும் திரும்பப் பெறப்பட்டது. கர்நாடகத் தேர்தல் பரப்புரையில், காவிரிக்காக தமிழக அரசு போட்ட வழக்கைத் திரும்பப் பெறச் செய்து கர்நாடகத்தின் மேலாதிக்கத்தை நிலை நாட்டிய தலைவர் தேவராஜ் அர்சு என்று பாராட்டி அவரின் சாதனையைப் பெரிதாகக் கொண்டு சென்றனர். தேவராசு அர்சும் வெற்றிப் பெற்று முதல்வர் ஆனார்.

பின்னர், காவிரி உண்மை அறியும் குழு என்று ஒரு குழுவை அமைத்து பாசன மாநிலங்களில் ஆய்வு செய்யச் சொன்னார் இந்திரா காந்தி. அக்குழுவும் சிறப்பாகச் செயல்பட்டு அறிக்கை கொடுத்தது. அந்த அறிக்கையின்படி தீர்வு காணக் கர்நாடக முதல்வர் தேவராஜ் அர்சு ஒப்புக் கொள்ளவில்லை. அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார் அன்றையப் பிரதமர் இந்திரா காந்தி.

அந்த வழக்கைத் திரும்பப் பெறாமல் நடத்தியிருந்தால் அப்போது புதிய அணைகள் கட்டும் கர்நாடகத் திட்டத்திற்குத் தடைகள் வந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் இந்திராவை நம்பி வழக்கைத் திரும்ப பெற்றதுதான் மிச்சம். தமது கூட்டணி அரசியலுக்காகக் கருணாநிதி காவிரி உரிமையை அன்று காவு கொடுத்தார்.

அன்றிலிருந்து இன்றுவரை இந்திய ஆட்சியாளர்கள் குஜ்ரால் பிரதமராக இருந்த காலத்தைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் காவிரிச் சிக்கலில் தமிழகத்தை வஞ்சித்து கர்நாடகத்தின் சட்ட விரோதச் செயல்களுக்குத் துணைநின்றே வந்துள்ளனர். வாஜ்பாயி அரசும் இதற்கு விதிவிலக்கல்ல.

அந்த வஞ்சகத்தின் தொடர்ச்சியாகவும் அதன் தீவிர வடிவமாகவும் சோனியா - மன்மோகன் அரசு 2004இல் இருந்து நாளது வரை ஒளிவு மறைவின்றி செயல்பட்டு வருகிறது. காவிரிச் சிக்கலில் கர்நாடகத்தின் தமிழர் எதிர்ப்புப் பகைப் போக்குகளுக்குத் துணை நிற்கிறது. பழைய காவிரி ஆணையத்தின் தலைவர், பிரதமர் என்ற வகையில் மன்மோகன் சிங்தான்ஆனால் 2004 லிருந்து 2012 வரை காவிரி ஆணையத்தை அவர் கூட்டவில்லை. முதலமைச்சர் செயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டப் பிறகே ஆணையத்தைக் கூட்டினார்.

பிரதமரின் இந்த அலட்சியம், தமிழகத்திற்கு ஞாயம் செய்வதில் இந்திய அரசு காட்டும் அக்கறையின்மை ஆகியவற்றைப் புரிந்து கொண்ட உச்ச நீதிமன்றம்- தான் மட்டும் ஏன் தீவிரம் காட்ட வேண்டும் என்று எண்ணுவதற்கு வாய்ப்புள்ளதல்லவா? இரு மாநிலச் சிக்கல்; கர்நாடகமோ உச்ச நீதிமன்றம் ஆணையிட்டால் தெருவில் இறங்கிப் போராடுகிறது. தமிழகமோ உறங்கிக் கிடக்கிறது என்று உச்ச நீதிமன்றம் பார்க்குமல்லவா!

03.09.2002 அன்று உச்ச நீதிமன்றம், தமிழ்நாட்டிற்குக் கர்நாடகம் ஒரு நாளைக்கு 1.25 .மி.. வீதம் தண்ணீர்த் திறந்துவிட வேண்டும் என்று ஆணையிட்டது. உடனடியாக பிரதமர் தலைமையில் ஆணையம் கூட்டி முடிவு எடுக்க வேண்டும். அதுவரை இந்த அளவு தண்ணீர்த் திறந்துவிட வேண்டும் என்றது. அப்போது கர்நாடக அணைகளில் தண்ணீர் ததும்பி நின்றது. ஆனால் தமிழ்நாட்டில் அந்நாள் வரை தண்ணீர் திறக்கப்படவில்லை. சூன் 12ஆம் நாளே திறந்திருக்க வேண்டும். செப்டம்பர் 3 வரையும் திறக்கப்படவில்லை, மேட்டூரில் தண்ணீர் இல்லை. இந்த நிலையில்கூட தமிழகத்திற்குரிய நீரைத் திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் கூறியதைக் கர்நாடக அரசும் அனைத்துக் கட்சிகளும் உழவர் அமைப்புகளும் ஏற்கவில்லை.

வீதியில் இறங்கிப் போராடியது மட்டுமின்றி அணைக்கட்டில் ஆற்றில் இறங்கிப் போராடினார்கள். ஒருவர் கபினி ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். போராட்டக்காரர்கள் கபினி அணையின் மதகுகளை மூடினர். மாண்டியா, மைசூர் மாவட் டங்களில் உழவர்கள் போராடினார்கள். இந்தப் போராட்டங்களைக் கர்நாடக அரசு ஊக்குவித்தது.

இதற்கிடையே பிரதமர் வாஜ்பாயி தலைமையில் 08.09.2002 அன்று காவிரி ஆணையம் கூட்டப்பட்டது. பிரதமர் வாஜ்பாயி ஒரு நொடிக்கு 0.8 .மி.. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றார். உச்ச நீதிமன்றம் கூறிய ஒரு நாளைக்கு 1.25 .மி. என்பதைக் கிட்டதட்ட சரிபாதியாகக் குறைத்துத் தீர்ப்பளித்தார் வாஜ்பாயி. அதையும் கர்நாடகம் செயல்படுத்தவில்லை.

அப்போதும் கர்நாடகத்திலிருந்த நீர்ப்பாசன அமைச்சர், எச்.கே. பாட்டீல் பின்வருமாறு கூறினார்.

கர்நாடகத்தின் இன்ன அணையிலிருந்து தண்ணீர்த் திறந்துவிட வேண்டும் என்று காவிரி ஆணையம் குறிப்பாகக் கூறவில்லை. மேட்டூரைச் சுற்றியுள்ள, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழைநீர், கால்வாய்க் கசிவுநீர் போன்றவையெல்லாம் சேர்ந்து ஆணையம் சொன்ன அளவுக்கு மேட்டூருக்கு தண்ணீர்ப் போகும்.” - (12.09.2002)

இப்படி அடாவடித்தனமாக - தமது தீர்ப்பைக் கேவலப்படுத்தும் தன்மையில் கர்நாடக அமைச்சர் பேசியதைப் பிரதமர் வாஜ்பாயி கண்டிக்கவில்லை. தமது தீர்ப்பைச் செயல்படுத்தியாக வேண்டும் என்று வலியுறுத்தவுமில்லை.

இந்திய அரசின் இவ்வாறான நிலையைப் பார்க்கும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புக்கெதிரான ஒன்றுபட்ட போராட் டங்களைக் கர்நாடகத்தில் பார்க்கும் உச்ச நீதிமன்றம், காலப்போக்கில் தனது உறுதியைத் தளர்த்தியது. தானும் கர்நாடகத்தின் அடாவடிகளைக் கண்டுகொள்ளாமல் - வாய்ப்புக் கிடைத்தால் தமிழ்நாட்டைக் கண்டிக்கும் நிலைக்குத் தாழ்ந்துவிட்டது.

இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு மேலாண்மை வாரியம் -ஒழுங்குமுறைக்குழு ஆகியவற்றை அமைக்குமாறு நடுவண் அரசுக்கு கெடுவிதித்தது உச்ச நீதிமன்றம் தான். ஆனால் கர்நாடகம் எதிர்க்கிறது என்றவுடன் இந்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்கக் காலம் தாழ்த்தியது; பின்னர் மறுக்கும் நிலைக்கு வந்தது. 2013 பிப்ரவரியிலிருந்து மேலாண்மை வாரியம் அமைத்திட இன்னும் காலம் தேவை என்றும் பரிசீலித்து வருகிறோம் என்றும் ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்தில் சாக்குப்போக்கு சொல்லி வருகிறது. இந்திய அரசு, கர்நாடகம் எதிர்க்கிறது என்ற ஒரே காரணத்திற்காக -மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது.

இந்த அநீதியைக் கண்டு தமிழகம் ஏன் கொந்தளிக்கவில்லை? அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏன் நடத்தவில்லை? வீதிகளில் ஆர்ப்பாட்டங்களும் அணிவகுப்புகளும் ஏன் நடக்கவில்லை?


தமிழக மக்கள் உரிமைப் போராட்டங்கள் நடத்திட வீதிக்கு வந்திடாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பையல்லவா இங்குள்ள பெரிய கட்சிகள் ஏற்றுள்ளன
அடுத்த பகுதி 

காவிரிச்சிக்கல் - ஓர் முழுமையான வரலாறு
  1. காவிரி தமிழரின் செவிலித்தாய்
  2. நடுவர் மன்றத் தீர்ப்பு கூறுவது என்ன?
  3. ஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு
  4. உச்சநீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி
  5. இந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்
  6. போராட மறுக்கும் பெரிய கட்சிகள்
  7. நம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு
  8. மக்கள் என்ன செய்கிறார்கள்?
  9. “காவிரிக் குடும்பம்” எனும் இனத்துரோக அமைப்பு
  10. கங்கை - காவிரி எனும் பித்தலாட்ட சூழ்ச்சித் திட்டம்
  11. பன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதில்லை? 
  12. எப்போது வெல்வோம்? என்ன போராட்டம் நடத்துவது?
Share this video :

0 கருத்துகள்:

Post a Comment

 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger