வாழ்வா? சாவா?
காவிரியில் உயிர் நீர் கேட்டு தஞ்சையில் உழவர்
பேரணி
காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடி
செய்யப்பட்டுள்ள 16 இலட்சம் ஏக்கர் சம்பாப் பயிர் காய்ந்து சருகாகும் நிலையில்
உள்ளது. உடனடியாக மேட்டூரிலிருந்து ஒரு நாளைக்கு 18 ஆயிரம் கன அடி வீதம் (1 ½
டி.எம்.சி) திறந்து விட்டால்தான் சம்பாப் பயிரைக் காக்க முடியும். இந்த அளவில்
தண்ணீர் 2013 பிப்ரவரி 15 ஆம் நாள் வரை தேவை ஆனால் மேட்டூரில் நீரோ இன்றைய (26.11.2012 நிலவரப்படி 50 அடியாகும்.
இது இன்னும் பத்து நாட்களுக்குக் கூட வராது.
இப்பொழுது மேட்டூரில் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர்
திறந்து விடப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அது கல்லணைக்கு வரும் போது 8
ஆயிரம் கன அடியாக உள்ளது.
ஒரு வாரத்துக்கு ஒரு ஆற்றுக்கு என்ற கணக்கில்
காவிரியிலும் வெண்ணாற்றிலும் முறை வைத்துத் தண்ணீர் விடுகிறார்கள். இந்தத் தண்ணீர்
பல வாய்க்கால்களுக்குப் போய் சேரவில்லை. போய்ச் சேர்ந்த இடங்களிலும் வயல்வெடிப்பு
நிரம்பக் கூடப் போதவில்லை.
திருவாரூர் மாவட்டம் வலிவலம் அருகே உள்ள
கூரத்தாங்குடியில் ஆறு ஏக்கர் சம்பாப்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயி ராஜாங்கம்,
கடந்த ஒரு வாரகால வெண்ணாற்று முறையில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தனது வயலுக்கான
வாய்க்காலில் வராததால் காய்ந்து கருகும் சம்பாப்பயிரைக் கண்டு அதிர்ச்சி
அடைந்துள்ளார். வெண்ணாற்றுக்கான முறை முடிந்து காவிரியில் ஒரு வாரம் தண்ணீர்
திறந்துவிடப் போகிறார்கள்; இன்னும் ஏழு நாட்களுக்குத் தனது வாய்க் காலில் தண்ணீர்
வராது; அப்படியானால் சம்பாப்பயிர் முழுவதும்
கருகிவிடும் என்று பதை பதைத்து தனக்கு ஏற்படப்போகும் சாகுபடி இழப்பையும் அதனால்
ஏற்படும் கடன் தொல்லை, அவமானம், பணநெருக்கடி ஆகியவற்றையும் எண்ணிக் கவலை கொண்டு
பூச்சி மருந்தை சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொண்டு விட்டார். இந்த அவலம் மற்ற
ஊர்களுக்கும் தொடரும் அபாயம் உள்ளது.
எனவே, இந்திய அரசும், தமிழக அரசும்;
காவிரி டெல்டா மாவட்டங்களின் சம்பாப் பயிரை மட்டுமல்ல, உழவர்களின் உயிரையும்
காப்பாற்றிட வேண்டிய நெருக்கடியை உணர்ந்து கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்குரிய
நீரை உடனே பெற்றுத் தர போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். அரசமைப்புச் சட்ட
விதி 355 ஐப் பயன்படுத்தி கர்நாடகத்தில்
தற்போதுள்ள 60 டி.எம்.சி தண்ணீர்லிருந்து உடனடியாக 30 டி.எம்.சி. தண்ணீர் பெற்றுத்தர
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம். வரும் 8.12.2012
சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் உழவர் பெருந்தலைவர்
நாராயணசாமி அவர்கள் சிலையி லிருந்து பேரணி புறப்படும். பேரணி நிறைவில் தஞ்சை
ஆபிரகாம் பண்டிதர் சாலையில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறும்.
உழவர் பெருமக்களும், உரிமை உணர்வு
படைத்த தமிழ்ப் பெருங்குடி மக்களும் திரளாகப் பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும்
கலந்து கொள்ளுமாறு, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் அன்புடன்
கேட்டுக்கொள்கிறேன்
பெ.மணியரசன்
காவிரி உரிமை மீட்புக் குழு
ஒருங்கிணைப்பாளர்
இடம்: தஞ்சாவூர்
(செய்தி : த.தே.பொ.க. செய்திப் பிரிவு)