தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


தமிழகப் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் முன் மறியல் - காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு!


காவிரி உரிமைக்காகப் போராடாத தமிழக அரசைக் கண்டித்து,
காவிரி டெல்டா மாவட்டத் தலைவநகரங்களிலுள்ள
தமிழகப் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் முன் மறியல்!
காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு!காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் (13.12.2012) மாலை, தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்றது. காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் கூட்டத்தை ஒருங்கிணைத்தார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், தமிழக உழவர் முன்னணி சார்பில் கென்னடி, தமிழக விவசாயிகள் சங்கத்தின்  மாவட்டத் தலைவர் மணிமொழியன், தமிழக விவசாயிகள் சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் செங்கொடிச் செல்வன், ம.தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளர் விடுதலைவேந்தன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ.நல்லதுரை, விடுதலைத் தமிழ்ப்புலிகள் இயக்க நிறுவனத் தலைவர் குடந்தை அரசன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை மாவட்டச் செயலாளர் அருணாசலம், புதிய தமிழகம் மாவட்டச் செயலாளர் தண்டாயுதபாணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநிலத் துனை செயலாளர் தமிழ்நேசன், உள்ளிட்ட பல்வேறு அமைப்புப் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழகத்தை வஞ்சிக்கும் நடுவண் அரசைக் கண்டித்து, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் (மக்களவை, மாநிலங்களவை மற்றும் அமைச்சர்கள்) அனைவரும் உடனடியாகப் பதவி விலக வேண்டும், தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நடுவண் அரசு நெய்வேலி மின்சாரத்தைக் கர்நாடகத்திற்கு அனுப்பக் கூடாது என்றும், நிலக்கரி, பெட்ரோலியம் உள்ளிட்ட தமிழகக் கனிம வளங்களை நடுவண் அரசு எடுக்கக் கூடாது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும், கருகிப் போன சம்பாப் பயிருக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் ஆகிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இறுதியாக, தமிழக அரசு காவிரி நீரைப் பெற்றுத் தர உரிய முயற்சிகள் எடுக்காததைக்  கண்டித்து, காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டத் தலைநகரங்களில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை அலுவலகங்கள் முன், வரும் 21.12.2012 அன்று மறியல் போராட்டம் நடத்துவதென ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

 பெ.மணியரசன்
 காவிரி உரிமை மீட்புக் குழு
                                   ஒருங்கிணைப்பாளர்இடம்: தஞ்சாவூர்


இந்திய அரசுக்கு நாம் ஏன் வரி கொடுக்க வேண்டும்? தஞ்சை உழவர் பேரணியில் தோழர் பெ.மணியரசன் கேள்வி!

காவிரிச் சிக்கல்:  இந்திய அரசுக்கு நாம் ஏன் வரி கொடுக்க வேண்டும்? தஞ்சை உழவர் பேரணியில் தோழர் பெ.மணியரசன் கேள்வி!காவிரி நீர்ச் சிக்கலைத் தீர்த்து வைக்க விரும்பாத இந்திய அரசுக்கு நாம் ஏன் வரி கொடுக்க வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் கேள்வி எழுப்பினார்.

இந்திய அரசும்தமிழக அரசும் காவிரி டெல்டா மாவட்டங்களின் சம்பாப் பயிரை மட்டுமல்லஉழவர்களின் உயிரையும் காப்பாற்றிட வேண்டிய நெருக்கடியை உணர்ந்து கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்குரிய நீரை உடனே பெற்றுத் தர போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். அரசமைப்புச் சட்ட விதி 355ஐப் பயன்படுத்தி கர்நாடகத்தில் தற்போதுள்ள 60 டி.எம்.சி தண்ணீரீல், உடனடியாக 36 டி.எம்.சி. தண்ணீர் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று(08.12.2012), காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் தஞ்சையில் மாபெரும் உழவர் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தஞ்சை மேரிஸ் கார்னர் அருகில் மாலை 4.15 மணியளவில், தொம்பங்குடிசையில் உள்ள உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி அவர்களது சிலைக்கு மாலை அணிவித்து மேரிஸ் கார்னர் பகுதியில் இருந்து பேரணி தொடங்கியது. தொடங்கியப் பேரணிக்கு தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் பேராசிரியர் எஸ்.எ.சின்னச்சாமி தலைமையேற்றார். தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் திரு. சி.ஆறுமுகம் பேரணியைத் தொடங்கி வைத்தார். தாளாண்மை உழவர் இயக்கத் தலைவர் பொறியாளர் கோ.திருநாவுக்கரசுஇயற்கை வேளாண்மை உழவர் இயக்கத் தலைவர் திரு. கே.கே.ஆர்.லெனின்தமிழக விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் திரு. துளசி அய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஆயிரக்கணக்கான உழவர்களும், உணர்வாளர்களும் முழக்கங்கள் எழுப்பியவாறு சென்றது எழுச்சியாக இருந்தது. காவல்துறையினர் சில முக்கிய வீதிகளின் வழியாக செல்ல முயற்சித்த போது, காவல்துறை தடுத்ததால், உழவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர், தள்ளுமுள்ளு ஏற்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் ஆப்ரகாம் பண்டிதர் சாலை வழியாகப் பேரணி செல்ல அனுமதித்தனர். பேரணியின் முடிவில், பொதுக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கும.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. துரை.பாலகிருஷ்ணன் தலைமையேற்றார். தமிழக விவசாயிகள் சங்க திருவாரூர் மாவட்டத் தலைவர் திரு. பயரி எஸ்.கிருஷ்ணமணிசெயலாளர் திரு. இரா.மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் திரு தெ.காசிநாதன் வரவேற்புரையாற்றினர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் இரா.திருஞானம், திருப்பூருங்குறிச்சி காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு. சுகுமாரன், ம.தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் திரு. விடுதலை வேந்தன், ஒன்றியச் செயலாளர் திரு. பாஸ்கரன்,   தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் திரு அய்யனாபுரம் சி.முருகேசன்நாம் தமிழர் கட்சி தமிழக ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ.நல்லதுரைவிடுதலைத் தமிழ்ப்புலிகள் நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன்தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் திரு இரா.சுகுமார்த.வி.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. இல.செங்கொடிச் செல்வன்நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறைப் பொறுப்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம்த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசுநாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறைப் பொறுப்பாளர் வழக்கறிஞர் மணி.செந்தில்தமிழர் தேசிய இயக்க மாவட்டப் பொறுப்பாளர் திரு. பொன்.வைத்தியநாதன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் சிறப்புரை நிகழ்த்தினர்.

நிறைவாக காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் உரையாற்றினார். அவர் பேசியதாவது:

காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் மாபெரும் உழவர் பேரணியை நடத்தி அதன் முடிவில் இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். பல்லாயிரக்கணக்கில் உழவர்களும், உணர்வாளர்களும், இந்த எழுச்சிமிகுப் பேரணியிலும், பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டிருக்கிறீர்கள். காவிரி உரிமை மீட்புக் குழுவில் உறுப்பு வகிக்கும் அரசியல் அமைப்புகளும், உழவர் இயக்கங்களும் கடுமையாக உழைத்து மக்களை இப்பேரணிக்கும் பொதுக்கூட்டத்திற்கும் திரளச் செய்திருக்கிறார்கள். இருந்தபோதிலும், கட்சி கடந்து, உழவர்கள் வந்திருக்கிறார்கள். பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் உழவர்களைத் திரட்டிவர முயற்சி எடுத்திருக்கிறார்கள். அவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களுக்கு நற்பணி மன்றம் வைத்துள்ள அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து இந்த பேரணியில் கலந்து கொண்டார்கள். தமிழர்களுக்கு வந்த பாதிப்பு என்ற உணர்வோடு அனைத்துப் பகுதி மக்களும், இப்பேரணியில் காவிரி உரிமையை மீட்கும் உணர்வோடு கலந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  

கர்நாடகத்தில் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தர முடியாது என்று சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதுவரை பத்திரிக்கையாளர்களிடம் சொல்லி வந்தவர்கள், இப்பொழுது தமிழக முதலமைச்சர் செயலலிதாவிடம் நேரடியாகவே சொல்லியிருக்கிறார்கள். பா.ச.க. முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் தன்னுடன் பேச்சு நடத்திய தமிழக முதல்வரிடம் ஒரு சொட்டுத் தண்ணீரும் தர முடியாது எனக் கூறினார். அவரைப் போலவே, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் சீத்தராமையா பத்திரிக்கையாளர்களிடம் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்குத் தர முடியாது என்று பேசியுள்ளார்.

ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தர முடியாது என்ற சொல்லில், ஒரு கொள்கை இருக்கிறது. ஒரு தத்துவம் இருக்கிறது. அதாவது, தமிழக முதல்வர் ஒரு சொட்டுத் தண்ணீர் கேட்டால் அதைக் கூடத் தர மாட்டோம் என்பது அதன் பொருள். எங்களிடம் போதிய தண்ணீர் இல்லை என்பது அவர்களது முக்கியமான வாதமல்ல. எவ்வளவுக் குறைவாகத் தமிழகம் தண்ணீர் கேட்டாலும், தங்களிடம் எவ்வளவு அதிகமாகத் தண்ணீர் இருந்தாலும் அதில், ஒரு சொட்டு கூடத் தர மாட்டோம் என்கிறார்கள். ஏன் அப்படிச் சொல்லுகிறார்கள்?

நாங்கள் கன்னடர்கள், நீங்கள் தமிழர்கள், உங்களுக்கும் எங்களுக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை, அயல் இனத்தவர்களான தமிழர்களுக்கு நாங்கள் ஏன் தண்ணீர் தர வேண்டும் என்ற அவர்களின் இனக் கொள்கை தான், இந்த ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தர முடியாது என்ற வாதத்தில் அடங்கியிருக்கிறது. நாம் காவிரிச் சிக்கலைத் தண்ணீர் பிரச்சினையாக பார்க்கிறோம். அவர்களோ இனப்பிரச்சினையாகப் பார்க்கிறார்கள்.

எப்பொழுது காவிரிப் பிரச்சினை எழுந்தாலும் அப்பொழுதெல்லாம் கர்நாடகத்திலுள்ள தமிழர்களைத் தாக்குவதும், கர்நாடகம் செல்லும் தமிழக அரசு வாகனங்களைத் தாக்குவதும் அவர்களது போர்முறையாக உள்ளது. 1991 நவம்பரில், அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி நடுவண் அரசிதழில் வெளியிட்டார். அதைக் கண்டித்து, அன்றையக் கர்நாடக்க் காங்கிரசு முதல்வர் பங்காரப்பா முழு அடைப்பு நடத்தினார். அப்போது, கர்நாடகத்தில் காலங்காலமாக வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான தமிழர் வீடுகளை தாக்கிச் சூறையாடினார்கள். தீ வைத்துக் கொளுத்தினார்கள். தமிழ்ப்படங்கள் ஓடிய திரையரங்குகளை அடித்து நொறுக்கினார்கள். தமிழர்கள் பலரை கொலை செய்தார்கள். ஒரு வழக்கு கூட கர்நாடக காவல்துறைப் பதிவு செய்யவில்லை. 2 இலட்சம் தமிழர்கள் அகதிகளாக கர்நாடகத்திலிந்து தமிழகத்திற்கு ஓடி வந்தார்கள். தமிழகத்திலே நமது அரசாங்கம் அவர்களுக்கு அகதி முகாம்கள் திறந்தது.

இதிலிருந்தெல்லாம் தமிழ்நாட்டுத் தமிழர்கள் காவிரிச் சிக்கலின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் அதை தண்ணீர் சிக்கலாகவோ, பற்றாக்குரைப் பிரச்சினையாகவோ பார்க்கவில்லை. தமிழர்களுக்குத் தண்ணீர் தரக்கூடாது என்பது தான் அவர்களது இனவெறி நிலைப்பாடு.

எனவே, நாம் தமிழ் இனம் என்ற அடிப்படையில் தான் கோரிக்கை வைக்க வேண்டுமே தவிர, நெற்பயிர் பிரச்சினை, வாய்க்கால் வரப்புப் பிரச்சனை என்று ஒரு தொழிற்சங்கம் போல் பகைவனிடம் கோரிக்கை வைக்கக் கூடாது. ஒரு சொட்டுத் தண்ணீர் இருந்தால், அதில் அரைசொட்டுத் தண்ணீர் தமிழகத்திற்கு உரியது அதைத் திறந்து விடு எனக் கேட்க வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீர் இருந்தால் அதில் அரை டம்ளர்  தண்ணீரைக் கொடு எனக் கேட்க வேண்டும்.

உலகத்தில் நாடுகளுக்கிடையே நதிகள் ஓடுகின்றன. அதை பகிர்ந்து கொள்ள நாடுகளுக்கிடையே உடன்பாடுகள் உள்ளன. அவை செயல்படுகின்றன. சூடானுக்கும் எகிப்துக்கும் இடையே நைல் நதிக்கான உடன்பாடு இருக்கிறது. 1929லிருந்து அது செயல்படுகின்றது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே, இந்தியாவுக்கும்  பங்களாதேசத்திற்கும் இடையே ஆற்றுநீர் பகிர்வு உடன்பாடு இருக்கிறது. அது செயல்படுகின்றது.

எனவே, ஹெலிசிங்கி உடன்பாட்டின்படியும, 1956இல் இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட மாநிலங்க்கு இடையேயான தண்ணீர் தகராறுச் சட்டப்படியும் காவிரியில் தமிழகத்திற்குரியத் தண்ணீரைக் கர்நாடகம் திறந்து விட்டே ஆக வேண்டும். எனவே, நாம் தமிழகத்திற்குரியப் பங்குத் தண்ணீரைக் கேட்கிறோமே ஒழிய, கர்நாடகத்திடம் பிச்சைக் கேட்கவில்லை. தமிழகம் ஒரே குரலில், எங்களது பங்கு தண்ணீரைத் திறந்துவிடு என்று தான் கேட்கவேண்டும். இத்தனை இலட்சம் ஏக்கர் அத்தனை இலட்சம் ஏக்கர் என எவனுக்கும் கணக்குக் காட்ட வேண்டிய அவசியம் நமக்கு இல்லை.

காவிரித் தீர்ப்பாயம் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அங்குலம், அங்குலமாக ஆய்வு செய்தது. கர்நாடகத்தின்  பாசனப் பரப்பு, தமிழகத்தின் பாசனப் பரப்பு, கர்நாடகத்தில் பயிர் முறை, தமிழகத்தின் பயிர் முறை போன்ற பல்வேறு கூறுகளையும் கணக்கெடுத்து ஆய்வு செய்து, வரையறுத்து, தமிழ்நாட்டிற்கு 205 டி.எம்.சி. என இடைக்காலத் தீர்ப்பிலும், 192 டி.எம்.சி. என்று இறுதித் தீர்ப்பிலும் முடிவு செய்தது. இந்தத் தண்ணீரை நமக்குத் தர வேண்டியது தானே? தமிழ்நாட்டிலிருந்து குறுவை - சம்பா சாகுபடி எத்தனை இலட்சம் ஏக்கர் என அவனுக்கென்ன கணக்கு சொல்ல வேண்டியிருக்றது? தீர்ப்பாயம் வரையறுத்து, தீர்ப்பாயம் முடிவு செய்ததை, தமிழகத்திற்குத் தர வேண்டியது தான் கர்நாடகத்தின் வேலை. கண்காணிப்புக் குழு போட்டு தமிழகத்தில் என்ன விவசாயம் நடக்கிறது எத்தனை ஏக்கரில் நடக்கிறது என ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?

கண்காணிப்புக் குழுவிலே கருநாடகத்திற்குக் கங்காணி வேலை பார்க்கும் மத்திய நீர்வளத்துறை செயலாளர் துரு விஜய்சிங் என்ற நபர், தமிழினத்திற்கு எதிராகத் தொடர்ந்து பேசி வருகிறார். காவிரியின் முடிவுகளை அவர் தான் அறிவிக்கிறார். இப்பொழுது. உச்சநீதிமன்றம் ஒரு நாளைக்கு 10,000 கன அடி தண்ணீரைத் திறந்து  விடச் சொன்ன நிலையில், துரு விஜய் சிங் ஒரு நாளைக்கு 6545 கனஅடி திறந்து விட வேண்டுமென பரிந்துரை செய்கிறார்.

திசம்பர் மாதம் 10ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதி வரை 22 நாட்களுக்கு 12 டி.எம்.சி. திறந்து விட வேண்டும் என்று காவிரி கண்காணிப்புக் குழு கூறியிருப்பது, ஒரு நாளைக்கு ஒரு விநாடிக்கு 6545 கனஅடி என்றக் கணக்காகும். ஏற்கெனவே, உச்சநீதிமன்றமே மிகக்குறைவாகத் தீர்மானித்து 10,000 கனஅடி திறந்து விடச் சொன்னது. அதையும் குறைத்து கண்காணிப்புக் குழு 6545 அடியாக கூறுவது பாகுபாடு பார்த்து எடுக்கப்பட்ட மாபாதக முடிவல்லவா? துரு விஜய்சிங் தமிழ் இனத்திற்கு சத்ரு விஜய் சிங்காக இருக்கிறார்.

தமிழக அரசு, பற்றாக்குறைக் காலப்பகிர்வு அடிப்படையில் திசம்பர் 31க்குள் 36 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகம் திறந்து விட வேண்டும் எனக் கூறியிருக்கிறது. இந்தப் பேரணியிலும் பொதுக்கூட்டதிலும் அந்தக் கோரிக்கையைத் தான் நாமும் முன்வைக்கிறோம். பற்றாக்குறைக் காலப்பகிர்வு என்பது புரிந்து கொள்ள முடியாத சூத்திரமல்ல. கர்நாடகம் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை 40 விழுக்காடு குறைந்து விட்டது என்கிறது. தமிழக அரசு அதை அப்படியே ஏற்றுக் கொண்டு தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய தண்ணீரில் 40 விழுக்காட்டைக் குறைத்துக் கொண்டு பாக்கித் தண்ணீரைக் கொடுங்கள் எனக் கேட்கிறது. இது தான் பற்றாக்குறைக் காலப்பகிர்வுத் திட்டம். எடுத்துக்காட்டாக, 100 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் தர வேண்டும் என்றால் 40 டி.எம்.சியைக் குறைத்துக் கொண்டு 60 டி.எம்.சி.யை தாருங்கள் எனக் கேட்பதாகும்.

இன்றைய நிலையில் கர்நாடக அணைகளில், 4 பெரிய அணைகளில் மட்டுமின்றி, பல்வேறு சிறிய அணைகளிலும் சேர்த்து மொத்தம் 80 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் இருக்கிறது. இதில் 36 டி.எம்.சி. தண்ணீர் தருவது முடியாத காரியமல்ல. அயல் இனமான தமிழர்களுக்கு ஏன் தண்ணீர் தர வேண்டும் என்பது தான் அவர்களது எண்ணம்.

எனவே, நாமும் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நெய்வேலியிலிருந்து, ஓரு நாளைக்கு 11,000 கோடி யூனிட் என்ற கணக்கில் கர்நாடகத்திற்கு செல்லும் மின்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி என்ற ஓர் இயற்கை வளத்தைப் பாதுகாத்துத் தராத இந்திய அரசு, காவிரிப்படுகையில் கிடைக்கும் பெட்ரோலியத்தை எடுக்கக்கூடாது என நாம் தடுத்தாக வேண்டும்.

மத்திய அரசிடம் எல்லா அதிகாரமும் இருக்கிறது. ஒரு தீர்ப்பாயம் தீர்ப்பு சொல்லிவிட்டால் அதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு - அதிகாரம் அனைத்தும் மாநிலங்களுக்கிடையிலான நீர் தகராறு சட்டப்பட்டி, மத்திய அரசிடம் தான் இருக்கிறது. தமிழர்களுக்கு எந்த வகையில் பாதகம் செய்ய முடியுமோ அந்தவகையில் செய்யலாம் என்பது தான் மத்திய அரசின் நிரந்திரக் கொள்கை. ஈழத்தில் தமிழர்களை சிங்களன் கொன்றால், அதற்கு இந்திய அரசு துணை நிற்கும். முல்லைப் பெரியாற்று அணை உரிமையை மறுத்து, தமிழர்களுக்கு எதிராக மலையாளிகள் கிளம்பினால், மலையாளிகளுக்கு ஆதாரவாக மத்திய அரசு செயல்படும். தமிழகக் கடல் பரப்பில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை சிங்களப் படை சுட்டுக் கொன்றால், மறைமுகமாக சிங்களப் படைக்கு ஆதரவாக இந்தியா நிற்கும். இந்த வரிசையில் தான் காவிரிச் சிக்கலில், இன அடிப்படையில் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் கன்னடர்களுக்கு மறைமுக ஆதரவு தருகிறது இந்திய அரசு. மத்தியில் காங்கிரசு இருந்தாலும் இதே நிலை தான், பா.ச.க. அரசு இருந்தாலும் இதே நிலை தான்.

இங்கே பேசியத் தோழர்கள் காவிரிப் பிரிச்சினையைத் தீர்க்கவில்லையென்றால், தமிழ்நாடு தனியே போகும்  என்று சொன்னார்கள். இந்தியா தனது பக்கத்து நாடுகளான பாகிஸ்தானோடு, பங்களாதேசத்தோடு ஆற்றுநீர் சிக்கல்களை தீர்த்துக் கொண்டுவிட்டது. ஆனால், இரண்டு பக்கத்து மாநிலங்களான கர்நாடகம், தமிழ்நாடு ஆகியவற்றுக்கிடையே உள்ள தண்ணீர் தகராற்றைத் தீர்த்து வைக்க விரும்பவில்லை. எனக்குள் ஓரு எண்ணம் ஏற்பட்டது. ஒருவேளை, தமிழ்நாடும் இந்தியாவுக்குப் பக்கத்து நாடாக மாறிவிட்டால், காவிரிச் சிக்கல் தீர்நதுவிடுமோ என்று எண்ணினேன்.

சம்பா பயிர் காய்ந்ததைப் பார்த்து, கடன்களை அடைக்க முடியாதே, குடும்பம் நடத்த முடியாதே என காவிரி டெல்டா பகுதியில், நான்கு தமிழர்கள் இதுவரை தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதைத் தற்கொலை என்பதை விட, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரும் செய்த கொலைகள் என்றே சொல்ல வேண்டும். இந்த ஆண்டு 5 இலட்சம் ஏக்கர் குறுவை பாழ்பட்டது. 16 இலட்சம் ஏக்கர் சம்பா பாதிப்பில் உள்ளது. அடுத்த ஆண்டு சூன், சூலையில் குறுவைக்குத் தண்ணீர் திறந்துவிட வாய்ப்புள்ளதா என்றால், அதுவும் இல்லை. இந்த ஆண்டு நவம்பர், திசம்பர் மாதங்களில், மேட்டூரில் தண்ணீரைத் தேக்கி வைத்திருந்தால் தான், அடுத்த ஆண்டு சூன், சூலையில் குறுவைக்குத் தண்ணீர் திறந்துவிட முடியும். இன்றுள்ள நிலை நீடித்தால், அடுத்த ஆண்டும் குறுவை சாகுபடி செய்ய முடியாது. அதன்பிறகு நம் கதி என்ன? தற்கொலைச் சாவுகள் பெருகக் கூடிய அபாயம் இருக்கிறது. பிழைப்புக்கு வழி தேடி ஊரை காலி செய்துவிட்டு ஓடும் அவலம் ஏற்படும். தமிழ் மக்களின் வாழ்வை இந்தளவுக்கு நாசாமாக்குகின்ற இந்திய அரசுக்கு, நாம் ஏன் வரி கொடுக்க வேண்டும்?

எனவே, இந்திய அரசு வசூலிக்கும் உற்பத்தி வரி(Excise), வருமானவரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் வசூலிக்காதே என்று நாம் கூற வேண்டும். முதல் கட்டமாக, அந்த வரிகளை வசூலிக்கும் அலுவலகங்களை இழுத்து மூட வேண்டும். ஒரு வாரம் அந்த அலுவலகங்கள் செயல்படவிடாமல் மூடும்படி நாம் தொடர்ந்து போராட வேண்டும்.

எழுச்சியோடு பேரணி நடத்தினோம், பொதுக்கூட்டம் நடத்தினோம் என்ற மகிழ்ச்சியில் அயர்ந்து இருந்துவிடாமல், அடுத்தடுத்து நடத்த வேண்டிய போராட்டங்களுக்கு நாம் களம் அமைக்க வேண்டும். இன்றைக்கு, வந்துள்ள அமைப்புகள், உழவர்கள் மட்டுமின்றி இன்றைக்கு வர முடியாதவர்களையும், அமைப்புகளையும், இணைத்து விரிபடுத்திக்கொண்டு நாம் போராட்டத்தை முன்னெடுப்போம். உறுதியாக காவிரி உரிமையை மீட்க முடியும், உழவர்கள் வாழ்வை காக்க முடியும் என்ற நம்பிக்கையோடு நாம் விடைபெறுவோம் நன்றி வணக்கம்.

திசம்பர் 31 வரை 36 டி.எம.சி. தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்திறகு மத்திய அரசு அரசமைப்புச் சட்டவிதி 355ன் கீழ் கட்டளைத தாக்கீது அனுப்ப வேண்டும், அதன்பிறகும் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வில்லையெனில், அரசமைப்புச் சட்டவிதி 356இன் கீழ் கர்நாடக அரசைக் கலைத்துக்  குடியரசுத் தலைவர் ஆட்சியமைத்து நடுவண் அரசே 36 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்து விட வேண்டும், கர்நாடகத்திற்கு செல்லும் நெய்வேலி மின்சாரத்தை அங்கு அனுப்பாமல் நிறுத்தி, மின்வெட்டால் துன்பப்படும் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டும், காவிரி தீர்ப்பாயத்தின் முடிவுகளை செயல்படுத்தி வைக்க மறுக்கும் இந்திய அரசு, காவிரிப் படுகையில் கிடைக்கும் பெட்ரோலியத்தை எடுக்கக் கூடாது, தண்ணீரின்றி கருகிப் போன சம்பாப் பயிருக்கு இழப்பீடாக ஒரு ஏக்கருக்கு 20,000 ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டும், காவிரி நீரின்றி சம்பாப் பயிர் கருகிப் போனதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட உழவர்கள் குடும்பத்திற்கு தலா 10 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : விஜய்)

வாழ்வா? சாவா? காவிரியில் உயிர் நீர் கேட்டு தஞ்சையில் உழவர் பேரணி


                 வாழ்வா? சாவா?
காவிரியில் உயிர் நீர் கேட்டு தஞ்சையில் உழவர் பேரணி

காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 16 இலட்சம் ஏக்கர் சம்பாப் பயிர் காய்ந்து சருகாகும் நிலையில் உள்ளது. உடனடியாக மேட்டூரிலிருந்து ஒரு நாளைக்கு 18 ஆயிரம் கன அடி வீதம் (1 ½ டி.எம்.சி) திறந்து விட்டால்தான் சம்பாப் பயிரைக் காக்க முடியும். இந்த அளவில் தண்ணீர் 2013 பிப்ரவரி 15 ஆம் நாள் வரை தேவை ஆனால் மேட்டூரில் நீரோ  இன்றைய (26.11.2012 நிலவரப்படி 50 அடியாகும். இது இன்னும் பத்து நாட்களுக்குக் கூட வராது.

இப்பொழுது மேட்டூரில் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அது கல்லணைக்கு வரும் போது 8 ஆயிரம் கன அடியாக உள்ளது.

ஒரு வாரத்துக்கு ஒரு ஆற்றுக்கு என்ற கணக்கில் காவிரியிலும் வெண்ணாற்றிலும் முறை வைத்துத் தண்ணீர் விடுகிறார்கள். இந்தத் தண்ணீர் பல வாய்க்கால்களுக்குப் போய் சேரவில்லை. போய்ச் சேர்ந்த இடங்களிலும் வயல்வெடிப்பு நிரம்பக் கூடப் போதவில்லை.

திருவாரூர் மாவட்டம் வலிவலம் அருகே உள்ள கூரத்தாங்குடியில் ஆறு ஏக்கர் சம்பாப்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயி ராஜாங்கம், கடந்த ஒரு வாரகால வெண்ணாற்று முறையில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தனது வயலுக்கான வாய்க்காலில் வராததால் காய்ந்து கருகும் சம்பாப்பயிரைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். வெண்ணாற்றுக்கான முறை முடிந்து காவிரியில் ஒரு வாரம் தண்ணீர் திறந்துவிடப் போகிறார்கள்; இன்னும் ஏழு நாட்களுக்குத் தனது வாய்க் காலில் தண்ணீர் வராது; அப்படியானால் சம்பாப்பயிர் முழுவதும் கருகிவிடும் என்று பதை பதைத்து தனக்கு ஏற்படப்போகும் சாகுபடி இழப்பையும் அதனால் ஏற்படும் கடன் தொல்லை, அவமானம், பணநெருக்கடி ஆகியவற்றையும் எண்ணிக் கவலை கொண்டு பூச்சி மருந்தை சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொண்டு விட்டார். இந்த அவலம் மற்ற ஊர்களுக்கும் தொடரும் அபாயம் உள்ளது.

எனவே, இந்திய அரசும், தமிழக அரசும்; காவிரி டெல்டா மாவட்டங்களின் சம்பாப் பயிரை மட்டுமல்ல, உழவர்களின் உயிரையும் காப்பாற்றிட வேண்டிய நெருக்கடியை உணர்ந்து கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்குரிய நீரை உடனே பெற்றுத் தர போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். அரசமைப்புச் சட்ட விதி 355 ஐப்  பயன்படுத்தி கர்நாடகத்தில் தற்போதுள்ள 60 டி.எம்.சி தண்ணீர்லிருந்து உடனடியாக 30 டி.எம்.சி. தண்ணீர் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம். வரும் 8.12.2012 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி அவர்கள் சிலையி லிருந்து பேரணி புறப்படும். பேரணி நிறைவில் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறும்.

உழவர் பெருமக்களும், உரிமை உணர்வு படைத்த தமிழ்ப் பெருங்குடி மக்களும் திரளாகப் பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்ளுமாறு, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
                                                        பெ.மணியரசன்
 காவிரி உரிமை மீட்புக் குழு
ஒருங்கிணைப்பாளர்
இடம்: தஞ்சாவூர்

(செய்தி : த.தே.பொ.க. செய்திப் பிரிவு)


இந்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு காவிரி உரிமை மீட்புக்குழு போராட்டம் - குடந்தையில் வரி அலுவலகம் பூட்டப் பட்டது!

இந்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு காவிரி உரிமை மீட்புக்குழு போராட்டம் - குடந்தையில் வரி அலுவலகம் பூட்டப் பட்டது!

அரசமைப்புச் சட்டவிதி 355-இன்படி இந்திய அரசு கர்நாடகத்திற்குக் கட்டளைத் தாக்கீது அனுப்பி நாள் தோறும் 2 டி.எம்.சி. தண்ணீர் வீதம் 40 நாட்களுக்கு தமிழகத்திற்குத் திறக்கச் செய்ய வேண்டும். அதையும் கர்நாடகம் மீறினால், இந்திய அரசு இராணுவத்தை அனுப்பி அணைகளைத் திறந்து விடச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் 22.10.2012 ஆகிய இன்று காவிரி பாசன மாவட்டங்களில் இந்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இடைவிடாது கொட்டித் தீர்த்த மழைக்கு இடையிலும் இப்போராட்டத்தில் பல்வேறு கட்சியினரும், உழவர் அமைப்பினரும் திரளாக பங்கேற்றனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சை:
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருகிணைப்பாளர் – தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் தஞ்சையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்னாள் மறியல் போராட்டம் நடைபெற்றது, தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருகிணைப்பாளர் வழங்குரைஞர் நல்லதுரை, ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் திரு பாஸ்கரன், துணைத் தலைவர் திருமதி பத்மா, விடுதலை தமிழ் புலிகள் மாநில அமைப்புச் செயலாளர் திரு அருள் மாசிலாமணி, த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் குழ.பால்ராசு, தலைமை செயற்குழு உறுப்பினர் பழ.இராசேந்திரன், தஞ்சை நகரச் செயலாளர் இரா.சு. முனியாண்டி, பூதலூர் ஒன்றியச் செயலாளர் க.காமராசு உள்ளிட்ட 52 பேர் இப்போராட்டத்தில் பங்கேற்று கைதாயினர். போரட்ட அழுத்தம் காரணமாக பி.எஸ்.என்.எல். அலுவலக வாயில் கதவுகளை காவல்துறையினரே பூட்டி விட்டனர். போராட்டத தோழர்களைக் காவல்துறையினர் தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.

குடந்தையில் வரிஅலுவலகம் பூட்டப் பட்டது:
குடந்தையில் 22.10.2012 காலை 11 மணிக்கு வருமானவரி அலுவலகத்தை மறியல் செய்து போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு ம.தி.மு.க. மாநிலத் தணிக்கைக் குழு உறுப்பினர் திரு.முருகன் தலைமை தாங்கினார். விடுதலைத் தமிழ்ப் புலிகள் தலைவர் குடந்தை அரசன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் விடுதலைச் சுடர், தமிழர் வாழ்வுரிமைக் கட்சி பணி. மேரி ராசு உள்ளிட்ட 60க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர், காவல்துறை ஏற்படுத்திய தடைகளைத் தாண்டி முன்னேறிய தோழர்கள் குடந்தை வருமானவரி அலுவலகத்தை இழுத்துப் பூட்டினர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர்:
தஞ்சை – திருவாரூர் – நாகை மாட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவர் திரு மு.சேரன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திருவாரூர் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்னால் மறியல் போராட்டம் நடத்தி கைதாயினர். இதில் பாரதிய கிசான் சங்க பொறுப்பாளர் திரு இராமையா, நாம் தமிழர் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் தென்றல் சந்திரசேகரன் , விவசாயிகள் கூட்டமைப்பின் ஒன்றியத் தலைவர் திரு சுப்பையன், செயலாளர் திரு அகஸ்டின், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் திரு பழனிவேல் உள்ளிட்ட விவசாயிகள் அடங்குவர்.

மன்னார்குடி:
தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் தலைமை அஞ்சலகம் முன்பு கூடிய காவிரி உரிமை மீட்புக் குழுவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு பாரதிய கிசான் சங்கத் துணைத் தலைவர் திரு எம்.சி.பழனிவேல் தலைமை தாங்கினார் . தோழர் அரங்க.குணசேகரன் (தமிழக மக்கள் புரட்சிக் கழகத் தலைவர்), திரு செந்தில் (ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர்), தோழர் ரெ.செ.பாலன் (த.தே.பொ.க) தோழர் காளிதாசு (திராவிடர் விடுதலை கழகம்), திரு வரதராசன் (த.நா.வி.ச.), திரு சத்திய நாராயணன் (விவசாயிகள் கூட்டமைப்பு), உள்ளிட 25 பேர் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர். காவல் துறையினர் இவர்களைக் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி தலைமை அஞ்சலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மூன்று மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு பொறுப்பாளர் ஒய்சூர் கருணை தலைமை தாங்கினார், ம.தி.மு.க. நகரச் செயலாளர் திரு கோ.வி.சேகர், த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர் தோழர் இரா.தனபாலன், நாம் தமிழர் கட்சி மாவட்ட்த் துணைச் செயலாளர் திரு முத்துகுமார், பாரம்பரிய நெல்லைக் காப்போம் இயக்கத் தலைவர் திரு செயராமன், இயற்கை வேளாண் உழவர் இயக்கம் தோழர் வே.இராமதாசு, த.தே.பொ.க ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தோழர் கா.அரசு, வழக்குரைஞர் இ.தனஞ்செயன், நகரச் செயலாளர் தோழர் கு.இரமேசு உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

நாகை:
நாகப்பட்டினம் தலைமை அஞ்சலகம் முன்பு காவிரி உரிமை மீட்பு ஆர்ப்பாட்டத்தில் திரளான உழவர்கள் பங்கேற்றனர். மூன்று மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு பொறுப்பாளர் கீழ்வேளூர் தனபால் தலைமை தாங்கினார்.

(செய்தி : த.தே.பொ.க. செய்திப் பிரிவு, படங்கள் : விஜய்)

காவிரி நீரைப் பெற்றுத் தராத இந்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம்!

காவிரி நீரைப் பெற்றுத் தராத
இந்திய அரசு அலுவலகங்கள்
முன் மறியல் போராட்டம்!


நைல் நதி சூடானுக்கும், எகிப்திற்கும் இடையே ஓடுகிறது. சிந்து நதி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஓடுகிறது. காவிரி ஆறு கர்நாடகத்திலிருந்து, தமிழகத்திற்கு வர முடியாதா?

நர்மதை, கிருஷ்ணா ஆறுகளுக்கு அமைக்கப்பட்ட தீர்ப்பாயங்களின் முடிவுகள், சண்டை இல்லாமல் செயல்படுகின்றன. காவிரித் தீர்ப்பாயத்தின் முடிவு மட்டும், செயல்படுத்தப் படாதது ஏன்? இந்திய அரசின் சட்டங்கள், இங்கு மட்டும் முடமாகிப் போனது ஏன்? நாம் தமிழ் மக்கள் என்பதாலா?

5 இலட்சம் ஏக்கர் குறுவை சாகுபடியை இழந்தோம். 16 இலட்சம் சம்பா சாகுபடியையும் இழக்க வேண்டுமா? 90 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடக அணைகளில் இருக்கும் பொழுது வெறும் 9000 கன அடி தண்ணீரைத் திறக்கச் சொன்னார் பிரதமர். அதையும் ஏற்கவில்லை கர்நாடகம், அடுத்து, காவிரிக் கண்காணிப்புக் குழு அதையும் குறைத்து, 6,800 கன அடி தண்ணீர் திறக்கச் சொன்னது. இதையும் ஏற்க மறுத்தது கர்நாடகம். கர்நாடகத்தை, என்ன செய்து விட்டது இந்திய அரசு? 

இனி வாதாடிப் பயன் இல்லை. போராடித்தான் காவிரி உரிமையை மீட்க வேண்டும். 

ஒரு நாளைக்கு 2 டி.எம்.சி. வீதம் 40 நாட்களுக்குக் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டால்தான், சம்பா சாகுபடியைப் பாதுகாக்க முடியும். நாம் பிச்சை கேட்கவில்லை. சட்டப்படி நமக்குள்ள உரிமைத் தண்ணீரைக் கேட்கிறோம். 

அரசமைப்புச் சட்டவிதி 355-இன்படி கட்டளை தாக்கீது கர்நாடகத்திற்கு அனுப்பி 2 டி.எம்.சி. தண்ணீர் திறக்கச் செய்ய வேண்டும். அதையும் கர்நாடகம் மீறினால், இந்திய அரசு இராணுவத்தை அனுப்பி அணைகளைத் திறந்து விடச் செய்ய வேண்டும். 

இக்கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 22 அன்று தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் நடுவண் அரசு அலுவலகங்கள் முன் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் நடத்துவதென 10.10.2012 அன்று குடந்தையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

காவிரி நம் தாய். அதை நாம் இழக்க முடியாது! 
கெஞ்சிக் கேட்டால் கிடைக்காது, கிளர்ச்சி செய்யாமல் வெல்லாது! 
மறியல் போராட்டத்திற்கு வாருங்கள் தமிழ் மக்களே! 

இங்ஙனம்,
பெ.மணியரசன்
 (ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு)
 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger