கோடிக்கணக்கான உறுப்பினர்கள் இருப்பதாகக் கூறிக் கொள்ளும் அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் அசைவதில்லை. கோடிக்கணக்கான தமிழ் மக்களை
- உரிமைப் போராட்டங்களில் கலந்து கொள்ளாமல் தடுத்து வைக்கும் வாக்குறுதியை அக் கழகங்களின் தலைவர்கள் கன்னட வெறியர்களுக்கும் நடுவண் அரசுக்கும் கொடுத்திருப்பார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
கருணாநிதியும் செயலலிதாவும் முதல்வர் பதவியில் இருந்தால் பிரதமருக்குக் கடிதம் எழுதுவார்கள். எதிர்க்கட்சியாய் இருந்தால் அறிக்கை விடுவார்கள்! இவை, காவிரிக்காகத் தாங்களும் செயல்படுகிறோம் என்று காட்டிக் கொள்வதற்கான கண் துடைப்பு நாடகங்கள்!
கர்நாடகத்தில் மக்களைக் கண்டு அஞ்சும் தலைவர்கள்; தமிழ்நாட்டில் தலைவர்களைக் கண்டு அஞ்சும் மக்கள்!
கர்நாடகத்திலும் அரசியல் தலைவர்கள் தமிழ்நாட்டுத் தலைவர்களைப் போல் கையூட்டு வாங்குகிறார்கள்;
கொள்ளை யடிக்கிறார்கள்; பதவிச் சண்டை போடுகிறார்கள்; பதவிக்காகக் கட்சி மாறுகிறார்கள். ஆனால் காவிரியில் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர்க்கூடத் தரக்கூடாது என்பதில் ஒற்றுமையாக இருக் கிறார்கள்; உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் போடுகிறார்கள். மக்களை வீதியில் இறக்கி விடுகிறார்கள்; தாங்களும் வீதிக்கு வருகிறார்கள். கர்நாடகத்தில் அவர்கள் நடத்தும் போராட்டம் தில்லியை அதிரச் செய்கிறது.
தமிழ்நாட்டுக்குக் காவிரி நீர் தரக்கூடாது என்று உரத்துக் கத்த வேண்டும், இல்லையேல் நம்மைக் கன்னடர்கள் ஓரம் கட்டி விடுவார்கள்; நம்மை இனத்துரோகி என்பார்கள், வாக்குகள் பாதிக்கப்படும் என்ற அச்சம் கர்நாடகத் தலைவர்களுக்கு இருக்கிறது; அந்த அச்சத்தில் நூற்றில் ஒரு பங்குகூட தமிழகத் தலைவர்களுக்குத் தமிழர்களைப் பார்த்து ஏற்படுவதில்லை! ஏன்?
கர்நாடகம் அடாவடித்தனமாய் இந்திய அரசின் துணையோடு, தமிழகக் காவிரித் தண்ணீரை ஆண்டுதோறும் தடுத்துத் தேக்கிக் கொள்வதால், இங்கு எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு! எத்தனை கோடி மக்களின் வாழ்வு நாசமாகிவிட்டது? ஆனாலும் செயலலிதாவும் கருணாநிதியும் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி கலந்தாய்வு செய்ய வேண்டும் என்றுகூடக் கவலைப்படாமல் பிரான்ஸ் நாட்டின் பேரரசன் 14ஆம் லூயின் பேரப் பிள்ளைகள் போல் தர்பார் அரசியல் நடத்துகிறார்களே அது எப்படி?
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி ஆய்வு செய்ய மறுக்கிறார் முதல்வர் செயலலிதா. அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துமாறு கோரிக்கை வைக்க மறுக்கிறார் கருணாநிதி! விசயகாந்த் பற்றி கேட்கவே வேண்டியதில்லை. கருணாநிதியும் செயலலிதாவும் கால் நூற்றாண்டுக்கு மேல் நடத்திவரும் தன்னலவெறிப் பகை அரசியலின் பக்க விளைவாக முளைத்த ஒரு களைச்செடி விசயகாந்த்!
இந்த மூன்று பேரும் இன்று சட்டமன்ற உறுப்பினர்கள்! ஒருவர் முதலமைச்சர், இன்னொருவர் முன்னாள் முதலமைச்சர்,
மூன்றாமவர் முதன்மை எதிர்க்கட்சித் தலைவர்! இந்த மூன்று பேரும் சனநாயக அரங்கமான, சட்டப்படியான, பொது அரங்கமான சட்டப் பேரவையில் ஒன்றாக உட்கார்ந்து தமிழகச் சிக்கல்கள் பற்றி என்றைக்காவது பேசி இருக்கிறார்களா?
சட்டப் பேரவையில்கூட சேர்ந்திருக்க முடியாத இம்மூவரும் அனைத்துக் கட்சி கூட்டத்திலா சேர்ந்திருப்பார்கள்!
மூன்று பேருமே கொம்பு முளைத்தவர்கள்! முட்டிக் கொண்டால் காயம் பெரிதாக இருக்கும்!
மூன்று பேரும் ஓர் இடத்தில் அமர்ந்து தமிழ்நாட்டு நலன்காக்க கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ள முடியாத நிலை மூர்க்கத்தனம் இல்லையா?
இவர்கள் காட்டுமிராண்டிகளின் தலைவர்களா? இல்லை! யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றன் பிறந்த இன
மக்களுக்குத் தலைமை தாங்குவோர்! திருவள்ளுவரும் வள்ளலாரும் பிறந்த இனமக்களுக்குத் தலைமை தாங்குவோர்! “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு” என்று சொல்லி, எதிர்க்கட்சித் தலைவர்களோடு இனிய உறவு வைத்திருந்த அறிஞர் அண்ணாவைத் தங்கள் தலைவராகச் சொல்லிக் கொள்பவர்கள் கருணாநிதியும் செயலலிதாவும்!
அடுத்த பகுதி
காவிரிச்சிக்கல் - ஓர் முழுமையான வரலாறு
- காவிரி தமிழரின் செவிலித்தாய்
- நடுவர் மன்றத் தீர்ப்பு கூறுவது என்ன?
- ஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு
- உச்சநீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி
- இந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்
- போராட மறுக்கும் பெரிய கட்சிகள்
- நம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு
- மக்கள் என்ன செய்கிறார்கள்?
- “காவிரிக் குடும்பம்” எனும் இனத்துரோக அமைப்பு
- கங்கை - காவிரி எனும் பித்தலாட்ட சூழ்ச்சித் திட்டம்
- பன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதில்லை?
- எப்போது வெல்வோம்? என்ன போராட்டம் நடத்துவது?
0 கருத்துகள்:
Post a Comment