வெற்றி வர வேண்டுமெனில் போராட வேண்டும். போராட வேண்டுமெனில் அறிவுத் தெளிவும் உள்ள உறுதியும் வேண்டும். அடைய வேண்டிய இலக்கு என்ன என்பதை சரியாக அடையாளம் காண வேண்டும். இவை அனைத்தும் நிரம்பிய அமைப்பும் தலைமையும் வேண்டும். இவற்றில் எந்த ஒன்று குறைந்தாலும் வெற்றி பெற முடியாது.
கர்நாடகத்திற்கும் இந்திய அரசுக்கும் நெருக்கடிகள் கொடுக்கத் தக்க போராட்டங்களைத்தான் இனி நடத்த வேண்டும்.
இவ்வாறான நெருக்கடி கொடுக்கும் போராட்டத்தை முதல்முதலாக
17.07.1991 அன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்தியது. “காவிரி நீரைத் தடுத்து வைத்துள்ள கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் செல்லாமல் நிறுத்து!” என்ற முழக்கத்துடன் த.தே.பொ.க.
வின் அன்றையத் தலைமைச் செயற்குழு உறுப்பினரும் இன்றைய பொதுச் செயலாளருமான தோழர் கி. வெங்கட்ராமன் தலைமையில் நெய்வேலி நிலக்கரிக் கழகத் தலைமை நிர்வாகியை அவரது அலுவலகத்தில் வைத்து திடீரென்று 35 தோழர்கள் முற்றுகை (கெரோ) செய்தார்கள். இரண்டாவது அனல் மின் நிலையத்திலிருந்து கர்நாடகம் செல்லும் மின்சாரத்தை நிறுத்தச் சொல்லுங்கள் என்றார்கள். 35 தோழர்களும் தளைப்படுத்தப்பட்டு, கடலூர் நடுவண் சிறையில் அடைக்கப்பட்டனர். 25 நாட்களுக்குப்பிறகு பிணையில் வந்தனர்.
இயக்குநர் பாரதிராஜா தலைமையில் திரைப்படத் துறையினர் 12.10.2002 அன்று நெய்வேலியில் காவிரிக்காக மேற்படிக் கோரிக்கையை வைத்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
13.12.2003 அன்று தமிழ்த் தேசிய முன்னணி கல்லணையில் தொடங்கி 22.12.2002 அன்று நெய்வேலியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்று, 200க்கும் மேற்பட்டவர்கள் கைதானார்கள்.
இந்தப் போராட்டத்தை அடையாளப் போராட்டமாக இல்லாமல் பல்லாயிரக்கணக்கானோர் நெய்வேலி நிலக்கரிக் கழகத்தையும் மின் உற்பத்தி நிலையங்களையும் வாரக்கணக்கில் முற்றுகையிடும் போராட்டமாக அங்கேயே சமைத்துச் சாப்பிட வேண்டும். ஒரு முடிவு வரும்வரை அந்த இடத்தைவிட்டு அகலக்கூடாது. அப்படி ஒரு போராட்டத்திற்கு இனி ஆயத்தமாக வேண்டும். இன்றும் நெய்வேலியிலிருந்து 11 கோடி யூனிட் மின்சாரம் அன்றாடம் கர்நாடகம் போகிறது.
கர்நாடகத்திற்கெதிராகப் பொருளியல் தடை விதிக்க வேண்டும். கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகத்திற்கும் எப்பொருளும் போகாமல் பல நாட்களுக்கு அனைத்து முனைகளிலும் மறியல் போராட்டம் நடத்த வேண்டும்.
இதற்கு முன்னோடியாக ஓர் அடையாளப் போராட்டத்தை 1995ஆம் ஆண்டு த.தே.பொ.க நடத்தியது. கர்நாடகத்திற்குப் பொருளியல் தடை விதிக்கக் கோரி கர்நாடக எல்லை நகரமான சத்தியமங்கலத்தில் 25.09.1995
அன்று தோழர் பெ.மணியரசன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அப்போது ஒரு கர்நாடகப் பேருந்து எரிக்கப்பட்டதாக த.தே.பொ.க தோழர் குழ.பால்ராசு (இப்பொழுது தஞ்சை மாவட்டச் செயலாளர்) தலைமையில் 12 பேர் தளைப்படுத்தப்பட்டு அவினாசிச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அடுத்து இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் போராட்டங்களை நடத்த வேண்டும். இதற்கும் முன்னோடியாக “காவிரி என்ற ஓர் இயற்கை வளத்தைப் பாதுகாத்துத் தராத இந்திய அரசே, காவிரிப் படுக்கையில் கிடைக்கும் இன்னொரு இயற்கை வளமான நரிமணம் பெட்ரோலியத்தை எடுத்துச் செல்லாதே” என்ற முழக்கத்துடன் த.தே.பொ.க. (அப்போது எம்.சி.பி.ஐ) கல்லணை யிலிருந்து மிதிவண்டிப் பரப்புரை சில நாள் சென்று வந்து 26.08.1991
அன்று அப்போதைய மாவட்டச் செயலாளர் தோழர் க. பழநி மாணிக்கம் தலைமையில் நரிமணம் பெட்ரோல் கிடங்கில் முற்றுகைப் போராட்டம் நடத்தியது.
அதன் பிறகு தமிழ்த் தேசிய முன்னணி சார்பில் (த.தே.பொ.க,
த.த.இ., த.ஒ.வி.இ., த.த.பே.)
தோழர் பெ. மணியரசன் தலைமையில் கங்களாஞ்சேரி முனையிலிருந்து நரிமணம் செல்லும் நரிமணத் திலிருந்து வரும் பெட்ரோலிய ஊர்திகளை மறித்துப் பெருந்திரள் போராட்டம் நடத்தியது.
மீண்டும் 23.02.2013 அன்று இந்திய அரசு நிறுவனமான அடியக்க மங்கலம் பெட்ரோல் கிணறு முற்றுகைப் போராட்டம் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நடத்தப்பட்டது.
எனவே, கர்நாடகத்திற்கும்,
இந்திய அரசுக்கும் நெருக்கடி கொடுக்கும் போராட்டங்கள் யாவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால் அவை அடையாளப் போராட் டங்களாக மட்டுமே நடந்தன. இனி, முழு அளவில் வாரக் கணக்கில், மாதக் கணக்கில், பத்தாயிரம் பேர், இருபதாயிரம் பேர் கலந்து கொள்ளும் போராட்டங்களாக அங்கேயே உணவு சமைத்து உண்டு தொடரும் போராட்டங்களாக சனநாயகப் போராட்டங்களை நாம் நடத்த வேண்டும்.
தன்னைத் தற்காத்துக் கொள்ளப் போராடத் தவறும் இனம் அழிந்துவிடும். காவிரி, முல்லைப் பெரியாறு,
பாலாறு, கச்சத்தீவு என அனைத்தையும் இழந்துவரும் தமிழினம் இவற்றின் உரிமைகளை மீட்கப் போராடியாக வேண்டும் என்று வரலாறு வற்புறுத்துகிறது.
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் 489ஆ.மி.க தண்ணீர் 1924ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி தமிழ்நாட்டிற்கு வந்தது.
1974ஆம் ஆண்டில் மேட்டூர் அணையின் பொன்விழா நடந்த போது தொகுத்த கணக்கெடுப்பின்படி 50 ஆண்டுகளில் ஓராண்டுக்குச் சராசரியாக மேட்டூர் அணைக்குக் கர்நாடகத்திலிருந்து வந்த தண்ணீர் 361.3 ஆ.மி.க என்று கண்டறியப்பட்டது.
காவிரித் தீர்ப்பாயம்
1991 -சூன் 25இல் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில் கர்நாடகம் 205 ஆ.மி.க. தண்ணீர் தமிழ்நாட்டிற்குத் தரவேண்டும் என்று கூறப்பட்டது. இத்தீர்ப்பு தமிழகத்திற்குப் பெரும் அநீதி இழைத்தது. ஆனால் இந்த அநீதியை எதிர்த்துத் தமிழ்நாட்டில் பெரும் போராட்டம் எதுவுமில்லை.
இறுதித் தீர்ப்போ
192 ஆ.மி.க.
என்று இன்னும் குறைத்தது. அதில் 10 ஆ.மி.க.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஒதுக்கப்பட்டது. எஞ்சிய 182 ஆ.மி.க.வில் ஏழு ஆ.மி.க.
புதுவைக்குத் தர வேண்டும். மிச்சம் 175 ஆ.மி.கதான் தமிழ்நாட்டிற்கு!
இதைத் திறந்துவிடவும் கர்நாடகம் மறுக்கிறது. அதன் கோட்பாடு ஒரு சொட்டுத் தண்ணீர்க்கூடத் தமிழ்நாட்டிற்குத் தரமுடியாது என்பதுதான்!
காவிரித் தண்ணீரைக் கொண்டு 28 இலட்சம் ஏக்கர் சாகுபடி செய்து வந்தோம். அதை 24 இலட்சத்து 500 ஏக்கராகத் தீர்ப்பாயம் குறைத்துவிட்டது.
அதேநேரம், கர்நாடகத்திற்கு,
இடைக்காலத் தீர்ப்பின் போது 1991இல் 11,10,000 ஏக்கர் சாகுபடிப் பரப்பு. இறுதித் தீர்ப்பில் 21,00,500 ஏக்கர் சாகுபடிப் பரப்பு. இரு மடங்கு உயர்த்திக் கொடுக்கப்பட்டது.
தமிழகத்திற்குத் தீர்ப்பாயம் பெரும் அநீதி இழைத்துவிட்டது. அந்த அநீதியை எதிர்த்துப் போராடி நமது உரிமையை நிலைநாட்ட வேண்டிய நாம், அநீதியாக வழங்கிய தண்ணீரையாவது கொடு என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறோம்.
ஓடுபவனைக் கண்டால் துரத்துபவனுக்குத் தொக்கு! காவிரியில் கன்னடர்களிடம் நாம் தோற்றதைப் பார்த்த மலையாளிகள் துணிவுபெற்று முல்லைப் பெரியாறு அணையை உடைக்கத் திட்டம் தீட்டுகிறார்கள்.
வஞ்சிக்கப்பட்ட தமிழர்களே
நெஞ்சு நிமிர்த்துங்கள்!
கெஞ்சிக் கேட்க
- இது பிச்சையல்ல,
நமது உரிமை!
காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டுமல்ல,
தமிழகம் முழுவதும் போராட்டம் பரவட்டும்!
இது தமிழினத்தின் தன்மானப் போராட்டம்!
கர்நாடக அரசையும் இந்திய அரசையும்
பணியவைக்கும் போராட்டங்கள் நடத்துவோம்!
காவிரியில்லாமல் வாழ்வில்லை,
களம் காணாமல் காவிரியில்லை.
வரலாறு அழைக்கிறது!
தமிழர்களே!
வாருங்கள் போர்க் களத்திற்கு!
0 கருத்துகள்:
Post a Comment