சுரண்ட வந்த வெள்ளையர்கள் காலனி ஆட்சி நடத்தியபோது இருந்த மரபு வழிப்பட்ட உரிமைகள் பலவற்றை சொந்த ஆட்சி என்று மகுடம் சூட்டிக்கொண்ட
1947 ஆகஸ்ட் 15க்குப் பிறகு தமிழகம் இழந்துவிட்டது.
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, கச்சத்தீவு, மீன்பிடிக்கும் கடல் எனப் பல
மரபு வளங்களை இழந்துள்ளோம். சுதந்திர இந்தியா தமிழர்களுக்குக் கொடுத்த “பரிசுகள்” இவை!
திராவிடம்தான் தமிழ்நாட்டை முன்னேற்றியது என்று ஒரு சாரார் தம்பட்டம் அடிக்கிறார்கள். மேலே இருந்த மரபு வளங்கள் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்தான் பறிபோயின. அவற்றைக் காப்பாற்றும் ஆற்றல் எந்தத் திராவிட ஆட்சிக்கும் இல்லை.
யுகம் யுகமாய்க் காவிரி தமிழர்களின் தாயாய் இருந்து வளம் சுரந்தது; உணவு புரந்தது
“வாழி அவன்தன் வளநாடு
மகவாய் வளர்க்கும் தாயாகி
ஊழி உய்க்கும் பேருதவி
ஒழியாய் வாழி காவேரி”
என்றார் இளங்கோவடிகள்.
காவிரி, தாய் போன்றவள்;
சோழ நாட்டு மக்கள் காவிரித் தாயின் பிள்ளைகள்; ஊழி தோறும் ஊழி தோறும் தம்மக்களைக் காவிரித்தாய் வளர்த்து வருகிறாள்; அவள் வாழ்க, என்கிறார் (சிலப்பதிகாரம்).
அந்தக் காவிரியும் மாற்று இனத்தாரால் மறிக்கப்படாமல், திசை மாற்றப்படாமல் அழகாக, கம்பீரமாக, சோழ நாட்டில் ஓடி வருகிற தென்றால் சோழப் பேரரசனின் படை வலிமையின் காரணமாகவும் ஆட்சித் திறமையின் காரணமாகவும் தான் ஓடி வருகிறது என்றார் இளங்கோவடிகள்.
பூவர் சோலை மயிலாலப்
புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய
நடந்தாய் வாழி காவிரி
காமர் மாலை அருகசைய
நடந்த வெல்லாம் நின்கணவன்
நாமவேலின் திறம் கண்டறிந்தேன்
வாழி காவிரி
உன் கணவனாகிய சோழப் பேரரசனின் வேல்படையின் வலிமையால்தான் காவிரியே நீ
செம்மாப்போடு ஓடி வருகிறாய்!
மருங்கு வண்டுகள் ஓசையிட மணிப் பூவாடை போர்த்தி ஓடி வரும் காவிரியே, உன் கணவன் சோழப் பேரரசன் திருந்து செங்கோல் வளையாமையால்தான் ஓடி வருகிறாய்! வாழி காவேரி என்றார் இளங்கோவடிகள்!
அரசு வலிமையுள்ளதாக,
மக்கள் நலனில் அக்கறையுள்ளதாக இருந்தால்தான் காவிரி உள்ளிட்ட இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும் என்றார்.
பிற்காலத்தில் சோழநாட்டை ஆண்ட இரண்டாம் குலோத்துங்கன் மகன் இரண்டாம் இராசராசன் காலத்தில் (கி.பி.1146
- 1163) மைசூரை ஆண்ட போசள மன்னன் முதலாம் நரசிம்மன் (கி.பி.1141 - 1173) மைசூருக்கு அருகே காவிரியில் அணைகட்டி, சோழமண்டலம் தண்ணீர்ப் பெற முடியாமல் தடுத்தான். அணையை நீக்கி, காவிரியை ஓடிவரச் செய்யுமாறு போசள மன்னனுக்கு ஓலை அனுப்பினான் சோழன். போசள மன்னன் காவிரியை விடுவிக்க மறுத்தான். படை யெடுத்துப் போய் அணையை உடைத்துக் காவிரியை மீட்டான் இரண்டாம் இராசராசன்!
அலைகொன்று வருகங்கை வாராமல் மண்மேல்
அடைக்கின்ற குன்றூடு அறுக்கின்ற பூதம்
மலைகொன்று பொன்னிக்கு வழிகண்ட கண்டன்
வரராசராசன் கை வாளென்ன வந்தே
என்று இவ்வெற்றியைப் பாடினார் ஒட்டக்கூத்தர் (தக்கயாகப் பரணி - 549)
பின்னர் பதினேழாம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட சிக்க தேவ மகாராயர் காவிரியின் குறுக்கே செயற்கை மலை எழுப்பி சோழ நாட்டிற்குத் தண்ணீர் வராமல் தடுத்தான். அப்போது தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னன் சகசி, இராணி மங்கம்மாள் படையின் துணையோடு, மைசூர் அணையை உடைக்கப் படையோடு போயிருக்கிறான். இப்படை அங்கு போய்ச் சேருவதற்குள் பெரு மழையில் அணை உடைந்து காவிரி தன்னைத் தானே விடுவித்துக் கொண்டது என்று வரலாற்றாசி ரியர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல்: காவிரி தமிழகத்தின் உயிரோட்டம் - தமிழ்ப் பல்கலைக் கழகம்)
சுதந்திர இந்தியா,
தமிழர்களின் காவிரி உரிமையைப் பறித்து விட்டது. தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக ஆட்சிகள் குறிப்பாக திராவிட ஆட்சிகள் - காவிரியைக் காவு கொடுத்து விட்டன. தலைவர்கள் கங்காணிச் சுகம் அனுபவிக்கின்றனர்.
தண்ணீரை மிகையாகத் தேக்கி வைத்துக் கொண்டு, தமிழகத்தின் நீரை அடைத்து வைத்துக் கொண்டு அநீதிக் கொடி ஏந்தி நிற்கும் கர்நாடகத்தில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒன்றாக உட்கார்ந்து பேசி, “உயர் நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த முடியாது” என்று தீர்மானம் போடுகின்றன; காவிரி ஆணையமா,
கண்காணிப்புக் குழுவா, மேற்பார்வைக் குழுவா எதுவாக இருந்தாலும் அது சொல்லும் முடிவை ஏற்க முடியாது என்று ஒற்றைக் குரலில் பேசுகின்றன.
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 25
இலட்சம் ஏக்கர் சாகுபடி நிலம் காவிரி நீரை நம்பியிருக்கிறது. தொடர்ச்சியாகக் கடந்த பல ஆண்டுகளாகக் கர்நாடகம் தமிழகத்திற்குரிய தண்ணீரை மறித்து வைத்துக் கொண்டதால் ஐந்து இலட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பல ஆண்டுகளாக நிறுத்தப் பட்டுவிட்டது. சம்பா சாகுபடிக்கும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாகத் தண்ணீர் வராததால் பல இலட்சம் ஏக்கர் தரிசாகப் போடப்பட்டுவிட்டது. சாகுபடியான சம்பாவும் தண்ணீரின்றி காய்ந்து கருகிப் போகிறது.
சென்னையிலிருந்து இராமநாதபுரம் வரை, திருப்பூரிலிருந்து வேலூர் வரை காவிரி நீர் குடிநீராகப் போகிறது. தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக சில நகரங்களில் பத்து நாளைக்கொரு தடவைதான் குடிநீர் வழங்கப்படுகிறது. மேட்டூர் அணை உள்ள சேலம் மாவட்டத்தில் - சேலம் நகரத்தில் - பத்து நாளைக்கொரு தடவைதான் காவிரி நீர் தரப்படுகிறது.
காவிரி நீர் உரியவாறு வராததால் வேளாண்மை பொய்த்துப் போகிறது. இதனால் கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களை நோக்கி வெளியேறும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இத்தனை அவலங்கள் அன்றாடம் கோரத்தாண்டம் ஆடும்போது. தமிழகக் கட்சித் தலைவர்கள் மனங்கலங்காமல் கல்மனத்தோடு இருக்கிறார்கள். இந்த அவலங்களைப் போக்கிட காவிரி உரிமையை மீட்டிட பெரிய தலைவர்கள் தாங்கள் தலைமை தாங்கி தமிழகம் தழுவியப் போராட்டம் எதையும் நடத்தவில்லை.
கடந்த 2012ஆம் ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரி நீரின்றி மிக மோசமாக பயிர்கள் காய்ந்து கருகிப் போயின. இலட்சக்கணக்கான ஏக்கர் நிலம் தரிசாகப் போடப்பட்டது. அரசு இழப்பீடு தர
வேண்டிய அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டது. ஏதோ அரை குறையாகத்தான் தமிழக அரசும் இழப்பீடு தந்தது. பாதிக்கப்பட்ட எத்தனையோ கிராமங்கள் இழப்பீடு வழங்கப்படாமல் மொத்தமாக விடுபட்டன.
இந்நிலையில் பிரபலமான தமிழகக் கட்சிகளின் தலைவர்கள் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் வந்து, உழவர்களையும் இதரப்பகுதி மக்களையும் திரட்டி காவிரி நீர் கேட்டும் போராடவில்லை; உரியவாறு இழப்பீடு வழங்கக் கோரியும் போராடவில்லை; அஞ்சாதீர்கள், நாங்கள் இருக்கிறோம்; ஆகவேண்டியதைச் செய்கிறோம் என்று மக்களுக்கு ஆறுதல் கூற, நம்பிக்கையூட்ட எந்தத் தலைவரும் கிராமங்களுக்குப் போகவில்லை! பழங்கால மன்னர்களுக்கும்,
வெள்ளைக்கார அதிகாரிகளுக்கும் இருந்த அக்கறைகூட சனநாயகத் தலைவர்களுக்கு இல்லை.
அடுத்த பகுதி
காவிரிச்சிக்கல் - ஓர் முழுமையான வரலாறு
- காவிரி தமிழரின் செவிலித்தாய்
- நடுவர் மன்றத் தீர்ப்பு கூறுவது என்ன?
- ஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு
- உச்சநீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி
- இந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்
- போராட மறுக்கும் பெரிய கட்சிகள்
- நம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு
- மக்கள் என்ன செய்கிறார்கள்?
- “காவிரிக் குடும்பம்” எனும் இனத்துரோக அமைப்பு
- கங்கை - காவிரி எனும் பித்தலாட்ட சூழ்ச்சித் திட்டம்
- பன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதில்லை?
- எப்போது வெல்வோம்? என்ன போராட்டம் நடத்துவது?
0 கருத்துகள்:
Post a Comment