தமிழ்நாட்டு உரிமைகளைப் பலியிட்டு, தமிழ் மக்களின் நலன் களைக் காவுகொடுத்து தமிழர் பண்பாட்டைக் கொச்சைப்படுத்தி சனநாயகத்தின் முகத்தில் காறித் துப்புவதுபோல் கருணாநிதியும் செயலலிதாவும் நடத்திக் கொண்டிருக்கும் தன்னலவெறிப் பகை அரசியலைத் தடுத்து நிறுத்தத் தமிழ்நாட்டில் சான்றோர்கள் இல்லையா? கூர்த்த மதி படைத்த மக்கள் இல்லையா? இருக்கிறார்கள்; சிறுபான்மையாக தெருவுக்கு வரத் தயங்கும் மென்மை மனம் கொண்டோராக இருக்கிறார்கள்.
இன்னொரு வகை அறிவாளிக் கூட்டம் நம் இனத்தில் இருக்கிறது. அதிகார அரசியலை அண்டிப்பிழைக்கும் ஒட்டுண்ணிகளாக ஆலமரத்தின் பொந்தில் அடைக்கலம் தேடும் ஆந்தைகளாக அவர்கள் இருக்கிறார்கள். சிந்தனையாளர்களாக, பேராசிரியர்களாக, பேச்சாளர்களாக, எழுத்தாளர்களாக, கலை இலக்கியவாணர்களாக, திரைப்படத் துறையில் செல்வாக்குப் பெற்றவர்களாகப் பலர் இருக்கிறார்கள்! ஆனால் அவர்கள் அதிகார அரசியலுக்கு ஆலவட்டம் சுழற்றி வெளிச்சம் பெறவும் வேண்டியதைப் பெறவும் விரும்புகிறார்கள்.
தமிழ்நாட்டை விஞ்சுமளவுக்குக் கன்னட நாட்டில் சாதி அரசியல் கொடிகட்டிப் பறக்கிறது. ஆனால் கன்னட இனச்சிக்கல் என்று வந்தால் அனைவரும் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் அப்படியில்லை. கட்சி அரசியலும் சாதி அரசியலும் தமிழினத்தைக் கிழித்துத் தொங்கப் போட்டிருக்கிறது. 1950களில் அறுபதுகளில் சாதி கூடாது என்று பரப்புரை செய்ததும் திராவிட அரசியல்தான்! அதன் பிறகு சாதியை வளர்த்ததும் திராவிட அரசியல்தான். வளர்த்தவர்கள் மார்பைப் பதம் பார்க்கும் அளவிற்கு இப்போது சாதிவாதம் தீவிரப்பட்டுள்ளது.
காவிரி போன்ற தமிழின உரிமைகளுக்கு ஆபத்து வரும்போது அதை அலட்சியம் செய்துவிட்டு தன் சாதி வாதத்திற்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்ளும் போக்கு தலைதூக்கி உள்ளது.
பாப்பனர்கள் தமிழ்நட்டில் மட்டுமல்ல கர்நாடகம், கேரளம், ஆந்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் இருக்கிறார்கள். ஆனால் அந்த மாநிலங்களின் பார்ப்பனர்கள் அந்தந்த இனத்தோடு இணைந்து, இனநலனுக்காகச் சிந்திக்கிறார்கள்; செயல்படுகிறார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில், பார்ப்பனர்களில் கணிசமானோர் தங்களைத் தமிழ் இனத்தோடு இணைத்துக் கொள்வதில்லை. தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும், தமிழ் மொழியின் உரிமைகளுக்கும் எதிராகவே சிந்திக்கிறார்கள்,
செயல்படுகிறார்கள். அவர்கள் ஆத்திகர்களாக இருக்கிறார்கள், நாத்திகர்களாக இருக்கிறார்கள்; வலதுசாரிகளாக இருக்கிறார்கள், இடதுசாரிகளாக இருக்கிறார்கள். ஆனால் தமிழர்களாக மட்டும் இருப்பதில்லை.
அடுத்த பகுதி
காவிரிச்சிக்கல் - ஓர் முழுமையான வரலாறு
- காவிரி தமிழரின் செவிலித்தாய்
- நடுவர் மன்றத் தீர்ப்பு கூறுவது என்ன?
- ஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு
- உச்சநீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி
- இந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்
- போராட மறுக்கும் பெரிய கட்சிகள்
- நம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு
- மக்கள் என்ன செய்கிறார்கள்?
- “காவிரிக் குடும்பம்” எனும் இனத்துரோக அமைப்பு
- கங்கை - காவிரி எனும் பித்தலாட்ட சூழ்ச்சித் திட்டம்
- பன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதில்லை?
- எப்போது வெல்வோம்? என்ன போராட்டம் நடத்துவது?
0 கருத்துகள்:
Post a Comment