தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


Home » » காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு என்ன?

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு என்ன?

தீர்ப்பின் சாரம் என்ன ?

காவிரியில் கர்நாடகம், தமிழகம், கேரளம் ஆகியவற்றுக்குக் கிடைக்கும் மொத்த நீர் 740 ஆ.மி.க. கர்நாடகத்தில் ஏமாவதி, ஏரங்கி, கேரளத்தில் உற்பத்தியாகி வரும் கபினி போன்ற காவிரித் துணை ஆறுகளின் நீரும், தமிழகத்தில் பவானி, அமராவதி, நொய்யல் ஆகிய துணை ஆறுகளின் நீரும் சேர்த்து காவிரியின் மொத்த நீர் 740 ஆ.மி.க என்று நடுவர் மன்றம் கணக்கிட்டது. அதாவது தலைக்காவிரியிலிருந்து தமிழக அணைக்கரை வரை காவிரியில் சேரும் மொத்த நீர் இது. இது 50 விழுக்காடு சார்புத் தன்மை கொண்டது. 
சார்புத் தன்மை என்பது என்ன? 

100 ஆண்டுகளில் ஓடிவந்த நீரில் 50 ஆண்டுகள் எந்தக் குறிப்பிட்ட அளவுக்கு சமமாக அல்லது சற்றுக்கூடுதலாக நீர் வந்ததோ அந்தக் குறிப்பிட்ட அளவு 50 விழுக்காடு சார்புத் தன்மை கொண்டது. இவ்வாறான 50 விழுக்காடு சார்புத் தன்மை கொண்ட அளவானது 740 ஆ.மி.க. இதன் பொருள் ஓர் ஆண்டு மொத்த நீர் 740 ஆ.மி.க கிடைக்கும். அதன் அடுத்த ஆண்டில் அந்த அளவு தண்ணீர் கிடைக்காது என்பதாகும். ஓர் ஆண்டு விட்டு ஓர் ஆண்டில் தான் 740 ஆ.மி.க. தண்ணீர் காவிரியில் கிடைக்கும்.

 75 விழுக்காடு சார்புத் தன்மை என்பது: 100 ஆண்டுகளில் ஓடிவந்த நீரில் எந்தக் குறிப்பிட்ட அளவுக்குச் சமமாக அல்லது சற்று கூடுதலாக 75 ஆண்;டுகள் தண்ணீர் கிடைத்ததோ அந்த குறிப்பிட்ட அளவு 75 விழுக்காடு சார்புத் தன்மை உடையதாகும். இவ்வாறான 75 விழுக்காடு சார்புத் தன்மை கொண்ட தண்ணீர் அளவு 671 ஆ.மி.க. இதன் பொருள் 100 ஆண்டுகளில் 75 ஆண்டுகள் 671 ஆ.மி.க. அல்லது சற்றுக்கூடுதலாக தண்ணீர் ஓடிவந்தது என்பதாகும். அதாவது 4 ஆண்டுகளில் மூன்றாண்டுகள் மேற்கண்ட அளவு தண்ணீர் கிடைக்கும். ஓராண்டு அதைவிடக் குறைவாகத் தண்ணீர் கிடைக்கும்.

இந்திய அரசு 1972 சூன் மாதம் அமைத்த காவிரி உண்மை அறியும் குழு, கர்நாடகம், தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் 50 விழுக்காட்டு சார்புத் தன்மையில் கிடைக்கும் மொத்த நீர் 740 ஆ.மி.க. என்றும், 75 விழுக்காட்டு சார்புத் தன்மையில் கிடைக்கும் நீர் 671 ஆ.மி.க. என்றும் முடிவு செய்தது.
நடுவர் மன்றம், 50 விழுக்காட்டு சார்புத் தன்மையை எடுத்துக் கொண்டு 740 ஆ.மி.க. என்று தீர்மானித்தது. அவ்வழக்கில் தமிழ்நாடு, 75 விழுக்காட்டு சார்புத் தன்மையை எடுத்துக் கொள்ளும்படி வற்புறுத்தியது. ஆனால் நடுவர் மன்றம் அதை ஏற்காமல், ஓராண்டில் 740-ம் அடுத்த ஆண்டில் அதைவிடக் குறைவாகவும் வரக்கூடிய 50 விழுக்காட்டு சார்புத் தன்மையை எடுத்துக் கொண்டது. இது கர்நாடகத்தின் கருத்துக்கு இணக்கமானது.

1924ஆம் ஆண்டு காவிரி ஒப்பந்தம் 75 விழுக்காட்டு சார்புத் தன்மையை எடுத்துக் கொண்டு மொத்த நீர் 671 ஆ.மி.க. என்று முடிவு செய்திருந்தது. இதில் 489 ஆ.மி.க. தமிழகத்திற்கும், 177 ஆ.மி.க. கர்நாடகத்திற்கும், 5 ஆ.மி.க. கேரளத்திற்கும் ஓதுக்கியது. 
1924 ஒப்பந்தம் ஞாயமானதே என்பதை 1972-ல் அமைக்கப்பட்ட உண்மை அறியும் குழு அளித்த புள்ளிவிவரங்கள் மெய்ப்பிக்கின்றன.

 சார்புத் தன்மை : 50 %
 மொத்த நீர் : 740 ஆ.மி.க

=========================================================
 1934-1972 வரை மேட்டூர் வந்த சராசரி          : 376.8 ஆ.மி.க.
 கர்நாடகம் பயன்படுத்திக் கொண்ட சராசரி  : 155.6 ஆ.மி.க.
 கேரளம் பயன்படுத்திக் கொண்ட சராசரி      :     3.0 ஆ.மி.க.
=========================================================
                                                                                   540.4 ஆ.மி.க.
=========================================================

தமிழ்நாட்டில் மேட்டூருக்குக் கீழ் கிடைத்த நீர்  : 196.6 ஆ.மி.க.
=========================================================
                                                                                       737.0 ஆ.மி.க.
=========================================================

தமிழ்நாடு மொத்தம் பயன்படுத்திக் கொண்ட சராசரி நீர்  : 573.4 ஆ.மி.க.

தமிழ்நாட்டில் காவிரிப் பாசனம் பெற்ற மொத்த நிலப்பரப்பு : 25,30,000 ஏக்கர்

கர்நாடகம் 177 ஆ.மி.க. வரை பயன்படுத்திக் கொள்ள உரிமை இருந்தும் அதனால் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது 155.6 ஆ.மி.க. மட்டுமே. காரணம் அம்மாநிலம் மலைப்பகுதி நிறைந்தது. வேளாண் வளர்ச்சி கன்னடர்களிடையே மிகவும் பிற்காலத்தில் தான் தொடங்கியது.
உண்மை அறியும் குழு புள்ளி விவரத்தில் தமிழகப் பாசனப்பரப்புப் பகுதிகள் சில சேர்க்கப்படவில்லை. சிறுபாசன விரிவாக்கங்களையும் சேர்த்து இப்பொழுது தமிழ்நாட்டில் நடைமுறையில் காவிரி பாசனப்பரப்பு 29,30,000 ஏக்கர் உள்ளது. இது நடுவர் மன்றத்தில் தமிழகம் முன்வைத்துள்ள கணக்கு.
மேட்டூர் அணை 1934-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அதன் 50வது ஆண்டுவிழா 1984-இல் கொண்டாடப்பட்டது. 1974-ஆம் ஆண்டிலிருந்தே 1924 ஓப்பந்தம் காலாவதி ஆகிவிட்டதாகக் கர்நாடகம் வல்லடி வழக்கு பேசி, தமிழகத்திற்குரிய நீரைத் திறந்துவிட மறுத்துவிட்டது.
அப்படி இருந்தும் 1934-84 இடையே உள்ள 50 ஆண்டுச் சராசரி நீர் கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு வந்ததைக் கணக்கிட்டார்கள். அது ஆண்டுக்கு 361.3 ஆ.மி.க. (சான்று: வுhந ஐசசபையவழைnநுசய - மேட்டூர் பொன்விழா மலர், தமிழகப் பொதுப்பணித் துறை-1984)
மொத்த நீர் 740 ஆ.மி.க. என்றால் தமிழகத்திற்குக் கர்நாடகத்திலிருந்து வர வேண்டிய நீர் 376.8 ஆ.மி.க.(1972 வரை), 361.3 ஆ.மி.க. (1984 வரை)
ஆனால் நடுவர் மன்றம் 740 ஆ.மி.க மொத்த நீர் என்று கூறிவிட்டு வெறும் 192 ஆ.மி.க நீர் கர்நாடகம் தந்தால் போதும் என்று இறுதித் தீர்ப்பில் கூறியது. 1972-இல் இருந்ததைவிட 184.8 ஆ.மி.க. குறைத்துவிட்டது. நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு இழைத்திருக்கும் தீங்கு கொஞ்ச நஞ்சமா? திருத்திக் கொள்ளக் கூடிய தவறா? இட்டு நிரப்பக் கூடிய இறக்கமா? அதல பாதாளத்தில் தமிழகத்தை தள்ளிவிட்டுள்ளது நடுவர் மன்றம்.
இதை நியாயத் தீர்ப்பு என்றார் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி! ஆறுதல் அளிக்கிறது என்றும், மறு ஆய்வு மனுச் செய்து சிற்சில குறைகளைப் போக்கிக் கொள்ளலாம் என்றும் அவர் மேலும் சொன்னார்.
நடுவர் மன்றம் கர்நாடகத்திற்கு வாரி வழங்கியது எவ்வளவு? 270 ஆ.மி.க. 1972-இல் உண்மை அறியும் குழு கண்டறிந்த படி கர்நாடகம் பயன்படுத்திய நீர் 155.6 ஆ.மி.க. இது 740 ஆ.மி.க. மொத்த நீருக்கான கணக்கு.
ஆனால் நடுவர் மன்றம் 114.5 ஆ.மி.க கூடுதலாகச் சேர்த்து 270 ஆ.மி.க. வை வழங்கியுள்ளது.
நடுவர் மன்றம் லாட்டரிக் குலுக்கல் போல் 'கன்னடர்களுக்கு பம்பர் பரிசு" வழங்கியுள்ளது. ஆனால் அவர்கள் அதையும் எதிர்த்துக் கலகம் செய்கிறார்கள். ஓரு சொட்டுத் தண்ணீர்கூடத் தமிழகத்திற்குத் தரக்கூடாது என்பது தான் கன்னடர்களின் கட்சி.
நடுவர் மன்றம் திட்டமிட்டே மோசடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருடர்கள் திருடும் அவசரத்தில் சில தடயங்களை விட்டுச் செல்வது போல் நடுவர் மன்றம் தனது அநீதியை அடையாளம் காட்டக்கூடிய தடயங்களை விட்டு வைத்துள்ளது.
நடுவர்மன்றக் கணக்கின்படி மொத்த நீர் 740 ஆ.மி.க.
இதில் சுற்றுச்சூழலுக்கு 10 ஆ.மி.கவும் தவிர்க்க முடியாமல் கடலில் கலக்கும் நீராக 4 ஆ.மி.கவும் சேர்த்து மொத்தம் 14 ஆ.மி.கவை கழித்துவிட்டு 726 ஆ.மி.கவை மட்டுமே நான்கு மாநிலங்களுக்கும் பங்கிட்டுள்ளது.
  தமிழ்நாடு        419 ஆ.மி.க.
  கர்நாடகம்       270 ஆ.மி.க.
  கேரளம்           30 ஆ.மிக.
  புதுவை            7  ஆ.மி.க.
============================
  மொத்தம்         726 ஆ.மி.க.
============================

கழிக்கப்பட்ட 14 ஆ.மி.க. யாருக்காகக் கழிக்கப்பட்டது? தமிழகத்திற்காக! தமிழகச் சுற்றுச்சூழலுக்கு 10 ஆ.மி.க. என்றும், தமிழக அணைக்கரைக்குக் கீழே, தவிர்க்க முடியாமல் தப்பிச் சென்று கடலில் விழும் நீருக்காக 4 ஆ.மி.க. என்றும் நடுவர் மன்றம் கூறியுள்ளது. இந்த 14ஐ தமிழ்நாட்டு ஓதுக்கீட்டுடன் சேர்த்து 192 + 14  = 206 ஆ.மி.க. என்று கணக்கிட்டிருந்தால் சரி. ஆனால் அந்த 14 ஆ.மி.கவை ஓதுக்கீடு செய்வதாக தீர்ப்புப் பிரிவு ஏ கூறுகிறது. அது எங்கே வைக்கப்படுகிறது? அதை நடுவர் மன்றம் நேரடியாகச் சொல்லவில்லை.

தமிழகத்திற்குக் கர்நாடகம் தரும் 192 ஆ.மி.கவில் சுற்றுச்சூழலுக்கான 10 ஆ.மி.க இருக்கிறது. அது போக 182 ஆ.மி.க தான் கர்நாடகம் தமிழகத்திற்குத் தரும் நீர் என்று நடுவர் மன்றத் தீர்ப்புப் பிரிவு ஐஓ கூறுகிறது. இந்த 10 ஆ.மி.கவையும் கடலில் கலக்கும் 4 ஆ.மி.கவையும் மொத்த நீரில் கழித்துவிட்டு தான் (740-14)-726 ஆ.மி.க பங்கிடப்படுகிறது.
கூட்டல் கணக்கில் சேராத இந்த 14 ஆ.மிக கர்நாடகத்திற்கே மறைமுகமாக ஓதுக்கப்பட்டுள்ளது. நடுவர் மன்ற மோசடியைப் பாமரர்களும் கண்டுகொள்ள அதுவிட்டுச் சென்றுள்ள தடயம் இந்த 14 ஆ.மி.கவாகும். இதையும் சேர்த்தால் கர்நாடகத்திற்கு (270+14) - 284 ஆ.மி.க. ஓதுக்கீடு ஆகிறது.
தமிழக முதல்வர் கருணாநிதி நடுவர் மன்றம் கூறியதையும் விஞ்சி, எஜமானனை விஞ்சிய விசுவாசத்தோடு ஒரு குழப்படிக் கணக்குப் போடுகிறார்.
தமிழகத்தின் பெயரைச் சொல்லி ஓதுக்கிவிட்டு, கர்நாடகத்திற்காகப் பதுக்கி வைத்துள்ள 14 ஆ.மி.க. பற்றி கலைஞருக்குக் கவலையில்லை. அந்த 192 ஐ, அப்படியே கர்நாடகம் தர வேண்டும் என்று தீர்ப்பைத் தாண்டி பேசுகிறார். அது மட்டுமல்ல, பில்லிகுண்டுவிலிருந்து மேட்டூர் வரை, 25 ஆ.மி.க. தண்ணீர் கிடைக்க வாய்ப்புண்டு என்று நடுவர் மன்றம் கூறிய கருத்தையும் அப்படியே எடுத்துக் கொண்டு, மேட்டூருக்கு 217 ஆ.மி.க. தண்ணீர் வரும்@ இதில் 7 ஆ.மி.க. புதுவைக்குப் போனால், 210 ஆ.மி.க. மேட்டூரில் நமக்குக் கிடைக்கும் என்கிறார். இடைக்காலத் தீர்ப்பில் 6 ஆ.மி.க. புதுவைக்குப் போக தமிழகத்திற்கு 199 ஆ.மி.க. கிடைத்தது இறுதித் தீர்ப்பில் அதைவிட 11 ஆ.மி.க. கூடுதலாகக் கிடைத்துள்ளது என்று நீட்டி முழக்குகிறார்.

தமிழக அரசு நடுவர் மன்றத்தில் வாதாடியதற்கு நேர் எதிராகக் கலைஞர் இந்தக் கணக்கைச் சேர்க்கிறார். ஓரு முதலமைச்சர் நீதிமன்றத்தில் வாதாட ஒரு முகமும், மக்களிடம் பேச வேறொரு முகமும் கொண்டிருந்தால் எது அசல் முகம், எது முகமூடி, என்று எப்படிக் காண்பது?
இடைக்காலத் தீர்ப்பின்படி கர்நாடகம் தரவேண்டிய 205 ஆ.மி.க நீரை மேட்டூரில் தான் அளக்க வேண்டும். பில்லிகுண்டுலுவில் அல்ல. இறுதித் தீர்ப்பிலும் இதே போல் மேட்டூரில் அளக்கம்  தீர்ப்பளிக்கும்படி நடுவர் மன்றத்திடம் கோரியது தமிழக அரசு. அதற்கு தமிழக அரசு முன் வைத்த காரணங்கள்: 

1. பில்லிகுண்டுலுவில் 24மணிநேரமும் அளவெடுக்கும் ஏற்பாடு இல்லை. ஒரு நாளில் காலை மாலை மட்டுமே அளவெடுத்து ஒரு நாள் சராசரி வரத்து கணக்கிடப்படுகிறது. அக்குறிப்பிட்ட இருவேளைகளில் உரிய நீரைவிட்டு விட்டு, மற்ற நேரங்களில் கர்நாடகம் குறைத்து தண்ணீர் திறந்து விட்டால், அதைக் கண்டு பிடிக்க முடியாது. பில்லிகுண்டுலுவில் அளப்பது இந்திய அரசின் நீர்வள ஆணையம். மேட்டூரில் எனில் அணை நீர் உயர்வதையும் கணக்கிட்டு, தமிழக அரசின் நேரடி அளவையையும் கணக்கிட்டு வந்து சேரும் நீரைத் துல்லியமாக அளக்க முடியும். 

2. பில்லிகுண்டுலுவிலிருந்து சற்றேறக் குறைய 60 கி.மீ தொலைவில் மேட்டூர் உள்ளது. இதற்கிடையே தண்ணீர் சேதாரமும் ஏற்படும்.

3. பில்லிகுண்டுலுவிலிருந்து மேட்டூர் வரையிலான தொலைவில் பெரிதாக மழை நீர் சேர்ந்திட வாய்ப்பில்லை.

4. நடுவர் மன்றம் 1991-இல் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பின் படி 1991-92 முதல் 2005-2006 வரை பில்லிகுண்டுலுவில் எடுத்த அளவு நீர் மேட்டூர் வரும் போது குறைந்துள்ளதைப் பின்வரும் பட்டியல் காட்டுகிறது.

வ.எண்
 ஆண்டு 
பில்லிகுண்டுலு
மேட்டூரில்
 ஆமிக
  ஆமிக
1
1991-1992
340.00 
334.96
2
1992-1993
358.61
351.69
3
1993-1994
230.39
223.37
4
1994-1995
394.00 
373.16
5
1995-1996
195.51
183.09
6
1996-1997
245.75
244.05
7
1997-1998
277.06
268.05
8
1998-1999
260.4
237.27
9
1999-2000
273.68
268.6
10
2000-2001
319.26
306.2
11
2001-2002 
189.94
162.74
12
2002-2003
109.45
 94.87
13
2003-2004
75.87
65.16
14
2004-2005
185.55 
163.96
15
2005-2006
383.91
399.22

 பில்லிகுண்டுலுவிலிருந்து வந்ததாகக் கூறப்பட்ட தண்ணீர் மேட்டூரில் அளந்து பார்த்த போது குறைந்ததே தவிர கூடவில்லை. அதிகபட்சமாக 27.20 ஆ.மி.க. அளவிற்கு(2001-02) குறைந்துள்ளது. 2005-2006ஆம் ஆண்டில் வரலாறு காணாத பெருமழைப் பெய்ததால் அவ்வாண்டில் மட்டும் 15.31 ஆ.மி.க. பிலிகுண்டுலுவை விட மேட்டூருக்கு அதிகமக வந்துள்ளது. ஏனைய 14 ஆண்டுகளும் பில்லிகுண்டுலுவில் திறந்து விடப்பட்ட நீரின் அளவு மேட்டூரில் அளக்கும் போது குறைவாகவே வந்துள்ளது. 

 இது தமிழ்நாடு அரசு நடுவர் மன்றத்தில் எடுத்து வைத்த வாதங்களின் சாரம். மேற்கூறிய காரணங்களை அடுக்கிவிட்டு, கர்நாடகம் தரும் நீரை பில்லிகுண்டுலுவில் அளக்;கக்கூடாது, மேட்டூரில் தான் அளக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வாதிட்;டது. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி கர்நாடகம் தரும் நீரைப் பில்லிகுண்டுலுவிலிருந்து அளப்பது நமக்கு சாதகமானது@ கூடுதலாக 25 ஆ.மி.க. கிடைக்கும் என்று கூப்பாடு போடுகிறார். ஏன் இந்தக் குட்டிக்கரணம்? ஏனிந்த முரண்பாடு? காவிரி நடுவர் மன்றத்தில் தமிழக அரசு சார்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதங்களை முதலிலேயே கருணாநிதி கவனிக்கவில்லையா? இப்படியொரு முதலமைச்சர் இருந்தால் அந்த மாநில மக்களின் உரிமைகள் என்னவாகும்?

 உண்மைக்கு மாறாக கருணாநிதி கூறும் கூடுதல் 25 ஆ.மி.கவை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டு பார்ப்போம். அப்பொழுதும் அவர் கணக்கு தப்புக் கணக்கு தான்!


காவிரி நீரில் தமிழகப் பங்கு 419 ஆ.மி.க. இதில் கர்நாடகம் தரவேண்டிய 192ஆ.மி.க. போக, மீதியுள்ள 227 ஆ.மி.க தண்ணீர் தமிழகத்திற்குள் கிடைக்கும் நீர். பில்லிகுண்டுலுவிலிருந்து மேட்டூர் வரை கலைஞர் கணக்குப்படி கிடைக்கும் 25 ஆ.மி .க நீர, தமிழ்நாட்டின் பங்கான 227 ஆ.மி.கவுக்குள் அடக்கம் தானே! அது எப்படி கூடுதலான நீர் ஆகும்! அது தமிழக பங்கிற்குள் வராதென்றால் 419ஆ.மி.க உடன் 25ஆ.மிகவை சேர்த்து தமிழகத்திற்கு 444 ஆ.மி.க என்று சொல்ல வேண்டியது தானே? கலைஞர் குழம்பவில்லை. தமிழர்களைக் குழப்பப் படாதபாடுபடுகிறார்.
'பட்டு வேட்டி பற்றி கனா கண்டு கொண்டிருந்தபோது கட்டியிருந்த கோவணத்துணியும் களவாட பட்டது" போல் பவானியிலிருந்து 6ஆ.மி.கவும் அமராவதியிலிருந்து 3 ஆ.மி.கவும் கேரளத்திற்குத் தமிழகம் தர வேண்டும் என்று நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளத்தின் பாசனத் தேவைக்காக இது ஒதுக்கப்படுகிறதா?அதெல்லாம் மலைப்பகுதி. அங்கு நீர் பாசனச் சாகுபடி கிடையாது. கேரள அரசு, கோக்-பெப்சி போன்ற நிறுவனங்களுக்கு தண்ணீரை விற்கக் கூட கேட்டிருக்கலாம்.
 சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை ஆனைகட்டி அருகே முக்காலியில் பவானியின் குறுக்கே கேரள அரசு அணைகட்ட முனைந்ததையும் தமிழகம் எதிர்த்ததையும் இப்பொழுது நினைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது முக்காலியில் கோக் நிறுவனத்திறகு தண்ணீர் தர கேரள அரசு திட்டமிட்டது என்று பேசப்பட்டது.
 இனி அதே முக்காலியில் இருந்து கேரளம் பவானியின் குறுக்கே அணைக் கட்டலாம். அப்படி அணைக் கட்டினால் ஒரு சொட்டு தண்ணீர் கூட பவானியிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்காது. தமிழக நீலகிரி மலையில் உற்பத்தியாகி சிறிது தொலைவு கேரள எல்லையில் ஓடி மீண்டும் தமிழகத்திற்குள் நுழைந்து விடுகிறது பவானி. இதற்கு ஆபத்து வந்துள்ளது. 
 ஆக, 9 ஆ.மி.கவை பவானி, அமராவதி நீரில் இழந்துள்ளோம். இதையெல்லாம் கழித்தால் கர்சாடகத்திலிருந்து தமிழகத்திற்கு எவ்வளவு நிகர நீர் தீர்ப்பின்படி கிடைக்கும்.

 ஒதுக்கீடு      -    192 ஆ.மி.க
 சுற்றுச்சூழலுக்காக பிடித்தம்   - 10 ஆ.மி.க
 கடலில் கலப்பதன் பெயரில் பிடித்தம் - 4 ஆ.மி.க
 புதுவைக்கு      - 7 ஆ.மி.க
 கேரளத்திற்கு     - 9 ஆ.மி.க
        ----------------------------------- --------------------------- 
         30 ஆ.மி.க  162ஆ.மி.க
        ----------------------------------- ---------------------------
 மிச்சம் 162ஆ.மி.க தண்ணீர் தான். இதில் தான் 'ஞாயம்" காண்கிறார் கலைஞர் கருணாநிதி. சாதகம் என்கிறார். ஆறுதல் என்கிறார்.

 சாகுபடி நிலப்பரப்பில் கர்நாடகத்திற்குப்பாதகம் நேர்ந்து விட்டதாகவும், தமிழ்நாட்டிற்குச் சாதகம் கிடைத்துவிட்டதாகவும் முதலமைச்சர் கூறுகிறார். 'நடுவர் மன்றத்தில் நாம் வாதாடும் போது தமிழகத்துக்குப் பாசனப்பரப்பு 29.26 லட்சம் ஏக்கர் என்று கேட்டோம். நடுவர் மன்றம் அனுமதித்திருப்பது 24.7 லட்சம் ஏக்கர். இதில் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் கர்நாடக மாநிலத்துக்குப் பாசனத்துக்காக அவர்கள் கோரியது 27.28 லட்சம் ஏக்கர். நடுவர் மன்றம்  அவர்களுக்கு அனுமதி கொடுத்தது 18.85 லட்சம் ஏக்கர். இதை நான் சொல்வதற்குக் காரணம் நாம் ஒன்றும் நஷ்டப்பட்டு விடவில்லை. நாம் கேட்டதில் கொஞ்சம் குறைவாகக் கிடைத்தது. ஆனால் கர்நாடகம் கேட்டதில் கொஞ்சம் அதிகமாகக் குறைந்து விட்டது என்று ஒரு ஒப்பீட்டுக்காக இதைச் சொன்னேன்.

 நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பில் கர்நாடகம் 11.2 லட்சம் ஏக்கர் அளவுக்கு மேல் பாசனவசதியைப் பெருக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் இறுதித் தீர்ப்பில் 18.85 லட்சம் ஏக்கர் அளவுக்கு உயர்த்தியுள்ளது. வேறொரு விவரத்தை ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
 இறுதித் தீர்ப்பில் உள்ள ஒரு விவரத்தை இடைக்காலத் தீர்ப்பில் உள்ள விவரத்தோடு ஒப்பீட்டு, எனது கருத்து ஆச்சரியமாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு இடைக்காலத் தீர்ப்பில் எவ்வளவு அனுமதிக்கப்பட்டது, இப்பொழுது எவ்வளவு கிடைக்கிறது என்று ஒப்பிட்டு பார்த்திருந்தால் இந்தக் கேள்வியே எழுந்திருக்காது" 
       - முதல்வர் கருணாநிதி, தினமணி 26-02-2007.


 1968லிருந்து  காவிரிப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டு வந்ததாக மூச்சுக்கு மூச்சு பெருமையடித்துக் கொள்ளும் கலைஞர் கருணாநிதி அவர் கலந்து கொண்ட பேச்சுக்கிளில் உருவான கருத்தொருமைபாடுகள், கண்டறியப்பட்ட புள்ளி விவரங்கள் போலும். எதிர்க்கட்சியினரை மடக்க பழைய செய்தித்தாள்களில் இருந்து மேற்கோள் காட்டும் பழக்கமுள்ள இவருக்கு தமிழினத்தின் உரிமை காப்பதில் மட்டும் பழையதெல்லாம் மறந்து விடுமா?
 1972 மே மாதம் அப்போதைய கர்நாடக முதல்வருடன் அப்போதைய தமிழக முதல்வர் பேச்சுவார்த்தையில் இருவரும் ஒப்புக் கொண்ட செய்தி, புதிய உடன்பாடு வரும் வரைக்கும் 1972 மே மாதம் பயன்படுத்திய தண்ணீருக்கு மேல் எந்த மாநிலமும் கூடுதராக நீரை பயன்படுத்தக் கூடாது. கர்நாடகம் 11லட்சம் ஏக்கருக்கு மெல் பாசனப்பரப்பை விரிவு படுத்தக் கூடாது என்பதாகும்.
 1972ல் கர்நாடகத்திடம் 11லட்சம் ஏக்கருக்கு ஆயக்கட்டு(பாசன நிலப்பரப்பு) கிடையாது. அம்மாநிலம் எதிர்பார்க்கும் திட்டங்களையும் சேர்த்துச் சொல்லப்பட்டது தான் 11 லட்சம் ஏக்கர்.
 இதை உறுதி செய்து கொள்ள, இந்திய அரசின் உண்மை அறியும் குழு எடுத்த விவரத்தைக் காணலாம். அதன்படி 1971ல் கர்நாடகத்தில் காவிரிப் பாசனப்பரப்பு - 4.42லட்சம் ஏக்கர் மட்டுமே. 1971ல் தமிழகத்தின் பாசனப்பரப்பு 25.30 லட்சம் ஏக்கர்.
 நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கிய போது (1991-ஜுன் 25) மேற்கண்ட 1972 - முதலமைச்சர்கள் உடன்;பாட்டை கருத்தில் கொண்டு இறுதித் தீர்ப்பு வரும் வரை 11லட்சம் ஏக்கருக்கு மேல் கர்நாடகம் பாசனப்பரப்பை விரிவு படுத்தக் கூடாது என்று நிபந்தனை விதித்தது. தமிழ்நாட்டிற்கு அவ்வாறு நிபந்தனை விதிக்க வேண்டிய தேவையே எழவில்லை. ஏனெனில் அது கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெறும் நிலையில் உள்ளது. பழைய பாசனப்பரப்பை பாதுகாத்தால் போதும் என்ற பரிதாப நிலையில் இருக்கிறது. கர்நாடகமோ காவிரித் துணை ஆறுகளில் புதிய புதிய அணைகள் கட்டி, தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுத்து வந்தது.  புதிய பாசனப்பரப்பிற்கான கோரிக்கையே தமிழகத்தரப்பிலிருந்து இல்லை.
 1987-இல் தமிழகப் பொதுப்பணித் துறை தயாரித்த ஆவணத்தில், 1986-இல் தமிழகத்தில் உள்ள காவிரி நீர்ப் பாசனப்பரப்பு 25.80 லட்சம் ஏக்கர் என்று முடிவு செய்யப்பட்டது. இப்பொழுது நடுவர் மன்றம்; அனுமதித்துள்ளது தமிழகத்திற்கு 24.7 லட்சம் ஏக்கர் மட்டுமே. 1986-இல் இருந்ததற்கு 1.1 லட்சம் ஏக்கர் குறைவு. நடுவர் மன்றத்தில் தமிழக அரசு கேட்டது 29.26 லட்சம் ஏக்கர் பாசனப்பரப்பு.  5 லட்சம் ஏக்கர் குறைவாக இறுதித் தீர்ப்பு வந்;துள்ளது. 'இதில் பெரிய வித்தியாசமில்லை" என்கிறார் முதலமைச்சர். 5 லட்சம் ஏக்கர் வித்தியாசம் சிறிய வித்தியாசமா? 
 கீழ் பவானி அணையில் மொத்தப் பாசனப்பரப்பு 2.07 லட்சம் ஏக்கர். இதைவிட 1½  மடங்கு கூடுதல் 5 லட்சம் ஏக்கர் என்பது. முல்லை பெரியாறு அணையின் மொத்த பாசனப்பரப்பு 2.20 லட்சம் ஏக்கர். கீழ்பவானி, முல்லை பெரியாறு அணைகளின் மொத்த பாசனப்பரப்பைவிட கூடுதலாக உள்ள 5 லட்சம் ஏக்கர் பாசனப்பரப்பை நடுவர் மன்றம் ஏற்க மறுத்துவிட்டது. கணக்கில் எடுக்கத் தேவையில்லாத மிக சிறு நிலப்பரப்புப் போல் 5 லட்சம் ஏக்கரை அலட்சியப்படுத்துகிறார் கலைஞர் கருணாநிதி.


 மாறாக, கர்நாடகம் கற்பனையாக கேட்ட நிலப்பரப்பான 27.28 லட்சம் ஏக்கரை ஏற்காமல் சுமார் 9 லட்சம் ஏக்கர் குறைத்து, 18.85 லட்சம் ஏக்கர் தான் நடுவர் மன்றம் வழங்கியுள்ளது என்றும் 'கொஞ்சம் அதிகமாகக் குறைத்துவிட்டது" என்றும் சமாதானம் சொல்கிறார்.
 உண்மையில் இறுதித் தீர்ப்பு கர்நாடக பாசனப்பரப்பிற்கு இருந்த உச்ச வரம்பை நீக்கி விட்டது. தீர்ப்பின் பிரிவு ஓஏஐஐஐ  இதை உறுதி செய்கிறது. நடுவர் மன்றம் கருத்துகளாக வரிசைப் படுத்திய சில வாதங்களையெல்லாம் தீர்ப்பு போல் வர்ணிக்கிறார் கலைஞர்.
 உயரதிகாரம் படைத்த ஒரு நீதி மன்றத்தில் நடந்த வழக்கில் நமது அரசு முன் வைத்த வாதங்களையெல்லாம் மறுக்கும் அல்லது புறக்கணிக்கும் ஒரு முதலமைச்சர் உலகத்திலேயே கலைஞர் கருணாநிதியாகத் தான் இருப்பார். 
 பதவிக்கு தமிழ்நாடு, வணிகத்திற்கு இந்தியா என அவர் தேவைகள் இடத்திற்கு இடம் மாறுபடக்கூடும்.


 காவிரியில் தமிழகத்திற்குள்ள உரிமையை வலியுறுத்தினால் - அதற்காக போராடினால் கர்நாடகத்தில் உள்ள தமிழர்களுக்கு ஆபத்து வந்து விடும் என்று கூறுகிறார்கள். ஏன் தமிழ்நாட்டில் கன்னடர்களே வாழவில்லையா? கர்நாடகத் தமிழர்களுக்கு ஆபத்து வந்தால் தமிழகக் கன்னடர்களுக்கு ஆபத்து வரும்.
 கர்நாடகத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறையும் அன்பும் இவர்களுக்குக் கிடையாது. தங்கள் துரோகத்தை மறைக்க அதை ஓரு சாக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். தமிழினத் தலைவர் காவிரியில் தமிழர்க்கு இழைக்கும் துரோகம் செயலலிதாவுக்கு வசதியாக போய்விட்டது. இந்த அம்மையார் போராடவில்லையே என்பது உருத்தலாக தெரியாது. அம்மையாரின் ஊழல் வழக்கு கர்நாடகத்தில் நடக்கிறது. மற்ற பல கட்சிகள் இந்த இரு கழகங்களோடு உடன்கட்டை ஏற்காதிருப்பவை போல், அமைந்திருக்கின்றன.
 தமிழ் இனம் அரசியல் தலைமையற்று இருக்கும் அவலத்தை புரிந்து கொண்ட கன்னட வெறியாளர்கள் 9-02-2007லிருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் ஓசூருக்குள் புகுந்து, காவிரியும் கன்னடருக்கே, ஓசூரும் கன்னடர்க்கே என்று கூச்சலிட்டுச் சென்றனர். தமிழகக் காவல்துறை அவர்களை கைது செய்யவில்லை. சமாதானம் சொல்லி அனுப்பியது. 
 தமிழ்நாட்டிலிருந்து பரிக்கப்பட்ட தமிழ்நாட்டோடு சேர வேண்டிய கொள்ளேகாலம், கோலார் தங்க வயல், பெங்களுரு, போன்ற பகுதிகளை தமிழர்கள் கேட்காமல் இருப்பதால் ஓசூரைக் கேட்கும் துணிச்சல் கன்னடர்களுக்கு வந்துள்ளது. காவிரித் தீர்ப்பை எதிர்த்து கன்னடர்கள் நடத்திய போராட்டங்கள், வெறியாட்டங்கள் அனைத்தையும் ஜனநாயக வழிப்பட்டவை என்று கூறி கர்நாடக முதல்வர் குமாரசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூட்டிய அனைத்துக்கட்சி அப்போராட்டங்களுக்குப் பாராட்டும் நன்றியும் கூறியுள்ளது.


 தமிழகத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், தமிழ்த் தேசிய முன்னணியும் நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து போராடிய போது பாய்ந்து பாய்ந்து கைது செய்தனர் காவல்துறையினர். திருச்செந்தூர் குறும்பூரில் தீர்ப்பு நகலை எரித்த த.தே.பொ.க, தமிழக உழவர் முன்னணி மேதாழர்கள் 16 பேரை பிணையில் வர முடியாத பிரிவைச் சேர்த்து திருவைகுண்டம் சிறையில் அடைத்துள்ளது. கர்நாடகத்தில் தீர்ப்பு நகலை மட்டுமல்ல, மூன்று நீதிபதிகளின் கொடும்பாவிகளையே கொளுத்தினார்கள். தொலைக்காட்சிகளில் பார்த்தோம்@ அவர்களை சிறையில் அடைக்கவில்லை. காவிரியில் நடுவர் மன்றம் தந்த மோசமானத் தீர்ப்பை எதிர்த்துத் தீர்ப்பு வந்த மறுநாளும்(6-02-2007) அடுத்த நாளும் த.தே.பொ.க, தமிழ்த் தேசிய முன்னணி அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. பா.ம.க, ம.தி.முக கட்சிகளும் தீர்ப்பையும், தமிழக முதல்வரின் நிலைப்பாடம்டையும் விமர்சித்தனர். ம.தி.மு.க பட்டினிப் போராட்டத்தை நடத்தின. தினமலர், தினமணி ஏடுகள் தீர்ப்பை விமர்சித்து செய்திகளும் கட்டுரைகளும் வெளியிட்டன.
 மிகவும் தாமதமாக, மெத்தனமாக 19-2-2007 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார் தமிழக முதல்வர். சில விளக்கங்கள், சில திருத்தங்கள் கோர மறு ஆய்வு மனு நடுவர் மன்றத்தில் போடவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அடுத்த பகுதி 

காவிரிச்சிக்கல் - ஓர் முழுமையான வரலாறு
 1. காவிரி தமிழரின் செவிலித்தாய்
 2. நடுவர் மன்றத் தீர்ப்பு கூறுவது என்ன?
 3. ஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு
 4. உச்சநீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி
 5. இந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்
 6. போராட மறுக்கும் பெரிய கட்சிகள்
 7. நம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு
 8. மக்கள் என்ன செய்கிறார்கள்?
 9. “காவிரிக் குடும்பம்” எனும் இனத்துரோக அமைப்பு
 10. கங்கை - காவிரி எனும் பித்தலாட்ட சூழ்ச்சித் திட்டம்
 11. பன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதில்லை? 
 12. எப்போது வெல்வோம்? என்ன போராட்டம் நடத்துவது?
Share this video :

0 கருத்துகள்:

Post a Comment

 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger