பொங்கல் விழாவில் கரிகால் சோழனுக்குக்
“கல்லணையில் நன்றி விழா”
தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும்!
============================================
கல்லணையில் கரிகாலன் சிலைக்கு
மாலை அணிவித்து காவிரி உரிமை மீட்புக் குழு பொங்கல் படையல்!
=========================================================
கல்லணையில் பேரரசன் கரிகாலன் சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செய்யும் நிகழ்வு மூன்றாம் ஆண்டாக இன்று தை 2, 2053 – 15.1.2022 சனிக்கிழமை காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நடந்தது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆர்ப்பரித்து வந்த காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையில் அணை கட்டி, பாசனத்திற்கு நீரைப் பயன்படுத்திய பெருவேந்தன் கரிகாலன். தைப் பொங்கல் நாள் அறுவடைத் திருவிழாவாக - கால்நடைத் திருவிழாவாக – தமிழர் மரபு விழாவாக பல்லாயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்நாளில் கல்லணையில் உள்ள கரிகாலன் சிலைக்கு மாலை அணிவித்து, பொங்கல் படைத்து, மக்களுக்குப் வெண்பொங்கலும் சர்க்கரைப் பொங்கலும் வழங்குவதைக் காவிரி உரிமை மீட்புக் குழு கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கடைபிடித்து வருகிறது.
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பளார் பெ.மணியரசன், பொருளாளர் த.மணிமொழியன், முன்னோடிச் செயல்பாட்டாளர்களான தமிழ்த்தேசியப் பேரியக்க தஞ்சை மாவட்டச் செயலாளர் நா.வைகறை, செயற்குழு உறுப்பினர் பழ.இராசேந்திரன், வெள்ளாம்பெரம்பூர் துரை.இரமேசு, அல்லூர் சாமி.கரிகாலன், இரா.தனசேகர், மு.பார்த்திபன், அரசகுடி விஜய், பூதராயநல்லூர் இராமலிங்கம், கல்லணை குமார், தஞ்சை இராமு, பூதலூர் தென்னவன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
யானை மீதமர்ந்திருக்கும் கரிகாலனுக்கு மாலை அணிவித்துப் படையல் போட்ட பின், அடுத்து, பழங்காலக் கல்லணையை அடையாளங்காட்டி, அதே இடத்தில் புதிய அணை எழுப்பத் திட்டம் தந்த ஆங்கிலேயப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் அவர்கள் சிலைக்கும், காவிரித் தாய் சிலைக்கும், பேரரசன் இராசராசன் சிலைக்கும் மாலை அணிவித்து மலர் வணக்கம் செய்து பொங்கல் படையல் இடப்பட்டது.
தஞ்சை இராமு அடிசில் உணவக உரிமையாளர்களான கைலாசம் – செம்மலர் இணையர் வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் அன்பளிப்பாக வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெ.மணியரசன் பின் வரும் வேண்டுகோள்களை முன்வைத்தார்.
தமிழர்கள் கரிகாற்சோழன் சிலை முன் உறுதி எடுக்க வேண்டும்:
1. “தாழ்வு மனப்பான்மையை நீக்கி, தன்னப்பிக்கையையும் தன்மான உணர்வையும் தூக்கிப் பிடிப்பேன் “ என்று உறுதி எடுக்க வேண்டும்.
2. தமிழ்நாடு அரசு, கரிகால் பெருவளத்தானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் விழாவில் தை 2-ஆம் நாள் கல்லணையில் கரிகாலன் மணிமண்டபத்தில் “நன்றி விழா” நடத்த வேண்டும்.
3. கர்நாடகத்தில் மேக்கே தாட்டில் கர்நாடக அரசு அணைகட்டும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்திய அரசின் நீர்வளத்துறை இவ்வணை கட்ட ஏற்கெனவே அனுமதி வழங்கிவிட்டது. அடுத்து, காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கிடும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.
மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டு விட்டால் மிகை வெள்ள நீர் என்று ஒரு சொட்டு கூட மேட்டூர் அணைக்கு வராது. அவ்வாறு வெள்ள நீரையும் தடுக்கும் சூழ்சியுடன்தான் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் தீவிரம் காட்டிவருகிறது. கர்நாடக எதிர்கட்சியான காங்கிரசும் மேக்கே தாட்டு அணையை உடனே கட்டி முடிக்க வேண்டும் என்று போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தின் இம்முயற்சிகளைத் தடுக்கும் நோக்கத்தில், எதிர் நடவடிகைகளைத் தமிழ்நாடு அரசு உரியவாறு எடுக்கவில்லை.
உச்சநீதி மன்றத்தை அணுகி, மேற்கண்ட அணை முயற்சிக்கு இடைக்காலத் தடை கோருதல், தமிழ்நாட்டில் காவிரிக் காப்பு நாள் அறிவித்து ஒட்டு மொத்தத் தமிழ்நாடும் எழுச்சி ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட முயற்சிகளில் தமிழ்நாடு அரசு உடனடியாக ஈடுபட வேண்டும்.
மேற்கண்டவாறு கூறினார்.
==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================