தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


Home » » பன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதில்லை?

பன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதில்லை?
காவிரி நீர் இயற்கை நமக்கு வழங்கிய உரிமை நீர்; பன்னாட்டுச் சட்டங்கள் படியும் இந்திய நாட்டுச் சட்டங்கள் படியும் நமக்குரிய பங்கு நீரைக் கர்நாடகம் அடைத்து வைத்துக் கொள்ள முடியாது. எனவே நாம் கர்நாடகத்தின் கருணையை எதிர்பார்த்திருக் கவில்லை; கர்நாடகத்தின் ஆக்கிரமிப்பை -அரம்பத்தனத்தை எதிர்த்து அறப்போர் புரிகிறோம். காவிரி உரிமையை மீட்பதற்கான நமது போராட்டம் சட்ட வழிப்பட்டது, நீதி வழிப்பட்டது.

இந்த உள்ளத்தெளிவு தமிழர்களுக்கு வேண்டும். “கன்னடர்கள் கொடுக்கிற இடத்தில் இருக்கிறார்கள்; நாம் வாங்குகிற இடத்தில் இருக்கிறோம்என்று நம்மில் யாராவது சொன்னால் அது விவரம் தெரியாத பேச்சு என்று ஒதுக்கிவிட வேண்டும்.

தமிழினம் இன உரிமை பேசக்கூடாது, இன அடிப்படையில் ஒன்று சேரக்கூடாது என்று கங்கணம் கட்டித்திரியும் சூது மதியாளர்கள், சூழ்ச்சித் திட்டம் வகுப்போர் நம்மைக் கையேந்தும் கூட்டமாக மாற்றிட, நம் மீது கரிசனம் கொண்டவர்கள் போல் பேசி, திசை திருப்புவார்கள்; அந்தத்தந்திரங்களைக் கண்டு தெளியும் அறிவாற்றல் நமக்கு வேண்டும்.

உலகத்தில் பல நாடுகளுக்கிடையே பல ஆறுகள் ஓடுகின்றன. பன்னாட்டு ஆறுகளில் அந்தந்த நாட்டிற்கும் உள்ள தண்ணீர் உரிமையை நிலைநாட்ட பன்னாட்டுச் சட்டங்கள் இருக்கின்றன. அந்த  அடிப்படையில் ஒப்பந்தங்கள் இருக்கின்றன.

பல நாடுகள் வழியாக - பல மாநிலங்கள் வழியாக ஆறுகள் ஓடுவது இயற்கை வகுத்த சட்டம்! மனிதர்கள் உண்டாக்கிக் கொண்டதல்ல. மனிதர்கள் செய்ததெல்லாம், இயற்கை வகுத்த சட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த புதிய சட்டங்கள் உருவாக்கிக் கொண்டதுதான்.

எத்தியோப்பியா - சூடான் - எகிப்து ஆகிய நாடுகளுக்கு இடையே நைல் ஆறு ஓடுகிறது; ஆஸ்திரியாவுக்கும் துருக்கிக்கும் இடையே டான்யூப் ஆறு ஓடுகிறது; செர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே ரைன் ஆறு ஓடுகிறது. அமெரிக்காவுக்கும் மெக்சிக்கோவுக்கும் இடையே ரியோ கிராண்டி ஆறு ஓடுகிறது. கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கொலம்பியா ஆறு ஓடுகிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சிந்து, சீலம், செனாப் ஆறுகள் ஓடுகின்றன, இந்தியாவுக்கும் வங்காள தேசத்திற்கும் இடையே கங்கை ஓடுகிறது.

குசராத்திற்கும் மத்தியப் பிரதேசத்திற்கும் இடையே நர்மதை ஓடுகிறது. மராட்டியம், கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் இடையே கிருஷ்ணா ஓடுகிறது. இப்படி எத்தனையோ ஆறுகள் இயற்கை விதித்த சட்டத்தின்படி நாடுகள் கடந்து மாநிலங்கள் கடந்து ஓடுகின்றன.

ஆனால் காவிரியில் கர்நாடகம் செய்யும் அட்டூழியத்தை - அரம்பத்தனத்தை எந்த நாடும் செய்யவில்லை; எந்த மாநிலமும் செய்ய வில்லை.

நைல் ஆற்று நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக சூடானுக்கும் எகிப்துக்கும் இடையே 1929இல் ஒப்பந்தம் ஏற்பட்டது. அது இன்றும் செயல்பாட்டில் உள்ளது. அதற்கு முன்பாகவே கொலம்பியா ஆறு தொடர்பாக வட அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் உடன்பாடு ஏற்பட்டது.

1966இல் பின்லாந்துத் தலைநகரான ஹெல்சிங்கியில் உருவான விதிகள் நாடுகளுக்கிடையே ஓடும் ஆறுகளின் தண்ணீர்ப் பகிர்வுச் சிக்கல்களுக்கு ஒப்பீட்டளவில் சிறந்த முறையில் வழிகாட்டுகின்றன.

இந்தியாவும் 1956ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மாநிலங்களுக் கிடையிலான தண்ணீர்த் தகராறுச் சட்டம் வைத்துள்ளது. காவிரி சிக்கலில் இந்தச் சட்டப்படி செயல்பட இந்தியா மறுக்கிறது. இதுதான் அடிப்படைச் சிக்கல். கர்நாடகம், தடி எடுத்தவன் தண்டல்காரன் பாணியில் செயல்படுகிறது. அதன் அரம்பத்தனத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்தியா நடந்துகொள்கிறது.

அதே 1956இல் இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டஆற்று வாரியம்” (River Board) அமைக்கும் சட்டமும் உள்ளது. அதையும் இந்திய அரசு காவிரிச் சிக்கலில் பயன்படுத்தவில்லை.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 262இன் கீழ் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர்த் தகராறு சட்டம் (1956) விதி 6(2)-இன் படி தீர்ப்பாய முடிவு இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டப்பின், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குச் சமமான அதிகாரத்தைப் பெற்றுவிடுகிறது. 1980இல் இச்சட்டத்தில் சேர்க்கப்பட்ட விதி 6(கி), தீர்ப்பாயத்தின் முடிவை அரசிதழில் வெளியிட்டவுடன் அதைச் செயல்படுத்த ஆணையம் அல்லது மேலாண்மை வாரியம் போன்ற ஒரு பொறியமைவை உண்டாக்க வேண்டும் என்கிறது.

விதி 6கி(3)இன்படி, அந்தப் பொறியமைவு அதாவது ஆணையம் அல்லது மேலாண்மை வாரியம் சிக்கலுக்குரிய அணைகள், ஆறுகள் மீது முழு அதிகாரம் கொண்டிருக்கும். சிக்கலுக்குரிய அணைகளில் இருந்து தண்ணீரைத் திறந்துவிடுவது, மதகுகளை மூடுவது ஆகிய அதிகாரம் மாநில அரசிடமிருந்து இந்த ஆணையம் அல்லது மேலாண்மை வாரியத்திற்குப் போய்விடும்.

இந்தியப் பிரதமாக .கே. குஜரால் இருந்தபோது, 30.05.1997 நாளிட்டு மேற்கண்டவாறு ஓர் ஆணையம் அமைக்க முன் மொழிவு முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதை கர்நாடகம் எதிர்த்ததால் பின்னர் வந்த வாஜ்பாயி அரசு அத்திட்டத்தைப் புறக்கணித்து விட்டது.

காவிரித் தீர்ப்பாயம் தனது இறுதித் தீர்ப்பில், தீர்ப்பு முடிவுகளைச் செயல்படுத்த ஓர் அதிகாரப் பொறியமைவை அமைப்பதை வலியுறுத்தியுள்ளது.

இம்முடிவுகளைச் செயல்படுத்த நடுவண் அரசு  ‘காவிரி மேலாண்மை வாரியம்’ (Cauvery Management Board) அமைக்க வேண்டும். அதன் கட்டுப்பாட்டின்கீழ் கர்நாடகத்தில் கிருஷ்ணராஜ சாகர், ஏமாவதி, ஏரங்கி, கபினி ஆகிய நான்கு அணைகள், தமிழ்நாட்டில் உள்ள மேட்டூர், பவானி சாகர், அமராவதி அணைகள், கேரளத்தில் உள்ள பாணாசுர சாகர் ஆகியவை வரவேண்டும். இவ்வணைகளைத் தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்துக்கொண்டு தீர்ப்பின்படி தண்ணீர் திறந்து விடுவதைக் கண்காணிக்க வேண்டும். பத்து நாட்களுக்கொரு முறை இதனை செய்ய வேண்டும். இந்த மேலாண்மை வாரியம் தனது பணிகளை நிறைவேற்ற காவிரி ஒழுங்கு முறைக் குழு (Cauvery Regulatory Committee) ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.”

“1991இல் தீர்ப்பாயம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்புப்படி தண்ணீர்ப் பெற ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தை அணுக வேண்டியிருந்தது என்பதை ஆவணங்களிலிருந்து அறிய முடிகிறது. ஒவ்வொரு முறையும் பற்றாக்குறை என்று காரணம் சொல்லி கர்நாடகம் தட்டிக் கழித்தது என்பதையும் அறிய முடிகிறது. எனவே இப்போது அளிக்கும் தீர்ப்பைச் செயல்படுத்த உருப்படியான பொறியமைவுகள் உருவாக்காமல் போனால் இத்தீர்ப்பும் துண்டுக் காகிதமாகவே இருக்கும்.” (காவிரித் தீர்ப்பாய்த்தின் இறுதித் தீர்ப்பு - தொகுதி - 5, பக்கம் - 216)

இறுதித் தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று கர்நாடகம் கூறுகிறது. இது மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறு சட்டம் விதி 6(1) க்கு எதிரானது.

ஆற்றுநீர்ச் சிக்கல் தொடர்பான தீர்ப்பாயத்தின் தீர்ப்பு நடுவண் அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டால் அது உச்ச நீதி மன்றத் தீர்ப்பிற்குச் சமமானது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தக் கூடாது என்று சொல்ல முடியுமா? செயல்படுத்த முடியாது என்று மறுக்க முடியுமா? முடியாது.

ஆனால் என்ன அட்டூழியம்  புரிந்தாலும் தன்னைப் பாதுகாக்க இந்திய அரசு இருக்கிறது என்ற துணிச்சலில் கர்நாடகம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று இந்திய அரசிடம் கூறுகிறது. உச்ச நீதிமன்றத்திலும் கூறுகிறது. கர்நாடகத்தின் இந்த அடாவடி நிலைபாட்டை ஆதரித்து இந்திய அரசின் நீர்வளத் துறை அமைச்சர் அரீசு ராவத் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அவசரப்பட மாட்டோம் என்று கூறினார்.

03.12.2013 அன்று உச்ச நீதிமன்றமும் உடனடியாகக் காவிரி மேலாண்மை வாரியமும், ஒழுங்குமுறைக் குழுவும் அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை அவசரமாக விசாரிக்கத் தேவையில்லை; பின்னர் விசாரித்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டது.

இந்த நிலையில் 2014 சனவரி 28 வரை மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விட்டால்தான் 16 இலட்சம் ஏக்கர் சம்பாப் பயிரைக் காப்பாற்ற முடியும். இதரப் பயிர்களையும் காப்பாற்ற முடியும். ஆனால் இப்பொழுது (28.12.2013-) மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் மட்டம் 70.24 அடி. இதன் அளவு 32 .மி. (ஜி.வி.சி). இப்பொழுது ஒரு நாளைக்கு 9 ஆயிரம் கன அடி திறந்து விடப் படுகிறது. இத்தண்ணீர் தஞ்சை - திருவாரூர்- நாகை மாவட் டங்களின் முதன்மைப் பகுதிக்கே போதாது. கடைமடைப் பகுதிக்குப் போய்ச் சேரவே சேராது. அதைப்போல் கடலூர் மாவட்டம் சிதம்பரம் - காட்டுமன்னார்குடிக்குத் தண்ணீர் போய்ச் சேராது. காரைக்கால் பகுதிக்குத் தண்ணீர் போய்ச் சேராது. இவ்வாண்டும் கடந்த ஆண்டைப்போல் சம்பாப் பயிர் காய்ந்து கருகி, நாசமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கர்நாடகம் தமிழகத்திற்குத் தரவேண்டிய பாக்கித் தண்ணீர் 26 .மி.. இதை உச்ச நீதிமன்றம் அமைத்த இடைக்கால ஏற்பாடான காவிரி மேற்பார்வைக் குழுத் தலைவர் டி.வி. சிங்கே 26 .மி. தண்ணீர் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத்தர வேண்டும் என்று 09.11.2013 அன்று புதுதில்லியில் நடந்த கூட்டத்தில் கூறினார். கர்நாடகத் தரப்பினரோ, தங்களுக்கேற்படவிருந்த வெள்ளச் சேதத்தைத்  தடுத்திட சொல்லாமல் கொள்ளாமல் திருட்டுத்தனமாகத் திமுதிமு வென்று ஒரே நேரத்தில் திறந்துவிட்ட தண்ணீரைக் கணக்கில் சேர்த்துக் கொண்டு ஆண்டு முழுவதற்கும் தரவேண்டிய 192 .மி..வைவிடக் கூடுதலாக 214 .மி. வரை திறந்துவிட்டோம் என்று வல்லடி வழக்குப் பேசியது.

ஒரே நேரத்தில் திமுதிமு வென்று திறந்துவிட்ட தண்ணீரின் கணிசமான பகுதிக் கடலுக்குப் போய்விட்டது. கடலுக்குப் போனது போகக் கழித்துப் பார்த்தால் தமிழகத்துக்குக் கர்நாடகம் 26 .மி.. தர வேண்டும்.

ஒரு சொட்டுத் தண்ணீர்க்கூடத் தரமுடியாது என்று சொல்லிவந்த கர்நாடகம் தனது அணைகளையும் ஊர்களையும் - சாகுபடி நிலங்களையும் பாதுகாப்பதற்காக ஒரே நேரத்தில் திறந்துவிட்ட தண்ணீரின் கணிசமான பகுதி கடலுக்குப் போய்விட்டப் பிறகு அதைச் சேர்த்துக் கணக்குக் காட்டுவது வம்பும் வல்லடியும் ஆகும்!

இவ்வாண்டு சாகுபடிக்குத் தரவேண்டிய 26 .மி.. தண்ணீரைத் திறந்துவிட்டால் தான் சம்பா சாகுபடியைப் பாதுகாத்திட முடியும்.

கர்நாடகத்தின் அணைகளில் 28.12.2013 அன்று நிலவரப்படி 55 .மி. தண்ணீர் இருப்பு உள்ளது.


இந்த 26 .மி. தண்ணீரைப் பெறத் தமிழ்நாட்டில் தமிழக அரசும் முயலவில்லை. எதிர்க்கட்சிகளும் போராடவில்லை. காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் அதன் உறுப்பு அமைப்புகள் 03.12.2013 அன்று திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, சிதம்பரம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தின.

அடுத்த பகுதி 

காவிரிச்சிக்கல் - ஓர் முழுமையான வரலாறு
 1. காவிரி தமிழரின் செவிலித்தாய்
 2. நடுவர் மன்றத் தீர்ப்பு கூறுவது என்ன?
 3. ஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு
 4. உச்சநீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி
 5. இந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்
 6. போராட மறுக்கும் பெரிய கட்சிகள்
 7. நம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு
 8. மக்கள் என்ன செய்கிறார்கள்?
 9. “காவிரிக் குடும்பம்” எனும் இனத்துரோக அமைப்பு
 10. கங்கை - காவிரி எனும் பித்தலாட்ட சூழ்ச்சித் திட்டம்
 11. பன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதில்லை? 
 12. எப்போது வெல்வோம்? என்ன போராட்டம் நடத்துவது?
Share this video :

0 கருத்துகள்:

Post a Comment

 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger