தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


நடுவண் அரசிதழி்ல் வெளியான காவிரி மேற்பார்வை குழு !


காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு கடந்த 2007-ல் வெளியானது. அதில் ஆண்டுதோறும் தமிழகத்துக்கு காவிரியில் 192 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்றும் ஜூன் மாதம் 10 டிஎம்சி, ஜூலையில் 34 டிஎம்சி, ஆகஸ்டில் 50 டிஎம்சி, செப்டம்பரில் 40 டிஎம்சி என 12 மாதங்களுக்கும் எவ்வளவு தண்ணீர் தரவேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

6 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரியில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்தும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி வந்தார். ஆனால் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. 

இதனால் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தற்காலிக கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. 

இதையடுத்து கடந்த 17-ந் தேதி பிரதமருக்கு மீண்டும் கடிதம் எழுதிய ஜெயலலிதா உடனடியாக வாரியம் மற்றும் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிலையில் தற்காலிக காவிரி மேலாண்மை குழுவை மத்திய அரசு அமைத்தது. அதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.



”காவிரி நீர் பெற, எழுச்சி நாள் கடைபிடிக்க வேண்டும்” - விகடன் இணையத்துக்கு தோழர் பெ.மணியரசன் செவ்வி!






காவிரி எழுச்சி நாளை கடைபிடித்து, அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி பேரணி, கூட்டங்களைம நடத்தி, காட்டினால்தான் டெல்லி பயப்படும். அப்போதுதான் தமிழகத்திற்கு காவிரி நீர் பெறமுடியும்என்று காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ் தேச பொதுவுடைமை கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன், விகடன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

இது குறித்து விகடன் இணையத்தில் வெளியான பேட்டியிலிருந்து...

'
காவிரியில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்கு தரமாட்டோம்' - கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவரின் இந்த அறிவிப்பு தமிழகத்தையே தகிக்க வைத்திருக்கிறது. இதுகுறித்து தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் தலைவரான மணியரசனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவரின் இந்த அறிவிப்பு குறித்து என்ன சொல்கிறீர்கள்?

கர்நாடக காங்கிரஸ் தலைவர் வரும் சாகுபடி பருவத்திலும் தண்ணீர் தரமுடியாது என்று சொல்லியிருக்கிறார். காவிரி பிரச்னையை பொறுத்தவரை காங்கிரஸாக இருந்தாலும், பா.ஜ.க.வாக இருந்தாலும் ஒரே நிலையில் தான் இருப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு இது. இதேபோல் மத்தியில் காங்கிரஸ் கட்சி இருந்தாலும், பா.ஜ.க இருந்தாலும் தமிழ்நாட்டிற்குறிய நியாயத்தை பெற்றுத்தராது. முன்பு மத்தியில் காங்கிரஸும், மாநிலத்தில் பா.ஜ.க.வும் இருந்தது. இதனால் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை என சொன்னார்கள். இப்போது காங்கிரஸ் தலைவர் இதை சொன்னதில் இருந்து அது உண்மையில்லை என்பது தெரிகிறது. இப்போது முதல்வராக இருக்கும் சித்தராமையா எதிர்கட்சி தலைவராக இருந்தபோது காவிரி குறித்து நடந்த அனைத்து கட்சி கூட்டத்திலும், சட்டப்பேரவை விவாதத்திலும் தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என சொன்னவர் தான். தமிழர்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டியது கிடைக்க தேவையில்ல என்ற மனப்போக்கில் தான் காங்கிரஸ் இருக்கிறது.

காவிரி தீர்ப்பாயத்தின் தீர்ப்பு கெசட்டில் வெளியிட்டால் தண்ணீர் கிடைத்து விடும் என்ற கருத்து குறித்து?

கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி காவிரி தீர்ப்பாயத்தின் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு. அப்போதே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திருக்க வேண்டும். தீர்ப்பை மட்டும் வெளியிட்டு விட்டு அந்த தீர்ப்பின் பரிந்துரையை நிறைவேற்றவில்லை. 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை என்றால் எங்களின் இந்த தீர்ப்பு வெறும் துண்டு காகிதம் தான்' என்று தீர்ப்பாயம் சொல்லியிருக்கிறது. அதையும் மீறி அப்போதைய கர்நாடக முதல்வர் ஷெட்டர் பிரதமரை சந்தித்து மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என்றார். அதையும் காங்கிரஸ் அரசு ஏற்றுக்கொண்டது. கர்நாடகம் சட்டவிரோதமாக எதை சொல்லுகிறதோ அதைதான் மத்திய அரசு கேட்கிறது. சட்டத்தை செயல்படுத்த மறுக்கிறார்கள். இந்த ஆண்டு குறுவை, சம்பா சாகுபடிகளை இழந்திருக்கிறோம். அதோடு ராமநாதபுரத்தில் இருந்து சென்னை வரைக்கும் காவிரி நீர் தான் குடிநீராக பயன்படுகிறது. அப்படி இருந்தும் கர்நாடக அரசு சட்டப்படி செயல்பட மாட்டோம் என அறிவிக்கிறது. அதை மத்திய அரசு ரசிக்கிறது.

முதல்வர் ஜெயலலிதாவை தஞ்சைக்கு வரவழைத்து பொன்னியின் செல்வி என்ற பட்டத்தை கொடுத்தார்கள். ஆனால் இந்த வருடம் ஜூன் மாதம் ஆறாம் தேதியோ, அல்லது தி.மு.க ஆட்சி காலத்தில் திறக்கப்பட்ட ஜூன் 12 ஆம் தேதியோ உங்களால் தண்ணீரை திறக்க முடியுமா என ஸ்டாலின் கேட்டுள்ளாரே?

காவிரி உரிமையை மீட்டுத்தர முடியாததில் தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கு வேறுபாடு இல்லை. இரண்டு ஆட்சியாளர்களாலுமே காவிரி உரிமையை மீட்டுத்தர முடியவில்லை. இவர்களின் சவால்கள் எல்லாமே வெத்து வேட்டு சவால்கள். இவர்கள் இருவருக்குமே ஒரு கலாச்சாரம் இருக்கு. அது மலிவான பிரச்சாரத்தை செய்து வாக்கு வங்கியை சேர்த்துக்கொள்வது தான். 1998ல் ஆணையம் போட்டபோது அது உதவாக்கரை ஆணையம் என நாங்கள் சொன்னோம். ஆனால் தி.மு.க. ஊர் முழுவதும் இனிப்பு கொடுத்து கொண்டாடியது. 'நியாயம் வென்றது' என கருணாநிதியும் சொன்னார். அப்ப தண்ணீர் கிடைத்ததா. ஜெயலலிதாவை வரவழைத்து பட்டம் கொடுத்த இதே மன்னார்குடி ரெங்கநாதன், அப்போது கருணாநிதியை தஞ்சைக்கு வரவழைத்து திலகர் திடலில் கூட்டத்தை ஏற்பாடு செய்து அதில் காவேரிகொண்டான் எனும் பட்டத்தை கொடுத்தார். அது எப்படி போலியானதோ, பொய்யானதோ, அதேபோல் ஜெயலலிதாவிற்கு பாராட்டு கூட்டம் நடத்தி பட்டம் கொடுத்ததும் போலியானது, பொய்யானது. மொத்தத்தில் இருவருமே போலியான பெருமைகளை சூடிக்கொள்கிறார்கள்.

அரசியல் கட்சிகள் சார்பாக பேசப்படும் காவிரிப்பிரச்சினை விவசாயிகளின் நலனுக்காகவா, அரசியல் லாபத்திற்காகவா?

முழுக்க, முழுக்க அரசியல் கட்சிகளின் சுயலாபத்திற்காக தான் பேசுகிறார்கள். அதை தி.மு.க.வும் செய்தது. இப்போது அ.தி.மு.க.வும் செய்கிறது. கடந்த இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கடைமடை பகுதிகளிலும் முப்போகம் விவசாயம் செய்ய முடியாவிட்டாலும், ஒருபோகம் விவசாயம் செய்து விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்கள். இப்போது கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வருவதே இல்லை. இன்னும் சொல்லப்போனால் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விவசாய நிலங்களைவிட இப்போது குறைவாகத்தான் இருக்கிறது. இருந்தும் ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் ஆறுகளை தூர்வாரி, பாசன முறையை முறையாக பராமரிக்காததால் தான் இந்த நிலை வந்திருக்கிறது. ஆட்சியாளர்களுக்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை. அதனால் தான் மேட்டூரில் நீர் நிரம்பி வழிந்த போது கூட கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் போகவில்லை. அப்படியென்றால் இவர்களின் பேச்சு எப்படி விவசாயிகளின் நலனிற்காக என்று எடுத்துக்கொள்ள முடியும்.


காவிரி பிரச்சினைக்கான தீர்வு தான் என்ன?

தமிழக முதல்வர் நமது அனுபவத்தில் இருந்து புதிய உத்திகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடுவதால் மட்டுமே நமக்கு பலன் கிடைக்கவில்லை. அதற்காக வழக்கு போட்டது தவறு என்று சொல்லவில்லை. மத்திய அரசு நம்மை கைகழுவி விடும்போது, மாநிலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., ஆகிய கட்சிகள் ஒற்றுமையாக இல்லாதது அவர்களுக்கு பலமாக போகிறது. இவர்கள் ஒற்றுமையாக இல்லை. அதனால் இவர்கள் ஒருங்கிணைந்து மத்திய அரசுக்கு எதிராக மக்களை திருப்ப முடியாது. பெரிய அளவில் போராட்டங்கள் வராது. அப்படி வராமல் இருக்கும் பொறுப்பை ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் ஆகியோரே பார்த்துக்கொள்வார்கள் என்பதை மத்திய அரசும், கர்நாடகமும் நம்புகிறது. மறைமுகமாக இவர்கள் மத்திய அரசுக்கு உதவி செய்கிறார்கள்.

இதை பொய்யாக்கும் வகையில் முதலமைச்சர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, ஒருமித்த கருத்தை எடுத்து அனைத்துக்கட்சி குழுவை அழைத்துப்போய் பிரதமரை சந்தித்து அரசியல் அழுத்தம் தரவேண்டும். சட்டத்தை நிறைவேற்றுங்கள் என வற்புறுத்த வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டம் தமிழகத்திற்கு பொருந்துமா? பொருந்தாதா? என கேள்வி எழுப்ப வேண்டும். அடுத்து காவிரி உரிமை மீட்பு நாள் என்றோ, காவிரி எழுச்சி நாள் என்றோ அதில் ஒரு நாளை குறித்து, அனைத்து கட்சிகளும் சேர்ந்து பேரணிகளும், கூட்டங்களூம் நடத்தி மத்திய அரசையும், கர்நாடக அரசையும் வலியுறுத்த வேண்டும். அப்படி ஒரு நாள் வந்தால் கோடிக்கணக்கான மக்களை திரட்ட முடியும்.

1968
ஆம் ஆண்டு முதல்வராக இருந்த அண்ணா அவர்கள், மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தி எழுச்சி நாள் என்ற கோரிக்கை நாளை கடைப்பிடித்தார். அப்போது தமிழகம் முழுவதும் கூட்டங்களும் பேரணிகளும் நடந்தது. சேலம் உருக்காலை, தூத்துக்குடி துறைமுகம் இப்படி பல கட்டங்களை வைத்து எழுச்சி நாள் கடைபிடித்தார்கள். இதை அண்ணாவே வழிகாட்டியிருக்கிறார். அண்ணாவின் பெயரை கட்சியின் பெயராக வைத்திருக்கும் முதல்வர் அவர்கள் காவிரி எழுச்சி நாளை கடைபிடித்து, அனைவரையும் ஒன்றுதிரட்டி காண்பித்தாலே டெல்லி பயப்படும். மொத்தத்தில் கர்நாடக அரசியல்வாதிகள் சண்டைபோட்டு கொண்டாலும் காவிரி என்று வரும்போது ஒன்று கூடி விடுகிறார்கள். அந்த ஒற்றுமை இங்கும் வர வேண்டும். அப்போது தான் காவிரி பிரச்சினை தீரும் என்றார்

(விகடன் செய்தியாளர்: வீ.மாணிக்கவாசகம், படங்கள்: கே.குணசீலன்)

 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger