”தமிழகப்
பல்கலைக்கழகங்களில் மான்சாண்டோ நிறுவனத்திற்காக
ஆய்வுகள் நடப்பதை தமிழக
முதல்வர் தடை செய்ய வேண்டும்!”
மான்சாண்டோ கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழர் பெ.மணியரசன் பேச்சு!
இன்று(12.10.2013) உலகம் முழுவதும் மான்சாண்டோ குழும எதிர்ப்பு நாள்
கடைபிடிப்பதையொட்டி, திருவாரூரில் உழவர் பேரணியும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்தன. ‘மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்திற்கு மாறான தென்னகம்’
என்ற அமைப்பு இதற்கு ஏற்பாடு செய்தது. பல்வேறு உழவர் அமைப்புகள்
இதில் கலந்து கொண்டன.
திருவாரூர் தொடர்வண்டி நிலையத்தில் தொடங்கிய பேரணிக்கும்
ஆர்ப்பாட்டத்திற்கும், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் திரு.
வெ.துரைராசன் தலைமை தாங்கினார். விவசாய சங்கங்களின் தலைவர்களான திரு. மு.சேரன்,
திரு. சி.பாலகிருஷ்ணன், திரு. பா.மணிமொழியன், திரு. ஆர்.பழனிவேலு ஆகியோர் முன்னிலை
வகித்தனர். தமிழர் இயற்கை உழவர் இயக்கத்தின் மாநில இணைச் செயலாளர் திரு.
இரா.செயராமன் இப்பேரணிக்கான ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்தார். கண்டன ஆர்ப்பாட்டத்தின்
நோக்கங்களை விளக்கி திரு. கே.சுரேஷ் கண்ணா, திரு. காவிரி தனபாலன் ஆகியோர் பேசினர்.
திருவாரூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள அஞ்சலகத்தின் எதிரே நிறைவுற்ற
பேரணியின் முடிவில், மான்சாண்டோ எதிர்ப்புக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், இயற்கை வேளாண் அறிவியலாளர் முனைவர் கோ.நம்மாழ்வார், காவிரி
உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் ஆகியோர் உரையாற்றினர்.
முனைவர் கோ.நம்மாழ்வார் அவர்கள் உரையாற்றும் போது, மரபீணி மாற்று விதைகளைப்
பயன்படுத்தி சாகுபடி செய்தால் அந்தப் பயிர்களைப் பிடுங்கி அழிப்போம் என்றும் மான்சாண்டோ உருவ பொம்மையை கொளுத்துவோம்
என்றும் எச்சரித்தார்.
தோழர் பெ.மணியரசன் பேசும் போது பின்வருமாறு குறிப்பிட்டார்.
”நகரங்களிலே உள்ள பழமுதிர்சோலைகளில் பூசணிக்காய் அளவிற்கு கத்தரிக்காய்
பெரிதாக இருக்கிறது. இந்த வகை கத்திரிக்காய் மான்சாண்டோவின் மரபீணி மாற்று
விதையாகும். மரபீணி மாற்று பி.ட்டி. பருத்து சாகுபடி தான் நூற்றுக்கு என்பது
விழுக்காடு நடைபெறுகிறது.
மரபீனி மாற்றுப் பயிர் ஒழுங்காற்றுச் சட்டம் மசோதா நிலையிலேயே இருக்கிறது.
அதை சட்டமாக நிறைவேற்ற இந்தியாவெங்கும் உழவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
நாடாளுமன்றத்திலும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதனால் அது பற்றி ஆய்வு செய்து
அறிக்கை தர சி.பி.எம். நாடாளுமன்ற உறுப்பினர் நிலோத்பல் பாசு தலைமையில் ஒரு
தேர்வுக் குழு(Select Commitee)வை அமைத்து அதனுடைய ஆய்வுக்கு
விட்டார்கள்.
அக்குழு இந்தியாவெங்கும் சென்று களஆய்வு நடத்தி கருத்துகள் கேட்டு, இறுதி
அறிக்கை தயார் செய்தது. அந்த அறிக்கையில் ”மரபீணி மாற்று விதைகளைப்
பயன்படுத்தினால் விளைச்சல் பாதிக்கப்படும், அதனால் உருவாகும் காய்கறிகளையும்
தானியங்களையும் உண்பவர்களுக்கு நோய்கள் ஏற்படும். அதன் தாவரங்களை உண்ணும்
பிராணிகள் நோய் வாய்ப்படும். மனிதர்களும் விலங்குகளும் மலட்டுத்தன்மை அடைவர்.
அப்பயிர்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவை” என்று கூறி மரபீணி மாற்றுப் பயிர்களை
பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் பல்வகை பயிர்களை வளர்ப்பதற்கு
பாதுகாப்பளித்து சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அவ்வறிக்கை கூறியது.
அவ்வறிக்கை அரசுக்குத் தாக்கல் செய்யப்பட்ட பின் மேற்படி மசோதா கிடப்பில்
போடப்பட்டுள்ளது. அது சட்டமாகவில்லை.
ஆனால், கொல்லைப்புற வழிகளில் இந்திய அரசு மாண்சாண்டோ, சின்ஜென்டா போன்ற
பன்னாட்டு நிறுவனங்களின் மரபீணி மாற்று விதைகளை இந்தியாவிற்குள்
அனுமதித்திருக்கிறது. தமிழ்நாட்டிற்குள்ளும் அனுமதித்திருக்கிறது. இந்தியாவின்
பிரதமர் மன்மோகன் சிங், ஆளுங்கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆகியோர் மான்சாண்டோ
நிறுவனத்தின் கங்காணிகளாக வேலை செய்கிறார்கள். இவர்கள் நாடாளுமன்றத் தேர்வுக் குழு
அளித்த அறிக்கையை நடைமுறையில் செல்லாக்காசாக்கியுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி நடந்த போதும் சரி, இப்பொழுது அண்ணா தி.மு.க.
ஆட்சி நடக்கும் போதும் சரி மான்சாண்டோவின் மரபீணி மாற்று விதைகளை
அனுமதிக்கிறார்கள். இன்றும் மான்சாண்டோ நிறுவனத்தின் நிதியுதவியுடன் கோயம்புத்துர்
வேளாண் பல்கலைக்கழகத்திலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் மரபீணி மாற்று
விதைக்கான ஆய்வுத்துறைகள் செயல்படுகின்றன. அப்பல்கலைக்கழகங்கள் மரபீணி மாற்றுப்
பயிர்களை ஆதரித்துப் பரப்புரை செய்கின்றன.
இப்பல்கலைக்கழகங்கள் மான்சாண்டோ கொடுக்கும் இலஞ்சப் பணத்தில்
அந்நிறுவனத்திற்கு ஆதரவாக மக்களுக்கு எதிரான ஆராய்ச்சி அமைப்புகளை உருவாக்கி
கொண்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் அ.இ.அ.தி.மு.க.வின் தம்பித்துரையும்
உறுப்பினராக இருந்தா. அவரும் மரபீணி மாற்றுப் பயிர்களுக்கு எதிராக அத்தேர்வுக்
குழுவில் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.
ஆனால், அண்ணா தி.மு.க.வின் தமிழக அரசு, தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில்
மான்சாண்டோவின் நிதியில் ஆராய்ச்சிகள் நடப்பதை அனுமதிப்பது ஏன்? தமிழக முதலமைச்சர்
மவுனம் காக்காமல் இதிலொரு முடிவெடுக்க வேண்டும்! அந்த மான்சாண்டோ ஆராய்ச்சி
அமைப்புகளை மூடச் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் மரபீணி மாற்று விதைகளோ,
காய்கறிகளோ, தானியங்களோ வராமல் தடுக்க வேண்டும்.
இது உழவர்களுக்கான சிக்கல் மட்டுமல்ல. இது அனைத்து மக்களுக்குமான சிக்கல்.
இனிமேல் கடைகளில் மரபீணி மாற்றுக் காய்கறிகள் இருந்தால், அவற்றை வெளியே சாலையில்
வீசி அழிக்க வேண்டும். பி.ட்டி. பருத்தியை சாகுபடி செய்யாமல் விவசாயிகளை தடுக்க
வேண்டும். இது போன்ற போராட்டங்களை நடத்துவதற்கும், உழவர்கள் நடத்தும்
போராட்டங்களில் பங்கு கொள்வதற்கும் காவிரி உரிமை மீட்புக் குழுவிலுள்ள உழவர்கள்
அணியமாக இருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்து இப்போராட்டத்தை திருவாரூரில்
முன்னெடுத்த அனைவருக்கும் நன்றி பாராட்டி விடைபெறுகிறேன். வணக்கம்!”
இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார்.
இந்நிகழ்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு
உறுப்பினர் தோழர் நா.வைகறை, தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு,
திருத்துறைப்பூண்டி மூத்த த.தே.பொ.க. தோழர் இரா.கோவிந்தசாமி, ஒன்றியச் செயலாளர்
தோழர் மு.தனபாலன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் வெ.இராசேந்திரன் உள்ளிட்ட திரளான
த.தே.பொ.க. தோழர்கள் பங்கேற்றனர்.
(செய்தி: த.தே.பொ.க.
செய்திப்பிரிவு, படங்கள்: குடந்தை செந்தமிழன்)