தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


மேக்கேதாட்டு அனுமதி குறித்த நிதின் கட்கரியின் கடிதம் தந்திரமானது! தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏமாறக்கூடாது! பெ. மணியரசன் எச்சரிக்கை!

மேக்கேதாட்டு அனுமதி குறித்த நிதின் கட்கரியின் கடிதம் தந்திரமானது! தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏமாறக்கூடாது! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் எச்சரிக்கை!
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்டுவதற்குரிய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நடுவண் அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அண்மையில் அனுமதி வழங்கியது. இந்த அனுமதி தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் கவலையையும், பதட்டத்தையும் உண்டாக்கியது.

இதற்குக் கண்டனம் தெரிவித்தும், இந்த அனுமதியைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் கடந்த 18.12.2018 அன்று தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த உழவர்களும், உணர்வாளர்களும் பல்லாயிரக்கணக்கில் திரண்டு மாபெரும் கண்டனப் பேரணி நடத்தினார்கள்.

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மேக்கே தாட்டு அணை கட்டும் அனுமதியைத் திரும்பப் பெற வலியுறுத்தித் தொடர்ந்து போராடி வருகிறார்கள்; நாடாளுமன்றச் செயல்பாட்டை முடக்கி வருகிறார்கள்.

இந்நிலையில், நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, அ.இ.அ.தி.மு.க. – தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், இந்தச் சிக்கலைப் பேசி சுமூகமாகத் தீர்த்துக் கொள்ளலாம் என்றும், அது தொடர்பாகப் பேசுவதற்கு வருமாறும் நாடாளுமன்றத்தில் நடக்கும் போராட்டத்தை உடனடியாகக் கைவிடுமாறும் கூறியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், மேலும் அவர் மேக்கேதாட்டு அணை பாசனத்திற்கான நீர்த்தேக்கம் அல்ல என்றும், குடிநீருக்காகவும் மின்சார உற்பத்திக்காகவும்தான் என்று கர்நாடகம் கூறியுள்ளது. அதனால்தான் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அளிக்க அனுமதி அளித்தோம். காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி 4.75 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீர் கூடுதலாகக் கர்நாடகத்துக்குக் கொடுக்க வேண்டியுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுமென நிதின் கட்கரி கூறியுள்ளார்.

நான்கு மாநிலங்களின் கருத்தொற்றுமை அடிப்படையில்தான் இந்திய அரசு அணை கட்ட அனுமதி அளிக்கும். எனவே, தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தைக் கைவிட்டுப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

கர்நாடகம் மேக்கேதாட்டு அணைக்கான திட்ட அறிக்கை தயாரிக்க கொடுத்த அனுமதியை திரும்பப் பெறாமலேயே நிதின் கட்கரி பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார். அத்துடன், கர்நாடகம் அணை கட்டுவது பாசன நீரைத் தேக்குவதற்கு அல்ல, குடிநீருக்காகவும் மின்சாரம் தயாரிப்பதற்காகவும்தான் என்று நிதின் கட்கரி கூறுகிறார். கர்நாடக அரசு சூதாகச் சொல்லும் கூற்றை நடுவண் அமைச்சர் நிதின் கட்கரியும் அப்படியே கூறுவது நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது!

தந்திரமாகத் தமிழ்நாட்டின் கவனத்தைத் திசைத்திருப்பி மேக்கேதாட்டு அணைக் கட்டுமான வேலைகளுக்கு தடங்கல் இல்லாமல் இந்திய அரசு பார்த்துக் கொள்கிறதோ என்ற வலுவான ஐயம் நமக்கு எழுகிறது.

எனவே, நடுவண் அரசு விரித்துள்ள வலையில் தமிழ்நாடு அரசும், அ.இ.அ.தி.மு.க. – தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் விழுந்துவிடாமல் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்குக் கொடுத்த அனுமதியைத் திரும்பப் பெறாத வரையில், அ.தி.மு.க. – தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் நாடாளுமன்ற முடக்கப் போராட்டத்தைக் கைவிட வேண்டியதில்லை என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery

மாபெரும் நீராண்மை மறு சீரமைப்பிற்காக காவிரிப் படுகையில் கள ஆய்வு காவிரி உரிமை மீட்புக் குழு ஏற்பாடு. பெ. மணியரசன்.

மாபெரும் நீராண்மை மறு சீரமைப்பிற்காக காவிரிப் படுகையில் கள ஆய்வு காவிரி உரிமை மீட்புக் குழு ஏற்பாடு. காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன்.
 
நம்முடைய காவிரிப் படுகை நீர் மேலாண்மை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை இவ்வாண்டு வந்த காவிரி வெள்ள நீர் வெளிப்படுத்திவிட்டது.
 
“ஆறுகளில் வெள்ளம்” வாய்க்கால்களில் – வயல்களில் வறட்சி” என்ற அவலத்தைப் பார்த்தோம். பாசனத்திற்கு தண்ணீர் கேட்டு காவிரி தலைமடையிலிருந்து கடைமடை வரை உழவர்கள் போராடினார்கள். இன்றும் போராடுகிறார்கள்.
 
மாயனூரிலிருந்து வங்கக்கடல் வரை உள்ள காவிரிப் படுகை நீராண்மையில் மாபெரும் மறுசீரமைப்புத் திட்டங்கள் – பணிகள் செயல்படுத்த வேண்டிய அவசரத் தேவை உள்ளது.
 
காவிரிப் படுகை மாபெரும் மறுசீரமைப்பு திட்டங்கள் குறித்த கோரிக்கைகளை தமிழ்நாடு அரசிடம் காவிரி உரிமை மீட்புக் குழு அளிக்க உள்ளது.
 
கதவணைகள், தடுப்பணைகள், படுக்கை அணைகள் தேவைப்படும் இடங்களை அறிந்து கொள்ளவும், தூர்வாரவேண்டிய ஆற்றுப் பகுதிகள், கால்வாய்கள், வாய்க்கால்கள், ஏரிகள் முதலியவற்றைக் கண்டறியவும், புதிதாக உருவாக்கப்பட வேண்டிய இணைப்புக் கால்வாய்கள் குறித்து முன்மொழியவும் கள ஆய்வு செய்து மக்களிடம் கருத்துக் கேட்பது, அனுபவம் உள்ளவர்களின் அறிவுரைகளைப் பெறுவது ஆகிய நோக்கங்களுக்காக காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் ஐந்து குழுக்கள் கல்லணையிலிருந்து 17.09.2018 திங்கள் காலை 9 மணிக்குப் புறப்படுகின்றன.
 
கல்லணையிலிருந்து மேற்கு நோக்கிக் கரூர் வரை தமிழக விவசாயிகள் சங்கத் திருச்சி மாவட்டத் தலைவர் திரு. ம.ப. சின்னத்துரை தலைமையிலான குழுவும், கல்லணையிலிருந்து காவிரிக் கரையோரங்களில் பூம்புகார் வரை காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் திரு. த. மணிமொழியன் தலைமையில் ஒரு குழுவும், கல்லணையிலிருந்து கொள்ளிடம் கரை கிராமங்களில் வல்லம் படுகை வரை விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் திரு குடந்தை அரசன் தலைமையில் ஒரு குழுவும், கல்லணையிலிருந்து வெண்ணாறு கரை ஓரங்களில், அதன் கிளை ஆறுகளில் முத்துப் பேட்டை வரை மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன் (மாவட்டத் தலைவர், தமிழர் தேசிய முன்னணி) தலைமையில் ஒரு குழுவும், கல்லணையிலிருந்து கல்லணைக் கால்வாயில் பேராவூரணி வரை தாளாண்மை உழவர் இயக்கத் தலைவர் பொறியாளர் கோ. திருநாவுக்கரசு தலைமையில் ஒரு குழுவும் என ஐந்து குழுக்கள் ஆய்வுகள் செய்து அறிக்கைகள் தயாரிக்க உள்ளன.
 
இந்த ஐந்து குழுக்களையும் வாழ்த்தி வழி அனுப்பிவைக்கும் நிகழ்ச்சியில் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அய்யானபுரம் சி. முருகேசன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் திரு. கி வெங்கட்ராமன், இந்திய சனநாயக்கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் ச. சிமியோன் சேவியர் ராசு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. நா வைகறை, தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் செகதீசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் ஜெயனுலாப்தீன், தமிழ்த் தேசியப் பாதுகாப்புக் கழகம் தலைவர் வழக்கறிஞர் த.சு. கார்த்திகேயன், மனிதநேய சனநாயக் கட்சி மாவட்ட செயலாளர் திரு. அகமது கபீர், தமிழ்த் தேச மக்கள் முன்னணி மாவட்டச் செயலாளர் திரு. அருண்சோரி, சமூக நீதிப் பேரவை திருச்சி தலைவர் வழக்கறிஞர் இரவிக்குமார் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
 
இக்குழுவினர் வரும்போது அந்தந்தப் பகுதிக் கோரிக்கைகளை மக்கள் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
 
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
 
பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

காவிரி ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் செயலற்றுப் போனது ஏன்? காவிரி உரிமை மீட்புக் குழு கேள்வி!

காவிரி ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் செயலற்றுப் போனது ஏன்? காவிரி உரிமை மீட்புக் குழு கேள்வி!
காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம் இன்று (12.07.2018) காலை தஞ்சையில் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமையில் நடந்தது. தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அய்யனாபுரம் சி. முருகேசன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், இந்திய சனநாயகக் கட்சி மாவட்டத் தலைவர் திரு. ச. சிமியோன் சேவியர்ராசு, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி உழவர் அமைப்புத் தலைவர் திரு. தங்கராசு, மீத்தேன் எதிர்ப்பு முன்னனித் தலைவர் பொறியாளர் கோ. திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் சங்கத் தலைவர் பொறியாளர் சு. பழனிராசன், தமிழ்த் தேசியப் பாதுகாப்புக் கழகத் தலைவர் வழக்கறிஞர் த.சு. கார்த்திகேயன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், தமிழ்த்தேச மக்கள் முன்னணி மாவட்டச் செயலாளர் தோழர் அருண்சோரி, தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் மாவட்டச் செயலாளர் திரு. கலைச்செல்வம், மனிதநேய சனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. அகமது கபீர், காவிரி உரிமை மீட்புக் குழு தோழர் தனசேகர், தமிழக விவசாய சங்க மாவட்டச் செயலாளர் திரு. செகதீசன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கலந்தாய்வுக்குப் பிறகு பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 02.07.2018 அன்று கூடிய காவிரி மேலாண்மை ஆணையமும், 05.07.2018 அன்று கூடிய காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் இதுவரை செயலற்ற அமைப்புகளாக உள்ளன. உச்ச நீதிமன்றம் இறுதி செய்து அளித்த தீர்ப்பின்படி கர்நாடகத்தின் 4 அணைகள், தமிழ்நாட்டின் 3 அணைகள், கேரளாவின் ஓர் அணை ஆகியவற்றில் தண்ணீரைத் திறந்து மூட ஆணையிடும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கும்தான் இருக்கிறது. ஆனால் கடந்த சூன் 1ஆம் நாள் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை அந்தப் பணியைச் செய்யவில்லை!

சாகுபடிக்குத் தண்ணீர் திறந்து விட வேண்டிய சூன், சூலை மாதங்களில் இந்த எட்டு அணைகளையும் ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் எட்டிக்கூட பார்க்கவில்லை. பெங்களூரில் தலைமையகம் வைத்து அங்கேயே தங்கிப் பணியாற்ற வேண்டிய காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவரும், அதன் முழுநேர உறுப்பினர்களும் பெங்களூரில் தங்கவில்லை.

இவ்வாண்டு கர்நாடக அணைகளில் சூன் மாதம் முதல் தண்ணீர் அதிகமாக இருக்கிறது. சூன், சூலை மாதங்களுக்குரிய தண்ணீரை உரிய கால வரையறைப்படி ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் திறந்து விட்டிருந்தால் தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி தொடங்கியிருக்க முடியும். 

கடந்த 05.07.2018 அன்று ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் நவீன்குமாரிடம், சூலை மாதத்திற்குத் திறந்துவிட வேண்டிய 31.25 ஆ.மி.க. தண்ணீரை கர்நாடகம் திறந்து விடுமா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, “பருவமழை நன்கு பெய்கிறது” என்று மட்டும் கூறிவிட்டு எழுந்து சென்று விட்டார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி அமர்த்த வேண்டிய முழு நேரப்பணி அதிகாரிகளை நியமிக்காமல் வேறொரு வேலையில் முழுநேரமாக உள்ளவர்களை கூடுதல் பணி செய்வோராக ஆணையத்திற்கும் ஒழுங்காற்றுக் குழுவிற்கும் இந்திய அரசு அமர்த்தியுள்ளது. நரேந்திர மோடி அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதற்காக இவ்விரு அமைப்புகளையும் முடக்கி வைத்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. 

மோடி அரசின் இந்த இனப்பாகுபாட்டு அணுகுமுறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துமாறு வலியுறுத்த வேண்டிய எடப்பாடி அரசு, காவிரி உரிமையை மீட்டு விட்டதாகப் போலி வெற்றி விழாக்களை நடத்தித் தமிழர்களை ஏமாற்றுகிறது; இனத்துரோகம் செய்கிறது. 

வழக்கத்தைவிட அதிகமாகப் பருவமழை பெய்து, கர்நாடக அணைகள் உடைந்து விடும் அபாயம் ஏற்பட்டதால் அந்த மிகை வெள்ள நீரைத் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட்டுள்ளது கர்நாடக அரசு. வெள்ள அபாய காலத்தில் அணைகளை நேரடியாகப் பார்வையிட்டு மிகை நீரைத் திறந்துவிட ஆணை இட வேண்டிய ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் கர்நாடகம் வராதது ஏன்? ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் கர்நாடக அரசிடம் தனது அதிகாரத்தைத் தாரை வார்த்து விட்டனவா?

கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் ஆவியாகப் போகும் நீரின் அளவு, நீர் இருப்பு, வருத்து, வெளியேற்றம் உள்ளிட்ட எல்லா புள்ளி விவரங்களையும் திரட்டித் தருமாறு, இந்த மாநிலங்களைக் கேட்டுக் கொண்டு 05.07.2018 அன்று கூட்டத்தில் படிவம் கொடுத்துள்ளது ஒழுங்காற்றுக் குழு. நிரப்பப்பட்ட படிவங்களை 16.07.2018க்குள் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. 

உண்மையில் இந்த விவரங்களை காவிரி ஒழுங்காற்றுக் குழுதான் தனது நேரடி ஆய்வில் திரட்ட வேண்டும். அதைச் செய்யாமல், ஒன்றுக்கொன்று முரண்பாடுள்ள மாநிலங்களை இந்த விவரங்களைத் தரச் சொன்னது சரியா? நீதியா? இதில் உண்மை விவரங்கள் வரும் என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது? 

அரசிதழில் வெளியிடப்பட்ட 1991 இடைக்காலத் தீர்ப்பு, 2007 இறுதித் தீர்ப்பு, அவ்வப்போது வந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் எதையும் இந்திய அரசு செயல்படுத்தியதில்லை. கர்நாடக அரசின் சட்டவிரோதச் செயல்களுக்கே தொடர்ந்து இந்திய ஆட்சியாளர்கள் துணை நின்றார்கள். 

இப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற ஆயம், 18.05.2018 அன்று வழங்கிய காவிரி இறுதித் தீர்ப்பையும் இந்திய அரசும், கர்நாடக அரசும் செயல்படுத்தப் போவதில்லை என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. 

மிகை வெள்ளம் வரும் இந்தப் பருவத்தில் செயல்படாத மேலாண்மை ஆணையமும், ஒழுங்காற்றுக் குழுவும் பருவமழை குறையும் காலத்தில் செயல்படுமா என்ற வினா எழுகிறது. தமிழ்நாடு அரசு இப்போதுகூட செயல்படவில்லை என்றால் எப்போது செயல்படும்?

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

காவிரி ஒழுங்காற்றுக் குழு சூலை மாதத் தண்ணீரைத் திறக்காதது ஏன்? தோழர் பெ. மணியரசன் கேள்வி!

காவிரி ஒழுங்காற்றுக் குழு சூலை மாதத் தண்ணீரைத் திறக்காதது ஏன்? காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி!
புதுதில்லியில் நேற்று (05.07.2018) கூடிய காவிரி ஒழுங்காற்றுக் குழு, சூலை மாதத்திற்குக் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய 31.25 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீரைத் திறந்து விட ஏற்பாடு எதுவும் செய்யாமல், புள்ளி விவரங்கள் தொடர்பாக நான்கு மாநிலங்களும் படிவம் நிரப்பச் சொல்லிவிட்டுக் கலைந்துள்ளது. இது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது!

கடந்த 02.07.2018 அன்று புதுதில்லியில் கூடிய காவிரி மேலாண்மை ஆணையம் சூலை மாதத்திற்குரிய 31.25 ஆ.மி.க. தண்ணீரைக் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டும் என்று அறிவித்ததே, அது என்னாயிற்று? வழக்கம்போல் இதுவும் ஏட்டுச் சுரைக்காய் தானா?

கர்நாடகத்தில் வழக்கத்தைவிட அதிகமாகப் பருவமழை பெய்து, அம்மாநில அணைகளில் சராசரியாக 90 விழுக்காட்டிற்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில்கூட, சூலை மாதத்திற்குரிய தண்ணீரைத் தமிழ்நாட்டிற்குத் திறக்காவிட்டால், காவிரி ஆணையம் – ஒழுங்காற்றுக் குழு என்பவையெல்லாம் பொம்மை அமைப்புகளா என்ற கேள்வி எழுகிறது.

நேற்று நடந்த ஒழுங்காற்றுக் குழுவில் நீர்த் தேக்கங்களில் தண்ணீர் ஆவியாகப் போவது பற்றியும், நீர் இருப்பு, வருகின்ற தண்ணீர், மழைப்பொழிவு போன்றவை பற்றியும் புள்ளி விவரங்களை நான்கு மாநிலங்களும் நிரப்பித் தருவதற்கான படிவங்களை கொடுத்ததுதான் அக்கூட்டத்தின் ஒரே பணியாகத் தெரிகிறது.

இப்படிவங்களை சூலை 16க்குள் நான்கு மாநிலங்களும் ஒழுங்காற்றுக் குழுவுக்குத் தர வேண்டும் என்றும், அதன் அடுத்த கூட்டம் சூலை 19இல் நடக்கும் என்றும் அதன் தலைவர் நவீன் குமார் தெரிவித்துள்ளார். அவரிடம் செய்தியாளர் ஒருவர் சூலை மாதத்திற்குரிய தண்ணீர் திறந்து விடுவது பற்றி என்ன ஆணை பிறப்பித்துள்ளீர்கள் எனக் கேட்டதற்கு, “பருவமழை நன்கு பெய்து கொண்டிருக்கிறது” என்று மட்டும் விடையாகக் கூறினார்.

சூலை மாதத்திற்குரிய தண்ணீரைக் கர்நாடகம் திறந்துவிட்டால் இவ்வாண்டு குறுவை சாகுபடி செய்ய முடியும்!

காவிரியை மீட்டு விட்டதாக “வெற்றி” விழா கொண்டாடி வரும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த ஆணைப்படி கூடக் கர்நாடகத்திலிருந்து தண்ணீர் பெற அக்கறை காட்டவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு மற்றும் அவ்வப்போது வெளியிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றைச் செயல்படுத்த மறுத்ததுபோல்தான் மூன்று நீதிபதிகள் ஆயம் வழங்கிய காவிரி இறுதித் தீர்ப்பையும், அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் 02.07.2018 அன்று வெளியிட்ட ஆணையையும் செயல்படுத்த இந்திய அரசு மறுக்கிறதா என்ற ஐயம் வலுவாக எழுகிறது.

நேற்று (06.07.2018) கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, கர்நாடக சட்டப்பேரவையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டில் அணை கட்டுவோம் என்று உறுதியளித்துள்ளார். அத்துடன், கன்னட அமைப்புகள் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட்டால், முழு அடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவோம் என அறிவித்துள்ளன. இவை அனைத்தும் கர்நாடகத்திற்கு இந்திய அரசு கொடுக்கும் துணிச்சலில்தான் உருவாகின்றன.

தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி உடனடியாக சூலை மாதத்திற்குரிய தண்ணீரைக் கர்நாடகத்திடமிருந்து பெற்றுத் தர வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

காவிரி மீட்பு வெற்றி விழாவா? வெற்று விழாவா? தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

காவிரி மீட்பு வெற்றி விழாவா? வெற்று விழாவா? காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
“காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட விளக்கப் பொதுக்கூட்டம்” என்ற தலைப்பில், இன்று (18.06.2018) மாலை மயிலாடுதுறையில், ஆளும் அ.தி.மு.க. மாபெரும் கூட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. அதில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.

கடந்த 09.06.2018 அன்றுதான், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இவ்வாண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையைத் திறக்க முடியாது – எனவே, நிலத்தடி நீர் பாசனத்தை ஊக்கப்படுத்த மின்சாரம் வழங்கப்படும் என்றும், மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய ஊக்கம் தரப்படும் என்றும் அறிவித்தார். ஒன்பது நாட்களுக்குள் காவிரியில் எந்த உரிமையை மீட்டார்? என்ன வெற்றி கண்டார்? எதற்காக “வெற்றி விழா”?

உச்ச நீதிமன்றம் 31.06.2018க்குள், காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்திட காலவரம்பிட்டு இறுதித் தீர்ப்பு வழங்கி விட்டது. ஆனால், இந்திய அரசு இதுவரை மேலாண்மை ஆணையம் அமைக்கவில்லை. 

நடுவண் நீர் வளத்துறையின் வேறொரு பிரிவில் தலைவராக உள்ள மசூத் உசேன் என்பவரை காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் பொறுப்புத் தலைவராக அமர்த்திவிட்டு, ஒதுங்கிக் கொண்டது மோடி அரசு! நடுவண் அரசு அமர்த்த வெண்டிய இரண்டு முழு நேர உறுப்பினர்கள் – இரண்டு பகுதி நேர உறுப்பினர்கள், மற்றும் ஒரு செயலாளர் ஆகியோரை மோடி அரசு அமர்த்தாமல், தமிழ்நாட்டுக்கு எதிராக இனப்பாகுபாட்டு அரசியல் நடத்தி வருகிறது! 

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்கள் தங்களுக்குரிய தலா ஒரு பிரதிநிதியை ஆணையத்திற்கு நியமித்துவிட்டார்கள். கர்நாடகம் மட்டும் தனது பிரதிநிதியை நியமிக்கவில்லை! 

கர்நாடகம் தனது பிரதிநிதியை நியமிக்காததால், காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கு தடை ஒன்றுமில்லை! காவிரி ஆணையத்தின் சட்டதிட்டப்படி அதன் செயலாளருக்கு மட்டும் ஓட்டுரிமை இல்லை! எஞ்சிய ஒன்பது பேர் பெரும்பான்மை அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். மேலாண்மை ஆணையத்தில் ஒன்று அல்லது இரண்டு மாநிலப் பிரதிநிதிகள் வராவிட்டாலும், தடை இல்லை!

குறைந்தபட்ச வருகையாக (கோரம்) மொத்தமுள்ள ஒன்பது பேரில் ஆறு பேர் வந்திருந்தால், கூட்டம் நடத்தலாம். எனவே, இப்பொழுது கர்நாடகப் பிரதிநிதி இல்லை என்பதால், மேலாண்மை ஆணையத்திற்கு நடுவண் அரசு அமர்த்த வேண்டிய உறுப்பினர்களை அமர்த்தாமல் இருப்பதும், ஆணையக் கூட்டத்தை நடத்தாமல் இருப்பதும் திட்டமிட்டு தமிழ்நாட்டைப் பழிவாங்குகிறது என்பதற்குரிய சான்றாகும்! 

நடுவண் அரசின் இந்தப் பழிவாங்கலுக்கு, துணை போகிறது எடப்பாடி அரசு! காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட நடுவண் அரசுக்கு எடப்பாடி அரசு அழுத்தம் கொடுத்து, இந்நேரம் அதில் வெற்றி பெற்று, சூன் மாதத்திற்குரிய 9 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகத்திலிருந்து திறந்து விடப்பட்டிருந்தால், ஆளுங்கட்சி “வெற்றி விழா” கொண்டாடலாம்! 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி உரிமை மீட்பில் தனது தோல்வியைத் தானே ஒத்துக் கொள்ளும் வகையில், குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என அறிவித்துவிட்டு, இப்பொழுது “காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விழா” நடத்துவது முற்றிலும் முரண்பாடாக உள்ளது! 

அடுத்து, மேட்டூர் அணையில் 90 அடி தண்ணீர் தேங்கினால்தான் குறுவைக்குத் திறக்க முடியும் என்று பழைய நிலையில் இன்றும் பேசுவது சரியல்ல! மேலாண்மை ஆணையம் சூன் மாதத்திற்கு 9 டி.எம்.சி.யும், சூலை மாதத்திற்கு 30 டி.எம்.சி.யும், அதைப்போல் ஆகத்து மாதத்திற்கு உரிய தண்ணீரையும் திறந்துவிட வேண்டும்! அதுதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு! எனவே, உடனடியாக மேலாண்மை ஆணையத்தை நடுவண் அரசு அமைக்கச் செய்து, மாதவாரியாக கர்நாடகத்திலிருந்து தண்ணீர் பெறும் உரிமையை செயல்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால், இன்னும் சில நாட்களில் குறுவைக்குத் தண்ணீர் திறக்க முடியும்! 

கர்நாடகத்தின் நான்கு அணைகளில் கபிணி, ஏமாவதி, ஏரங்கி அணைகள் நிரம்பிவிட்டன. கே.ஆர்.சாகரும் நிரம்பப் போகிறது. மாதவாரியாகத் திறந்துவிட, இதற்கு மேல் கர்நாடகத்திற்கு தண்ணீர் தேவை என்ன இருக்கிறது? தமிழ்நாடு முதலமைச்சர் இதைச் செயல்படுத்தி வைக்க, உருப்படியான நடவடிக்கை எடுத்தால், அவர் கேட்காமலே மக்கள் அவரைப் பாராட்டுவார்கள்! இதையெல்லாம் செய்யாமல், மேட்டூர் அணையைக் காயப்போட்டுவிட்டு, ஆற்று நீர்ப் பாசனக் குறுவையை கைவிடச் சொல்லிவிட்டு, போலி வெற்றி விழா கொண்டாடினால், அதை ஏற்றுக் கொள்ள இன்று மக்கள் தயாராக இல்லை என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். 

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

கர்நாடகத்தின் ஊதுகுழலாக தமிழ்நாடு முதலமைச்சர் பேசுகிறார்! தோழர் பெ. மணியரசன் கண்டனம்!

கர்நாடகத்தின் ஊதுகுழலாக தமிழ்நாடு முதலமைச்சர் பேசுகிறார்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (08.06.2018) முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், சூன் 12 ஆம் நாள் மேட்டூர் அணையைத் திறக்க இயலாது என்று கூறியபோது, அதற்கான காரணம், பருவமழை பொய்த்துப் போனதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
கர்நாடகத்தில் பருவமழை எத்தனை விழுக்காடு பொய்த்துப் போயுள்ளது, இப்பொழுது கர்நாடகத்தின் வெளியே தெரிந்த அணைகளிலும் காவிரி நீரைப் பதுக்கிக் கொள்ள கட்டப்பட்ட புதிய நீர்த் தேக்கங்களிலும் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்ற உண்மை விவரத்தை முதல்வர் வெளியிட்டிருக்க வேண்டும். அந்த நீர் இருப்பில், விகிதாச்சாரப் பகிர்வு (Prorate) அடிப்படையில் இவ்வளவு நீர் தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வேண்டும், ஆனால் கர்நாடகம் திறந்துவிட மறுத்து விட்டது என்ற விவரங்களைக் கூறி இருக்க வேண்டும்.
 
அவ்வாறு, உண்மை விவரங்களைக் கூறாமல் கர்நாடக அரசு கூறுகின்ற “பருவமழை பொய்த்து விட்டது” என்ற பொய்யை தமிழ்நாடு முதல்வரும் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. உண்மையில், கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இயல்பான மழை அளவைவிட இந்த ஆண்டு (2018) சனவரி 1-லிருந்து மே 31 வரையிலான மழை அளவு கூடுதலாக இருப்பதை கர்நாடக அரசின் புள்ளி விவரங்களே கூறுகின்றன.
 
எடுத்துக்காட்டாக, மைசூரு மாவட்டத்தில் வழக்கமான மழை அளவு 230 மி.மீ. ஆகும். ஆனால், இப்போது பெய்துள்ள மழை அளவு 309 மி.மீ. மாண்டியாவில் வழக்கமான மழை அளவு 184 மி.மீ. ஆகும். ஆனால், இப்போது பெய்துள்ள மழை அளவு 295 மி.மீ. சாம்ராஜநகரில் வழக்கமான மழை அளவு 230 மி.மீ. ஆகும். ஆனால், இப்போது பெய்துள்ள மழை அளவு 309 மி.மீ. இந்த உண்மையை எடுத்துக்கூறி பங்கு நீரைக் கேட்பதற்கு மாறாக, கர்நாடகாவை முந்திக் கொண்டு “மழை பொய்த்துவிட்டது” என்று தமிழ்நாடு முதலமைச்சர் பொய்யான தகவலைத் தர வேண்டிய தேவை என்ன?
 
சட்டவிரோத நடவடிக்கைகள் – இனவெறி நடவடிக்கைகள் ஆகியவற்றின் உறைவிடமாக விளங்கும் கர்நாடக அரசின் ஊது குழலாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையிலேயே பேசியிருக்கிறார். பருவமழை பொய்த்துவிட்டதால், சூன் மாதம் தண்ணீர் திறக்க முடியாது என்று கூறுயிருக்கிறார்.

குறுவைத் தொகுப்புத் திட்டத்திற்கு ரூபாய் 115 கோடி ஒதுக்கியுள்ளதாக முதலமைச்சர் அறிவித்திருப்பது, குறுவையை இவ்வாண்டும் தமிழ்நாடு அரசு கைகழுவிவிட்டது என்பதற்கான முன்னோட்டமே!
 
டெல்டாவில் ஐந்து மாவட்டங்களில் 5 இலட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வந்தது. அதையும் 3 இலட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் என்று குறைத்துச் சொல்கிறார் முதல்வர்! அந்த 3 இலட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய காவிரித் தண்ணீர் வேண்டுமல்லவா? நிலத்தடி நீர் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உப்பாகிவிட்டது. தஞ்சை மாவட்டத்தில், ஏற்கெனவே பல பகுதிகள் பாறையாக இருப்பதால் நிலத்தடி நீர் இல்லை. டெல்டாவில் நிலத்தடி நீர் சாகுபடி என்பது மிகக் குறைந்த பரப்பளவில்தான் நடக்கிறது.
 
காவிரி நீர் வராவிட்டாலும் குறைவில்லாமல் குறுவை சாகுபடி செய்ய முடியும் என்பதுபோல் முதல்வர் பேசியிருப்பது கர்நாடகத்தின் மற்றும் இந்திய அரசின் குரலாக உள்ளது.
 
குறுவைக்குரிய தண்ணீரைப் பெற எடப்பாடி பழனிச்சாமி அரசு என்ன முயற்சி எடுத்தது? நடுவண் அரசின் தலையீட்டைக் கோரியதா? அனைத்துக் கட்சிக் குழுவடன் தில்லிக்குச் சென்று, அமைச்சர்கள் சந்திக்க மறுத்தாலும் ஒரு போராட்ட உத்தியாக அதிகாரிகளைச் சந்தித்து வலுவாகக் குரல் கொடுத்திருக்கலாம். அதைக்கூட செய்யவில்லை!
 
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 2018 மே 31 ஆம் நாளுக்குள் காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்திருக்க வேண்டும். அதை அமைக்காமல் சாக்குப்போக்கு சொல்லி நரேந்திர மோடி அரசு வேண்டுமென்றே காலம் கடத்துகிறது.
 
மேலாண்மை ஆணையத்தின் மொத்த அதிகாரிகள், செயலாளர் உள்ளிட்டு 10 பேர். அதில் ஆறு பேரை இந்திய அரசு நியமனம் செய்ய வேண்டும். நீர் வளத்துறையில் வேறொரு பிரிவில் முழுநேரத் தலைமை அதிகாரியாக இருக்கும் மசூத் உசேனை மட்டும் இடைக்காலத் தலைவராக காவிரி ஆணையத்திற்கு நியமித்திருப்பது கண்துடைப்பு நடவடிக்கை! இதுபற்றி ஒரு கருத்தும் தமிழ்நாடு முதல்வர்க்கு இல்லையா? கருத்து இருந்தால் அதை சட்டப்பேரவையில் வெளியிட்டிருக்கலாம் அல்லவா?
 
தமிழ்நாடு முதலமைச்சர் தில்லி மற்றும் பெங்களூரு ஊதுகுழலாக இருக்கிறார். தமிழ்நாட்டு மக்களை வஞ்சிகிறார். கர்நாடக மற்றும் நடுவண் அரசுகளை எதிர்த்துப் போராடுவதுடன் காவிரி உரிமையை மீட்கக் கோரி தமிழ்நாடு அரசையும் எதிர்த்துப் போராட வேண்டிய தேவை உள்ளது.
 
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
 
பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

காவிரித் தீர்ப்பு மூன்றாவது முறையாக அரசிதழில்! இப்போதும் ஆணையம் அமைக்கவில்லை. தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

காவிரித் தீர்ப்பு மூன்றாவது முறையாக அரசிதழில்! இப்போதும் ஆணையம் அமைக்கவில்லை. காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
உச்ச நீதிமன்றம் 18.05.2018 அன்று அளித்த காவிரித் தீர்ப்பை நேற்று (01.06.2018), இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டுவிட்டு, காவிரி ஆணையம் அமைக்காமல் ஒதுங்கிக் கொண்டிருப்பது கடந்த காலங்களில், அது ஏமாற்றியதுபோல் இப்போதும் செய்கிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
 
காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை உச்ச நீதிமன்ற ஆணையின்படி 11.12.1991 அன்று இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. ஆனால், அதை செயல்படுத்தவில்லை!
 
அடுத்து, காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றக் கட்டளையின்படி 19.02.2013 அன்று இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. ஆனால், அத்தீர்ப்பில் கண்டபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ஒதுங்கிக் கொண்டது. அதனால் அத்தீர்ப்பும் செயலுக்கு வரவே இல்லை!
 
இப்பொழுது மூன்றாவது முறையாக, செயல்படுத்தக் கூடிய காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்காமல், அரசிதழில் வெளியிட்டுவிட்டு இந்திய அரசு ஒதுங்கிக் கொண்டுள்ளது. விரைவில் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் என்று சொல்கிறார்கள்.
 
உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை 16.02.2018 அன்று அளித்தது. அதைச் செயல்படுத்தாமல், சாக்குப்போக்கு சொல்லி இதுவரை இழுத்தடித்து வருவது இந்திய அரசுதான்! இப்பொழுதும் செயல்படுத்தும் மேலாண்மை ஆணையம் அமைக்காமல், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை புறக்கணிக்கவில்லை என்று காட்டிக் கொள்வதற்காக ஒப்புக்கு அரசிதழில் வெளியிட்டு ஒதுங்கிக் கொண்டிருக்கிறது.
 
அத்துடன், நடுவண் நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங்கை காவிரி மேலாண்மை வாரியத் தற்காலிகத் தலைவராக அமர்த்தியிருப்பதாக செய்திகள் வருகின்றன. யு.பி. சிங்கை காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்காலிகத் தலைவராக அமர்த்துவது என்பது, காவிரி மேலாண்மை ஆணையம் நடுவண் நீர்வளத்துறையின் ஒரு துணைக் குழுதான் (Sub Committee) என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
 
காவிரித் தீர்ப்பாய முடிவுகள் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவை தனித்துவமான காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டுமென்றும், அதன் தலைவர் முழுநேரப் பொறுப்பில் செயல்படுவார் என்றும் கூறியுள்ளன. நடுவண் நீர்வளத்துறைச் செயலாளரின் கூடுதல் பொறுப்பாக காவிரி ஆணையத் தலைவர் பொறுப்பை வழங்குவது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சீர்குலைக்கும் முயற்சியாகும்!
 
யு.பி. சிங் நடுநிலைத் தவறியவர் என்பதை, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்ததிலிருந்து அவர் செயல்பட்ட விதம் வெளிப்படுத்தியது.
 
எனவே, அரசிதழில் வெளியிடப்பட்டது என்ற அளவில் “வெற்றி!”க் களிப்பு காட்டிக் கொள்வது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாக அமையும்! இந்திய அரசு இன்னும் காவிரியில் தமிழ்நாட்டின் சட்டப்படியான உரிமைகளை செயல்படுத்த முன்வரவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நீதியை நிலைநாட்ட போராட வேண்டியத் தேவை உள்ளது என்பதை காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தெரித்துக் கொள்கிறேன்.
 
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

காவிரி ஆணையத்திற்கு தற்காலிகத் தலைவர் யு.பி. சிங்: தமிழ்நாட்டிற்கு எதிரான மோடி அரசின் வஞ்சகம் தொடர்கிறது! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

காவிரி ஆணையத்திற்கு தற்காலிகத் தலைவர் யு.பி. சிங்: தமிழ்நாட்டிற்கு எதிரான மோடி அரசின் வஞ்சகம் தொடர்கிறது! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நடுவண் நீர்வளத்துறையின் செயலாளர் யு.பி. சிங்கை தற்காலிகத் தலைவராக நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அமர்த்தியிருக்கிறார் என்று செய்தி வந்துள்ளது. யு.பி. சிங் நான்கு மாநிலங்களுக்கும் உரிய பிரதிநிதிகளுடையப் பெயரைத் தருமாறு அந்தந்த மாநில அரசுக்குக் கடிதம் அனுப்பப்போவதாகக் கூறப்படுகிறது. இந்த ஏற்பாடு என்பது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறிய செயலாகும்!
 
காவிரி மேலாண்மை ஆணையத்திற்குத் தற்காலிகத் தலைவர் நியமித்துக் கொள்வதற்கான அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் இந்திய அரசுக்கு வழங்கவில்லை. தனி அதிகாரத்துடன் கூடிய முழுநேரத் தலைவர் ஒருவரை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அமர்த்த வேண்டுமென்று கூறியதுடன், அவருக்குரிய தகுதிகளையும் உச்ச நீதிமன்றம் வரையறுத்துள்ளது.
 
இப்பொழுது யு.பி. சிங் நடுவண் நீர்வளத்துறையின் முழுநேர அதிகாரியாவார். ஒரு கூடுதல் பொறுப்பாக காவிரி மேலாண்மை வாரியத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணி நியமனம், காவிரி மேலாண்மை ஆணையத்தை தன்னதிகாரம் இல்லாத நடுவண் நீர்வளத் துறையின் ஒரு துணைக் குழுவாக (Sub committee) ஆக்குவதாகும்!
 
நடுவண் நீர்வளத்துறையின் கட்டளைகளை ஏற்கெனவே பல தடவை கர்நாடக அரசு செயல்படுத்த மறுத்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே செயல்படுத்த மறுக்கும் கர்நாடகம், நடுவண் நீர் வளத்துறைத் துணைக் குழுவின் ஆணையையா செயல்படுத்தும்?
 
அடுத்து, விரைவில் நிரந்தரத் தலைவர் அமர்த்தப்படுவார் என்று நீர்வளத்துறை சொல்கிறது. விரைவில் என்றால் எத்தனை நாளில்? சில நாட்களில் நிரந்தரத் தலைவர் அமர்த்தப்படுவார் எனில், அதற்குள் தற்காலிகத் தலைவர் ஏன் தேவைப்பட்டார்?
 
உச்ச நீதிமன்றம் 16.02.2018 அன்று வழங்கிய தீர்ப்பில், ஆறு வார காலத்திற்குள் காவிரி செயல் திட்டத்தை உருவாக்கி அறிவிக்குமாறு நடுவண் அரசுக்குக் கட்டளையிட்டிருந்தது. அதைச் செயல்படுத்தாமல், திட்டமிட்டு காலங்கடத்தி, கடைசி நேரத்தில் 29.03.2018 அன்று அந்த செயல் திட்டம் பற்றியும், மற்ற விவரங்கள் பற்றியும் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்கப் போவதாகவும் அதற்குக் கால அவகாசம் 3 மாதங்கள் வேண்டுமென்றும் கோரியதுதான், நிதின் கட்கரி தலைமையிலுள்ள நடுவண் நீர்வளத்துறை! அதன்பிறகும், காலம் தள்ளித்தள்ளி மே 18 வரை இழுத்தடித்தவர் நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங்!
 
இவர் நடுநிலை தவறியவர் என்பது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இவர் அணுகிய விதத்திலிருந்து தெரிய வந்தது. எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டிய கட்டாயம் இருந்தும், அதையும் அதிகாரமில்லாமல் அமைத்து தமிழ்நாட்டிற்கு எதிராக இனப்பாகுபாடு காட்டும் அநீதியை மோடி அரசு தொடர்கிறது என்பதற்கான அடையாளம்தான், நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங்கை காவிரி மேலாண்மை ஆணையத்திற்குத் தற்காலிகத் தலைவராக அமர்த்தியிருப்பது!
 
சட்டக்கடமையை நிறைவேற்ற மறுத்து தமிழ்நாட்டிற்கு எதிராக பாகுபாடு காட்டும் மோடி அரசின் வஞ்சகத்தைக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
 
தமிழ்நாடு அரசு இந்தத் தற்காலிக பணி அமர்த்தத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
 
மோடி அரசு யு.பி. சிங் நியமனத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, தகுதியும் தன்னதிகாரமும் உள்ள முழுநேரத் தலைவரை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அமர்த்த வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் தமிழர்களை வஞ்சிக்கும் தந்திரத்தில், மோடி அரசு இறங்கினால் நீதி கேட்டு ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் வீதிக்கு வந்து போராட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.
 
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
 
பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
 
 

கதிராமங்கலம் போராட்டம் - புதிய வழக்கு!

கதிராமங்கலம் போராட்டம் - புதிய வழக்கு!
கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராகக் கடந்த 19.05.2018 அன்று நடைபெற்ற 365ஆவது நாள் போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய தலைவர்கள் மீது, தமிழகக் காவல்துறையினர் புதிதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழர் தேசிய முன்னணித் தலைவர் திரு. பழ. நெடுமாறன், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன் உள்ளிட்ட 26 பேர் மீது பந்தநல்லூர் காவல்நிலையத்தில், அனுமதியின்றி கூட்டம் நடத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக, நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்கள் பலரை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். பலரைத் தேடி வருகின்றனர். 

ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக தன்னெழுச்சியுடன் போராடி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து அறவழியில் கூட்டம் நடத்திய தலைவர்கள் மீதும், களப்போராளிகள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள செயல், வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! 

தமிழ்நாடு அரசு! அறப்போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது அடக்குமுறையை ஏவாதே! 

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery


“காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள்” தோழர் பெ. மணியரசன்.

“காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள்” தோழர் பெ. மணியரசன் - காவிரி உரிமை மீட்புக்குழு, ஒருங்கிணைப்பாளர்.
உச்ச நீதிமன்றம் 18.5.2018 அன்று இறுதி செய்த காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருபெரும் ஊனங்கள் இருக்கின்றன.

ஒன்று, கர்நாடக அணைகளின் மதகுகளைத் திறந்து மூடும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மட்டுமே உண்டு என்று நேரடியாகக் கூறப்படாதது.

கர்நாடக அணைகளின் மதகுகளைத் திறந்து விடும்படி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகப் பாசனத்துறையினர்க்கு ஆணை இட்டுத்தான் செயல் படுத்த முடியும் என்ற நிலை இருந்தால், கர்நாடக அரசு அவ்வாறு தன் அதிகாரிகளும் ஊழியர்களுக்கும் திறக்கக் கூடாது என்று ஆணை இட்டால், நிலைமை என்னவாகும்?

ஏனெனில் ஏற்கெனவே பலமுறை தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடும்படி உச்சநீதிமன்றம் ஆணை இட்டும் அதைச் செயல்படுத்த முடியாது என்று வெளிப்படையாகக் கர்நாடக அரசு மறுத்து வந்துள்ளது.
கடந்த 2016 இல் 10,000 கன அடி, 6,000 கன அடி, 2000 கன அடி தண்ணீர் திறந்து விடுமாறு பலமுறை உச்சநீதிமன்றத் தீபக் மிஸ்ரா ஆயம் கட்டளை இட்டும் தண்ணீர் திறந்து விட மறுத்துவிட்டது கர்நாடக அரசு. அது மட்டுமின்றி, கர்நாடக சட்டப்பேரவையைக் கூட்டி தண்ணீர் திறந்து விட முடியாது என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது கர்நாடக அரசு.

உச்சநீதிமன்றக் கட்டளையை மீறியதற்காக கர்நாடக அரசின் மீது உச்சநீதி மன்றமோ அல்லது இந்திய அரசோ ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாடு பாதிக்கப்பட்டதுதான் மிச்சம்!

இரண்டாவது ஊனம், ஏதாவதொரு மாநிலம் மாற்றுக் கருத்து கூறினால் காவிரி மேலாண்மை ஆணையத்தில் வாக்களிக்கும் உரிமையுள்ள ஒன்பது உறுப்பினர்களின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துப்படி முடிவெடுக்க வேண்டும் என்று இருப்பதாகும். ஆணையத்தின் தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் – ஆக மொத்தம் ஐந்து பேர் நடுவண் அரசின் அதிகாரிகள்; நடுவண் அரசால் அமர்த்தப்படுவோர் ஆவர். தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கும் தலா ஒருவர் வீதம் நான்கு பேர்.

இதில் கர்நாடக உறுப்பினர் மாற்றுக் கருத்து தெரிவித்து, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடமறுத்தால், நடுவண் அரசின் ஐந்து உறுப்பினர்கள் நடுவண் அரசின் வழிகாட்டுதல் படி நடந்து கொள்வார்கள். காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு 1991 – இல் வழங்கப்பட்டதிலிருந்து, இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு செயல்படுத்துமாறு 2013 – இல் உச்சநீதிமன்றம் ஆணையிட்டதிலிருந்து இதுவரை எந்தத் தீர்ப்பையும் செயல்படுத்த மறுத்து வருகிறது இந்திய அரசு. காங்கிரசு அரசாக இருந்தாலும் பாசக அரசாக இருந்தாலும் நடுவண் அரசின் நிலைபாடு எப்போதும் தமிழ்நாட்டிற்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதுதான். இனி அந்தப் பாகுபாடு தொடராது என்பதற்கு என்ன உறுதி? கர்நாடக உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு சாதகமாக இந்திய அரசு அதிகாரிகள் நடந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.

இந்த இருபெரும் ஊனங்கள் புதிய காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருக்கின்றன. இவற்றைச் சரி செய்வது எப்படி? இந்த ஊனங்களால் பாதிப்பு வராது என்று நேரடியாக தெளிவாக உறுதி கூற நரேந்திரமோடி அரசு தயாரா? உச்சநீதிமன்றம் அப்போது தலையிட்டு சரிசெய்யுமா? கடந்த கால அனுபவங்கள், “இல்லை” என்ற விடையைத்தான் தருகின்றன.

இவற்றிக்கப்பால், 16.2.2018 அன்று தீபக் மிஸ்ரா ஆயம் அறிவித்த காவிரித் தீர்ப்பு, இந்திய அரசமைப்புச் சட்டவிதிகளுக்கு முரணானது. 1956 ஆம் ஆண்டின் தண்ணீர்த் தகராறு சட்டத்திற்கு எதிரானது. அத்துடன் அத்தீர்ப்பு மரபுவழித் தண்ணீர் உரிமை (Riparian Right) என்ற அடிப்படை உரிமையைத் தகர்த்து விட்டது. தேவைக் கேற்ற தண்ணீர் பகிர்வு (Equitable Share) கோட்பாட்டைத் திணித்துள்ளது. வேளாண்மைக்கு நிகராகத் தொழில்துறைக்கு தண்ணீர் அளிக்கும் கோட்பாட்டைப் புகுத்தியுள்ளது.

இந்த அநியாயங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரை மிக மோசமாகக் குறைத்துவிட்டது உச்சநீதிமன்றம்.

எனவே இதைச் சரி செய்ய காவிரி வழக்கிற்கு உச்சநீதிமன்றத்தில் ஏழு நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்பு ஆயம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான வழக்கைத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுக்க வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முல்லைப்பெரியாறு வழக்கு, உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகளால் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கும் நிலையில் அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றப்பட்ட முன் எடுத்துக்காட்டையும் சுட்டிக் காட்டி வருகிறது.

மேற்கண்ட எச்சரிக்கைகளுடன் - விழிப்புணர்வுடன் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது பற்றி தமிழர்கள் கவனமாக இருக்க வேண்டும்.


செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

அதிகாரமற்ற பொம்மைச் செயல்திட்டம் அளித்து தமிழினத்தை வஞ்சிப்பதா? புதுச்சேரியில் இந்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட்ட காவிரி உரிமை மீட்புக் குழு தோழர்கள் கைது!

அதிகாரமற்ற பொம்மைச் செயல்திட்டம் அளித்து தமிழினத்தை வஞ்சிப்பதா? புதுச்சேரியில் இந்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட்ட காவிரி உரிமை மீட்புக் குழு தோழர்கள் கைது! 
காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் உள்ளது போல் தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், கர்நாடக அணைகளில் தண்ணீர் திறந்துவிடும் அதிகாரமற்ற பொம்மைச் செயல்திட்டத்தை தந்திரமாகத் தாக்கல் செய்து, தமிழினத்தை மீண்டும் வஞ்சிக்க முயன்றுள்ளது இந்திய அரசு! இந்திய அரசின் இந்த வஞ்சகச் செயலைக் கண்டித்து, இன்று (17.05.2018) புதுச்சேரியில், இந்திய அரசு ஆவணக் காப்பகம் முற்றுகையிடப்பட்டது.
புதுச்சேரி ஜீவானந்தபுரத்தில் அமைந்துள்ள இந்திய அரசு ஆவணக் காப்பகத்தை முற்றுகையிடும் இப்போராட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழு புதுச்சேரி ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலாளருமான தோழர் இரா. வேல்சாமி தலைமை தாங்கினார்.
 


உலகத் தமிழ்க் கழகப் புதுச்சேரி அமைப்பாளர் ஐயா கோ. தமிழுலகன், நாம் தமிழர் கட்சி தொகுதிச் செயலாளர் திரு. வெ. கார்த்திகேயன், நா.த.க. தொழிலாளர் நலச்சங்கச் செயலாளர் தோழர் இரமேசு, இளைஞர் பாசறை தோழர் மணிபாரதி, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் மணி, ஆனந்தன், சத்தியமூர்த்தி உள்ளிட்ட 25 தோழர்கள் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட தோழர்கள் தற்போது, தன்வந்திரி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். 

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

காவிரி செயல் திட்டத்தின் உயிர் தன்னதிகாரம் தமிழ்நாடு அதை வலியுறுத்த வேண்டும்! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

காவிரி செயல் திட்டத்தின் உயிர் தன்னதிகாரம் தமிழ்நாடு அதை வலியுறுத்த வேண்டும்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
காவிரி வழக்கில் இன்று (16.05.2018) உச்ச நீதிமன்றத்தில் மிகவும் அடிப்படையான – உயிரான திருத்தம் ஒன்றை தமிழ்நாடு அரசு முன்வைக்காமல் போனது பெருந்துயரம் ஆகும்! அதாவது அமைக்கப்படவுள்ள “காவிரி செயல்திட்டம்” – தற்சார்பான தன்னதிகாரம் (Independent) கொண்ட அமைப்பாக இருக்க வேண்டும். அதற்கான திருத்தத்தை உச்ச நீதிமன்றம் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தியிருக்க வேண்டும். செயல்திட்டத்தின் அதிகாரம் தெளிவில்லாமல் இருக்கிறது என்று கூறியதோடு தமிழ்நாடு அரசு நிறுத்தியிருக்கக் கூடாது!

காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பு பாகம் – 5இல் – 15ஆம் பத்தியில் (Para) செயல்திட்டம் பற்றி கூறும்போது, “தற்சார்பு அதிகாரம்” (Independent) கொண்டதாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதற்குமுன் 14ஆம் பத்தியில் “செயல்திட்டம் போதுமான அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும்; அவ்வாறான அதிகாரம் அதற்கு இல்லையென்றால் தீர்ப்பாயத்தின் முடிவுகள் ஒரு துண்டுத்தாளில் (Piece of Paper) மட்டுமே இருக்கும் என்று அஞ்சுகிறோம்” என்று தீர்ப்பாய நீதிபதிகள் மூவரும் கூறியுள்ளனர்.

இந்திய அரசின் நீர்வளத்துறை தயாரித்த செயல் திட்ட வரைவில் வேண்டுமென்றே தந்திரமாக “தற்சார்பு அதிகாரம் (Independent)” என்ற சொல்லைத் தவிர்த்துவிட்டது; தீர்ப்பாயத்தில் உள்ள மற்ற சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறது.

அப்படிப்பட்ட இந்த செயல்திட்டத்திற்குத்தான் “காவிரி மேலாண்மை வாரியம்” என்று பெயர் மட்டும் வைக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு கோரியிருக்கிறது. அக்கோரிக்கையை உச்ச நீதிமன்றமும், இந்திய அரசும் ஏற்றுக் கொண்டு விட்டது.

இந்த “காவிரி மேலாண்மை வாரியத்தின்” கட்டளையை ஏதாவதொரு மாநிலம் செயல்படுத்த மறுத்தால், அதைச் செயல்படுத்திக் கொள்வதற்கு தேவையான உதவியை அது நடுவண் அரசிடம் கோரலாம் என்று தீர்ப்பாயத் தீர்ப்பில் உள்ளது. இதை “செயல்படுத்த மறுப்பது பற்றி நடுவண் அரசிடம் மேலாண்மை வாரியம் கூறி உதவி கோரலாம்; அதில் நடுவண் அரசு எடுக்கும் முடிவே இறுதியானது” என்று வரைவுச் செயல்திட்டத்தில் நடுவண் அரசு தந்திரமாகச் சேர்த்துள்ளது.

“மேலாண்மை வாரியத்தின்” கட்டளையை ஏற்க ஒரு மாநிலம் மறுத்தால், அதைச் செயல்படுத்தி வைக்கத் தேவையான காவல்துறை மற்றும் இராணுவ உதவிகளைப் போன்ற உதவிகளை இந்திய அரசிடம் கோரலாம் என்ற பொருளில்தான் மேலாண்மை வாரியம் நடுவண் அரசின் உதவியைக் கோரலாம் என்று தீர்ப்பாயம் கூறியுள்ளது.

இந்திய அரசின் முடிவே இறுதி முடிவு என்று புதிதாகச் சேர்க்கப்பட்ட பத்தியை நீக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு கோரியதும், அத்திருத்தத்தை தீபக் மிஸ்ரா ஆயம் ஏற்றுக் கொண்டதும் வரவேற்கத்தக்கது!

அடுத்து, என்னென்ன பயிர் செய்ய வேண்டும் என்பதையும், சொட்டு நீர்ப் பாசனம் உட்பட என்னென்ன பாசன முறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பதையும் மேலாண்மை வாரியம் முடிவு செய்யும் என்று நடுவண் நீர்வளத் துறை தயாரித்த செயல் திட்டத்தில் கூறப்பட்டிருப்பதையும் நீக்குமாறு தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கோர வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதி இல்லாமல் புதிய அணைகள் யாரும் கட்டக் கூடாது என்பதை செயல்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கட்டளையிடுமாறு உச்ச நீதிமன்றத்தைத் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.

கர்நாடக அரசு திருந்தவே இல்லை என்பதற்கான சான்றாகத்தான் “மாதவாரியாகத் தண்ணீர்திறந்து விடக் கூறும் பகுதியை நீக்க வேண்டும்” என்றும், சூலை மாதத்திற்கு விசாரணையை மாற்ற வேண்டும் என்றும் அடாவடிக் கோரிக்கைகளை உச்ச நீதிமன்றத்தில் வைத்துள்ளது. உச்ச நீதிமன்றம் கர்நாடகத்தின் முறையற்ற கோரிக்கைகளை ஏற்கக் கூடாது!

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

இந்திய அரசு தாக்கல் செய்துள்ள “பொம்மை” - செயல் திட்ட வரைவு - 2018

இந்திய அரசின் நீர்வளத்துறை 14.05.2018 அன்று, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள காவிரி வரைவுச் செயல்திட்டம் - தன்னாட்சி அதிகாரமற்ற ஒரு பொம்மை பொறியமைவாகவே உள்ளது. அதன் முழு வடிவம் இதுதான்! 

















பொம்மைச் செயல்திட்டம் கொடுத்திருக்கிறது மோடி அரசு! பெ. மணியரசன் அறிக்கை!

பொம்மைச் செயல்திட்டம் கொடுத்திருக்கிறது மோடி அரசு! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!
இந்திய அரசின் நீர்வளத்துறை இன்று (14.05.2018) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள காவிரி வரைவுச் செயல்திட்டம் - தன்னாட்சி அதிகாரமற்ற ஒரு பொம்மை பொறியமைவாகவே உள்ளது. 

“காவிரி தண்ணீர் மேலாண்மை செயல்திட்டம் – 2018” (Cauvery Water Management Scheme 2018) என்ற பெயரில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த வரைவுத் திட்டத்தின் பிரிவு – 9, செயல்திட்டத்தின் (ஆணையத்தின்) அதிகாரங்கள், செயல்பாடுகள், கடமைகள் பற்றி குறிப்பிடுகின்றன. அதில், உட்பிரிவு (iv) பின்வருமாறு கூறுகிறது : 

“கேரளத்தின் பாணாசுர சாகர், கர்நாடகத்தின் ஏமாவதி, ஏரங்கி, கபினி, கிருஷ்ணராஜசாகர், தமிழ்நாட்டின் கீழ்பவானி, அமராவதி மற்றும் மேட்டூர் ஆகியவற்றிலிருந்து ஒரு மாதத்திற்கு 10 நாள் கணக்கில், அந்தந்த மாநிலம் தண்ணீர் திறந்துவிடுவதற்கு ஒட்டுமொத்தமான ஒரு வழிகாட்டுதலை இந்த ஆணையம் கொடுக்கும்”.

இந்த ஆணையம் தன் பொறுப்பில் தண்ணீர் திறந்துவிடாது என்பதை இப்பிரிவு கூறுகிறது. தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசுதான் இந்த ஆணையம் வந்தபிறகும் திறந்துவிடுமாம்!

ஒரு மேற்பார்வைப் பணியைத்தான் இந்த ஆணையம் செய்யும் என்பதை ஏற்கெனவே, இதற்கு  முன் உள்ள பிரிவு (9)(ii) உறுதி செய்கிறது. 

உச்ச நீதிமன்றத்தின் கட்டளையையே துச்சமாகத் தூக்கியெறிந்துவரும் கர்நாடகம், புதிதாக அமைக்கப்படும் இந்த ஆணையத்தின் “வழிகாட்டுதலையா” செயல்படுத்தும்? கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால், கேட்பவருக்கு மதி எங்கே என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது! 

அடுத்து, பின்வரும் பிரிவு (9)(xiv)இல், ஏதாவதொரு மாநிலம் இந்த ஆணையத்தின் வழிகாட்டுதலை செயல்படுத்தவில்லை என்றால், அந்த ஆணையம் நடுவண் அரசிடம் முறையிடும் என்றும் அதில் நடுவண் அரசு எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் கூறுகிறது. 

1991 – சூன் 25ஆம் நாள், காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பிலிருந்து இன்று வரை காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளையும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் இந்திய அரசு தொடர்ந்து செயல்படுத்த மறுத்து வருகிறது என்பதை, தமிழ்நாடு மட்டுமல்ல – உலகமே அறியும்! புதிய ஆணையத்தின் வழிகாட்டுதலை கர்நாடகம் ஏற்க மறுத்தால், இந்திய அரசிடம் புகார் செய்து தீர்வு காணலாம் என்பது போகாத ஊருக்கு வழி சொல்வதாகும்! 

இந்த வரைவுச் செயல்திட்டம் – நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்துவது, கர்நாடகத்திற்கும் தமிழ்நாட்டிற்குமான தண்ணீர்ப் பகிர்வு, அதன்படி கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீர்த் திறந்துவிடுதல் என்ற வரம்புகளுக்கு அப்பால் சென்று, என்னென்ன பயிர் செய்யலாம், என்னென்ன பயிர் செய்யக்கூடாது, சொட்டு நீர்ப் பாசனம், தொழிற்சாலைகளுக்கு எவ்வளவு தண்ணீர் தருவது, மற்ற மற்ற காரியங்களுக்கு எவ்வளவு தண்ணீர் தருவது உள்ளிட்ட எல்லா செய்திகளிலும் தலையிடும் என்றும் இதிலும் இந்திய அரசின் தலையீடு இருக்குமென்றும் கூறுகிறது. 

அடுத்து, பிரிவு (9)(xviii)இல், இந்திய அரசு அவ்வப்போது வெளியிடும் எல்லா வகை வழிகாட்டுதல்களையும் இந்த ஆணையம் செயல்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதைவிடக் கொடுமையாக இந்த ஆணையம், தனது மேற்கண்ட பணிகளை தனியாருக்கு குத்தகைக்கு விடலாம் என்று வரைவுச் செயல்திட்டத்தின் பிரிவு – 12 கூறுகிறது. 

இவற்றையெல்லாம் பார்க்கும்போது, குரங்கு ஆப்பம் பிரித்த கதைதான் நினைவுக்கு வருகிறது! 

காவிரித் தண்ணீரை இந்திய அரசின் தேசிய நீர்க் கொள்கையின்படி தனியாருக்குக் குத்தகைக்குக் கொடுத்து, சாகுபடிக்கும் குடிநீருக்கும் மீட்டர் வைத்து விற்பனை செய்யும் திட்டத்தை செயல்படுத்தவும் இந்த ஆணையத்திற்கு இந்திய அரசு அதிகாரம் வழங்கியிருக்கிறது. 

கடந்த 08.05.2018 அன்று உச்ச நீதிமன்றத்தில், வரைவுச் செயல்திட்டத்தைத் தாக்கல் செய்ய முடியாததற்குக் காரணம் - நடுவண் அமைச்சரவையின் ஒப்புதல் பெற முடியாததுதான் என்றும், தலைமை அமைச்சரும் மற்ற அமைச்சர்களும் கர்நாடகத் தேர்தல் பரப்புரைக்குச் சென்று விட்டனர் என்றும் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் காரணம் கூறினார்.  

ஆனால், இன்று (14.05.2018) தாக்கல் செய்யப்பட்டுள்ள வரைவுச் செயல்திட்டம், நடுவண் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறவில்லை. இதுபற்றி, உச்ச நீதிமன்ற வளாகத்திலிருந்த தமிழ்நாடு சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்திடம் கேட்டபோது, நடுவண் நீர்வளத்துறையின் வரைவுச் செயல்திட்டத்திற்கு நடுவண் அமைச்சரவையின் ஒப்புதல் தேவையில்லை, உச்ச நீதிமன்றத்தில் அதை நேரடியாகத் தாக்கல் செய்ய அவர்களுக்கு அதிகாரமிருக்கிறது என்று கூறினார். கடந்த 08.05.2018 அன்று வரைவுச் செயல்திட்டத்தைத் தாக்கல் செய்ய முடியாததற்குக் காரணம் அமைச்சரவை ஒப்புதல் இல்லாததுதான் என்று இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியது முழுப்பொய் என்பதற்கு தமிழ்நாடு சட்ட அமைச்சரின் கூற்றே சாட்சியம்! இதே சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், 08.05.2018 அன்று நடுவண் அமைச்சரவை ஒப்புதல் தேவையில்லை என்று கூறாதது ஏன்?

அதே சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், இன்று தாக்கல் செய்யப்பட்ட - கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடும் அதிகாரமில்லாத செயல்திட்டத்தை வரவேற்று தமிழ்நாடு அரசுக்கு வெற்றி என்று கூறினார். அத்துடன் இந்திய அரசுக்கு நன்றி கூறினார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாட்டிற்கு நீதி கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார். 

இவையெல்லாம், ஏற்கெனவே பா.ச.க. தலைமையினால் எழுதிக் கொடுக்கப்பட்ட வாசகங்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது. பா.ச.க.வின் ஊதுகுழல்தான் அண்ணா தி.மு.க. ஆட்சி என்று  அ.இ.அ.தி.மு.க.வின் தொண்டர்கள் உள்பட அனைத்துத் தமிழர்களும் புரிந்து கொள்வார்கள்! 

பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்குப் பாலூட்டும் தாயாக விளங்கி வந்த காவிரியின் மார்பறுக்கும் நரேந்திர மோடியின் நயவஞ்சகத்தையும், தமிழ்நாடு அரசின் இனத்துரோகத்தையும் முறியடிக்கும் வகையில் தமிழர்கள் கிளர்ந்தெழுந்து உரிமை மீட்புப் போராட்டக் களங்களை அமைக்க வேண்டிய தேவை அதிகமாகியுள்ளது என்பதை காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

இந்தப் போராட்டங்கள் வெற்றியை நோக்கி… தஞ்சை விமானப்படைத்தளம் முற்றுகை! தோழர் பெ. மணியரசன் அழைப்பு!

இந்தப் போராட்டங்கள் வெற்றியை நோக்கி… தஞ்சை விமானப்படைத்தளம் முற்றுகை! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அழைப்பு! 
இன ஒதுக்கல் கொள்கை உள்ள நாட்டைத் தவிர, வேறு எந்த நாட்டிலாவது காவிரி உரிமையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிபோல் இனப்பாகுபாடு காட்டி அநீதி இழைக்கப்பட்டதுண்டா?

இந்தியாவிலிருந்து சிந்து, சீலம், செனாப் ஆறுகள் ஒப்பந்தப்படி பாக்கித்தானுக்கு ஓடும்; கங்கை வங்காளதேசத்துக்கு ஓடும். இந்தியாவுக்குள்ளேயே நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா போன்ற ஆறுகள் தீர்ப்பாயத் தீர்ப்பின்படி அண்டை அயல் மாநிலங்களுக்கு ஓடும்! ஆனால், தீர்ப்பாயம் தீர்ப்புக் கொடுத்தாலும், உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்தாலும் காவிரி மட்டும் கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு ஓடி வராதா?

இந்த இனப்பாகுபாடு மற்றும் இன ஒதுக்கல் அநீதிக்கு யார் யார் பொறுப்பு?
முதல் குற்றவாளி – கர்நாடகம்; இரண்டாவது குற்றவாளி இந்திய அரசு; மூன்றாவது பொறுப்பாளி உச்ச நீதிமன்றம்!

நான்காவது பொறுப்பாளி நாம்தான்! நாம் என்றால் நமக்கு வாய்த்த அரசியல் தலைமைகள்! சட்டப்படியான காவிரி உரிமையைக் கூட காப்பாற்ற முடியாத தலைமைகள்! அந்த அரசியல் தலைமைகளை சுமந்து கொண்டிருக்கும் நாம்! 

தமிழ்நாட்டின் மக்கள் தொகை எட்டு கோடி! பிரிட்டன், பிரான்சு நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகம்! இருந்தும், நமக்கான தேசிய இன அங்கீகாரத்தை இந்திய அரசு தரவில்லை! இனச்சமத்துவம்கூட வழங்கவில்லை! 

இந்திய அரசில் காங்கிரசு இருந்தாலும், பா.ச.க. இருந்தாலும் காவிரியில் தமிழ்நாட்டுக்குத் தொடர்ந்து துரோகம் இழைத்து வந்துள்ளன. 1956ஆம் ஆண்டின் ஆற்று நீர்ப் பகிர்வுச் சட்டப்படியும், இந்திய அரசமைப்புச் சட்டப்படியும் தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய நீதியைக் கிடைக்காமல் காங்கிரசும், பா.ச.க.வும் தடுத்து வந்துள்ளன. 

இப்போதும் அதே நிலைதான்! இந்திய ஆட்சியில் பா.ச.க.! கர்நாடக ஆட்சியில் காங்கிரசு!

பா.ச.க. – காங்கிரசு தலைமைகளின் தமிழர் எதிர்ப்பு அரசியலுக்கு இப்போது உச்ச நீதிமன்றமும் ஒத்தூதுகிறது. அதிலும் தீபக் மிஸ்ரா ஆயம் இந்திய அரசமைப்புச் சட்டத்தை இச்சிக்கலில் புறந்தள்ளி அநீதி இழைத்துள்ளது. 

தமிழ்நாட்டுக் காவிரி உரிமையைப் பலியிடத் திட்டமிடும் மோடி அரசுக்கு முழுவதும் துணைபோகறது உச்ச நீதிமன்றம்!

தமிழ்நாடு தழுவிய அளவில் காவிரி உரிமைப் போராட்டம் எழுச்சி பெற்றுள்ள இன்றைய நிலையில், இறுதி வெற்றி கிடைக்கும் வரை இப்போராட்டத்தைத் தொடர வேண்டும். காவிரி உரிமை மீட்புக் குழு பல போராட்டங்களை நடத்தி வருகிறது. 

அதன் அடுத்த போராட்டம் – 12.05.2018 – காரி (சனி)க்கிழமை காலை 10 மணிக்கு, தஞ்சை விமானப் படைத்தளத்தை முற்றுகையிடும் போராட்டம்!

1. இந்திய அரசே, காவிரித் தீர்ப்பாயம் கூறியுள்ள கட்டமைப்பும் அதிகாரமும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்திடு! 

2. காவிரி டெல்டாவில் இராணுவத்தை அனுப்பாதே – காவிரியை அனுப்பு! 

3. அதிகாரமில்லாத செயல்திட்டம் அமைத்தால் எதிர்த்துப் போராடுவோம்! 

4. உச்ச நீதிமன்றமே, கட்டப்பஞ்சாயத்து செய்யாதே! சட்டக் கடமையை நடுநிலையோடு செயல்படுத்து! காலம் கடத்தாதே! 

5. தமிழ்நாடு அரசே, தீபக் மிஸ்ரா ஆயத் தீர்ப்பினால் தமிழ்நாடு இழந்துள்ள காவிரி உரிமைகளை மீட்க – காவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் அமைத்திட சட்டப்போராட்டம் நடத்து! இனத்துரோகம் செய்யாமல் தமிழ்நாட்டு மக்கள் பக்கம் நில்! 

தமிழர்களே, 12.05.2018 – காரி (சனி)க் கிழமை காலை 10 மணிக்கு தஞ்சை மேலவஸ்தாசாவடியில் கூடி விமானப்படைத்தளம் நோக்கி பெருந்திரளாய் அணிவகுப்போம்!

வாருங்கள் வாருங்கள்!

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 98419 49462, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

"இந்திய அரசே! இராணுவத்தை அனுப்பாதே! காவிரியை அனுப்பு!" -- காவிரி உரிமை மீட்புக் குழு

இந்திய அரசே! இராணுவத்தை அனுப்பாதே! காவிரியை அனுப்பு! 
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைக்கும் தஞ்சை விமானப் படைத்தள முற்றுகைப் போர்!
இந்திய அரசே! 

காவிரித் தீர்ப்பாயம் கூறிய கட்டமைப்பும் அதிகாரமும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமை!

அதிகாரமில்லாத செயல்திட்டம் அமைத்து இனப்பாகுப்பாடு காட்டாதே!

காவிரிச் சமவெளியை இராணுவ முகாம் ஆக்காதே!

உச்ச நீதிமன்றமே!

இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் 1956 ஆற்று நீர்ப் பகிர்வுச் சட்டம் இரண்டிற்கும் முரணாகத் தீர்ப்புச் சொல்லாதே!

காவிரி வழக்கில் கட்டப் பஞ்சாயத்து செய்யாதே!

தமிழ்நாடு அரசே!

இந்திய அரசின் இனப்பாகுபாட்டு அரசியலுக்குத் துணை போகாதே! சொந்த மக்கள் பக்கம் நில்!

தீபக் மிஸ்ரா ஆயம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாக வழங்கியுள்ள தீர்ப்பை மாற்றிட உச்சநீதிமன்ற அரசமைப்பு ஆயம் (Constitution Bench) அமைக்க ஏற்பாடு செய்!

காவிரிச் சமவெளியில் இராணுவத்தை அனுமதிக்காதே!

காவிரிசட சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவித்திடு!

காவரி இல்லாமல் வாழ்வில்லை
களம் காணாமல் காவிரி இல்லை!

தஞ்சை விமானப்படைத் தளத்தை
முற்றுகையிடும் அறப்போராட்டத்திற்கு 
வாருங்கள் தமிழர்களே! 

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 98419 49462, 94432 74002

காவிரி உரிமை - கருத்தரங்கம்!

காவிரி உரிமை - கருத்தரங்கம்!
“காவரி உரிமை - சிக்கலும் புரிதலும்” என்ற தலைப்பில், நாளை (04.05.2018) சென்னையில் காப்பீட்டுக் கழகத் தமிழ்ப் பேரவை சார்பில் கருத்தரங்கம் நடைபெறுகின்றது.

சென்னை எழும்பூர் இக்சா அரங்கில், நாளை (மே 5) மாலை 5 மணிக்கு நடைபெறும் இக்கருத்தரங்கிற்கு, காப்பீட்டுக் கழகத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு. செ. பூரணச்சந்திரன் தலைமை தாங்குகிறார். திரு. த. பிரபு வரவேற்கிறார்.
காவிரி குறித்த ஓவியக் கண்காட்சியை, ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. கோட்ட மேலாளர் திரு. தே. தலக்கையா தொடங்கி வைத்துப் பேசுகிறார். ஓய்வு பெற்ற வளர்ச்சி அதிகாரி திரு. இரா. மூர்த்தி தொடக்கவுரையாற்றுகிறார்.
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு. பெ. மணியரசன், ஊடகவியலாளர் திரு. கா. அய்யநாதன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.
நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், பொது மக்களும் திரளாகப் பங்கேற்கும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 98419 49462, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

அதிகாரமில்லாத செயல்திட்டம் கொண்டு வர இந்திய அரசு மறைமுகத் திட்டம்! காவிரிப் போராட்டத்தை விழிப்புடன் விரிவுபடுத்த வேண்டும்! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

அதிகாரமில்லாத செயல்திட்டம் கொண்டு வர இந்திய அரசு மறைமுகத் திட்டம்! காவிரிப் போராட்டத்தை விழிப்புடன் விரிவுபடுத்த வேண்டும்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் - தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
காவிரி வழக்கில் நேற்று (03.05.2018) தீபக் மிஸ்ரா ஆயம் நடத்திய விசாரணையும் கூறிய முடிவுகளும் அந்த ஆயத்தின் மீது கொஞ்ச நஞ்சம் நம்பிக்கை வைத்திருந்தவர்களையும் ஏமாற்றிவிட்டது.

கர்நாடகத் தேர்தல் பரப்புரைக்குத் தலைமை அமைச்சரும் மற்ற நடுவண் அமைச்சர்களும் போய்விட்டதால் அமைச்சரவையைக் கூட்டி – அதில் காவிரிக்கான செயல் திட்டத்தை வைத்து ஒப்புதல் கேட்க வாய்ப்பில்லை, எனவே மேலும் இரண்டு வாரம் தள்ளி காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று நடுவண் அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், தீபக் மிஸ்ரா ஆயத்தின் முன் கூறினார்.

கே.கே. வேணுகோபாலின் இந்தப் பொய்க் கூற்றை ஏற்றுக் கொண்ட தீபக் மிஸ்ரா, நரேந்திர மோடி அரசைக் கண்டிப்பதுபோல் பாவனை காட்டினார். இவ்வாறு வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் தவறான தகவல் கூறிய நாளுக்கு முதல் நாள்தான் (02.05.2018) புதுதில்லியில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தலைமையில் நடுவண் அமைச்சரவை கூடி சுரங்கம், புகையிலை, மருத்துவமனை உள்ளிட்ட ஆறு திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுத்தது.

அதற்கு முன் 2018 ஏப்ரல் 9 அன்று உச்ச நீதிமன்ற விசாரணையில், தீபக் மிஸ்ரா ஆயம் 03.05.2018க்குள் “செயல்திட்டம்” அமைக்க வேண்டுமென்று இந்திய அரசுக்கு ஆணையிட்டது. அதன்பிறகு, 11.04.2018 அன்றும், 25.04.2018 அன்றும், கடைசியாக 02.05.2018 அன்றும் என மூன்று முறை நடுவண் அமைச்சரவை கூடியுள்ளது. அமைச்சரவைக் கூடுவதற்கே நேரமில்லை என்று நரேந்திர மோடி அரசின் தலைமை வழக்கறிஞர் கூறுவது எவ்வளவு பெரிய பொய்!

காவிரித் தீர்ப்பாயம் கூறிய கட்டமைப்புடன் – அதிகாரத்துடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்ற ஒற்றை முழக்கம் தமிழ்நாடு முழுக்க ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அந்தக் கோரிக்கையலிருந்து தமிழர்களின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்குடன் உடனடியாக 4 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று கர்நாடகத்திடம் கோரினார் தீபக் மிஸ்ரா! சற்று நேரத்தில், அதைக் குறைத்து 2 டி.எம்.சி. திறந்துவிட வேண்டும் என்றார்.

கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், கர்நாடகம் நாள்தோறும் 10,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று முதலில் கட்டளையிட்டார் தீபக் மிஸ்ரா. கர்நாடக அரசு அவ்வாறு திறந்துவிட மறுத்துவிட்டது. அதன்பிறகு, 6,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று கர்நாடகத்துக்கு கட்டளையிட்டார். அதையும் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்துவிட்டது. அதன்பிறகு, நாள்தோறும் 2,000 கன அடி தண்ணீர் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டுமென்று கர்நாடக அரசுக்கு அடுத்தடுத்து 4 வாய்தாக்களில் தீபக் மிஸ்ரா கட்டளையிட்டார். அதையும் செயல்படுத்த முடியாது என்று சித்தராமையா மறுத்துவிட்டார்.

இதற்காக முதலமைச்சர் சித்தராமையா மீதோ, கர்நாடகத் தலைமைச் செயலாளர் மீதோ நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தீபக் மிஸ்ரா ஆயம் பதிவு செய்யவில்லை. இப்பொழுது இந்த ஆயம் கட்டளையிட்டபடி 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், பாசன அமைச்சர் எம்.பி. பாட்டிலும் நேற்றே (03.05.2018) கூறி விட்டார்கள். இந்த நீதிமன்ற அவமதிப்புக்கு தீபக் மிஸ்ரா ஆயம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

அடுத்து, பெயரை மட்டும் “காவிரி மேலாண்மை வாரியம்” என்று வைத்துக் கொண்டு, காவிரித் தீர்ப்பாயம் கூறிய அதன் கட்டமைப்பு மற்றும் அதன் அதிகாரங்களையெல்லாம் பறித்து, அதிகாரமற்ற ஒரு “செயல் திட்டத்தை”க் கொண்டு வர இந்திய அரசு முயல்கிறது. உச்ச நீதிமன்றம் அதற்கு துணை போகும் என்று கருதக் கூடிய நிலையில்தான் அதன் விசாரணை முறை உள்ளது.

நடுவண் அரசின் நீர்வளத்துறை 29.03.2018 நாளிட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விளக்கம் கேட்கும் மனுவில், காவிரித் தீர்ப்பாயம் கூறிய காவிரி மேலாண்மை வாரியத்தை அதிகாரமில்லாத உதவாக்கரை வாரியமாக மாற்றியமைக்கும் நோக்கில்தான் உச்ச நீதிமன்றத்திடம் அது விளக்கங்கள் கேட்டுள்ளது. அவற்றில் சில வருமாறு :

1. காவிரி மேலாண்மை வாரியம் என்று தீர்ப்பாயம் சொல்லியதில் தொழில்நுட்பத் துறை அதிகாரங்களைக் கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதை ஆட்சித்துறை அதிகாரிகளையும், தொழில்நுட்பத்துறை அதிகாரிகளையும் கொண்டதாக மாற்றி அமைக்கலாமா?

2. காவிரித் தீர்ப்பாயம், காவிரி மேலாண்மை வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து கூறியுள்ளவற்றை மாற்றி அமைக்கலாமா?

3. இதில் தொடர்புடைய மாநிலங்கள் கூறக் கூடிய மாற்றுக் கருத்துகளையும் கவனத்தில் கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் என்பதை மாற்றி அமைக்கலாமா?

4. இந்த புதிய “செயல் திட்டத்தை” உருவாக்க மேலும் 3 மாத காலம் அவகாசம் வேண்டும்.

நடுவண் நீர்வளத்துறையின் விளக்கம் கேட்கும் மனுவின் சாரம் இதுதான்!

இதன் பொருள், காவிரித் தீர்ப்பாயம் கூறிய “காவிரி மேலாண்மை வாரியம்” என்பதை சாரத்தில் கொன்றுவிட்டு, அதிகாரமில்லாத ஒரு செயல்திட்டத்தை காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரில், அல்லது வேறொரு பெயரில் கொண்டு வரவே இந்திய அரசு விரும்புகிறது என்பதாகும்! 
நேற்று (03.04.2018) நடுவண் அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், காவிரி செயல் திட்டம் தயாராகிவிட்டது, நடுவண் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் என்று கூறியது மேற்கண்ட சூழ்ச்சிகளையும் உள்ளடக்கியதுதான்!

எனவே, கர்நாடகத்தின் இனவெறிச் செயலுக்கும் நடுவண் அரசின் இனப்பாகுபாட்டு அணுகு முறைக்கும் துணை போகக் கூடிய நிலையில், தீபக் மிஸ்ரா ஆயம் செயல்படும் நிலையில், ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் காவிரித் தீர்ப்பாயம் கூறிய கட்டமைப்பும் அதிகாரமும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் உடனே வேண்டும் என்று கோரிக்கையைத் துல்லியமாக்கி, கடுமையாகப் போராட வேண்டிய தேவை எழுந்துள்ளது.

தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டு, இந்திய அரசினுடைய நிர்வாகம் செயல்பட முடியாது என்ற அளவிற்கு ஒத்துழையாமை இயக்கத்தைத் தமிழர்கள் வலுப்படுத்த வேண்டும்; விரிவுபடுத்த வேண்டும்! இந்திய அரசு அலுவலகங்களும், நிறுவனங்களும் செயல்பட முடியாத நிலையை குறிப்பிட்ட காலத்திற்கு உருவாக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 98419 49462, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger