தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட மறுப்பது ஏமாற்றமளிக்கிறது! - தோழர் பெ.மணியரசன் அறிக்கை


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட மறுப்பது ஏமாற்றமளிக்கிறது!
இதில் ஏட்டிக்குப் போட்டி அரசியல் கூடாது!
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை


காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டுமென தமிழக முதல்வர் செயலலிதா அவர்களுக்கு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வேண்டுகோள் வைத்தோம். அதன்பிறகு, தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களும், அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டுமென்று முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தார்.

தமிழ்நாட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில், எல்லாக் கட்சிகளிடமும் ஒரே கருத்துதான் இருக்கிறது என்றும், எனவே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தத் தேவையில்லை என்றும் முதலமைச்சர் செயலலிதா அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது மிகவும் வேதனையளிக்கிறது, ஏமாற்றமளிக்கிறது என்பதை காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்பதில், கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளிடமும் ஒரே கருத்து தான் இருக்கிறது. இருந்தாலும், அவர்கள் ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுகிறார்கள்? அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு, முதலமைச்சர் சித்தராமையா பிரதமரை சந்திக்க உள்ளாரே, அது ஏன்? ஏனெனில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்பதற்கு மேலும் அழுத்தம் தருவதற்கும், ஒருவேளை வாரியம் அமைத்தால் அதை எதிர்த்து மக்கள் எழுச்சியை உண்டாக்குவதற்கும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்ட உத்தியை கர்நாடக அரசு கடைபிடிக்கிறது.

தொடர்ந்து காவிரி நீர் மறுக்கப்பட்டு, குறுவையும் சம்பாவும் பாதிக்கப்பட்டு குடி தண்ணீரும் இன்றி கோடிக்கணக்கான தமிழக மக்கள் பல ஆண்டுகளாக அல்லலுற்று வருகின்றனர். தமிழக மக்களின் இந்தத் துயரத்தைப் போக்க உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது இந்திய அரசின் சட்டப்படியான கடமையாகும். அந்த சட்டக்கடமையை இந்திய அரசு நிறைவேற்றிட நீதிமன்றத்தின் வழியாக முயல்வது ஒருவகை. அரசியல் ரீதியாக முயல்வது இன்னொரு வகை. கர்நாடக அரசு இந்த இரு வழிமுறைகளையும் தொடர்ந்து கடைபிடிக்கிறது. இந்த இரு வழிகளுக்கும் மேலாக காவிரி உரிமையை தமிழ்நாட்டிற்கு மறுப்பதற்கு, கர்நாடக விவசாயிகளும் இனவெறி அமைப்புகளும் வீதியில் இறங்கி போராடுவதை கர்நாடக அரசும், அரசியல் கட்சிகளும் பல்வேறு வழிகளில் ஊக்குவிக்கின்றன.

ஆனால், பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் சட்டப்படியான உரிமையை நிலைநாட்ட இந்திய அரசுக்கு ஒரு நெருக்கடி கொடுக்கக்கூட முதலமைச்சர் செயலலிதா அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த விரும்பவில்லை.

கர்நாடகத்தைச் சேர்ந்த நடுவண் அமைச்சர்களான அனந்த் குமார், சதானந்த கவுடா ஆகிய இருவரும், இந்திய அரசு காவிரி மேலாண்மையை வாரியம் அமைக்காமல் தடுப்போம் என்று ஒளிவு மறைவின்றி அறிவிக்கின்றனர். அச்செய்தி ஊடகங்களில் வந்துள்ளது. அவ்விருவரும் தமிழ்நாட்டு மக்களுக்கும் சேர்த்துதான் இந்திய அமைச்சர்களாக இருக்கிறார்கள். ஆனால், கன்னட இனச்சார்போடு நடுவண் அமைச்சர் பொறுப்புக்கு முற்றிலும் முரணான வகையில் சட்டப்படியான தமிழ்நாட்டு உரிமைக்கு எதிராக சவால் விடுகிறார்கள். இந்த இரு நடுவண் அமைச்சாகளின் சட்டவிரோதப் போக்கை தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்திக் கண்டிக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. தமிழக முதலமைச்சர் மேற்படி இரு நடுவண் அமைச்சர்களும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவ்வாறு குரல் கொடுக்கிறார்கள் என்று கூறுவது அவர்களின் சட்டவிரோதச் செயலை தமிழக முதல்வர் அனுசரித்துப் போவதுபோல் உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு, கர்நாடகத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், பா.ச.க. நடுவண் அரசு மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்குமா என்பதில் கேள்விகுறி எழுந்துள்ளது.

எனவே, கடந்த காலங்களில் தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும் ஏட்டிக்குப் போட்டி அரசியல் நடத்தி தமிழக மக்களின் உரிமைகளை பலி கொடுத்தது போது்ம். இனிமேலாவது, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட இக்கழகங்கள், ஆக்க வழியில் செயல்பட வேண்டும். அதற்கு, முன் எடுத்துக்காட்டாக முதலமைச்சர் செயலலிதா அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுடன் தமிழக மக்களுக்கு விழிப்புணர்ச்சியையும் எழுச்சியையும் நம்பிக்கையையும் உண்டாக்க வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

இங்ஙனம்,
பெ.மணியரசன்,
ஒருங்கிணைப்பாளர்,
காவிரி உரிமை மீட்புக் குழு

 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger