தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி
காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில்
டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்

இந்திய அரசேகாவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமை!  அரசமைப்புச் சட்டவிதி 355-ன் கீழ் கர்நாடகத்திடமிருந்து தமிழகத்திற்குரிய 26 ஆ.மி.க (டி.எம்.சி) பாக்கித் தண்ணீரை திறந்துவிட கட்டளை இடு!

உழவர்களின் பயிர்க் காப்பீடுத் திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையை கைவிடு!

தமிழக அரசே, கர்நாடகத்திடமிருந்து தமிழகத்திற்குரிய பாக்கித் தண்ணீரைக் கேட்டுப் பெற உறுதியான நடவடிக்கை எடு!

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில்  3.12.2013  அன்று தமிழக டெல்டா மாவட்டங்களில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

தஞ்சை





தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகில் காலை 11.00 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப் பாளாரும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார்.

இந்திய அரசே! இந்திய அரசே! காவிரி தீர்ப்பாயத் தீர்ப்பை  ஏட்டு சுறைக்கா யாக்காதே! மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு! உடனே அமைத்திடு!  இந்திய அரசே! தமிழர்களை வஞ்சிக்காதே! எஞ்சியுள்ள 26 டி.எம்.சி தண்ணீரை  கர்நாடகத்திட மிருந்து உடனே பெற்று கொடு! தமிழக அரசே! கடிதம் போட்டது போதும், காவிரி நீர் வந்திடுமா? வழக்குப் போட்டால் போதுமா? வாய்க்காலில் தண்ணீர் வந்திடுமாதமிழக முதல்வரே!  அனைத்துக் கட்சி குழுவை அழைத்துக் கொண்டு பிரதமரை சந்தித்து வலியுறுத்துஉள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு துரை. பாலகிருட்டிணன், மாவட்டச் செயலாளர் திரு உதயகுமார், தமிழ்நாடு விவசாய சங்கம் மாவட்டத் தலைவர் திரு. மணிமொழியன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் திரு. அய்யனாபுரம் சி.முருகேசன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் பொறுப்பாளர் புலவர் தங்கராசு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ.நல்லதுரை, மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் தலைவர் திரு. ஜலந்தர், தமிழக உழவர் முன்னணிப் பொதுச் செயலாளர் தோழர் தெ.காசிநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

இவ் ஆர்ப்பாட்டத்தில், 500க்கும் மேற்பட்ட திரளான உழவர்களும், தமிழின உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.

சிதம்பரம்




சிதம்பரத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், காலை 10.30 மணியளவில், வடக்கு வீதி தலைமை அஞ்சலக வாயிலில் நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டத்தில், ”இந்திய அரசே, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமை! அரசமைப்புச் சட்டவிதி 355-ன் கீழ் கர்நாடகத்திட மிருந்து தமிழகத்திற் குரிய 26 ஆ.மி.க (டி.எம்.சி) பாக்கித் தண்ணீரை திறந்துவிட கட்டளை இடு!  தமிழக அரசேகர்நாடகத்திடமிருந்து தமிழகத்திற்குரிய பாக்கித் தண்ணீரைக் கேட்டுப் பெற உறுதியான நடவடிக்கை எடு!’’ என்பன உள்ளிட்ட முழக்கங்கள் விண்ணதிர எழுப்பப் பட்டன.
 
தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் திரு முடிவண்ணன்ம.தி.மு.க. குமராட்சி ஒன்றியச் செயலாளர் திரு பா.இராசாராமன், தமிழக உழவர் முன்னணி செயற்குழு உறுப்பினர் திரு. தங்க.கென்னடி, மனித நேய மக்கள் கட்சி நகரப் பொறுப்பாளர் திரு ஜமால் உசேன், நாம் தமிழர் கட்சி நகர பொறுப்பாளர் திரு இராமதாசு, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க செயற்குழு உறுப்பினர் திரு விடுதலைச்செல்வன், மக்கள் உரிமைக் கூட்ட மைப்பு மாவட்டத் தலைவர் திரு கீ.செ.பழமலை, முற்போக்கு சிந்தனையாளர் இயக்க நகரத் தலைவர் திரு.இரா.ராகவேந்திரன்,தமிழக இளைஞர் முன்னணி தமிழக துணைப் பொதுச்செயலாளர் தோழர் ஆ.குபேரன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

நிறைவாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளரும்தமிழக உழவர் முன்னணி ஆலோசகருமான தோழர் கி.வெங்கட்ராமன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கர்நாடகத்தின் அடாவடிக்குத் துணைப் போகும் இந்திய அரசைக் கண்டித்தும், காவிரி உரிமையில் தமிழக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும் , இந்திய அரசு கைவிடுவதாக அறிவித்துள்ள உழவர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை தொடரக் கோரியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் திரளான உழவர்கள், மாணவர்கள், இன உணர்வாளர்கள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் நன்றி தெரிவித்தார்.

திருச்சி:


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசை வலியுறித்தியும் ,கர்நாடகத் திடமிருந்து பாக்கி தண்ணீரை பெற்றுத்தர தமிழக அரசை  வலியுறுத்தியும்  காவிரி உரிமை மீட்பு குழு சார்பில்  திருச்சியில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்திற்கு ம.தி.மு.க. மாவட்டச்  செயலாளர் மலர் மன்னன் தலைமையேற்றார்.  தமிழ்த் தேசப் பொதுவுடை மைக் கட்சி  திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் த.கவித்துவன், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் இந்தரஜித்ம.தி.மு.க. சார்பில் திரு. சேரன், புலவர் க.முருகேசன், தந்தைப் பெரியார் திராவிடர் கழகத் தோழர் சீனி.விடுதலை அரசு, த.ஒ.வி.இ. செயற்குழு உறுப்பினர் தோழர் நிலவழகன், பெரியார் பாசறை - தோழர் அன்பழகன், விவசாயிகள் சங்கம் திரு. அய்யா. ம.ப.சின்னத்துரை, தோழர் ரெ.சு.மணி (தமிழ்க் கலை இலக்கியப் பேரவை), தோழர் இராசா ரகுநாதன் (த.க.இ.பே.) உள்ளிட்ட திரளான உணர்வாளர்களும், உழவர்களும், இதில் கலந்துக் கொண்டனர்.

நாகப்பட்டினம்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசை வலியுறுத்தியும், கர்நாடகத் திடமிருந்து பாக்கி தண்ணீரை பெற்றுத்தர தமிழக அரசை வலியுறுத்தியும்  காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில்  நாகப்பட்டினத்தில் காலை 11.00 மணியளவில் நாகப்பட்டினம் கோட்டை வாசலிருந்து பேரணியாக  புறப்பட்டு  தொடர்வண்டி நிலையம் வழியாக சென்று தலைமை அஞ்சலக முன்பு பேரணியை முடிந்தனர்

பேரணிக்கு  திரு காவிரி தனபால் தலைமையேற்றார். பின்பு தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்கத் தலைவர் திரு வலிவளம் சேரன், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் திரு இறை.திருவரசமூர்த்தி, விடுதலைத் தமிழ்ப் புலிகள் தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழர் உரிமை மீட்பு இயக்கம் திரு பேர.முரளிதரன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தோழர் கு.பெரியசாமி, தமிழ்நாடு உழைப்போர் இயக்கம் திரு இடங்குடி பாண்டுரங்கம், திரு ஆறுபாதி. கல்யாணம், குறள் அரசு கழகம் திரு சுகுமாரன், திரு பேர.த.செய ராமன், நல்லாசிரியர் திரு ஜெகன்நாதன் உள்ளிட்ட பொறுப்பாளர் கள் கண்டன உரையாற்றி னர்.

சுமார் 1500க்கும் மேற்பட்ட விவசாயிகளும் தமிழின உணர்வாளர்களும் பேரணியிலும் ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டனர்.

திருவாரூர்:

காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்கக் கோரியும், கர்நாடகத் திடமிருந்து தமிழ்நாடிற்கு வரவேண்டிய 26 டி.எம்.சி.பாக்கி தண்ணீரை பெற்றுத்தர தமிழக அரசை வலியுறுத்தியும், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் திருவாரூரில் காலை 11.00 மணியளவில் அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காவிரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மு.சேரன் தலைமையேற்றார்.

திருவாரூர் நகர மன்ற உறுப்பினர் திரு வரதராஜன், பாரம்பரிய நெல் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு செயராமன், விடுதலை தமிழ்ப் புலிகள் தலைவர் தோழர் குடந்தை அரசன், நீடாமங்கலம் விவசாயிகள் மன்றத் தலைவர் துரைராஜன், பாரதிதாசன் சங்க திருவாரூர் மாவட்டத் தலைவர் திரு பழனிவேல், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி திருவாரூர் ஒன்றியச் செயலாளர் தோழர் தனபாலன் உள்ளிட்ட உள்ளிட்ட திரளான உணர்வாளர்களும், உழவர்களும், கலந்துக் கொண்டனர்.

(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

கர்நாடக கபினி அணையை க.உ.மீ.கு. ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன், தோழர் கி.வெங்கட்ராமன் ஆகியோர் பார்வையிட்டனர்




கர்நாடக கபினி அணையை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரும் காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருகிணைப்பாளருமான தோழர் பெ.மணியரசன், தமிழக உழவர் முன்னணி ஆலோசகரும் காவிரி உரிமை மீட்புக் குழு செயற்குழு உறுப்பினருமான தோழர் கி.வெங்கட்ராமன் உள்ளிட்டோர் அடங்கிய குழு பார்வையிட்டது. 

கர்நாடகத்தின் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து கபினி ஆற்றி்ன் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி அணையிலிருந்தும் அருட்காவதி ஆற்றிலிருந்தும் மேட்டூர் அணைக்கு வருகின்ற உபரி நீரையும் தடுக்க திட்டமிட்டுள்ளது கர்நாடக அரசு.

இதற்காக ”மேகத்தாட்டு நீர்த்தேக்கத் திட்டம்” என்ற புதியத் திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது.

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்கு காவிரியில் வராது. பாலாற்றுக்கு ஏற்பட்ட கதிதான் காவிரிக்கும் ஏற்படும். இத்திட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் அமைப்புகளும், தமிழக அரசும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.


இவ்வாறு முக்கியத்துவம் பெற்றுள்ள கபினி அணையை, காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் - தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையிலான தமிழகக் குழுவினர் 21.10.2013 அன்று பார்வையிட்டனர்.

இக்குழுவில், தமிழக உழவர் முன்னணி ஆலோசகரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளருமான தோழர் கி.வெங்கட்ராமன், பேரறிவாளன் தாயார் திருமதி. அற்புதம் அம்மையார், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழுத் தோழர்கள் கோ.மாரிமுத்து, குழ.பால்ராசு, க.அருணபாரதி, தோழர்கள் மு.வேலாயுதம், பார்த்திபராசன், குழந்தைராசு உள்ளிட்டேர்ர் இருந்தனர்.

பின்னர் தலைவர் பெ.மணியரசன் தலைமையிலான தமிழகக் குழுவினர் அணையின் கீழ் அமைந்துள்ள கர்நாடக அரசு பொதுப்பணித்துறை அலுவலகத்திற்குச் சென்றனர்.


கர்நாடக அரசு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கபினி அணையின் நீர் இருப்பு, அணை கொள்ளளவு நிலவரம், கர்நாடக அரசின் மேகத்தாட்டு நீர்த்தேக்கத் திட்ட நிலை உள்ளிட்டவை குறித்து விவரங்களைக் கேட்டறிந்தனர்.



”தமிழகப் பல்கலைக்கழகங்களில் மான்சாண்டோ நிறுவனத்திற்காக ஆய்வுகள் நடப்பதை தமிழக முதல்வர் தடை செய்ய வேண்டும்!” - தோழர் பெ.மணியரசன் பேச்சு!


தமிழகப் பல்கலைக்கழகங்களில் மான்சாண்டோ நிறுவனத்திற்காக
ஆய்வுகள் நடப்பதை தமிழக முதல்வர் தடை செய்ய வேண்டும்!
மான்சாண்டோ கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழர் பெ.மணியரசன் பேச்சு!

இன்று(12.10.2013) உலகம் முழுவதும் மான்சாண்டோ குழும எதிர்ப்பு நாள் கடைபிடிப்பதையொட்டி, திருவாரூரில் உழவர் பேரணியும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்தன. மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்திற்கு மாறான தென்னகம்என்ற அமைப்பு இதற்கு ஏற்பாடு செய்தது. பல்வேறு உழவர் அமைப்புகள் இதில் கலந்து கொண்டன.

திருவாரூர் தொடர்வண்டி நிலையத்தில் தொடங்கிய பேரணிக்கும் ஆர்ப்பாட்டத்திற்கும், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் திரு. வெ.துரைராசன் தலைமை தாங்கினார். விவசாய சங்கங்களின் தலைவர்களான திரு. மு.சேரன், திரு. சி.பாலகிருஷ்ணன், திரு. பா.மணிமொழியன், திரு. ஆர்.பழனிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழர் இயற்கை உழவர் இயக்கத்தின் மாநில இணைச் செயலாளர் திரு. இரா.செயராமன் இப்பேரணிக்கான ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்தார். கண்டன ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி திரு. கே.சுரேஷ் கண்ணா, திரு. காவிரி தனபாலன் ஆகியோர் பேசினர்.

திருவாரூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள அஞ்சலகத்தின் எதிரே நிறைவுற்ற பேரணியின் முடிவில், மான்சாண்டோ எதிர்ப்புக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், இயற்கை வேளாண் அறிவியலாளர் முனைவர் கோ.நம்மாழ்வார், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் ஆகியோர் உரையாற்றினர்.

முனைவர் கோ.நம்மாழ்வார் அவர்கள் உரையாற்றும் போது, மரபீணி மாற்று விதைகளைப் பயன்படுத்தி சாகுபடி செய்தால் அந்தப் பயிர்களைப் பிடுங்கி அழிப்போம்  என்றும் மான்சாண்டோ உருவ பொம்மையை கொளுத்துவோம் என்றும் எச்சரித்தார்.

தோழர் பெ.மணியரசன் பேசும் போது பின்வருமாறு குறிப்பிட்டார்.

”நகரங்களிலே உள்ள பழமுதிர்சோலைகளில் பூசணிக்காய் அளவிற்கு கத்தரிக்காய் பெரிதாக இருக்கிறது. இந்த வகை கத்திரிக்காய் மான்சாண்டோவின் மரபீணி மாற்று விதையாகும். மரபீணி மாற்று பி.ட்டி. பருத்து சாகுபடி தான் நூற்றுக்கு என்பது விழுக்காடு நடைபெறுகிறது.

மரபீனி மாற்றுப் பயிர் ஒழுங்காற்றுச் சட்டம் மசோதா நிலையிலேயே இருக்கிறது. அதை சட்டமாக நிறைவேற்ற இந்தியாவெங்கும் உழவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். நாடாளுமன்றத்திலும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதனால் அது பற்றி ஆய்வு செய்து அறிக்கை தர சி.பி.எம். நாடாளுமன்ற உறுப்பினர் நிலோத்பல் பாசு தலைமையில் ஒரு தேர்வுக் குழு(Select Commitee)வை அமைத்து அதனுடைய ஆய்வுக்கு விட்டார்கள்.

அக்குழு இந்தியாவெங்கும் சென்று களஆய்வு நடத்தி கருத்துகள் கேட்டு, இறுதி அறிக்கை தயார் செய்தது. அந்த அறிக்கையில் ”மரபீணி மாற்று விதைகளைப் பயன்படுத்தினால் விளைச்சல் பாதிக்கப்படும், அதனால் உருவாகும் காய்கறிகளையும் தானியங்களையும் உண்பவர்களுக்கு நோய்கள் ஏற்படும். அதன் தாவரங்களை உண்ணும் பிராணிகள் நோய் வாய்ப்படும். மனிதர்களும் விலங்குகளும் மலட்டுத்தன்மை அடைவர். அப்பயிர்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவை” என்று கூறி மரபீணி மாற்றுப் பயிர்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் பல்வகை பயிர்களை வளர்ப்பதற்கு பாதுகாப்பளித்து சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அவ்வறிக்கை கூறியது.

அவ்வறிக்கை அரசுக்குத் தாக்கல் செய்யப்பட்ட பின் மேற்படி மசோதா கிடப்பில் போடப்பட்டுள்ளது. அது சட்டமாகவில்லை.

ஆனால், கொல்லைப்புற வழிகளில் இந்திய அரசு மாண்சாண்டோ, சின்ஜென்டா போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் மரபீணி மாற்று விதைகளை இந்தியாவிற்குள் அனுமதித்திருக்கிறது. தமிழ்நாட்டிற்குள்ளும் அனுமதித்திருக்கிறது. இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங், ஆளுங்கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆகியோர் மான்சாண்டோ நிறுவனத்தின் கங்காணிகளாக வேலை செய்கிறார்கள். இவர்கள் நாடாளுமன்றத் தேர்வுக் குழு அளித்த அறிக்கையை நடைமுறையில் செல்லாக்காசாக்கியுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி நடந்த போதும் சரி, இப்பொழுது அண்ணா தி.மு.க. ஆட்சி நடக்கும் போதும் சரி மான்சாண்டோவின் மரபீணி மாற்று விதைகளை அனுமதிக்கிறார்கள். இன்றும் மான்சாண்டோ நிறுவனத்தின் நிதியுதவியுடன் கோயம்புத்துர் வேளாண் பல்கலைக்கழகத்திலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் மரபீணி மாற்று விதைக்கான ஆய்வுத்துறைகள் செயல்படுகின்றன. அப்பல்கலைக்கழகங்கள் மரபீணி மாற்றுப் பயிர்களை ஆதரித்துப் பரப்புரை செய்கின்றன.

இப்பல்கலைக்கழகங்கள் மான்சாண்டோ கொடுக்கும் இலஞ்சப் பணத்தில் அந்நிறுவனத்திற்கு ஆதரவாக மக்களுக்கு எதிரான ஆராய்ச்சி அமைப்புகளை உருவாக்கி கொண்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் அ.இ.அ.தி.மு.க.வின் தம்பித்துரையும் உறுப்பினராக இருந்தா. அவரும் மரபீணி மாற்றுப் பயிர்களுக்கு எதிராக அத்தேர்வுக் குழுவில் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.

ஆனால், அண்ணா தி.மு.க.வின் தமிழக அரசு, தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் மான்சாண்டோவின் நிதியில் ஆராய்ச்சிகள் நடப்பதை அனுமதிப்பது ஏன்? தமிழக முதலமைச்சர் மவுனம் காக்காமல் இதிலொரு முடிவெடுக்க வேண்டும்! அந்த மான்சாண்டோ ஆராய்ச்சி அமைப்புகளை மூடச் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் மரபீணி மாற்று விதைகளோ, காய்கறிகளோ, தானியங்களோ வராமல் தடுக்க வேண்டும்.

இது உழவர்களுக்கான சிக்கல் மட்டுமல்ல. இது அனைத்து மக்களுக்குமான சிக்கல். இனிமேல் கடைகளில் மரபீணி மாற்றுக் காய்கறிகள் இருந்தால், அவற்றை வெளியே சாலையில் வீசி அழிக்க வேண்டும். பி.ட்டி. பருத்தியை சாகுபடி செய்யாமல் விவசாயிகளை தடுக்க வேண்டும். இது போன்ற போராட்டங்களை நடத்துவதற்கும், உழவர்கள் நடத்தும் போராட்டங்களில் பங்கு கொள்வதற்கும் காவிரி உரிமை மீட்புக் குழுவிலுள்ள உழவர்கள் அணியமாக இருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்து இப்போராட்டத்தை திருவாரூரில் முன்னெடுத்த அனைவருக்கும் நன்றி பாராட்டி விடைபெறுகிறேன். வணக்கம்!”

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார்.

இந்நிகழ்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, திருத்துறைப்பூண்டி மூத்த த.தே.பொ.க. தோழர் இரா.கோவிந்தசாமி, ஒன்றியச் செயலாளர் தோழர் மு.தனபாலன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் வெ.இராசேந்திரன் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் பங்கேற்றனர்.

(செய்தி: த.தே.பொ.க. செய்திப்பிரிவு, படங்கள்: குடந்தை செந்தமிழன்)

கர்நாடக நீர்ப்பாசன நிறுவன திட்டங்களுக்கு ஜெயலலிதா எதிர்ப்பு!





கர்நாடக அரசின் காவிரி நீர்ப் பாசன நிறுவனத்தின் திட்டங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அர்காவதி மற்றும் ஹேமாவதி நதிகளில் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்களுக்கு அவர் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை எழுதிய கடிதத்தின் விவரம்:
   கர்நாடக மாநில அரசின் நிறுவனமான ‘‘காவிரி நீர்ப் பாசன நிறுவனம்’’,  அர்காவதி நதியை சீரமைத்து புதுப்பொலிவு ஏற்படுத்தவும், ஹேமாவதி நதி கால்வாய்களை நவீனப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டுள்ளது.
  அதில், ஹேமாவதி நதியின் இடது கரை கால்வாய், வலது கரை கால்வாய் மற்றும் வலது கரை உயர் மட்ட கால்வாய்களை நவீனப் படுத்துவது பற்றி கூறப்பட்டுள்ளது.
   தேசிய நீர் பாதுகாப்பு திட்டம் மற்றும் தேசிய நீர் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் இந்த திட்டங்கள் நடப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஹேமாவதி கால்வாய்களை நவீனப்படுத்த நீர்ப்பாசன திட்டத்தின் உதவியை பெற உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
    அர்காவதியை சீரமைக்கும் திட்டமும், ஹேமாவதி கால்வாய்களை நவீனப்படுத்தும் திட்டமும் கர்நாடக அரசின் புதிய திட்டங்களாகும். இந்த திட்டங்களின் செயல்பரப்பு நோக்கம் என்ன என்று தெரியவில்லை.
    மேலும், ஹேமாவதி கால்வாய்களை நவீனப் படுத்துவதன் மூலம் கர்நாடகா அரசு எடுக்கும் தண்ணீர் அளவு கணிசமாக அதிகரிக்கும். இதன் மூலம் காவிரி நதிநீர் ஆணையம் இறுதி தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதை விட கூடுதல் ஆயக்கட்டு பணிகளை கர்நாடகம் விரிவுபடுத்த முடியும்.
   கர்நாடக அரசின் இந்த புதிய திட்டங்கள் காரணமாக காவிரியில் இயற்கையாக வரும் தண்ணீர் அளவில் பாதிப்பு ஏற்படும். இது தமிழக நீர்ப்பாசனத் திட்டங்களை மிகக் கடுமையாக பாதிக்கும். எனவே இது காவிரி நதி நீர் ஆணையத்தின் இறுதி உத்தரவுக்கு எதிரானது.
   காவிரி இறுதித் தீர்ப்பை அமல்படுத்துவதை கண்காணிக்க தற்காலிக குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு அமைத்து இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த நிலையில் காவிரி இறுதித் தீர்ப்பை மீறும் வகையில் கர்நாடக மாநில அரசு நடந்து கொள்வது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
   கர்நாடக அரசு காவிரியில் புதிய திட்டங்கள் செயல் படுத்துவதை அனுமதிக்க கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை கர்நாடகா எந்த புதிய திட்டத்தையும் செயல்படுத்த கூடாது என்று தடுக்க வேண்டும்.
   மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய நீர் வள அமைச்சகத்துக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும் என்று மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன். அதோடு காவிரி இறுதி உத்தரவை திறமையாக அமல்படுத்து வதை உறுதி செய்ய காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு தாங்கள் உத்தரவிட கேட்டுக்கொள்கிறேன்.
 காவிரி நீர் மேலாண்மை வாரியம்: காவிரி இறுதி தீர்ப்பை கர்நாடக அரசு அடிக்கடி மீறாத வகையில் இருப்பதை உறுதி செய்வதற்கு, உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை கர்நாடகா அரசு காவிரி படுகையில் எந்த புதிய திட்டத்தையும் செயல்படுத்த அனுமதிக்க கூடாது. இதில் நீங்கள் தலையிட்டு கர்நாடக அரசுக்கு அறிவுரை கூற வேண்டும்.
   மேலும், அர்காவதி நதி சீரமைப்பு திட்டத்தையும், ஹேமாவதி கால்வாய்களை நவீனப்படுத்தும் திட்டங்களையும் நிறுத்தி வைக்குமாறு காவிரி நீர்ப் பாசன நிறுவனத்துக்கு அறிவுரை வழங்கும்படி கர்நாடக மாநில அரசை கேட்டுக் கொள்ளலாம்.
  எனவே, காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையத்தையும் விரைவில் அமைக்க கேட்டுக் கொள்கிறேன் என்று தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
காவிரியில் அணைக்க கட்ட, கர்நாடக அரசை, மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் நீர் மின்நிலையம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதை நிறைவேற்ற அனுமதிக்கக் கூடாது என்றும் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடக அரசு காவிரியில் 3 அணைகளைக் கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டால், அது கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் கூறியவாறு, இன்னும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை.
அதனால் அணைகள் கட்டுவதற்கு கர்நாடகம் ஆலோசி்த்தால், மத்திய அரசு உடனடியாக தடுக்க வேண்டும்.
திமுக ஆட்சியில் இருந்த காலத்திலேயே, மேகதாது திட்டத்தை தேவகௌடா கர்நாடக முதல்வராக இருந்தபோது, ஒரு கலந்துரையாடல் கூட்டத்தில் தெரிவித்தார்.
அப்போதே எதிர்த்துள்ளேன். இப்போதும் அதே நிலையில்தான் உள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.



காவிரியில் புதிய அணை: தமிழக எம்.பி.க்கள் அமளி



காவிரியில் புதிய திட்டங்களை செயல்படுத்த கர்நாடக அரசை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று மக்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் குரல் கொடுத்து அமளியில் ஈடுபட்டனர்.
மக்களவை அதன் தலைவர் மீரா குமார் தலைமையில் புதன்கிழமை தொடங்கியதும் கேள்வி நேரமின்றி முக்கிய பிரச்னைகளை உறுப்பினர்கள் எழுப்ப அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது காவிரி நதி விவகாரம் குறித்து மக்களவை அதிமுக தலைவர் எம். தம்பிதுரை பேசியது:
"கர்நாடகத்தின் மேக்கேதாட்டு பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே நீர்மின் திட்டத்தை அம்மாநில அரசு செயல்படுத்தவுள்ளது. இது குறித்து காவேரி நீராவாரி நிகமா நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரங்களில் அர்க்காவதி நீர்த்தேக்கத்தைப் புதுப்பித்துப் புனரமைக்கவும் ஹேமாவதி கால்வாயை நவீனப்படுத்தவும் தகுதிவாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்னள. இது தொடர்பாக பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரை காவிரி டெல்டா பகுதிகளில் எவ்வித திட்டங்களையும் செயல்படுத்த கர்நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது' என்று தம்பிதுரை வலியுறுத்தினார்.
அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தை பாஜக, இடதுசாரி கட்சிகள், திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தம்பிதுரையின் பேச்சுக்கு ஆட்சேபம் தெரிவித்து, பாஜக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.
அதைப் பார்த்ததும் அதிமுக உறுப்பினர்கள் பி. குமார், கே. ஆனந்தன், ஓ.எஸ். மணியன், சி. ராஜேந்திரன், சி. சிவசாமி, பி. வேணுகோபால், கே. சுகுமார், மதிமுக உறுப்பினர் கணேசமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் பி. லிங்கம் மையப் பகுதியின் ஒரு புறத்திலும் திமுக உறுப்பினர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், தாமரைக்கண்ணன், ஆதிசங்கர், ஹெலன் டேவிட்சன் ஆகியோர் மறுபுறத்திலும் "காவிரியில் புதிய திட்டம் தொடங்க கர்நாடகத்தை அனுமதிக்கக் கூடாது' என்று குரல் கொடுத்தனர்.
அப்போது பேசிய டி.ஆர். பாலு, "காவிரியில் புதிய திட்டம் தொடங்கப்படும் அறிவிப்பை கர்நாடக மாநில சட்ட அமைச்சர்தான் வெளியிட்டுள்ளார்.
இது, மாநிலங்களிடையே ஓடும் நதி நீரை கீழ் பகுதியில் உள்ள மாநிலம் பெற மறுக்கும் செயல்' என்றார்.
அப்போது குறுக்கிட்ட மீரா குமார், "கச்சத்தீவு பிரச்னையை எழுப்ப மட்டுமே உங்களுக்கு அனுமதி அளித்தேன்' என்றார். அதை ஏற்க மறுத்த பாலு, தொடர்ந்து காவிரி விவகாரத்தை எழுப்பினார்.
 அவருக்கு ஆதரவாக தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜே.எம். ஹாரூண், பி. விஸ்வநாதன், சித்தன் ஆகியோர் குரல் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து தமிழகம், கர்நாடக மாநிலங்களைச் உறுப்பினர்கள் பரஸ்பரம் "எங்கள் மாநில நலன்களைக் பாதுகாக்க வேண்டும்' என்று மையப் பகுதியில் குரல் எழுப்பினர். இந்த அமளியால் மக்களவை அலுவல் சுமார் 15 நிமிஷங்கள் பாதிக்கப்பட்டன.

காவிரியில் கர்நாடகம் அணை கட்டக்கூடாது - தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை!



காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகம் புதிய அணை கட்டுவதால் தமிழகத்தில் விவசாயம் பாதிக்கும் என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து, முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
புனல் மின்சார திட்டத்தை அமல்படுத்துவதற்காக மேக்கேதாட்டு என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணைகளை கட்டுவதற்கு தீர்மானித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. மிகவும் முக்கியமான இந்தப் பிரச்னையை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
மேக்கேதாட்டு என்ற இடத்தில் புனல் மின்சார நிலையம் அமைப்பதற்காக காவிரி ஆற்றின் குறுக்கே மூன்று அணைகளை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டிருப்பதாக கர்நாடக மாநில சட்டத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கை பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், ஹேமாவதி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் உள்ள உபரி தண்ணீரை குடிநீர் திட்டங்களுக்காக பயன்படுத்திக் கொள்ள ரூ.500 முதல் ரூ.600 கோடி வரை செலவிட திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேக்கேதாட்டு அருகே கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ள அணைகள் குறித்த புதிய திட்டங்கள் ஏதும் காவிரி நீர் பங்கீட்டு ஆணையத்தின் இறுதி உத்தரவில் கூறப்படவில்லை.
மொத்த தண்ணீரும் நுகர்வதற்குத்தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்று காவிரி நீர் பங்கீட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகவே, கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே அமைக்கத் திட்டமிட்டுள்ள அணைகள் சட்டத்துக்கு புறம்பானது. இது தமிழகத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்து விடும்.
விவசாயம் பாதிக்கும்: கர்நாடக அரசின் புதிய திட்டத்தால் காவிரியில் பாய்ந்து வரும் தண்ணீர் அளவு பாதிக்கப்படுவதோடு, தமிழகத்தின் விவசாயத்தையும் பெருமளவு பாதிக்கும். மேலும், காவிரி நீர் பங்கீட்டு ஆணையத்தின் இறுதி உத்தரவுக்கும் கர்நாடக அரசின் புதிய திட்டம் முரணானது. காவிரி நீர் பங்கீட்டு ஆணையத்தின் இறுதி உத்தரவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது இன்னமும் மத்திய அரசால் செயல்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில், கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே புதிய அணைகளை கட்ட தீர்மானித்திருப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு முற்றிலும் எதிரானது. கூட்டாட்சி முறையின் கீழ் இரு மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆற்றின் குறுக்கே ஆற்றின் தண்ணீருக்கு ஆதாரமாக இருக்கும் மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்டுவது என்பது அனுமதிக்க முடியாதது.
சிவசமுத்திரம், மேக்கேதாட்டு ஆகிய இடங்களில் மின்சார திட்டங்களை கர்நாடக அரசு தானாகவே முன்வந்து செயல்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஏற்கெனவே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
சிவசமுத்திரம், மேக்கேதாட்டு, ஒகேனக்கல், ராசிமணல் ஆகிய திட்டங்களில் புனல் மின்சார திட்டங்களை தேசிய புனல் மின்சார கழகம் அல்லது உரிய தகுதி வாய்ந்த மத்திய மின்சார உற்பத்தி நிறுவனம் மூலம் செயல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடலாம் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்கு முறை குழு ஆகியவற்றை காவிரி நீர் பங்கீட்டு ஆணையத்தின் இறுதித் தீர்ப்பின்படி அமைக்க மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரி தங்களிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். ஆனால், இதுவரை அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில், தமிழக அரசின் முன் அனுமதி ஏதும் பெறாமல் காவிரியின் குறுக்கே புனல் மின்சார திட்டங்களை நிறைவேற்ற கர்நாடக அரசு முன்வந்திருப்பதை தாங்கள் தலையிட்டு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத வரையில், நிரந்தர கண்காணிப்பு நடைமுறைகள் செய்யப்படாத வரை காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு எந்தத் திட்டங்களையும் நிறைவேற்ற மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் அனுமதி எதுவும் வழங்கக் கூடாது என்று உத்தரவிடுமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த விஷயத்தில் தங்களிடம் இருந்து சாதகமான பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன் என்று தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

கர்நாடகம் மேகத்தாட்டுவில் காவிரியில் புதிய அணைகள் கட்ட முயன்றால் தடுத்து முறியடிப்போம்! - தோழர் பெ.மணியரசன் அறிக்கை!


கர்நாடகம் மேகத்தாட்டுவில் காவிரியில்
புதிய அணைகள் கட்ட முயன்றால் தடுத்து முறியடிப்போம்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரும்,
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான
தோழர் பெ.மணியரசன் அறிக்கை !



ஆடுதாண்டு காவிரி என்று அறியப்பட்டுள்ள மேகத்தாட்டு வனப்பகுதியில், காவிரியின் குறுக்கே 3 நீர்த்தேக்கங்கள் கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டிருப்பதாக அம்மாநில சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா, நேற்று (21.08.2013) பெங்களுருவில் அறிவித்துள்ளார்.

இம்மூன்று நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 50 ஆ.மி.க.(டி.எம்.சி.) என்றும் கூறியுள்ளார். கர்நாடகத்திலிலிருந்து வெளியேறும் காவிரி உபரி நீரைத் தேக்கி, மின்சாரம் எடுக்கவும், குடிநீருக்குப் பயன்படுத்திக் கொள்ளவும் இவ்வணைகள் கட்டப்படவுள்ளதாகவும் இவற்றிற்கான செலவு மதிப்பீடு ரூ. 600 கோடி என்றும் அறிவித்துள்ளார். இத்திட்டத்தை இறுதி செய்வதற்காக நேற்று பாசன மற்றும் மின்துறை வல்லுநர்கள் கூட்டம் நடந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு நடுவண் அரசின் அரசிதழில் வெளியிட்டப் பிறகு, காவிரியில் புதிய அணைகள் கர்நாடகம் கட்டுவதற்கு முழு உரிமையுண்டு எனறும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட மூன்று அணைகள் கட்டப்பட்டுவிட்டால், ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்கு காவிரியில் வராது. பாலாற்றுக்கு ஏற்பட்ட கதிதான் காவிரிக்கும் ஏற்படும்.

வெள்ளக் காலத்தில் வெளியேற்றப்படும் உபரி நீர் அனைத்தையும் இந்த மூன்று அணைகளும் தேக்கிக் கொள்ளும். 50 டி.எம்.சி. அணை என்பது, இப்பொழுதுள்ள கிருட்டிணராஜசாகர் அணையை விடக் கூடுதல் கொள்ளளவு கொண்டதாகும். கிருட்ஷ்ணராஜ சாகர் அணையின் முழுக் கொள்ளளவு 44 ஆ.மி.க.

கேரளப் பகுதியில் உற்பத்தியாகி வரும் கபினியின் உபரி நீர் முழுவதும் நேரடியாக மேட்டூர் அணைக்கு இப்பொழுது வந்து கொண்டுள்ளது. இந்த கபினி அணையின் உபரி நீர் தமிழகத்திற்கு வராமல் தடுக்கும் சதித்திட்டம் தான் கர்நாடகம் தீட்டியுள்ள மேகத்தாட்டு நீர்த்தேக்கத் திட்டம்.

கிருஷ்ணராஜ சாகரிலிருந்தும், கபினியிலிருந்தும் அருட்காவதி ஆற்றிலிருந்தும் வரும் உபரி நீர் முழுக்க மேட்டூருக்கு இப்பொழுது வந்து கொண்டுள்ளது. இந்நீர் முழுவதையும் தடுத்து தேக்கி வைத்துக் கொள்வதற்காகத்தான் தமிழக – கர்நாடக எல்லையான பில்லிகுண்டுலுவுக்கு மேலே 35 கி.மீ. தொலைவிலுள்ள மேகத்தாட்டுவில் புதிய அணைகள் கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு செயல்படுத்த முனைகிறது.

வெள்ளக் காலத்தில் இப்பொழுதுள்ள கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீராக 50 ஆ.மி.க. வெளியேறுவற்கு வாய்ப்பில்லை. எனவே, உபரி நீர் முழுவதையும் ஒரு சொட்டுக் கூட தமிழ்நாட்டிற்கு விடாமல் தேக்கிக் கொள்ள புதிய அணைகள் கட்ட சதித்திட்டம் தீட்டியுள்ளது.

காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு உபரித் தண்ணீரை கர்நாடகம் தேக்கிக் கொள்ள அனுமதியளித்துள்ளதென்று அம்மாநில சட்ட அமைச்சர் கூறுவது முழுப்பொய். கர்நாடகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 270 ஆ.மி.க. தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமைதான் அவர்களுக்கு இருக்கிறதே தவிர, தமிழ்நாட்டிற்கு ஓடிவரும் உபரித் தண்ணீரைத் தேக்கிக் கொள்ள கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் கிடையாது. அந்த 270 ஆ.மி.க.வையும் தமிழ்நாட்டிற்கு 192 ஆ.மி.க. தண்ணீரை கொடுத்துவிட்டுத்தான் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையோ, தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளையோ செயல்படுத்தாமல் அடாவடித் தனம் செய்யும் கர்நாடகத்திற்கு நடுவண் அரசின் மறைமுக ஆதரவு இருக்கிறது என்ற துணிச்சலில் தான் கர்நாடக அரசு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல், புதிய அணைகள் கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை பயன்படுத்திக் கொள்ளும் உரிமை தமிழ்நாட்டிற்கு உண்டா இல்லையா என்பதை நடுவண் அரசு தெளிவுபடுத்தியாக வேண்டும். ஏனெனில், அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாகத்தான் எல்லா அநீதிகளையும் அட்டூழியங்களையும் கர்நாடகம் இழைத்து வருகின்றது.

அடுத்து, இந்தியாவுக்குள் தமிழ்நாடு இருக்கிறதா இல்லையா, தமிழ்நாட்டிற்கு நீதி வழங்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறதா இல்லையா என்பதை இந்திய அரசு அறிவித்தாக வேண்டும்.

தமிழ்நாட்டிற்குரிய இப்பொறுப்புகள் இந்திய அரசுக்கு இருக்கிறதென்றால், பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக இதில் தலையிட்டு, மேகத்தாட்டுவில் கர்நாடகம் புதிய அணைகள் கட்டுவதற்கு அனுமதியில்லை என்றும் அந்த முன்மொழிவிற்குக் கண்டனம் தெரிவித்தும் அறிக்கை வெளியிட வேண்டும்.

தமிழக அரசு, உடனடியாக இந்த அபாயத்தை உணர்ந்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கர்நாடகத்தின் அட்டூழியங்களுக்கு எதிராகவும் நடுவண் அரசின் ஓரவஞ்சனைக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்த வேண்டும். தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் குழுவினரை அழைத்துக் கொண்டு பிரதமரை நேரில் சந்தித்து, தமிழகத்திற்குரிய நீதியை நிலைநாட்ட வற்புறுத்த வேண்டும்.

கர்நாடக அரசு, மேகத்தாட்டுவில் அணைகள் கட்ட முயன்றால் தமிழ்நாட்டிலிருந்து உழவர்களும், தமிழின உணர்வாளர்களும் பல்லாயிரக்கணக்கில் திரண்டு மேகத்தாட்டுவுக்கே சென்று, கால்கோள் விழா நடத்தவிடாமல் தடுப்போம்! அணைகள் கட்டும் முயற்சியை முறியடிப்போம் என்பதை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பிலும், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்ஙனம்,
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.
ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு

காவிரியிலிந்து கிடைக்கும் உபரி நீரையும் தமிழகத்திற்கு தரவிடாமல் அணை கட்டும் முடிவில் கர்நாடகா!


கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அருகே நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்க அரசு ஆலோசித்து வருவதாக, அந்த மாநில சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூருவில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
உபரிநீராக தமிழகத்திற்குச் செல்லும் தண்ணீரை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அருகே நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்க அரசு ஆலோசித்து வருகிறது.
இதற்காக மேக்கேதாட்டு அருகே 3 நீர்த்தேக்கங்களைக் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விவாதிப்பதற்காக, நீர்ப்பாசனத் துறை உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை பெங்களூருவில் நடைபெறுகிறது.
நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் திட்டம் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பு யோசிக்கப்பட்டது. ஆனால், அப்போது இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த இயலவில்லை. காவிரி ஆற்றின் உபரிநீரை கர்நாடகம் பயன்படுத்திக் கொள்வதில் காவிரி நடுவர் மன்றத்தில் எந்தவிதத் தடங்கலும் இல்லை. எனவே, மேக்கேதாட்டு அருகே 3 நீர்த்தேக்கங்களைக் கட்டி அங்கு நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும்.
மின் உற்பத்திக்குப் பயன்படுத்திய பிறகு, உபரிநீரை வழக்கம் போல தமிழகத்திற்கு அனுப்பலாம்.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதால், உபரிநீரை பயன்படுத்துவதில் கர்நாடகத்திற்கு எந்தவித சட்ட ரீதியான இடையூறும் இல்லை.
புதிதாகக் கட்டப்படும் நீர்த்தேக்கத்தில் சுமார் 40-50 டிஎம்சி தண்ணீரைத் தேக்கிவைத்து, மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். காவிரி ஆற்றிலிருந்து ஆண்டுக்கு 192 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. நடப்பாண்டு, தமிழகத்திற்கு இதுவரை 151 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், இந்தாண்டு காவிரி நதிநீர் பிரச்னை எழாது.
ஆண்டுதோறும் ஹேமாவதி அணையில் இருந்து கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு திறந்துவிடப்படும் உபரிநீரையும் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஹேமாவதி அணையில் இருந்து வெளியேறும் 26 டிஎம்சி உபரிநீரைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பிருந்தும், இதுவரை 16 டிஎம்சி தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம்.
மீதமுள்ள தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ள ரூ.500 கோடி முதல் ரூ.600 கோடியில் திட்டம் வகுக்கப்படும். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தும்கூர், பெங்களூரு நகரங்கள் எதிர்க்கொண்டுள்ள குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்றார் ஜெயசந்திரா.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய தமிழக அரசின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி! - பெ.மணியரசன் அறிக்கை!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்
கோரிய தமிழக அரசின் வழக்கு

உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!

அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி

காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்யும்!

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை



காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை 19.02.2013 அன்று தனது அரசிதழில் வெளியிட்டஇந்திய அரசு. அத்தீர்ப்பை செயல்படுத்தும் அதிகாரம் படைத்தகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் ஒதுங்கிக் கொண்டது இந்நிலையில், காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் கூறியுள்ளபடிஉடனடியாகக் காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்கு முறைக் குழுவையும் அமைத்திடுமாறு இந்திய அரசுக்கு ஆணையிட கேட்டுக்கொண்டு தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

இவ்வழக்கு விசாரணை பல முறை நடந்தும் உச்சநீதி மன்றம், கர்நாடக அரசு எதிப்பு தெரிவித்ததாலும், நடுவண் அரசு நழுவிக் கொண்டதாலும் உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல். இடைக்கால ஏற்பாடாக அதிகாரமற்ற மேற்பார்வைக் குழுவை அமைத்தது இக்குழு நடப்பு சாகுபடிஆண்டில் கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இருந்த காலத்தில் கூட சூன், சூலை மாதங்களுக்கு உரிய பங்கு நீரை தமிழகத்திற்கு திறந்து விடுமாறுஆணையிடவில்லை, ஆணையிடும் அதிகாரமும் அதற்கு இல்லை.

இந்நிலையில் தென்மேற்குப் பருவமழை கர்நாடக, கேரள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில்மிக அதிகமாக பெய்து கர்நாடக அணைகள் நிரம்பிவிட்டன.தனது மாநில அணைகள் உடையாமல் பாதுகாக்கப்படவும் தனது மாநில கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுக்காக்கபடவும் தேவைப்பட்ட தற்காப்புநடவடிக்கையாகக் கர்நாடக அரசு மிகை நீரை தமிழகத்திற்குத் திறந்துவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி தமிழ அரசு தொடுத்துள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது உச்சநீதி மன்றம்,இப்போது காவிரிப் படுகையில் நிறைய மழைப்பெய்து தண்ணீர் அதிகமாக உள்ளதால் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்கத் தேவையில்லை. காவிரிதீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பு பற்றி நிலுவையில் உள்ள அசல் வழக்கு 2014 சனவரி மாதம் விசாரணைக்கு வரவுள்ளது, அப்பொழுது காவிரி மேலாண்மைவாரியம் அமைப்பது குறித்து விசாரிக்கலாம் என்று கூறி, தமிழக அரசு தொடுத்த வழக்கை இன்று (05.08.2013) தள்ளுபடி செய்துவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு, தமிழகத்தில் உள்ள காவிரிப் பாசன உழவர்களுக்கும், குடிநீருக்குக் காவிரியை நம்பியுள்ள தமிழக மக்களுக்கும் மிகுந்தஏமாற்றத்தை அளித்துள்ளது.

1990இல் இருந்து உச்சநீதி மன்றத்தில் காவிரி வழக்குகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. அவ்வபோது பல தீர்ப்புகளை உச்சநீதி மன்றம் வழங்கியுள்ளது.இவற்றில் எந்தத் தீர்ப்பையும் கர்நாடகம் செயல்படுத்தியது இல்லை. தண்ணீர்ப் பற்றாகுறை காலத்தில் ஒரு முடிவெடுப்பதைவிட, தண்ணீர் நிரம்பியுள்ள இக்காலத்தில் சட்டப்படி ஒரு முடிவெடுத்து அறிவிப்பது எளிதாக இருக்கும். 1970களில் இருந்து தொடர்ந்து வரும் காவிரிச் சிக்கலுக்கு அரசிதழில் வெளியிடப் பட்ட தீர்ப்பாயத்தின் முடிவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியது உச்சநீதி மன்றத்தின் சட்டப்படியான கடமை.இக்கடமையை உச்சநீதி மன்றம் நிறைவேற்றவில்லை. தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.

ஏற்கனவே இந்திய அரசு காவிரிப் பிரச்சனையில் நடுநிலையோடு செயல்படாமல் தனது சட்டக் கடமையிலிருந்து தவறி தமிழகத்தை வஞ்சித்து விட்டது.இப்பொழுது உச்சநீதி மன்றமும் இன்றைய பாசனத்திற்கு தண்ணீர் இருக்கிறது என்று கூறி தமிழக அரசு தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்திருப்பது தமிழக உழவர்கள் மீது விழுந்த மற்றும் ஒர் அடியாகும் இது பற்றி விவாதிக்க காவிரி உரிமை மீட்புக் குழு விரைவில் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி  முடிவெடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். 

பெ.மணியரசன்
ஒருங்கிணைப்பாளர்
காவிரி உரிமை மீட்புக் குழு 

இந்திய அரசைப் போலவே, உச்சநீதிமன்றமும் தமிழக விவசாயிகளை கைவிட்டது!


காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை 19.02.2013 அன்று தனது அரசிதழில் வெளியிட்ட இந்திய அரசு. அத்தீர்ப்பை செயல்படுத்தும் அதிகாரம் படைத்தகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் ஒதுங்கிக் கொண்டது. இந்நிலையில், காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் கூறியுள்ளபடிஉடனடியாகக் காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்கு முறைக் குழுவையும் அமைத்திடுமாறு இந்திய அரசுக்கு ஆணையிட கேட்டுக்கொண்டு தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
 
இவ்வழக்கு விசாரணை பலமுறை நடந்தும், கர்நாடக அரசு எதிப்பு தெரிவித்ததாலும், நடுவண் அரசு நழுவிக் கொண்டதாலும் உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், இடைக்கால ஏற்பாடாக அதிகாரமற்ற மேற்பார்வைக் குழுவை அமைத்தது.

இக்குழு நடப்பு சாகுபடி ஆண்டில் கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இருந்த காலத்தில் கூட சூன், சூலை மாதங்களுக்கு உரிய பங்கு நீரை தமிழகத்திற்கு திறந்து விடுமாறு ஆணையிடவில்லை, ஆணையிடும் அதிகாரமும் அதற்கு இல்லை.
 
இந்நிலையில் தென்மேற்குப் பருவமழை கர்நாடக, கேரள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில்மிக அதிகமாக பெய்து கர்நாடக அணைகள் நிரம்பிவிட்டன. தனது மாநில அணைகள் உடையாமல் பாதுகாக்கப்படவும் தனது மாநில கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுக்காக்கபடவும் தேவைப்பட்ட தற்காப்பு நடவடிக்கையாகக் கர்நாடக அரசு மிகை நீரை தமிழகத்திற்குத் திறந்துவிட்டுள்ளது.
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி தமிழ அரசு தொடுத்துள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது உச்சநீதி மன்றம், இப்போது காவிரிப் படுகையில் நிறைய மழைப்பெய்து தண்ணீர் அதிகமாக உள்ளதால் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்கத் தேவையில்லை. காவிரி தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பு பற்றி நிலுவையில் உள்ள அசல் வழக்கு 2014 சனவரி மாதம் விசாரணைக்கு வரவுள்ளது, அப்பொழுது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து விசாரிக்கலாம் என்று கூறி, தமிழக அரசு தொடுத்த வழக்கை இன்று (05.08.2013) தள்ளுபடி செய்துவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு, தமிழகத்தில் உள்ள காவிரிப் பாசன உழவர்களுக்கும், குடிநீருக்குக் காவிரியை நம்பியுள்ள தமிழக மக்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
 
1990இல் இருந்து உச்சநீதி மன்றத்தில் காவிரி வழக்குகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அவ்வபோது பல தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இவற்றில் எந்தத் தீர்ப்பையும் கர்நாடகம் செயல்படுத்தியது இல்லை. தண்ணீர்ப் பற்றாகுறை காலத்தில் ஒரு முடிவெடுப்பதைவிட, தண்ணீர் நிரம்பியுள்ள இக்காலத்தில் சட்டப்படி ஒரு முடிவெடுத்து அறிவிப்பது எளிதாக இருக்கும். 1970களில் இருந்து தொடர்ந்து வரும் காவிரிச் சிக்கலுக்கு அரசிதழில் வெளியிடப்பட்ட தீர்ப்பாயத்தின் முடிவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியது உச்சநீதிமன்றத்தின் சட்டப்படியான கடமை.இக்கடமையை உச்சநீதிமன்றம் நிறைவேற்றவில்லை. தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.
 
ஏற்கனவே இந்திய அரசு காவிரிப் பிரச்சனையில் நடுநிலையோடு செயல்படாமல் தனது சட்டக் கடமையிலிருந்து தவறி தமிழகத்தை வஞ்சித்து விட்டது.இப்பொழுது உச்சநீதி மன்றமும் இன்றைய பாசனத்திற்கு தண்ணீர் இருக்கிறது என்று கூறி தமிழக அரசு தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்திருப்பது தமிழக உழவர்கள் மீது விழுந்த மற்றும் ஒர் அடியாகும்.

 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger