தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


காவிரி மேலாண்மை ஆணையம் உயிரோடு இருக்கிறதா? உங்களுடன் உரையாடல் 2019 பிப்ரவரி – மார்ச்சு. காவிரி உரிமை மீட்புக் குழு.

காவிரி மேலாண்மை ஆணையம் உயிரோடு இருக்கிறதா? உங்களுடன் உரையாடல் 2019 பிப்ரவரி – மார்ச்சு. காவிரி உரிமை மீட்புக் குழு. 


காவிரி ஆணையம் 01.06.2018 அன்று அமைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட ஒரு தடவை கூட ஆணை இடவில்லை. கடந்த ஆண்டின் (2018) வெள்ளக் காலத்தில்கூட கள ஆய்வுக்கு ஆணையம் வரவில்லை.

கடலில் போய் கலந்த வெள்ள நீரை - தமிழ்நாட்டிற்குத் தந்துவிட்டதாகக் கர்நாடகம் சூதாகச் சொல்கிறது. தேக்க முடியாத அந்த மிகை நீர் கணக்கில் வராது என்ற உண்மையைக் கூட ஆணையம் உரைக்கவில்லை. கடந்த 2018 டிசம்பரிலிருந்து மாதவாரியாகத் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய காவிரி நீரைக் கர்நாடகம் சட்ட விரோதமாகத் தடுத்து வைத்துக் கொண்டுள்ளது. டிசம்பர் - 7.3 ஆ.மி.க., சனவரி - 3 ஆ.மி.க., பிப்ரவரி - 2.3 ஆ.மி.க., மார்ச் - 2.3 ஆ.மி.க. - ஆக மொத்தம் 15 ஆ.மி.க. (TMC) தண்ணீர் கர்நாடகம் திறந்து விட வேண்டும். அந்நீரைத் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு ஆணையம் ஆணையிட வேண்டும். அந்த நீர் வந்தால் குறுவை சாகுபடி செய்யலாம்.

அவ்வாறு ஆணையிடுமாறு ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைக்காததன் மர்மம் என்ன?

ஓய்வு நேர ஒய்யார ஆணையம்
---------------------------------------------------
காவிரி ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை முழுநேர அதிகார அமைப்புகள் என்பதே உச்ச நீதிமன்றத் தீர்ப்பு! ஆனால் வேறு பணிகளில் முழுநேரமாகச் செயல்படும் அதிகாரிகளின் ஓய்வு நேரப் பணியாக அவ்விரு அமைப்புகளையும் ஒப்புக்கு அமைத்துள்ளது பா.ச.க. நடுவண் ஆட்சி. இவை வெறும் ஒய்யார அமைப்புகள்!

தமிழ்நாட்டு ஆட்சியாளர்களின் போலி வெற்றி விழா 
----------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டின் உரிமைக்கு எதிரான இந்திய அரசின் இந்த இனப்பாகுபாட்டு நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாகச் செயல்படுத்துமாறு வலியுறுத்தி, சட்டப் போராட்டமும் அரசியல் அழுத்தப் போராட்டமும் நடத்த வேண்டிய தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள், போலியாகக் காவிரி வெற்றி விழா கொண்டாடித் தமிழ்நாட்டு மக்களின் கவனத்தைத் திசை திருப்பினார்கள்; தமிழ்நாட்டு உரிமையைப் பலியிட்டு அரசியல் ஆதாயம் தேடினார்கள்.

காவிரிச் சமவெளியைப் பாலைவனம் ஆக்கும் திட்டம்
-------------------------------------------------------------------------------------
காவிரிச் சமவெளியில் எண்ணெய், எரிவளி, மீத்தேன், நிலக்கரி உள்ளிட்ட ஐட்ரோகார்பன் எடுத்து விற்று இந்திய அரசு பணம் சம்பாதிக்க வேண்டும். அதற்காக ஓ.என்.ஜி.சி. மற்றும் ஏகபோக முதலாளிகளின் கூட்டுக் கொள்ளையை அனுமதிக்க வேண்டும். டெல்டாவின் நன்செய் நிலங்களும், நிலத்தடி நீரும் நஞ்சாக வேண்டும்; காவிரிப்படுகை இரசாயனப் பொட்டல் தரிசாக வேண்டும்; அவ்வாறு செய்வதற்குக் காவிரி நீர் வராமல் தடுக்க வேண்டும். அதன்பிறகு நிலங்களைவிட்டு உழவர்கள் ஓடி விடுவார்கள் என்பதே இந்திய அரசின் திட்டம்!

“காவிரியை மற; கோதாவரியை நினை!”
----------------------------------------------------------------
கோதாவரியிலிருந்து 200 ஆ.மி.க. (TMC) தண்ணீர் தமிழ்நாட்டிற்கு வரப்போகிறது என்று இந்திய ஆட்சியாளர்களும், தமிழ்நாட்டு ஆட்சியாளர்களும் ஒருசேரக் குடுகுடுப்பை அடிக்கிறார்கள். இதன் உட்பொருள் என்ன? காவிரியை மற; கோதாவரிக் கானல் நீரை நினை என்பதாகும்.

கங்கை நீரைக் கொண்டு வரப் போவதாகக் கதையளத்தவர்கள் - இப்போது கோதாவரி நீரைக் கொண்டு வரப் போவதாகக் கூறுகிறார்கள். ஆந்திர அரசுடன் செய்து கொண்ட சென்னைக் குடிநீர் ஒப்பந்தப்படி, கிருஷ்ணா நீர் சென்னைக்கு 12 ஆ.மி.க. எந்த ஆண்டாவது வந்ததுண்டா? இல்லை! கோதாவரி நீர் தமிழ்நாட்டிற்கு வர ஆந்திரப்பிரதேசம் ஒருபோதும் அனுமதிக்காது!

மேக்கேதாட்டில் அணை
-------------------------------------- 
எப்போதாவது வெள்ளப் பெருக்கெடுத்து மிகை நீர் மேட்டூர் அணைக்கு வருவதைப் பார்த்து, வயிறு எரிந்த கர்நாடகம், மேக்கேதாட்டில் 70 ஆ.மி.க. (TMC) கொள்ளளவில் நீர்த்தேக்கம் கட்டத் திட்டமிட்டது. ஒன்பதாயிரம் கோடி ரூபாய் செலவில் மேக்கேதாட்டு அணை கட்டும் கர்நாடகத்தின் திட்டத்தை இந்திய அரசு அனுமதித்துள்ளது. அது கட்டப்பட்டால், ஒரு சொட்டுக் காவிரி நீர் கூடக் கர்நாடகத்திலிருந்து மேட்டூர் அணைக்கு வராது.

பா.ச.க.வும் காங்கிரசும் இரட்டையர்கள்
--------------------------------------------------------------
இந்திய அரசிலும் கர்நாடக அரசிலும் காங்கிரசும், பா.ச.க.வும் மாறிமாறி ஆட்சி செய்கின்றன. இரு கட்சிகளும் கடுமையாகச் சண்டையிட்டுக் கொள்கின்றன. ஆனால் தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் தரக் கூடாது என்பதில் அவை ஒன்று சேர்ந்து கொள்கின்றன. இந்த பா.ச.க. - காங்கிரசு இரட்டையர்களோடுதான் தமிழ்நாட்டுக் கட்சிகள் கூட்டணி சேர்ந்து கொள்கின்றன. தமிழ்நாட்டுக் கட்சிகளுக்கோ பதவிதான் முக்கியம், காவிரி அல்ல!

தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாகப் பருவமழை குறைந்து கொண்டே வருகிறது. குடிநீர்த் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் கீழே போய்க் கொண்டே உள்ளது. தமிழ்நாடு - புதுவை மாநிலங்களின் 21 மாவட்டங்களுக்குக் குடிநீர் காவிரி நீர்; பன்னிரண்டு மாவட்டங்களில் 28 இலட்சம் ஏக்கர் நிலத்திற்குப் பாசன நீர் காவிரி நீர்!

மக்கள் போராடினால் வாழலாம்
---------------------------------------------------
காவிரி நீர்ச் சிக்கல் பாசன மாவட்டங்களின் தண்ணீர்ச் சிக்கல் மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் உயிர்ச்சிக்கல்! இந்த உண்மையை உணர்ந்து குமரி முனையிலிருந்து கும்மிடிப்பூண்டி வரை தமிழ் மக்கள் அறப்போர் நடத்த வேண்டும். எந்த வகை வன்முறைக்கும் இடங்கொடுக்காத வகையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட காவிரி உரிமை மீட்புப் போராட்டங்கள் பலவற்றை நடத்திய காவிரி உரிமை மீட்புக் குழு உங்களை உரிமையுடன் மீண்டும் அழைக்கிறது! அடுத்தகட்ட அறப்போராட்டத்திற்குத் திட்டமிடுவோம்!

இந்திய அரசே!
-------------------------
1. தன்னதிகாரம் கொண்ட - முழுநேர காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை உடனே அமைத்திடு!

2. 2018 திசம்பரிலிருந்து சனவரி, பிப்ரவரி, மார்ச்சு ஆகிய மாதங்களுக்குக் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட 15 ஆ.மி.க. வேண்டிய காவிரி நீரை உடனே திறந்துவிட அரசமைப்புச் சட்ட உறுப்பு - 355இன் கீழ் ஆணையிடு!

3. மேக்கேதாட்டு அணைக்குக் கொடுத்த அனுமதியை இரத்து செய்!

4. காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடச் செய்யும் வகையில், இச்சமவெளியில் எண்ணெய், எரிவளி, மீத்தேன், நிலக்கரி உள்ளிட்ட ஐட்ரோகார்பன் எடுக்கத் தடை விதி!

தமிழ்நாடு அரசே!
----------------------------
1. உச்ச நீதிமன்றக் காவிரித் தீர்ப்பை இந்திய அரசு செயல்படுத்தாத குற்றத்திற்குத் தண்டனை வழங்க உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போடு!

2. இந்திய அரசையும் கர்நாடக அரசையும் கண்டித்து அனைத்துக் கட்சி, அனைத்து உழவர் அமைப்புகள் மற்றும் அனைத்து மக்கள் இயக்கங்களை ஒருங்கிணைத்து காவிரி உரிமை மீட்க தமிழ்நாடு தழுவிய அறப்போராட்டங்கள் நடத்திட ஏற்பாடு செய்! இந்திய அரசுக்கு அரசியல் அழுத்தம் கொடு!

3. காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு. மீத்தேன் எடுப்பதைத் தடுக்கத் தமிழ்நாடு அரசு 08.10.2015 அன்று போட்ட அரசாணை எண் 186ஐப் பின்பற்றி, ஐட்ரோகார்பன் எடுக்கத் தடை விதித்து புதிய அவசரச் சட்டம் இயற்று!

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery

தமிழ்நாடு அரசே, ஓ.என்.ஜி.சி.யின் மக்கள் விரோதச் செயல்களுக்குத் துணை போகாதே! பேராசிரியர் செயராமன் உள்ளிட்டோரை விடுதலை செய்! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

தமிழ்நாடு அரசே, ஓ.என்.ஜி.சி.யின் மக்கள் விரோதச் செயல்களுக்குத் துணை போகாதே! பேராசிரியர் செயராமன் உள்ளிட்டோரை விடுதலை செய்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
கதிராமங்கலத்தில், துர்க்கை அம்மன் கோயில் அருகே உள்ள எண்ணெய்க் குழாயில் “பராமரிப்புப் பணி” பார்க்க வருவதாகச் சொல்லிக் கொண்டு, நேற்று (01.02.2019)இந்திய எண்ணெய் மற்றும் எரிவளிக் கழகத்தின் (ஓ.என்.ஜி.சி.) ஊர்திகளும், ஊழியர்களும் காவல்துறையினர் புடைசூழ ஊருக்குள் வந்தபோது, மக்களுக்கு பழையபடி பீதி ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டாண்டுகளாக ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்றக் கோரி ஊர் மக்கள் ஒன்று திரண்டு போராடி வருகிறார்கள். காவல்துறையின் அடக்குமுறைகளுக்கும், சிறை அடைப்புகளுக்கும் அடிக்கடி உள்ளாகி அச்சத்தில் உள்ளார்கள்.

கதிராமங்கலத்தில் எண்ணெய் – எரிவளிக் குழாய்கள் புதைக்கப்பட்டு, ஓ.என்.ஜி.சி. பயன்படுத்திய வேதிப்பொருட்களால் நிலத்தடி நீர் மாசுபட்டு, குடிநீருக்கும், பாசனத்திற்கும் தகுதியில்லாததாக மாறியிருக்கிறது. குழாய்கள் அவ்வப்போது வெடித்து தீப்பிடித்தும், வெள்ளம்போல் எண்ணெய் வழிந்தோடியும் ஏற்கெனவே பாதிப்புகள் உண்டாகியிருக்கின்றன. இந்நிலையில், மீத்தேன் – நிலக்கரி போன்றவற்றை எடுக்க புதிய குழாய்கள் இறக்க ஓ.என்.ஜி.சி. பல இடங்களில் முயன்று வருகிறது. இதற்கு “ஐட்ரோகார்பன்” என்று மாறுவேடப் பெயர் சூட்டியிருக்கிறது.

பலவகையிலும் பாதிக்கப்பட்டுள்ள கதிராமங்கலம் மக்கள், ஊரைவிட்டு ஓ.என்.ஜி.சி. வெளியேற வேண்டுமென்றும், நிலமும் நிலத்தடி நீரும் நஞ்சாவதால் எண்ணெய் – எரிவளி எடுக்கக் கூடாதென்றும, சற்றொப்ப இரண்டு ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். கடந்த 2018 ஏப்ரல் மாதம், இராணுவத்தினரை அழைத்து வந்து அவர்களின் பயிற்சியின் ஒரு பகுதியாக கதிராமங்கலத்தை சுற்றிக் காட்டிப் பயிற்சி கொடுத்தது மக்களிடம் மேலும் பீதியை அதிகப்படுத்தியது.

இந்நிலையில், நேற்று (01.02.2019) முன்னறிவிப்பு எதுவுமில்லாமல் வருவாய்த் துறையினரின் தகவல் ஏதுமில்லாமல், ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் காவல்துறையினரை ஊருக்குள் நிறுத்தி வைத்துக் கொண்டு, ஊர்திகளில் ஊழியர்களை அனுப்பியது மக்களிடையே பேரச்சத்தை ஏற்படுத்தியது.

அச்சமடைந்த மக்கள் ஒன்றுகூடி, உண்மை விவரங்களைச் சொல்லுங்கள் எனக் கேட்டிருக்கிறார்கள். இதுகுறித்து விவரம் அறிந்து கொள்ள மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன் அவர்களை அழைத்துள்ளார்கள். இந்நிலையில் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி காவல்துறையினர் பேராசிரியர் த. செயராமன் அவர்களையும், உள்ளூர் பிரமுகர் திரு. ராஜூ அவர்களையும் கைது செய்து உண்மைக்குப் புறம்பான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். இவர்கள் இப்பொழுது திருச்சி நடுவண் சிறையில் உள்ளார்கள்.

பேராசிரியர் செயராமன் துணைவியார் திருவாட்டி சித்ரா, கதிராமங்கலம் போராட்டக் குழுத் தலைவியர் கலையரசி, செயந்தி ஆகிய மூன்று பேரையும் வழக்கில் சேர்த்துள்ளார்கள். இந்த ஐந்து பேரும் ஓ.என்.ஜி.சி. ஊழியர்களைக் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதாக இ.த.ச. 506(2) பிரிவின்கீழ் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். பிணை மறுப்புப் பிரிவுகளைப் போட்டி ருக்கிறார்கள். காவல்துறையின் இந்த அணுகுமுறை கண்டனத்திற்குரியது! ஓ.என்.ஜி.சி.யின் மக்கள் விரோதச் செயல்களுக்கு தமிழ்நாடு காவல்துறை அடியாள் போல் செயல்படக்கூடாது!

தமிழ்நாடு முதல்வர், இச்சிக்கலில் தலையிட்டு பேராசிரியர் செயராமன் உள்ளிட்டோர் மீது போட்டுள்ள பொய் வழக்கை உடனடியாகக் கைவிடச் செய்ய வேண்டுமென்றும், சிறையில் உள்ளோரை விடுதலை செய்ய வேண்டுமென்றும், காவிரிப்படுகையிலிருந்து ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்றி “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக” காவிரிப்படுகையை அறிவிக்க வேண்டுமென்றும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger