காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில்
வெளியிடக் கோரும் திட்டத்தை
தமிழக முதல்வர் ஜெயலலிதா கைவிட வேண்டும்
இடைக்காலத்தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்ய வேண்டும்
வெளியிடக் கோரும் திட்டத்தை
தமிழக முதல்வர் ஜெயலலிதா கைவிட வேண்டும்
இடைக்காலத்தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்ய வேண்டும்
காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பினை இந்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அவர்கள், பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கடிதம் எழுதியிருப்பது தமிழக உரிமைக்கு பாதகம் விளைவிக்கக்கூடியது என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் சுட்டி காட்டுகிறேன்.
காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு தமிழகத்தின் உரிமைகளுக்கு பாதிப்புகளை உண்டாக்கியுள்ளது என்றும் அப்பாதிப்புகளை நீக்கி நீதி வழங்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்துள்ளது. அவ்வழக்கு 18.10.2011 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ள நிலையில் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பிற்கு முழு அதிகாரம் வழங்கும் வகையில் நடுவண் அரசின் அரசிதழில் வெளியிடுமாறு தமிழக முதல்வர் கோருவது தனது வழக்கை தானே கைவிடுவதற்குச் சமம் ஆகும்.
இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பதால் இறுதித் தீர்ப்பு நடைமுறையில் இல்லை. அதேவேளை உச்சநீதி மன்றம் இச்சிக்கலுக்கு தீர்வு கானும் வரை காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு தான் செயலில் இருக்கிறது. இடைக்காலத் தீர்ப்பின்படி 205 டி.எம்.சி காவிரி நீர் கர்நாடகம் தமிழகத்திற்கு தர வேண்டும். இந்த இடைக்காலத் தீர்ப்பு 1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அரசால் அரசிதழில் வெளியிடப்பட்டு அதற்குரிய அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இறுதித் தீர்ப்பு நடைமுறையில் இல்லாத போது இடைக்காலத் தீர்ப்புதான் செயல்படுத்தப்பட வேண்டும்.
கர்நாடக அரசு இடைக்காலத் தீர்ப்பை ஏற்க மறுக்கிறது என்பதற்காக நமக்கு பாதகமாகவும் கர்நாடகத்திற்கு மிகப்பெரிய குலுக்குச்சீட்டு பரிசாகவும் வெளியிடப்பட்டுள்ள இறுதித் தீர்ப்பை செயல்படுத்துமாறு தமிழக அரசு கோருவது தமிழக நலன்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்புகளை ஏற்படுத்தும். மிகப்பெரும் வரலாற்று பிழையாக மாறும்.
இறுதித் தீர்ப்பு வெறும் 192 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கியது. குரங்கு ஆப்பம் பிரித்த கதையாக அந்த குறைந்த நீரிலும் கர்நாடக குடிநீருக்காக என்று 10 டி.எம்.சியும் கடலில் கலந்து வீணாகும் நீரை தேக்கி வைப்பது என்ற பெயரில் 4டி.எம்.சியும் ஆகமொத்தம் 14 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்தின் பங்கிலிருந்து கழித்து கர்நாடக அணைகளில் தேக்கிகொள்ள தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு வழிசெய்துள்ளது.
இதை கழித்து பார்த்தால் தமிழகத்திற்கென்று இறுதித் தீர்ப்பு வழங்கிய தண்ணீர் 178 டி.எம்.சி மட்டுமே. எனவே இடைக்காலத் தீர்ப்பான 205 டி.எம்.சி தண்ணீர் இறுதி முடிவு வரும்வரை தமிழகத்திற்கு கிடைக்கும் வகையில் அந்த இடைக்காலத் தீர்ப்பை இந்திய அரசு மீண்டும் அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் அது செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க நடுவன் அரசின் அதிகாரிகளை கொண்டு கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என்றும் இந்திய அரசை தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கோரும் அவரது நிலைபாட்டை கைவிட வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறேன்.
தோழமையுடன்,
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
இடம்; தஞ்சை,
நாள்: 18.10.2011