தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


"பூதலூர் தொடர்வண்டி மறியல் புதிய வெளிச்சம் காட்டுகிறது!" ---- பெ. மணியரசன் ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு


பூதலூர் தொடர்வண்டி மறியல்

புதிய வெளிச்சம் காட்டுகிறது!
=========================
பெ. மணியரசன்
ஒருங்கிணைப்பாளர்,
காவிரி உரிமை மீட்புக் குழு
=========================


கர்நாடகமே, தமிழ்நாட்டுத் தண்ணீரைத் திருடாதே!
இந்திய அரசே, திருட்டுக்குத் துணை போகாதே!
தமிழ்நாடு அரசே, கண்துடைப்பைக் கைவிடு!
காவிரியை மீட்கக் களம் இறங்கு!

இந்தக் கோரிக்கை முழக்கங்களை முன்வைத்து, காவிரி உரிமை மீட்புக் குழு நேற்று (26.09.2023) செவ்வாய்க் கிழமை தஞ்சை மாவட்டம் பூதலூரில் தொடர்வண்டி (இரயில்) மறியல் போராட்டம் நடத்தியது. அது மறியல் போராட்டமா? திருவிழாத் தேரோட்டமா என்று வியக்கும் வகையில் உழவர்களும், உரிமை வேட்கை இளையோரும் பூதலூர் தொடர்வண்டி நிலையம் முன்பாகக் குவிந்தார்கள்!

கட்சி வேறுபாடின்றி, சங்க வேறுபாடின்றி காவிரித் தாயை சிறை மீட்கும் ஆவேசத்துடன் திரண்டனர்.

துல்லியமாக எண்ணிப் பார்த்தால் அறுநூறு பேர் இருக்கும் என்று செய்தியாளர்களில் சிலர் சொன்னார்கள். காவல்துறையினர் நம்மை தொடர்வண்டி நிலையத்திற்குள் போகவே கூடாது என்று கடுமை காட்டினர்; கயிற்றைப் பிடித்துக் கொண்டு தடுத்தனர்.

பயணிகள் செல்லும் வழியாகச் சென்று முன்கூட்டியே தண்டவாளத்தில் நின்று கொள்கிறோம்; நிலையத்தின் நடைமேடை நுழைவுக்கு முன்பகுதியில் நின்று வண்டியை மறிக்கிறோம். தொடர்வண்டியை அங்கு நிறுத்தட்டும் என்று கேட்டோம். காவல்துறையினர் மறுத்து விட்டனர். காவிரியை இழந்து காய்ந்த நெற்பயிரைப் பார்த்து, தண்ணீர் வற்றிப் போன ஆறுகளை – வறண்டு போன வாய்க்கால்களைப் பார்த்து, உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்த உழவர்கள் கொந்தளித்தனர்.

கர்நாடகத்தில் காவிரி நீர்ச் சிக்கலை இனச்சிக்கலாக மாற்றி, கர்நாடகத் தமிழர்களுக்கு எதிரான நஞ்சைக் கக்கி கலாட்டாக்கள் செய்கிறார்கள். முழு அடைப்புகள் நடத்திக் கொண்டிருக்கும் கன்னட இனவெறி அரசியலைக் கண்டு நரம்பு முறுக்கேறி சீறிக் கொண்டிருக்கின்றனர், தமிழின இளைஞர்கள்!

காவல்துறை போட்ட இந்தத் தடைகளை மீறி, வேலியைத் தாண்டி தண்டவாளத்தின் வழியே ஓடி நிலையத்திற்கு அரை கிலோ மீட்டருக்கு முன்பாகவே இருப்புப் பாதையில் படுத்து விட்டனர்! ஆவேச முழக்கங்களை எழுப்பினர். அவர்களைத் தூக்கி அப்புறப்படுத்த காவல்துறையினர் முயன்றனர். ஆனால் முடியவில்லை!

திருச்சியிலிருந்து சென்னை போகும் சோழன் விரைவு வண்டி விடாமல் எச்சரிக்கை ஒலி எழுப்பிக் கொண்டு வருகிறது. நம் இளைஞர்கள், வந்து கொண்டிருக்கும் தொடர்வண்டியை நோக்கி இருப்புப் பாதையில் ஓடுகின்றனர். எட்டி நின்று பார்ப்போர்க்கு என்ன ஆகுமோ என்று அச்சம்! காவல்துறையினர் தலையிட்டு வண்டியை நிறுத்தச் சொல்கின்றனர். வண்டி நிற்கிறது! நம் தோழர்கள் சோழன் தொடர்வண்டி முன் படுக்கிறார்கள். உட்காருகிறாகள். ஆனால் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. ஆத்திரத்தை வெளிப்படுத்த அடையாள மறியல்! ஆனால் அலங்கார மறியல் இல்லை!

நாங்கள் பெரும்பாலோர் தொடர்வண்டி நிலையம் தொடங்கும் பகுதியில் இருப்புப் பாதையில் – உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டோம்! நடைமேடையெங்கும் கூட்டம்! மேற்கே அரை கிலோ மீட்டருக்கு முன் மறியல் செய்தவர்கள், பின்னர் காவல்துறை வேண்டுகோளை ஏற்று, நிலையம் நோக்கி – கிழக்கு நோக்கி தண்டவாளங்களுக்கிடையே நடந்து வருகிறார்கள். அவர்களைப் பின்தொடர்ந்து தொடர்வண்டியும் நகர்ந்து வருகிறது. இங்கும் மறியல் செய்தோம். வண்டி நின்றது. காவல்துறையினர் நம்மைத் தளைப்படுத்தினார்கள். மொத்தம் 45 நிமிடம் பூதலூரில் நிறுத்தி வைக்கப்பட்ட பின் வண்டி புறப்பட்டது. இருநூறு பேர் கைதானோம்!

மற்ற மாநிலங்களில் நடைபெறும் தொடர்வண்டி மறியல்களோடு ஒப்பிடும்போது நாம் நடத்திய மறியல் பெரிதல்ல. பஞ்சாபில் உழவர்கள் வாரக்கணக்கில் தொடர்வண்டி இருப்புப் பாதையில் அடுப்பு வைத்து சமைத்துச் சாப்பிட்டு அங்குள்ள நடைமேடைகளிலேயே தங்கினார்கள். கர்நாடகத்தில் தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைத் தரக்கூடாது என்று சட்டவிரோதக் கோரிக்கை வைத்து அவ்வப்போது தண்டவாளங்களை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். “உழவர்கள்” என்ற பெயரில் உள்ள வெறியர்கள்!

“மாப்பிள்ளை மறியல்கள்”, “அலங்கார மறியல்கள்” அதிகமாக நடைபெறும் தமிழ்நாட்டில் உரிமை மீட்பிற்கான உண்மை மறியல் நடந்தது சிறப்புக்குரியதாகும்!

இதே காவிரி உரிமைக்காக 2019இல் உரிமை மீட்புக் குழு, ஒரு வாரம் டெல்டா மாவட்டங்களில் தொடர்வண்டி மறியல் நடத்தியது. ஒன்றில் கூட, தொடர்வண்டி நிலையத்தில் மறியல் செய்யவில்லை. காடுகளில் – ஓடிவரும் வண்டிகளைத் தான் தஞ்சை – திருவாரூர் – நாகை – திருச்சி மாவட்டங்களில் மறித்துக் கைதானோம்! அதற்கு முன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காவிரிக்காகத் தொடர்ந்து 19 நாள் – இரவு பகல் 24 மணி நேரமும் காத்திருப்புப் போராட்டம் நடத்தினோம். கணக்குக் காட்டவோ, கவர்ச்சி காட்டவோ நாம் ”போராடுவதில்லை”.

நம்மால் இயன்ற அளவு உரிமை மீட்புக்காக உண்மையாகப் போராட வேண்டும் என்ற மெய்ச்சுடர் நம் நெஞ்சில் எரிந்து கொண்டுள்ளது.

காவிரி உரிமை மீட்புக் குழு கட்சி சார்பற்றுச் செயல்படுகிறது. இதில் பல்வேறு கட்சியினர் இருக்கிறார்கள். அதேவேளை எந்தக் கட்சியாவது அல்லது எந்தக் கட்சி ஆட்சியாவது காவிரி உரிமையில் நமக்குப் பாதகமாக நடந்து கொண்டால், உரிமை காக்கச் செயல்படாமல் இருந்தால் அவற்றை விமர்சிப்போம்! கண்டித்தும் போராடுவோம்!

காவிரி உரிமை மீட்புக் குழுத் தலைமை எந்தக் கட்சிக்கும் ஆதரவாக வாக்குக் கேட்காது; எந்தக் கட்சிக்கும் எதிராக வாக்களிக்கக் கோராது. அது அவரவர் உரிமை!

நான் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். எமது தமிழ்த்தேசியப் பேரியக்கம் – காவிரிச் சிக்கலை உழவர் சிக்கலாகவும், தமிழர் உரிமைச் சிக்கலாகவும் – தமிழ்நாட்டுடிக் குடிநீர்ச் சிக்கலாகவும் இணைத்துப் பார்க்கிறது.

இந்தத் தடவை பூதலூர் தொடர்வண்டி மறியலுக்குக், குறிப்பாக, தஞ்சை – திருவாரூர் மாவட்டங்களில் தான் உழவர்களையும், உணர்வாளர்களையும் அழைத்தோம்! ஆனால், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள், சென்னை, கோவை, திருச்சி, ஓசூர், மதுரை, பெண்ணாடம், சிதம்பரம், செய்யாறு போன்ற பல பகுதிகளில் இருந்தெல்லாம் வந்து கலந்து கொண்டார்கள்; கைதானார்கள். அதேபோல், தமிழ்த்தேசியப் பேரியக்கத்திற்கு வெளியே உள்ள உணர்வாளர்கள் பலர் சமூக ஊடகங்களில் செய்தியைப் பார்த்துவிட்டு காஞ்சிபுரம், நாமக்கல், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களிலிருந்து வந்து பங்கேற்றுக் கைதானார்கள்! தஞ்சை மாவட்டத்திலிருந்து, இதுவரை நாம் நடத்திய போராட்டங்களில் கலந்து கொள்ளாத ஊர்களிலிருந்தும் வந்து கலந்து கொண்டார்கள்.

காவிரி உரிமை மீட்புக் குழு பொறுப்பாளர்கள் – முன்னணிச் செயல்பாட்டாளர்கள் பல ஊர்களுக்கும், நேரில் சென்று நம் மக்களை அழைத்தார்கள் – அவர்கள் வந்தார்கள்!

இணக்கமான கூட்டு முயற்சி – கூட்டு உழைப்பு எதையும் சாதிக்கும் என்பதற்கு இப்போராட்டத்தின் சிறப்பே சான்று!

பூதலூர் - இரம்யா திருமண மண்டபத்தில் காவல்துறையினர் நம்மை அடைத்து வைத்திருந்த போது, அங்கே பலர் உரையாற்றினார்கள். கருத்துள்ள உரைகள் – ஆவேச முழக்கங்கள்! கைதான வீராங்களைகளும் முழங்கினர்!

இவ்வளவு பெரிய மறியல் போராட்டத்தை பெரிய கட்சிகள் நடத்தியிருந்தால் இலட்சக்கணக்கில் ரூபாய் செலவு செய்திருப்பார்கள்! நமக்கு மொத்தச் செலவு ரூபாய் 14,200 மட்டுமே! கைது செய்து வைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் இச்செலவுகளுக்காக சில கிராமங்களில் நிதி கேட்டோம். அவர்கள் கொடுத்தது 19,500. மிச்சம் கையிருப்பு ரூபாய் 5,300. இத்தொகை காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் ஐயா த. மணிமொழியன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்செலவில் 4000 துண்டறிக்கைகளுக்கு 3,400 ரூபாயும், பல வண்ண 200 ஒற்றைத் தாள் (Single Bit) சுவரொட்டிகளுக்கும், 200 இரட்டைத் தாள் (Double Bit) சுவரொட்டிகளுக்கும் 6,000 ரூபாயும் போனது. ஆக மொத்தம் 9,400 ரூபாய்! ஊர் ஊராகச் சென்று உழவர்களை அழைத்த முன்னணி இளையோரும், பெரியோரும் அவரவர் சொந்த ஊர்திகளில் சென்றனர். அது பொதுச் செலவில் இல்லை.

மாலை 6.15 மணிக்கு அனைவரையும் காவல்துறையினர் விடுவித்தனர்.

காவிரிக் காப்பு மறியல் போராட்டத்தை முன்கூட்டியே நாளேடுகள் வெளியிட்டன. காவிரி உரிமை மீட்பு மற்றும் தமிழர் உரிமைக் காப்பு உணர்வுமிக்க இளையோரும், பெரியோரும் சமூக வலைத்தள ஊடகங்களில் பரப்பினர். எனது வேண்டுகோள் உரையை எமது தமிழர் கண்ணோட்டம் வலையொளியில் வெளியிட்டார்கள். அதை அப்படியே தம்பி ஏகலைவன் அவர்கள், தமது “ராவணா” வலையொளியில் வெளியிட்டார். தம்பி பிரபாகரன் அவர்கள், ழகரம் வாய்ஸ் வலையொளியில், இப்போராட்டத்திற்கான எனது நேர்காணலை வெளியிட்டார். இவ்வாறாக இப்போராட்டத்தைப் பலரும் நாடறிந்த செய்தியாக மாற்றினார்கள்.

மறியல் போராட்டம் நடக்கும் போதே, அதைப் புதிய தலைமுறைத் தொலைக்காட்சி விரிவாக நேரலை செய்தது. போராட்டத்தை நியூஸ்18, ஜெயா டி.வி. முதலியவை வெளியிட்டன. பெரும்பாலும் எல்லாச் செய்தி ஏடுகளும் வெளியிட்டன. தினத்தந்தி சென்னைப் பதிப்பு உள்ளிட்ட பல பதிப்புகளில் வெளியிட்டது.

சமூக ஊடகங்களில் விரிவாக, காவிரி மீட்பு மறியல் போராட்டக் காட்சிகளை – செய்திகளை நம்முடைய உணர்வாளர்கள் பலர் வெளியிட்டனர்.

இத்தோடு நாம் மன நிறைவடையக் கூடாது. காவிரியில் தமிழ்நாட்டு உரிமையை மீட்கும் வரை நாம் போராட வேண்டும்.

மற்றவரைப் பின்பற்ற மட்டுமே நாம் பிறந்தவர்கள் அல்லர்; மற்றவர்க்கு வழிகாட்டவும் நமக்கு உரிமையுண்டு; அறிவுண்டு! வரலாறு உங்களுக்காக வாசலைத் திறந்து வைத்துள்ளது, வாருங்கள்!

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
www.kaveriurimai.com
==========================

"குறுவை நெல் கொள்முதல் ஈரப்பதம் 20% ஆக்க வேண்டும்! சிப்பத்திற்கு 40 ரூபாய் கையூட்டு வாங்குவதைத் தடை செய்ய வேண்டும்!" ---- முதலமைச்சருக்குக் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கோரிக்கை!


குறுவை நெல் கொள்முதல் ஈரப்பதம் 20% ஆக்க வேண்டும்!

சிப்பத்திற்கு 40 ரூபாய் கையூட்டு வாங்குவதைத் தடை செய்ய வேண்டும்!
=============================================================
முதலமைச்சருக்குக் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் கோரிக்கை!


நெல்லை உற்பத்தி செய்வதிலிருந்து அதை விற்பது வரை, ஒரு வேண்டாத வேலையை உழவர்கள் செய்வது போலவே இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் நடந்து கொள்கின்றன. நெல்லுக்கு இலாப விலை நிர்ணயிக்கக் கூடாது, கட்டுப்படியான விலைதான் நிர்ணயிக்க வேண்டும் என்று இந்திய அரசு வரம்பு வைத்திருக்கிறது. அந்தக் கட்டுபடியான விலையையும் வேளாண் அறிஞர் எம்.எஸ். சுவாமிநாதன் வகுத்தளித்த விலை நிர்ணய அடிப்படையில் இந்திய அரசு தீர்மானிப்பதில்லை. இதனால் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருள்களின் சந்தை விலைஉயர்வு விகிதத்தற்குச் சமமாக நெல்விலை உயர்த்தப்படுவதில்லை.

அடிமாட்டு விலைக்கு நிரணயிக்கப்பட்ட நெல்லையும் ஆட்சியாளர்கள் உரிய அக்கறையுடன், நேர்மையாக, இலஞ்சஊழல் இல்லாமல் கொள்முதல் செய்வதில்லை.
நேரடி நெல் கொள்முதல் நிலையைங்கள் சிலவற்றைத் தஞ்சை, திருவையாறு பூதலூர் ஒன்றியங்களில் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் நான், காவிரி உரிமைமீட்புக்குழு பொருளாளர் த. மணிமொழியன், செயற்குழு உறுப்பினர்கள் துரை. இரமேசு, பொறியாளர் தி. செந்தில்வேலன், பூதலுர் சுந்தரவடிவேலு, பா. தட்சிணாமூர்த்தி ஆகியோர் அண்மையில் பார்வையிட்டோம். நெல்லை விற்பனை செய்த உழவர்கள், கொள்முதல் செய்யும் ஊழியர்கள், கொள்முதல் நிலையத்திலேயே வந்து நெல்லை வாங்கிச் செல்லும் தனியார் வணிகர்கள் என்று பலரையும் சந்தித்தோம்.

ஈரப்பதம் 20 % என மாற்றுக!
==========================
பதினேழு விழுக்காடுவரை ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்கிறார்கள். அங்கு வாங்க மறுத்து குவிக்கப்பட்டிருந்த நெல்லை அள்ளிப் பார்த்தோம். ஈரநெல்லாக இல்லை. கோடைக்கால சம்பா நெல்போல்தான் இருந்தது. ஆனால், அதில் 19 விழுக்காடு ஈரப்பதம் இருப்பதாக வாங்க மறுத்துள்ளனர். குறுவை நெல்லில் கொஞ்சம் கூடுதலாக ஈரப்பதம் இருப்பது இயற்கைதான். அதனால் ஆட்சியாளர்கள் குறுவை நெல் அறுவடை முடியும் தருவாயில் 20 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல்லைக் கொள்முதல் செய்யத் தளர்வு ஏற்படுத்துவது கடந்த ஆண்டுகளில் நடந்து வந்துள்ளது. அத் தளர்வை இப்போதே ஏற்படுத்தி, 20 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல்லைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தொடரும் துயர வாழ்க்கையில் உழலும் உழவர்களுக்கு உழவர்கள் கை கொடுத்து உதவியதாக இருக்கும்.

நெல் விற்கக் கையூட்டு
======================
அடுத்து ஆட்சியாளர்கள் – அதிகாரிகள் ஆகியோரின் மறைமுக அனுமதியோடு நடக்கும் ஓர் அநீதி, 40 கிலோ கொண்ட ஒரு சிப்பம் நெல்லை விற்றால் அதற்கு உழவர்கள் நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர்க்கு 40 ரூபாய் இலஞ்சம் கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இவ்வாறு ஏன் வாங்குகிறீர்கள் என்று ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள், மூட்டை தூக்கும் தொழிலாளிக்கு ஒரு மூட்டை நெல்லுக்கு நிர்ணயித்துள்ள கூலி குறைவு. வெறும் 10 ரூபாய்தான். அதை ஈடுகட்டினால்தான் தொழிலாளிகள் வருவார்கள். அடுத்து கொள்முதல் நிலையத்திற்கு நெல் மூட்டைகளை ஏற்ற வரும் தனியார் சரக்குந்துகளுக்கு ஒரு வண்டிக்கு நான்காயிரம் ரூபாய் நாங்கள் கொடுத்தால்தான் அவர்கள் மூட்டைகளை ஏற்றுவர்கள். அவர்களின் சரக்குந்து, நெல்மூட்டைகளை இறக்கும் சேமிப்புக் கிடங்குகளில், மூன்று நாள்வரை கூட காத்திருக்க வேண்டி வரும். ஓட்டுநர் உள்ளிட்டோர் உணவுச் செலவு கூடுதல் சம்பளம் போன்றவற்றை நாங்கள் கொடுத்தால்தான் சரங்குந்துகள் எங்கள் கொள்முதல் நிலையத்திற்கு வந்து ஏற்றிச் செல்லும். நாங்கள்தான் சரக்குந்துகளை ஏற்பாடு செய்ய வேண்டியதிருக்கிறது என்றார்கள் ஊழியர்கள்.

மேற்கண்டவாறு ஊழியர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்குத் தீர்வுகண்டு இலஞ்ச ஊழல் இல்லாத கொள்முதல் நிர்வாகத்தைத் தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தனியார் வேட்டை
==================
அரசுக் கொள்முதல் நிலையத்தில் மேற்கண்ட சுமைகளச் சுமக்காமல், காலதாமதம் ஆகாமல் நெல்லை விற்பதற்கு உழவர்கள் தனியார் வணிகர்களை நாடுகிறார்கள். தனியார் வணிகர்களும் கொள்முதல் நிலையங்களுக்கே வந்து அரசு நிர்ணயித்த விலையைவிடக் குறைவாகக் கொடுத்து வாங்கிச் செல்கிறார்கள். 1 மூட்டை நெல்லின் எடை 63 கிலோ என்று கூடுதலாக நிர்ணயித்து அவர்கள் வாங்கிச் செல்கிறார்கள். உடனடிப் பணத்தேவை, நெல்லைச் சேமிக்க முடியாத நிலை ஆகியவை காரணமாக அரசு விலைக்கும் குறைவாக – அதிக எடையுடன் நெல்லை விவசாயிகள் விற்கிறார்கள். அப்படி நெல்லை வாங்குவோர் பிளாஸ்டிக் நார் சாக்குகளில் நெல் பிடிக்கிறார்கள். சணல் சாக்குகளைத்தான் பயன்படுத்த வேண்டும்.

தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்களும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும் உலகநாடுகளுக்கெல்லாம் சென்று பெரும்பெருந் தொழில் முதலாளிகளை இங்கு அழைத்து வந்து அவர்கள் தொழில் தொடங்க பல்வேறு சலுகைகள் செய்கிறார்கள். உயிர்காக்கும் உணவு உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு அவர்கள் நீதிவழங்கக் கூடாதா? உழவர்களையும் கவனியுங்கள்!

நெல் கொள்முதல் நிலையங்கள்
=================================
நெல் உற்பத்தி செய்யும் பல்வேறு கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லை. இருக்கும் இடங்களிலும் இரவல் முறையில், பல்வேறு ஊர்களில் சேமிப்புக் கிடங்குகளிலோ மற்ற இடங்களிலோ இருக்கின்றன. உழவர்கள் நெல் கொள்முதல் நிலையம் கோரும் ஊர்களில், 40 சென்ட் நிலம் வாங்கித் தாருங்கள் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் உழவர்களையே கேட்கிறார்கள். நிலத்தின் விலை மிகமிக உயரத்தில் இருக்கிறது. உழவர்கள் வாங்கித்தர வாய்ப்பில்லை. அப்படி உழவர்களிடம் அரசு கேட்பதும் முறைஇல்லை. அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ள பூதலூர், கோயில்பத்து போன்ற கிராமங்களில் கூட நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமாக கொள்முதல் நிலையங்கள் இல்லை என்பது வேதனை அளிக்கும் செய்தியாகும்.

தமிழ்நாடு அரசு நெல்கொள்முதல் செய்யவில்லை. இந்திய அரசுக்குக் கொள்முதல் செய்யும் முகவராக இருக்கிறது என்பதைக் காரணம் காட்டி, தமிழ்நாடு அரசு மேற்படி குறைகளைக் களைய நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது. வெறுந் தரகர் அல்ல தமிழ்நாடு அரசு! மக்கள் குறைகளைக் களைய வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது. எனவே, குறைகளைக் களைய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

......

=============================================================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
www.kaveriurimai.com
==========================

"காவிரி உரிமையை திமுகவும் அதிமுகவும் காக்காது! மக்கள் களம் இறங்கி மீட்க வேண்டும்!"---- பெ. மணியரசன், ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு.


காவிரி உரிமையை திமுகவும் அதிமுகவும் காக்காது!

மக்கள் களம் இறங்கி மீட்க வேண்டும்!

========================================
பெ. மணியரசன்,
ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு.
========================================


கர்நாடகம் சட்டவிரோதமாக தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரைத் தடுத்து வைத்துக் கொண்டதால், மூன்றரை இலட்சம் ஏக்கர் குறுவைப் பயிர் காய்ந்து அழிந்துவிட்டது. மிச்சம் உள்ள இரண்டு இலட்சம் குறுவைப பயிரைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. அத்துடன் 12 இலட்சம் ஏக்கரில் ஒரு போக சம்பா சாகுபடி தொடங்க வேண்டியுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 44 அடிக்குக் கீழே வந்துவிட்டது. கர்நாடக அரசோ கொஞ்ச நஞ்சம் திறந்துவிட்ட தண்ணீரையும் முற்றிலுமாக மதகை மூடித் தடுத்துவிட்டது.

இந்நிலையில், 12.9.2023 அன்று கூடிய காவிரி ஒழுங்காற்றுக் குழு ஒரு நொடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் அடுத்த 15 நாட்களுக்கு தொடர்ந்து காவிரியில் கர்நாடகம் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டும் என்று கட்டளை இட்டுள்ளது. இதனை செயல்படுத்த முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும், நீர்வளத்துறை அமைச்சர் டி.கே. சிவகுமாரும் வெளிப்படையாக செய்தியாளர்களிடம் 13.9.2023 அன்று அறிவித்துவிட்டார்கள்.

இது குறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களிடம் 13.9.2023 அன்று செய்தியாளர்கள் கேட்டபோது, உச்ச நீதிமன்றத்தில் 21.9.2023 அன்று முறையிட்டு உரிய தண்ணீர் கோருவோம் என்று கூறியுள்ளார். உச்ச நீதிமன்றமோ, காயும் பயிரின் உயிர்காக்கும் அவசரத் தேவையைக் கருத்தில் கொள்ளாமல், தமிழ்நாடு அரசு 12.8.2023 அன்று தாக்கல் செய்த காவிரி நீர் கோரும் மனுவை 25.8.2023 அன்று விசாரணைக்கு எடுத்து, முடிவேதும் சொல்லாமல் வாய்தா போட்டுக் கொண்டே வருகிறது. 39 நாள் கழித்து 21.9.2023 அன்று தீர்ப்பு வருமா என்பது ஐயம்.

இப்பொழுதும், உச்ச நீதிமன்றத்தை எதிர்பார்த்துக் காத்திருப்போம் என்று தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் சொல்வது, வேளாண்மைக்கும் குடிநீருக்கும் காவிரியை நம்பியுள்ள மூன்றரைக் கோடி மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.

கர்நாடகத்தில், கடந்த ஆகஸ்ட்டில் இருந்து இன்றுவரை இரண்டு முறை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஆட்சியாளர்கள் கூட்டி, தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூடத் தரக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். 13.9.2023 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, “தமிழ்நாட்டின் திமுகவோடு காங்கிரஸ் கட்சி அரசியல் கூட்டணி சேர்ந்திருப்பது வேறு செய்தி. காவிரி நீர் சிக்கலில், கூட்டணி அரசியல் தலையிட அனுமதிக்க மாட்டோம். தாயகம், தண்ணீர், மொழி, எல்லை ஆகியவற்றில் அரசியல் மோதல் எதுவும் கர்நாடகத்துக்குள் எப்போதும் வராது. நாங்கள் ஒன்றுபட்டு இருக்கிறோம். தலைமை அமைச்சர் நரேந்திர மோடியைச் சந்தித்து எங்களது நிலைபாட்டை வலியுறுத்துவோம்” என்று கூறினார்.

செய்தியாளர்கள் இதைச் சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுவீர்களா என்று துரைமுருகனிடம் கேட்டபோது, இப்போது அதெல்லாம் தேவையில்லை. 21.9.2023 அன்று உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு அதுபற்றி யோசிக்கலாம் என்று கூறியுள்ளார்.

மேட்டூர் அணையில் 13.9.2023-ஆம் நாள் அளவின்படி 14.27 டிஎம்சி தண்ணீர்தான் உள்ளது. மேட்டூர் அணையில் நிரந்தரமாக தேக்கி வைக்கப்பட வேண்டிய நீர் இருப்பு குறைந்தபட்சம் 7 டிஎம்சியாவது இருக்க வேண்டும். கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடுவதை முற்றிலும் நிறுத்திவிட்ட இந்நிலை தொடர்ந்தால், இன்னும் சில நாட்களில் மேட்டூர் அணையை மூடவேண்டி வரும். அதன்பிறகு குறுவை பாதிப்பு மட்டும் அல்ல, ஒரு போக சம்பா, தாளடி முதலிய நெல் சாகுபடிகளும், கரும்பு, வாழை, பருத்தி, பயறு வகைகள் போன்ற சாகுபடிகளும் முற்றிலும் பாதிக்கப்படும். அடுத்து, 22 மாவட்டங்களில் குடிநீர்ச் சிக்கலும் ஏற்படும்.

இவ்வளவு அபாயம் இருக்கும் பொழுது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அசட்டையாக, அலட்சியமாக காவிரிச் சிக்கல் குறித்து பேசிக் கொண்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களோ காவிரிச் சிக்கலைப் பேசுவதைத் தவிர்த்து ஒதுங்கிக் கொள்கிறார்.

இதுவரை ஜூன் 1-லிருந்து கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு 99 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், அது திறந்துவிட்டிருப்பதோ 37 டிஎம்சி மட்டுமே. இவ்வளவு அவலம், சோகம் நடந்து கொண்டிருக்கும்போது, தமிழ்நாடு முதலமைச்சர், நீர்வளத்துறை அமைச்சர் மனங்களில் கொஞ்சம் கூட பதற்றம் இல்லை. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அன்றாடம் அனைத்திந்திய அரசியலை அலசிக் கொண்டிருக்கிறார். இண்டியா கூட்டணியின் பிரச்சார பீரங்கியாகப் பேசி வருகிறார். தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீர்பற்றிப் பேசினால், அனைத்திந்தியத் தலைவராக வளர்த்துவரும் தனது பிம்பம் பாதிக்கப்படுமோ என்று அச்சப்படுகிறார் போலும். அண்மையில் தஞ்சை - திருவாரூர் - நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகளில் 2 நாள் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் காவிரி தண்ணீர் பற்றி எதுவும் பேசவில்லை.

ஆனால் இண்டியா கூட்டணிக்குத் தலைமை தாங்கும் காங்கிரசின் கர்நாடக ஆட்சி, அரசியல் கூட்டணி பற்றிக் கவலைப்படபாமல், சட்டப்படியான தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரைத் தடுத்து கன்னட இனவாத அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது. 12.9.2023 அன்று ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் வினீத் குப்தா ஒரு நொடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் கர்நாடகம் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார். ”இது பரிந்துரை (recommendation) அல்ல, கட்டளை (direction)” என்று தெளிவாகக் கூறியுள்ளார் (The Hindu, 13.9.2023). காவிரி ஒழுங்காற்றுக் குழு கூறியுள்ளது கட்டளை அல்ல, வெறும் பரிந்துரைதான் என்று 13.9.2023 அன்று திரித்துப் பேசியிருக்கிறார் கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர். இதற்குக் கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டாமா?

உச்ச நீதிமன்றத்தை மட்டுமே நாடுவோம் என்று திமுக ஆட்சியாளர்கள் அடம்பிடிப்பதன் சூட்சுமம் என்ன? உச்ச நீதிமன்றம் 16.2.2018 அன்று வழங்கிய காவிரிச் வழக்கு இறுதித் தீர்ப்பில், காவிரி மேலாண்மை ஆணையத்துக்குள்ள அதிகாரத்தைக் கூறிவிட்டு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டளையை, தொடர்புடைய ஏதாவது ஒரு மாநிலம் செயல்படுத்தவில்லை என்றால், அதைச் செயல்படுத்துமாறு ஆணையம் இந்திய அரசைக் கோர வேண்டும், இந்திய அரசு அதைச் செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. (உச்ச நீதிமன்றத் தீர்ப்பு செயலாக்கப் பகுதி VIII) காவிரி ஆணையத்தின் தலைவராக உள்ள சௌமித்ர குமார் ஹல்தர் நடுநிலை தவறிய மனிதர் என்று காவிரி உரிமை மீட்புக் குழு பலதடவை குற்றம் சாட்டியுள்ளது. அவர் தனது உத்தரவைக் கர்நாடகம் மீறும்போது அதைச் செயல்படுத்திட இந்திய அரசின் அதிகாரத்தை நாட வேண்டும். ஆனால் அவர் நாட மாட்டார். அதே வேளை, தமிழ்நாடு முதலமைச்சரும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிட இந்திய அரசு போர்க்கால அடிப்படையில் தலையிட வேண்டும் என்று உரியவாறு ஏன் வலியுறுத்தக் கூடாது? பொது மக்கள் மனு கொடுப்பது போல் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாடு முதலமைச்சரும் நீர்வளத்துறை அமைச்சரும் சம்பிரதாயத்துக்கு மனு கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொண்டது ஏன்?

நரேந்திர மோடி இதில் தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டிருக்கும் போது, தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை நடத்தி, அதில் வலிமையான தீர்மானம் நிறைவேற்றி, தலைமை அமைச்சர் தலையிட வேண்டும் என்று கோரியிருக்கவேண்டும். அனைத்துக் கட்சி குழுவினரை புதுதில்லி அழைத்துச் சென்று தலைமை அமைச்சரைச் சந்தித்துப் பேசியிருக்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்யவில்லையே ஏன்? தண்ணீரைத் திறந்துவிடாமல் வைத்திருக்கும் கர்நாடக முதலமைச்சர், தில்லி சென்று தலைமை அமைச்சரைச் சந்திப்போம் என்கிறார்.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, 13.9.2023 அன்று பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது பருவமழை பொய்த்து கர்நாட அணைகளில் போதிய தண்ணீர் இல்லாத போது அந்நிலையில் காவிரி நீரை எப்படிப் பகிர்ந்து கொள்வது என்பதற்கு வழிகாட்டல் நெறிமுறைகள் வகுக்கப்படவில்லை என்று தவறான செய்தியை வெளியிட்டார். அதற்குக் கூட தமிழ்நாடு முதலமைச்சர் பதில் சொல்லவில்லை. காவிரிச் சிக்கலில் உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பில் வால்யூம் V பக்கம் 212 (Vol. V Page 212 Point 28) பின்வருமாறு கூறுகிறது:

“பருவமழை தவறி பற்றாக்குறை ஏற்படும் ஆண்டில், வழக்கமான நீர்ப்பெருக்கம் குறைந்து போயிருந்தால் அதை விகிதாச்சார அடிப்படையில் கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு, மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதி ஆகியவற்றுக்கு காவிரி ஒழுங்கு முறை ஆணையம் பகிர்ந்து தர வேண்டும்”.

அதாவது மேற்படி நான்கு மாநிலங்களிலும், பல வழிகளில், ஓர் ஆண்டின் சராசரி நீர்ப்பெருக்கம் 740 டிஎம்சி என்று காவிரித் தீர்ப்பாயம் கூறியதை உச்ச நீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொண்டது. இதில் கர்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களின் சராசரி நீர்ப்பெருக்கம், முதலியவை குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த சராசரியை விட கர்நாடக நீர்ப்பெருக்கம் குறைந்திருந்தால், அது எத்தனை விழுக்காட்டு விகிதம் குறைந்திருக்கிதோ அத்தனை விழுக்காட்டு விகிதத்திற்கு ஏற்ப தமிழ்நாட்டுக்குத் திறந்து விட வேண்டிய தண்ணீரைக் குறைத்துக் கொண்டு திறந்துவிட வேண்டும். இவ்வாறு உச்சநீதிமன்றத் தீர்ப்பு வழிகாட்டியிருக்கும்போது பற்றாக்குறை கால பகிர்வு விகிதம் தீர்ப்பில் சொல்லப்படவில்லை என்று முற்றிலும் தவறான செய்தியை கர்நாடக முதல்வர் சொல்கிறார். அதற்குக் கூட தமிழ்நாட்டு முதல்வர் ஏன் எதிர்வினை ஆற்றவில்லை?

தமிழ்நாட்டு மக்களை மயக்கி, வசப்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலையில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக முன்னாள் ஆளுங்கட்சியும் இந்நாள் எதிர்க்கட்சியுமான அஇஅதிமுக காவிரிச் சிக்கலில் பெருமளவுக்கு தமிழ்நாட்டு உழவர்களும், மக்களும் வஞ்சிக்கப்பட்டிருக்கும்போது அதை எதிர்த்து ஏன் போராடவில்லை? காவிரியை மையப்படுத்தி கடுமையான விவாதங்களைக் கூட அரசியல் அரங்கில் அஇஅதிமுக எழுப்பவில்லையே!

தமிழ்நாட்டு மக்களும் உழவர்களும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியும், ஆண்ட கட்சியும் தமிழ்நாட்டு மக்களை எளிதாக வசப்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றன. கர்நாடகத்திலோ, போதிய தண்ணீர் அவர்களது அணைகளில் இருந்தபோதும், மிகமிக அற்ப சொற்பமாக 5 ஆயிரம் கன அடிதண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று ஆணையமும், ஒழுங்காற்றுக் குழுவும் சொன்னதை எதிர்த்து உழவர்களும், மக்களும் பரவலாக பற்பல வடிவங்களில் போராடி வருகிறார்கள். நாமோ சிற்சில அடையாளப் போராட்டங்களை அங்கங்கே நடத்துவதோடு நின்று கொள்கிறோம். பெரும் பெரும் அரசியல் கட்சிகள் இவற்றைக் கையிலெடுப்பதில்லை.

காவிரியில் நாம் இழந்திருப்பது ஏராளம். 1984 வரை ஓராண்டுக்கு சராசரியாக 362 டிஎம்சி தண்ணீர் கர்நாடகத்திலிருந்து தமிழ்நாடு பெற்று வந்தது என்று பொதுப்பணித்துறையின் அதிகாரப்பூர்வ ஆவணம் கூறுகிறது. இப்போது வெறும் 177.25 டிஎம்சி தண்ணீரையும் திறந்துவிட மறுக்கிறார்கள். ஏன்? தமிழ்நாட்டு அரசியலின் தகுதியை கன்னடர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள்தான் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். ஆட்சியாளர்களையும், ஆகப் பெரும் கட்சிகளையும் எதிர்பார்க்காமல் நம்முடைய வாழ்வுரிமை, வேளாண்மை, குடிநீர் ஆகியவற்றைக் காப்பாற்ற நாம் போராட வேண்டும். பெருந்திரள் களப் போராட்டங்கள் தமிழ்நாடெங்கும் பரவினால் ஒழிய கர்நாடகமும் இந்திய அரசும் நீதிக்குத் தலைவணங்காது. நாம் நமது வாழ்வுரிமையைக் காக்கக் களம் இறங்க வேண்டும்.

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
www.kaveriurimai.com
==========================
 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger