கர்நாடகம் மேகத்தாட்டுவில் காவிரியில்
புதிய அணைகள் கட்ட முயன்றால் தடுத்து முறியடிப்போம்!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரும்,
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான
தோழர் பெ.மணியரசன் அறிக்கை !
ஆடுதாண்டு காவிரி என்று அறியப்பட்டுள்ள மேகத்தாட்டு வனப்பகுதியில், காவிரியின் குறுக்கே 3 நீர்த்தேக்கங்கள் கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டிருப்பதாக அம்மாநில சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா, நேற்று (21.08.2013) பெங்களுருவில் அறிவித்துள்ளார்.
இம்மூன்று நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 50 ஆ.மி.க.(டி.எம்.சி.) என்றும் கூறியுள்ளார். கர்நாடகத்திலிலிருந்து வெளியேறும் காவிரி உபரி நீரைத் தேக்கி, மின்சாரம் எடுக்கவும், குடிநீருக்குப் பயன்படுத்திக் கொள்ளவும் இவ்வணைகள் கட்டப்படவுள்ளதாகவும் இவற்றிற்கான செலவு மதிப்பீடு ரூ. 600 கோடி என்றும் அறிவித்துள்ளார். இத்திட்டத்தை இறுதி செய்வதற்காக நேற்று பாசன மற்றும் மின்துறை வல்லுநர்கள் கூட்டம் நடந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு நடுவண் அரசின் அரசிதழில் வெளியிட்டப் பிறகு, காவிரியில் புதிய அணைகள் கர்நாடகம் கட்டுவதற்கு முழு உரிமையுண்டு எனறும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட மூன்று அணைகள் கட்டப்பட்டுவிட்டால், ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்கு காவிரியில் வராது. பாலாற்றுக்கு ஏற்பட்ட கதிதான் காவிரிக்கும் ஏற்படும்.
வெள்ளக் காலத்தில் வெளியேற்றப்படும் உபரி நீர் அனைத்தையும் இந்த மூன்று அணைகளும் தேக்கிக் கொள்ளும். 50 டி.எம்.சி. அணை என்பது, இப்பொழுதுள்ள கிருட்டிணராஜசாகர் அணையை விடக் கூடுதல் கொள்ளளவு கொண்டதாகும். கிருட்ஷ்ணராஜ சாகர் அணையின் முழுக் கொள்ளளவு 44 ஆ.மி.க.
கேரளப் பகுதியில் உற்பத்தியாகி வரும் கபினியின் உபரி நீர் முழுவதும் நேரடியாக மேட்டூர் அணைக்கு இப்பொழுது வந்து கொண்டுள்ளது. இந்த கபினி அணையின் உபரி நீர் தமிழகத்திற்கு வராமல் தடுக்கும் சதித்திட்டம் தான் கர்நாடகம் தீட்டியுள்ள மேகத்தாட்டு நீர்த்தேக்கத் திட்டம்.
கிருஷ்ணராஜ சாகரிலிருந்தும், கபினியிலிருந்தும் அருட்காவதி ஆற்றிலிருந்தும் வரும் உபரி நீர் முழுக்க மேட்டூருக்கு இப்பொழுது வந்து கொண்டுள்ளது. இந்நீர் முழுவதையும் தடுத்து தேக்கி வைத்துக் கொள்வதற்காகத்தான் தமிழக – கர்நாடக எல்லையான பில்லிகுண்டுலுவுக்கு மேலே 35 கி.மீ. தொலைவிலுள்ள மேகத்தாட்டுவில் புதிய அணைகள் கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு செயல்படுத்த முனைகிறது.
வெள்ளக் காலத்தில் இப்பொழுதுள்ள கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீராக 50 ஆ.மி.க. வெளியேறுவற்கு வாய்ப்பில்லை. எனவே, உபரி நீர் முழுவதையும் ஒரு சொட்டுக் கூட தமிழ்நாட்டிற்கு விடாமல் தேக்கிக் கொள்ள புதிய அணைகள் கட்ட சதித்திட்டம் தீட்டியுள்ளது.
காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு உபரித் தண்ணீரை கர்நாடகம் தேக்கிக் கொள்ள அனுமதியளித்துள்ளதென்று அம்மாநில சட்ட அமைச்சர் கூறுவது முழுப்பொய். கர்நாடகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 270 ஆ.மி.க. தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமைதான் அவர்களுக்கு இருக்கிறதே தவிர, தமிழ்நாட்டிற்கு ஓடிவரும் உபரித் தண்ணீரைத் தேக்கிக் கொள்ள கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் கிடையாது. அந்த 270 ஆ.மி.க.வையும் தமிழ்நாட்டிற்கு 192 ஆ.மி.க. தண்ணீரை கொடுத்துவிட்டுத்தான் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையோ, தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளையோ செயல்படுத்தாமல் அடாவடித் தனம் செய்யும் கர்நாடகத்திற்கு நடுவண் அரசின் மறைமுக ஆதரவு இருக்கிறது என்ற துணிச்சலில் தான் கர்நாடக அரசு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல், புதிய அணைகள் கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தை பயன்படுத்திக் கொள்ளும் உரிமை தமிழ்நாட்டிற்கு உண்டா இல்லையா என்பதை நடுவண் அரசு தெளிவுபடுத்தியாக வேண்டும். ஏனெனில், அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாகத்தான் எல்லா அநீதிகளையும் அட்டூழியங்களையும் கர்நாடகம் இழைத்து வருகின்றது.
அடுத்து, இந்தியாவுக்குள் தமிழ்நாடு இருக்கிறதா இல்லையா, தமிழ்நாட்டிற்கு நீதி வழங்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறதா இல்லையா என்பதை இந்திய அரசு அறிவித்தாக வேண்டும்.
தமிழ்நாட்டிற்குரிய இப்பொறுப்புகள் இந்திய அரசுக்கு இருக்கிறதென்றால், பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக இதில் தலையிட்டு, மேகத்தாட்டுவில் கர்நாடகம் புதிய அணைகள் கட்டுவதற்கு அனுமதியில்லை என்றும் அந்த முன்மொழிவிற்குக் கண்டனம் தெரிவித்தும் அறிக்கை வெளியிட வேண்டும்.
தமிழக அரசு, உடனடியாக இந்த அபாயத்தை உணர்ந்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கர்நாடகத்தின் அட்டூழியங்களுக்கு எதிராகவும் நடுவண் அரசின் ஓரவஞ்சனைக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்த வேண்டும். தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் குழுவினரை அழைத்துக் கொண்டு பிரதமரை நேரில் சந்தித்து, தமிழகத்திற்குரிய நீதியை நிலைநாட்ட வற்புறுத்த வேண்டும்.
கர்நாடக அரசு, மேகத்தாட்டுவில் அணைகள் கட்ட முயன்றால் தமிழ்நாட்டிலிருந்து உழவர்களும், தமிழின உணர்வாளர்களும் பல்லாயிரக்கணக்கில் திரண்டு மேகத்தாட்டுவுக்கே சென்று, கால்கோள் விழா நடத்தவிடாமல் தடுப்போம்! அணைகள் கட்டும் முயற்சியை முறியடிப்போம் என்பதை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பிலும், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்ஙனம்,
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.
ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு