தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


Home » » கங்கை - காவிரி இணைப்பு எனும் பித்தாலாட்ட சூழ்ச்சித் திட்டம்

கங்கை - காவிரி இணைப்பு எனும் பித்தாலாட்ட சூழ்ச்சித் திட்டம்


கங்கை - காவிரி இணைப்பு நடந்துவிட்டால், தமிழ்நாட்டிற்குத் தண்ணீர்ப் பற்றாக்குறையே ஏற்படாது, கர்நாடகத்திடம் கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டிய தேவை இல்லை என்று காவிரிப் போராட்டம் வளர்ந்து கொண்டிருந்தபோது தமிழகத்தில் சிலர் மாற்றுத் திட்டம் சொன்னார்கள்.

நல்ல திட்டமாக இருக்கிறதே, சண்டை வம்பு இல்லாமல் தமிழகத்திற்குத் தண்ணீர் வரவாய்ப்பிருக்கிறதே! கங்கையிலிருந்து ஏராளமாகத் தண்ணீர் வீணாகக் கடலில் போய்க் கலக்கிறது. எனவே அது தமிழ்நாட்டுக்கு வரட்டும் என்று நம் உழவர்கள் கருதினார்கள்.

பணம்தான் அதிகமாகச் செலவாகும்; அதை இந்திய அரசு ஏற்றுக் கொள்ளட்டும் என்று அவர்கள் கருதினார்கள்.

ஆனால் உத்திரப் பிரதேச மக்களும், அரசும் பீகார் மக்களும் அரசும், கங்கையாற்றில் வாய்க்கால்கள் வெட்டித் தண்ணீரை ஒரிசா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு எனக் கொண்டுவந்து வழிநெடுக உள்ள மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பார்களா என்ற ஒரு வினாவை மட்டும் நம்மவர்கள் தங்களுக்குள் கேட்டுக் கொள்ளத் தவறிவிட்டார்கள்.

கங்கை - காவிரி இணைப்பு பற்றி பா.. ஆட்சியில் இந்திய அரசு வாய்வீச்சு அடித்தது. உடனே பதிலடி கொடுத்தார் லல்லு பிரசாத்! கங்கை - காவிரி இணைப்புக் கால்வாயில் தண்ணீர் ஓடாது, இரத்தம் தான் ஓடும் என்றார். .பியிலும் கங்கைநீரை தென் மாநிலங்களுக்குக் கொண்டுபோகும் திட்டத்தை அரசியல் கட்சிகள் எதிர்த்தன.

கங்கை - காவிரி இணைப்பை உறுதிப்படுத்தி விரைவுப்படுத்த ஆணையிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். உச்ச நீதிமன்றமும் பேருவகையோடு, கங்கை - -காவிரி இணைப்பை செயல்படுத்தியே ஆகவேண்டும் என்று தீர்ப்புரைத்தது. அதற்கான ஆய்வுக் குழுவை நிறுவுமாறு வாஜ்பாய் அரசுக்குக் கட்டளையிட்டது. ஆய்வுக் குழுவும் அமைக்கப்பட்டது. ஓரிரு கூட்டம் நடத்தியபின் அந்தக் குழு மறைந்து போனது.

ஒருபோதும் கங்கை - -காவிரி இணைப்பு நடக்கப் போவதில்லை. வட நாட்டார் அத்திட்டத்தைத் தமிழ்நாட்டிற்கு அனுமதிக்க மாட்டார்கள். இருப்பதை இழந்துவிட்டுப் பறப்பதைப் பிடிக்க நினைக்கும் பைத்தியக்காரத்தனம்தான் கங்கை- - காவிரி இணைப்பு.

கங்கை - -காவிரித் திட்டத்தின் மூலவர் 1960களில் நடுவண் பாசன அமைச்சராக இருந்த கே.எல். இராவ். அவர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். அவர் நல்ல நோக்கத்தோடு கற்பனை செய்த திட்டம் - - பூமாலைத் திட்டம் என்னும் பெயர் படைத்த, இந்திய நாட்டு ஆறுகளையெல்லாம் பூமாலை வடிவத்தில் ஒரு கால்வாய் வெட்டி இணைக்கும் திட்டம்! ஆனால் நடைமுறைப்படுத்த முடியாதத் திட்டம்.

காலம் காலமாகத் தமிழகத்தின் செவிலித்தாயாக - ஓடிவந்த காவிரியை அண்டை மாநிலத்தவர்கள் தடுக்கிறார்கள். அவர்கள் தடுப்பதைத் தகர்த்தெறியப் பன்னாட்டுச் சட்டநெறிகளும் இந்திய நாட்டுச் சட்டங்களும் இருக்கும் நிலையில் அதையே காப்பாற்ற முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் போது, புதிதாக இரண்டாயிரம் கிலோ மீட்டருக்கப்பாலிருந்து கங்கை நீரைக் கொண்டு வரலாம் என்று நினைப்பது எவ்வளவு ஏமாளித்தனம்!
ஆனால் கங்கை- - காவிரித் திட்டத்தை நடந்துவிடக் கூடிய சாதனை போல் கதை கட்டியவர்களுக்கு ஓர் உள்நோக்கம் இருக்கிறது. காவிரி மீட்புப் போராட்டத்திலிருந்து தமிழர்களின் கவனத்தைத் திருப்பி, கானல் நீர்த்திட்டமான கங்கை- - காவிரித் திட்டத்தின் பக்கம் மடைமாற்றி விடுவதுதான் அவர்களின் சூழ்ச்சித் திட்டம்.

காவிரிக் குடும்ப சூழ்ச்சி போல் - தமிழர்கள் இன உணர்வு பெற்று ஒருங்கினைந்து போராடக்கூடாது என்பது இச்சூழ்ச்சிக்காரர்களின் உள்நோக்கம். காவிரியின் பெயரால் தமிழ் இன எழுச்சி ஏற்பட்டால் அது அதற்கு மேலும் வளர்ந்து தனித் தமிழ்த் தேசம், ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்பு என்ற தளங்களுக்கு விரிவடையும் எனபதுதான் சூது மதியாளர்களின் அச்சம்!

ஆனால் நம் தமிழ் மக்களில் ஒரு சாரார் கங்கை--காவிரி இணைப்பை நம்பும் அளவிற்கு ஏமாளிகளாக இருக்கக் கூடாது. ஏமாளிகளாக இருப்பதில் ஓர் உளவியல் இருக்கிறது. விவரம் தெரியாமல் ஏமாளிகளாக இருப்பது ஒரு வகையினர்; இன்னொரு வகையினர், போராடாமல் எது கிடைக்குமோ அது கிடைக்கட்டும் என்ற அடிமன ஊசலாட்டக்காரர்கள்! பாடுபடாமல் பலன் கிடைத்தால் அனுபவிக்கலாம் என்ற மனநிலை!

கங்கை - காவிரி இணைப்பெல்லாம் எந்தக் காலத்திலும் நடக்காது. உலகெங்கும் தண்ணீர்ப் பற்றாக்குறை வந்து, தண்ணீரைக் கைப்பற்றிக் கொள்வதற்காக மூன்றாவது உலகப் போர் மூண்டாலும் மூளலாம் என்று அறிஞர்களும் அரசியல் நோக்கர்களும் கருதும் சூழல் உருவாகியுள்ளது.

புவி வெப்பம் கூடுதலாகி பருவ நிலை மாறி, மழை குறையும் ஆபத்து இந்தியாவுக்கும் இருக்கிறது; தமிழ்நாட்டிற்கும் இருக்கிறது. உலகில் பல நாடுகளுக்கும் இருக்கிறது.

இந்தப் பின்னணியில் வெளி நாடுகளில் நிலம் வாங்குவது என்ற போக்கு உலக நாடுகளில் இப்போது தீவிரப்பட்டிருக்கிறது. சீனா இந்தியாவில் நிலம் வாங்குகிறது. இந்தியப் பெருமுதலாளிகள் ஆப்பிரிக்க நாடுகளில் நிலம் வாங்குகிறார்கள். ஒவ்வொருவரும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்குகிறார்கள். தமிழ் மக்கள் எங்கே போக முடியும்?

தண்ணீருக்கு நெருக்கடி வரும்போது உலகு தழுவிய அளவில் இருக்கும் நீரைப் பகிர்ந்து கொள்ளும் நிலை உருவாகாது! அந்தந்தத் தேசிய இனமும், அந்தந்தத் தேசமும் தன்னைக் காத்துக் கொள்ளத்தான் முந்தும். அவ்வாறான நெருக்கடிச் சூழலில் தேச உணர்ச்சி - தேச வெறியாக மாறும்.

தன்னைத் தற்காத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்ற இனம்தான் உரிமை வாழ்வு வாழும். ஓர் இனத்திற்குத் தற்காப்பாற்றல் இல்லை எனில் ஒரு பகுதி மக்கள் அழிவர்; மறுபகுதி மக்கள் அண்டிப் பிழைக்கும் அவலத்தில் தள்ளப்படுவர்.

எனவே காவிரி உரிமை, முல்லைப் பெரியாறு உரிமை, பாலாற்று உரிமைப் போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டிய வரலாற்றுக் கடமை தமிழர்களின் வாசல் கதவைத் தட்டுகிறது.


தமிழகத்திற்கும் கேரளத்திற்குமான எல்லையை வரையறுத்து நமது பக்கமுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் ஓடிவரும் நீரோடைகளை, அருவிகளை நமக்குரியதாக்கிக் கொள்ளும் முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும். விழிப்புணர்ச்சி தேவை; வீரம் தேவை!
அடுத்த பகுதி 

காவிரிச்சிக்கல் - ஓர் முழுமையான வரலாறு
  1. காவிரி தமிழரின் செவிலித்தாய்
  2. நடுவர் மன்றத் தீர்ப்பு கூறுவது என்ன?
  3. ஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு
  4. உச்சநீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி
  5. இந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்
  6. போராட மறுக்கும் பெரிய கட்சிகள்
  7. நம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு
  8. மக்கள் என்ன செய்கிறார்கள்?
  9. “காவிரிக் குடும்பம்” எனும் இனத்துரோக அமைப்பு
  10. கங்கை - காவிரி எனும் பித்தலாட்ட சூழ்ச்சித் திட்டம்
  11. பன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதில்லை? 
  12. எப்போது வெல்வோம்? என்ன போராட்டம் நடத்துவது?
Share this video :

0 கருத்துகள்:

Post a Comment

 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger