தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


காவிரி மீட்பு வெற்றி விழாவா? வெற்று விழாவா? தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

காவிரி மீட்பு வெற்றி விழாவா? வெற்று விழாவா? காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
“காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட விளக்கப் பொதுக்கூட்டம்” என்ற தலைப்பில், இன்று (18.06.2018) மாலை மயிலாடுதுறையில், ஆளும் அ.தி.மு.க. மாபெரும் கூட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. அதில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.

கடந்த 09.06.2018 அன்றுதான், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இவ்வாண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையைத் திறக்க முடியாது – எனவே, நிலத்தடி நீர் பாசனத்தை ஊக்கப்படுத்த மின்சாரம் வழங்கப்படும் என்றும், மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய ஊக்கம் தரப்படும் என்றும் அறிவித்தார். ஒன்பது நாட்களுக்குள் காவிரியில் எந்த உரிமையை மீட்டார்? என்ன வெற்றி கண்டார்? எதற்காக “வெற்றி விழா”?

உச்ச நீதிமன்றம் 31.06.2018க்குள், காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்திட காலவரம்பிட்டு இறுதித் தீர்ப்பு வழங்கி விட்டது. ஆனால், இந்திய அரசு இதுவரை மேலாண்மை ஆணையம் அமைக்கவில்லை. 

நடுவண் நீர் வளத்துறையின் வேறொரு பிரிவில் தலைவராக உள்ள மசூத் உசேன் என்பவரை காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் பொறுப்புத் தலைவராக அமர்த்திவிட்டு, ஒதுங்கிக் கொண்டது மோடி அரசு! நடுவண் அரசு அமர்த்த வெண்டிய இரண்டு முழு நேர உறுப்பினர்கள் – இரண்டு பகுதி நேர உறுப்பினர்கள், மற்றும் ஒரு செயலாளர் ஆகியோரை மோடி அரசு அமர்த்தாமல், தமிழ்நாட்டுக்கு எதிராக இனப்பாகுபாட்டு அரசியல் நடத்தி வருகிறது! 

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்கள் தங்களுக்குரிய தலா ஒரு பிரதிநிதியை ஆணையத்திற்கு நியமித்துவிட்டார்கள். கர்நாடகம் மட்டும் தனது பிரதிநிதியை நியமிக்கவில்லை! 

கர்நாடகம் தனது பிரதிநிதியை நியமிக்காததால், காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கு தடை ஒன்றுமில்லை! காவிரி ஆணையத்தின் சட்டதிட்டப்படி அதன் செயலாளருக்கு மட்டும் ஓட்டுரிமை இல்லை! எஞ்சிய ஒன்பது பேர் பெரும்பான்மை அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். மேலாண்மை ஆணையத்தில் ஒன்று அல்லது இரண்டு மாநிலப் பிரதிநிதிகள் வராவிட்டாலும், தடை இல்லை!

குறைந்தபட்ச வருகையாக (கோரம்) மொத்தமுள்ள ஒன்பது பேரில் ஆறு பேர் வந்திருந்தால், கூட்டம் நடத்தலாம். எனவே, இப்பொழுது கர்நாடகப் பிரதிநிதி இல்லை என்பதால், மேலாண்மை ஆணையத்திற்கு நடுவண் அரசு அமர்த்த வேண்டிய உறுப்பினர்களை அமர்த்தாமல் இருப்பதும், ஆணையக் கூட்டத்தை நடத்தாமல் இருப்பதும் திட்டமிட்டு தமிழ்நாட்டைப் பழிவாங்குகிறது என்பதற்குரிய சான்றாகும்! 

நடுவண் அரசின் இந்தப் பழிவாங்கலுக்கு, துணை போகிறது எடப்பாடி அரசு! காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட நடுவண் அரசுக்கு எடப்பாடி அரசு அழுத்தம் கொடுத்து, இந்நேரம் அதில் வெற்றி பெற்று, சூன் மாதத்திற்குரிய 9 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகத்திலிருந்து திறந்து விடப்பட்டிருந்தால், ஆளுங்கட்சி “வெற்றி விழா” கொண்டாடலாம்! 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி உரிமை மீட்பில் தனது தோல்வியைத் தானே ஒத்துக் கொள்ளும் வகையில், குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என அறிவித்துவிட்டு, இப்பொழுது “காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விழா” நடத்துவது முற்றிலும் முரண்பாடாக உள்ளது! 

அடுத்து, மேட்டூர் அணையில் 90 அடி தண்ணீர் தேங்கினால்தான் குறுவைக்குத் திறக்க முடியும் என்று பழைய நிலையில் இன்றும் பேசுவது சரியல்ல! மேலாண்மை ஆணையம் சூன் மாதத்திற்கு 9 டி.எம்.சி.யும், சூலை மாதத்திற்கு 30 டி.எம்.சி.யும், அதைப்போல் ஆகத்து மாதத்திற்கு உரிய தண்ணீரையும் திறந்துவிட வேண்டும்! அதுதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு! எனவே, உடனடியாக மேலாண்மை ஆணையத்தை நடுவண் அரசு அமைக்கச் செய்து, மாதவாரியாக கர்நாடகத்திலிருந்து தண்ணீர் பெறும் உரிமையை செயல்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால், இன்னும் சில நாட்களில் குறுவைக்குத் தண்ணீர் திறக்க முடியும்! 

கர்நாடகத்தின் நான்கு அணைகளில் கபிணி, ஏமாவதி, ஏரங்கி அணைகள் நிரம்பிவிட்டன. கே.ஆர்.சாகரும் நிரம்பப் போகிறது. மாதவாரியாகத் திறந்துவிட, இதற்கு மேல் கர்நாடகத்திற்கு தண்ணீர் தேவை என்ன இருக்கிறது? தமிழ்நாடு முதலமைச்சர் இதைச் செயல்படுத்தி வைக்க, உருப்படியான நடவடிக்கை எடுத்தால், அவர் கேட்காமலே மக்கள் அவரைப் பாராட்டுவார்கள்! இதையெல்லாம் செய்யாமல், மேட்டூர் அணையைக் காயப்போட்டுவிட்டு, ஆற்று நீர்ப் பாசனக் குறுவையை கைவிடச் சொல்லிவிட்டு, போலி வெற்றி விழா கொண்டாடினால், அதை ஏற்றுக் கொள்ள இன்று மக்கள் தயாராக இல்லை என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். 

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

கர்நாடகத்தின் ஊதுகுழலாக தமிழ்நாடு முதலமைச்சர் பேசுகிறார்! தோழர் பெ. மணியரசன் கண்டனம்!

கர்நாடகத்தின் ஊதுகுழலாக தமிழ்நாடு முதலமைச்சர் பேசுகிறார்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (08.06.2018) முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், சூன் 12 ஆம் நாள் மேட்டூர் அணையைத் திறக்க இயலாது என்று கூறியபோது, அதற்கான காரணம், பருவமழை பொய்த்துப் போனதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
கர்நாடகத்தில் பருவமழை எத்தனை விழுக்காடு பொய்த்துப் போயுள்ளது, இப்பொழுது கர்நாடகத்தின் வெளியே தெரிந்த அணைகளிலும் காவிரி நீரைப் பதுக்கிக் கொள்ள கட்டப்பட்ட புதிய நீர்த் தேக்கங்களிலும் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்ற உண்மை விவரத்தை முதல்வர் வெளியிட்டிருக்க வேண்டும். அந்த நீர் இருப்பில், விகிதாச்சாரப் பகிர்வு (Prorate) அடிப்படையில் இவ்வளவு நீர் தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வேண்டும், ஆனால் கர்நாடகம் திறந்துவிட மறுத்து விட்டது என்ற விவரங்களைக் கூறி இருக்க வேண்டும்.
 
அவ்வாறு, உண்மை விவரங்களைக் கூறாமல் கர்நாடக அரசு கூறுகின்ற “பருவமழை பொய்த்து விட்டது” என்ற பொய்யை தமிழ்நாடு முதல்வரும் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. உண்மையில், கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இயல்பான மழை அளவைவிட இந்த ஆண்டு (2018) சனவரி 1-லிருந்து மே 31 வரையிலான மழை அளவு கூடுதலாக இருப்பதை கர்நாடக அரசின் புள்ளி விவரங்களே கூறுகின்றன.
 
எடுத்துக்காட்டாக, மைசூரு மாவட்டத்தில் வழக்கமான மழை அளவு 230 மி.மீ. ஆகும். ஆனால், இப்போது பெய்துள்ள மழை அளவு 309 மி.மீ. மாண்டியாவில் வழக்கமான மழை அளவு 184 மி.மீ. ஆகும். ஆனால், இப்போது பெய்துள்ள மழை அளவு 295 மி.மீ. சாம்ராஜநகரில் வழக்கமான மழை அளவு 230 மி.மீ. ஆகும். ஆனால், இப்போது பெய்துள்ள மழை அளவு 309 மி.மீ. இந்த உண்மையை எடுத்துக்கூறி பங்கு நீரைக் கேட்பதற்கு மாறாக, கர்நாடகாவை முந்திக் கொண்டு “மழை பொய்த்துவிட்டது” என்று தமிழ்நாடு முதலமைச்சர் பொய்யான தகவலைத் தர வேண்டிய தேவை என்ன?
 
சட்டவிரோத நடவடிக்கைகள் – இனவெறி நடவடிக்கைகள் ஆகியவற்றின் உறைவிடமாக விளங்கும் கர்நாடக அரசின் ஊது குழலாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையிலேயே பேசியிருக்கிறார். பருவமழை பொய்த்துவிட்டதால், சூன் மாதம் தண்ணீர் திறக்க முடியாது என்று கூறுயிருக்கிறார்.

குறுவைத் தொகுப்புத் திட்டத்திற்கு ரூபாய் 115 கோடி ஒதுக்கியுள்ளதாக முதலமைச்சர் அறிவித்திருப்பது, குறுவையை இவ்வாண்டும் தமிழ்நாடு அரசு கைகழுவிவிட்டது என்பதற்கான முன்னோட்டமே!
 
டெல்டாவில் ஐந்து மாவட்டங்களில் 5 இலட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வந்தது. அதையும் 3 இலட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் என்று குறைத்துச் சொல்கிறார் முதல்வர்! அந்த 3 இலட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய காவிரித் தண்ணீர் வேண்டுமல்லவா? நிலத்தடி நீர் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உப்பாகிவிட்டது. தஞ்சை மாவட்டத்தில், ஏற்கெனவே பல பகுதிகள் பாறையாக இருப்பதால் நிலத்தடி நீர் இல்லை. டெல்டாவில் நிலத்தடி நீர் சாகுபடி என்பது மிகக் குறைந்த பரப்பளவில்தான் நடக்கிறது.
 
காவிரி நீர் வராவிட்டாலும் குறைவில்லாமல் குறுவை சாகுபடி செய்ய முடியும் என்பதுபோல் முதல்வர் பேசியிருப்பது கர்நாடகத்தின் மற்றும் இந்திய அரசின் குரலாக உள்ளது.
 
குறுவைக்குரிய தண்ணீரைப் பெற எடப்பாடி பழனிச்சாமி அரசு என்ன முயற்சி எடுத்தது? நடுவண் அரசின் தலையீட்டைக் கோரியதா? அனைத்துக் கட்சிக் குழுவடன் தில்லிக்குச் சென்று, அமைச்சர்கள் சந்திக்க மறுத்தாலும் ஒரு போராட்ட உத்தியாக அதிகாரிகளைச் சந்தித்து வலுவாகக் குரல் கொடுத்திருக்கலாம். அதைக்கூட செய்யவில்லை!
 
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 2018 மே 31 ஆம் நாளுக்குள் காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்திருக்க வேண்டும். அதை அமைக்காமல் சாக்குப்போக்கு சொல்லி நரேந்திர மோடி அரசு வேண்டுமென்றே காலம் கடத்துகிறது.
 
மேலாண்மை ஆணையத்தின் மொத்த அதிகாரிகள், செயலாளர் உள்ளிட்டு 10 பேர். அதில் ஆறு பேரை இந்திய அரசு நியமனம் செய்ய வேண்டும். நீர் வளத்துறையில் வேறொரு பிரிவில் முழுநேரத் தலைமை அதிகாரியாக இருக்கும் மசூத் உசேனை மட்டும் இடைக்காலத் தலைவராக காவிரி ஆணையத்திற்கு நியமித்திருப்பது கண்துடைப்பு நடவடிக்கை! இதுபற்றி ஒரு கருத்தும் தமிழ்நாடு முதல்வர்க்கு இல்லையா? கருத்து இருந்தால் அதை சட்டப்பேரவையில் வெளியிட்டிருக்கலாம் அல்லவா?
 
தமிழ்நாடு முதலமைச்சர் தில்லி மற்றும் பெங்களூரு ஊதுகுழலாக இருக்கிறார். தமிழ்நாட்டு மக்களை வஞ்சிகிறார். கர்நாடக மற்றும் நடுவண் அரசுகளை எதிர்த்துப் போராடுவதுடன் காவிரி உரிமையை மீட்கக் கோரி தமிழ்நாடு அரசையும் எதிர்த்துப் போராட வேண்டிய தேவை உள்ளது.
 
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
 
பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

காவிரித் தீர்ப்பு மூன்றாவது முறையாக அரசிதழில்! இப்போதும் ஆணையம் அமைக்கவில்லை. தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

காவிரித் தீர்ப்பு மூன்றாவது முறையாக அரசிதழில்! இப்போதும் ஆணையம் அமைக்கவில்லை. காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
உச்ச நீதிமன்றம் 18.05.2018 அன்று அளித்த காவிரித் தீர்ப்பை நேற்று (01.06.2018), இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டுவிட்டு, காவிரி ஆணையம் அமைக்காமல் ஒதுங்கிக் கொண்டிருப்பது கடந்த காலங்களில், அது ஏமாற்றியதுபோல் இப்போதும் செய்கிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
 
காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை உச்ச நீதிமன்ற ஆணையின்படி 11.12.1991 அன்று இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. ஆனால், அதை செயல்படுத்தவில்லை!
 
அடுத்து, காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றக் கட்டளையின்படி 19.02.2013 அன்று இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. ஆனால், அத்தீர்ப்பில் கண்டபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ஒதுங்கிக் கொண்டது. அதனால் அத்தீர்ப்பும் செயலுக்கு வரவே இல்லை!
 
இப்பொழுது மூன்றாவது முறையாக, செயல்படுத்தக் கூடிய காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்காமல், அரசிதழில் வெளியிட்டுவிட்டு இந்திய அரசு ஒதுங்கிக் கொண்டுள்ளது. விரைவில் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் என்று சொல்கிறார்கள்.
 
உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை 16.02.2018 அன்று அளித்தது. அதைச் செயல்படுத்தாமல், சாக்குப்போக்கு சொல்லி இதுவரை இழுத்தடித்து வருவது இந்திய அரசுதான்! இப்பொழுதும் செயல்படுத்தும் மேலாண்மை ஆணையம் அமைக்காமல், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை புறக்கணிக்கவில்லை என்று காட்டிக் கொள்வதற்காக ஒப்புக்கு அரசிதழில் வெளியிட்டு ஒதுங்கிக் கொண்டிருக்கிறது.
 
அத்துடன், நடுவண் நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங்கை காவிரி மேலாண்மை வாரியத் தற்காலிகத் தலைவராக அமர்த்தியிருப்பதாக செய்திகள் வருகின்றன. யு.பி. சிங்கை காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்காலிகத் தலைவராக அமர்த்துவது என்பது, காவிரி மேலாண்மை ஆணையம் நடுவண் நீர்வளத்துறையின் ஒரு துணைக் குழுதான் (Sub Committee) என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
 
காவிரித் தீர்ப்பாய முடிவுகள் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவை தனித்துவமான காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டுமென்றும், அதன் தலைவர் முழுநேரப் பொறுப்பில் செயல்படுவார் என்றும் கூறியுள்ளன. நடுவண் நீர்வளத்துறைச் செயலாளரின் கூடுதல் பொறுப்பாக காவிரி ஆணையத் தலைவர் பொறுப்பை வழங்குவது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சீர்குலைக்கும் முயற்சியாகும்!
 
யு.பி. சிங் நடுநிலைத் தவறியவர் என்பதை, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்ததிலிருந்து அவர் செயல்பட்ட விதம் வெளிப்படுத்தியது.
 
எனவே, அரசிதழில் வெளியிடப்பட்டது என்ற அளவில் “வெற்றி!”க் களிப்பு காட்டிக் கொள்வது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாக அமையும்! இந்திய அரசு இன்னும் காவிரியில் தமிழ்நாட்டின் சட்டப்படியான உரிமைகளை செயல்படுத்த முன்வரவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நீதியை நிலைநாட்ட போராட வேண்டியத் தேவை உள்ளது என்பதை காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தெரித்துக் கொள்கிறேன்.
 
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

காவிரி ஆணையத்திற்கு தற்காலிகத் தலைவர் யு.பி. சிங்: தமிழ்நாட்டிற்கு எதிரான மோடி அரசின் வஞ்சகம் தொடர்கிறது! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

காவிரி ஆணையத்திற்கு தற்காலிகத் தலைவர் யு.பி. சிங்: தமிழ்நாட்டிற்கு எதிரான மோடி அரசின் வஞ்சகம் தொடர்கிறது! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நடுவண் நீர்வளத்துறையின் செயலாளர் யு.பி. சிங்கை தற்காலிகத் தலைவராக நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அமர்த்தியிருக்கிறார் என்று செய்தி வந்துள்ளது. யு.பி. சிங் நான்கு மாநிலங்களுக்கும் உரிய பிரதிநிதிகளுடையப் பெயரைத் தருமாறு அந்தந்த மாநில அரசுக்குக் கடிதம் அனுப்பப்போவதாகக் கூறப்படுகிறது. இந்த ஏற்பாடு என்பது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறிய செயலாகும்!
 
காவிரி மேலாண்மை ஆணையத்திற்குத் தற்காலிகத் தலைவர் நியமித்துக் கொள்வதற்கான அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் இந்திய அரசுக்கு வழங்கவில்லை. தனி அதிகாரத்துடன் கூடிய முழுநேரத் தலைவர் ஒருவரை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அமர்த்த வேண்டுமென்று கூறியதுடன், அவருக்குரிய தகுதிகளையும் உச்ச நீதிமன்றம் வரையறுத்துள்ளது.
 
இப்பொழுது யு.பி. சிங் நடுவண் நீர்வளத்துறையின் முழுநேர அதிகாரியாவார். ஒரு கூடுதல் பொறுப்பாக காவிரி மேலாண்மை வாரியத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணி நியமனம், காவிரி மேலாண்மை ஆணையத்தை தன்னதிகாரம் இல்லாத நடுவண் நீர்வளத் துறையின் ஒரு துணைக் குழுவாக (Sub committee) ஆக்குவதாகும்!
 
நடுவண் நீர்வளத்துறையின் கட்டளைகளை ஏற்கெனவே பல தடவை கர்நாடக அரசு செயல்படுத்த மறுத்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே செயல்படுத்த மறுக்கும் கர்நாடகம், நடுவண் நீர் வளத்துறைத் துணைக் குழுவின் ஆணையையா செயல்படுத்தும்?
 
அடுத்து, விரைவில் நிரந்தரத் தலைவர் அமர்த்தப்படுவார் என்று நீர்வளத்துறை சொல்கிறது. விரைவில் என்றால் எத்தனை நாளில்? சில நாட்களில் நிரந்தரத் தலைவர் அமர்த்தப்படுவார் எனில், அதற்குள் தற்காலிகத் தலைவர் ஏன் தேவைப்பட்டார்?
 
உச்ச நீதிமன்றம் 16.02.2018 அன்று வழங்கிய தீர்ப்பில், ஆறு வார காலத்திற்குள் காவிரி செயல் திட்டத்தை உருவாக்கி அறிவிக்குமாறு நடுவண் அரசுக்குக் கட்டளையிட்டிருந்தது. அதைச் செயல்படுத்தாமல், திட்டமிட்டு காலங்கடத்தி, கடைசி நேரத்தில் 29.03.2018 அன்று அந்த செயல் திட்டம் பற்றியும், மற்ற விவரங்கள் பற்றியும் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்கப் போவதாகவும் அதற்குக் கால அவகாசம் 3 மாதங்கள் வேண்டுமென்றும் கோரியதுதான், நிதின் கட்கரி தலைமையிலுள்ள நடுவண் நீர்வளத்துறை! அதன்பிறகும், காலம் தள்ளித்தள்ளி மே 18 வரை இழுத்தடித்தவர் நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங்!
 
இவர் நடுநிலை தவறியவர் என்பது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இவர் அணுகிய விதத்திலிருந்து தெரிய வந்தது. எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டிய கட்டாயம் இருந்தும், அதையும் அதிகாரமில்லாமல் அமைத்து தமிழ்நாட்டிற்கு எதிராக இனப்பாகுபாடு காட்டும் அநீதியை மோடி அரசு தொடர்கிறது என்பதற்கான அடையாளம்தான், நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங்கை காவிரி மேலாண்மை ஆணையத்திற்குத் தற்காலிகத் தலைவராக அமர்த்தியிருப்பது!
 
சட்டக்கடமையை நிறைவேற்ற மறுத்து தமிழ்நாட்டிற்கு எதிராக பாகுபாடு காட்டும் மோடி அரசின் வஞ்சகத்தைக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
 
தமிழ்நாடு அரசு இந்தத் தற்காலிக பணி அமர்த்தத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
 
மோடி அரசு யு.பி. சிங் நியமனத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, தகுதியும் தன்னதிகாரமும் உள்ள முழுநேரத் தலைவரை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அமர்த்த வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் தமிழர்களை வஞ்சிக்கும் தந்திரத்தில், மோடி அரசு இறங்கினால் நீதி கேட்டு ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் வீதிக்கு வந்து போராட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.
 
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
 
பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
 
 
 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger