தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


மேக்கேதாட்டு முற்றுகைப் பேரணியில் சென்றவர்கள் மீது தமிழக அரசு வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது! - தோழர் பெ. மணியரசன் அறிக்கை!



========================================
மேக்கேதாட்டு முற்றுகைப் பேரணியில்
சென்றவர்கள் மீது தமிழக அரசு வழக்குப்பதிவு
செய்திருப்பது கண்டனத்துக்குரியது!
========================================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
========================================

கர்நாடக அரசு தமிழகத்திற்கு எதிராக, காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் இரண்டு சட்ட விரோத அணைகள் கட்டுவதைத் தடுத்திடும் நோக்கத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கிருட்டிணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையிலிருந்து 7.03.2015 அன்று முற்பகல் நடைபயணமாகச் சென்று மேக்கேதாட்டுவில் முற்றுகைப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டோம்.
முறையாக அனுமதி கேட்டு தேன்கனிக்கோட்டை காவல் ஆய்வாளரிடம் விண்ணப்பம் கொடுத்தோம்.  அனுமதி மறுத்து அவர் கடிதம் கொடுத்தார். 
இவ்வாறான மக்கள் திரள் சனநாயகப் போராட்டங்கள் நடைபெறும்போது காவல்துறை அனுமதி மறுத்தாலும் போராட்டக்காரர்களைக் குறிப்பிட்ட இடத்தில் கூடவிட்டு சிறிது தொலைவு ஊர்வலமாக நகர்ந்த பின், அவர்களை முன்தடுப்பு நடவடிக்கையாகக் கைது செய்து மண்டபங்களில் வைத்து மாலையில் விடுவிப்பது வழக்கமாக உள்ளது. இந்த அணுகுமுறை போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்குமான மோதலைத் தவிர்த்து வருகிறது. 
இதேபோல் தான் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் 7.3.2015 அன்று தேன்கனிக் கோட்டை மணிக்கூண்டிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டவர்களைச் சிறிது தொலைவிலேயே ஜவளகிரி சாலையில் முன்தடுப்பு கைது செய்து மூன்று மண்டபங்களில் அடைத்தனர். 
காவல்துறை கைது செய்த போது எந்த அத்துமீறலும் வன்முறையும் இடம் பெறவில்லை.  ஆண்கள், பெண்கள் அனைவரும் கைதுக்கு உடன்பட்டு தாமாகவே காவல்துறையினரின் ஊர்திகளில் ஏறிக் கொண்டனர். அன்று மாலை 6 மணியளவில் அனைவரையும் விடுவித்தனர். 
ஆனால் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமையில் அந்தப் பேரணியில் கலந்து கொண்ட 95 பெண்கள் உட்பட 1286 பேர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 147,188 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து முதல்தகவல் அறிக்கை தயார் செய்திருப்பதாக இன்று நாளிதழ்களில் செய்தி வெளிவந்துள்ளது.  இது பற்றி கிருட்டிணகிரி மாவட்ட காவல்துறை அதிகாரியிடம் கேட்டதற்கு அவரும் உறுதி செய்திருக்கிறார்.
தமிழகத்தின் உயிர் பிரச்சினையான காவிரி நீர் உரிமை பிரச்சினையில் சனநாயக வழியில் பேரணி சென்ற உழவர்கள், உணர்வாளர்கள் ஆகியோர் மீது தமிழகத்திலுள்ள நடைமுறைக்கு மாறாகக் குற்றவழக்கு பதிவு செய்திருப்பது வேதனை அளிக்கிறது.  காவிரித் தீர்ப்பாயம், உச்சநீதிமன்றம் ஆகியவை கொடுத்த தீர்ப்புகளைக் குப்பைக் கூடையில் தூக்கிவீசிவிட்டு தமிழகத்தின் காவிரி உரிமையை மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டிக்கும் வகையிலும், நடுவண் அரசிடம் கோரிக்கை வைக்கும் வகையிலும்  பேரணியில் சென்றவர்களை தமிழக அரசு பழிவாங்கும் நோக்கத்தோடு வழக்குப் பதிவு செய்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
தொடர்ந்து சட்டவிரோதமாக நடந்து கொண்டு தமிழ்நாட்டின் காவிரி உரிமையைப் பறித்துவரும் கர்நாடகத்திடம் நற்சான்று வாங்குவதற்காகத் தமிழக அரசு தனது சொந்த மக்களையே பழிவாங்குகிறதா என்ற ஐயத்துக்குத் தமிழக அரசுதான் விடையளிக்க வேண்டும். 

7.3.2015 தேன்கனிக் கோட்டை பேரணியில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதுமிருந்து புறப்படத் தயாராக இருந்த உழவர்களையும், உணர்வாளர்களையும் கணக்கெடுப்பதற்காக 5.3.2015 லிருந்தே தமிழகமெங்கும் காவல்துறை கண்காணித்து விசாரித்து ஓர் உளவியல் நெருக்கடியைக் கொடுத்தது.
முறைப்படி தனியார் வாடகை ஊர்திகளில் அவர்கள் புறப்படத் தயாரானபோது அந்த ஊர்தி எண் உட்பட பல விவரங்களைக் கேட்டு அங்கங்கே காவல்துறையினர் நெருக்கடி கொடுத்தனர். இப்போது அறவழியில் பேரணி சென்ற உழவர் இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள், தமிழ்த் தேசிய இயக்கங்கள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் மீதும், தனித்தனியே கலந்து கொண்ட உணர்வாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது. 

தமிழக முதலமைச்சர் அவர்கள் இதில் தலையிட்டு இவ்வழக்குகளைக் கைவிடுமாறு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

இவண்,    
பெ.மணியரசன் 
ஒருங்கிணைப்பாளர், 
காவிரி உரிமை மீட்புக் குழு.
============================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
============================
பேச: 76670 77075, 94432 74002
============================

“ஆயுதம் ஏந்தாத கொரில்லாப் போராளிகளாக மாறி அணைக் கட்டுமானத்தை உடைப்போம்” தேன்கனிக்கோட்டை தமிழர் திரளில் தோழர் பெ.மணியரசன் முழக்கம்!

“ஆயுதம் ஏந்தாத கொரில்லாப் போராளிகளாக மாறி அணைக் கட்டுமானத்தை உடைப்போம்”
தேன்கனிக்கோட்டை தமிழர் திரளில் தோழர் பெ.மணியரசன் முழக்கம்!










ஆயிரக்கணக்கான உழவர்களும், தமிழின உணர்வாளர்களும் திரண்டு நிற்க, கிருட்டிணகிரி மாவட்டத்தின் தேன்கனிக்கோட்டை நகரம், மிரண்டு நின்றது நேற்று (08.03.2015). காவிரியைத் தடுக்க கர்நாடகம் அணைக்கட்ட திட்டமிட்டுள்ள மேக்கேத்தாட்டுவிற்குச் சென்று முற்றுகைப் போராட்டம் நடத்தத் திரண்ட, தமிழர்களின் கூட்டமே, அவ்வாறு திணறடித்தது.

பல்வேறு உழவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் – இயக்கங்கள் உறுப்பு வகிக்கும், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், நேற்று காலை நடைபெற்ற முற்றுகைப் போராட்டம் நடத்த, அழைப்பு விடுக்கப்பட்டு, தமிழகமெங்கும் அதற்காக விரிவான பரப்புரை இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டன.

காலை 10 மணி தொடங்கி, காவிரி டெல்டா மாவட்டம் மட்டுமின்றி, சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தமிழின உணர்வாளர்கள், வாகனங்களை எடுத்துக் கொண்டு தேன்கனிக்கோட்டைக்கு வரத்தொடங்கினர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், இளைஞர்கள் என எழுச்சி முழக்கங்களுடன் குவிந்த அனைவரும், முற்றுகைப் போராட்டப் பேரணிக்கு அணிவகுத்து நின்றனர்.

காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவருமான தோழர் பெ.மணியரசன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் பேராசிரியர் சின்னசாமி, மூன்று மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திரு. வலிவளம் மு.சேரன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு. காவிரி தனபாலன், தமிழக உழவர் முன்னணி அமைப்பாளர் திரு. சி. ஆறுமுகம், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் புரவலர் திரு. பூவிசுவநாதன் உள்ளிட்ட பல்வேறு உழவர் அமைப்புத் தலைவர்களும், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அய்யனாவரம் சி. முருகேசன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஆலோசகர் பொறியாளர் திருநாவுக்கரசு, மனித நேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் திரு. மன்னை செல்லச்சாமி, இந்திய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. சிமியோன் சேவியராஜ் ஆரோக்கியராசு, காங்கிரசுக் கட்சி தஞ்சை மாவட்ட முன்னாள் தலைவர் திரு. நாஞ்சி வரதராசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கிருட்டிணகிரி மாவட்டத் தலைவர் திரு. ரமேசு, விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் தோழர் சக்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தோழர்களும் என பல்லாயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்றனர்.

போராட்டத்தையொட்டி, மேக்கேத்தாட்டு அணைக்குச் செல்லும் சாலைகளில் மூன்று மாவட்டங்களைச் சோந்த காவல்துறையினர் குவிக்கப்பட்டு, அச்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது. கலவரத் தடுப்பு வஜ்ரா வாகனங்கள் நிறுத்தப்பட்டு, சாலையில் மூன்றடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டது.

“காவிரி நமது குருதி ஓட்டம்! காவிரி நமது வளர்ப்புத் தாய்! கன்னடச் சிறையில் காவிரித்தாய் கதவை உடைத்து விடுதலை செய்வோம்” உள்ளிட்ட எழுச்சி முழக்கங்குடள் பேரணி தொடங்கியது. சாலைகளின் இருபுறமும் பொது மக்கள், வீடு – அலுவலகங்களின் மேல்மாடியில் நின்று, பேரணியைக் காணக் குவிந்து கிடந்தனர். நேரம் செல்ல செல்ல, அந்த சாலையில் 5000 பேர் கூடிவிட்டனர். அவரவர், அமைப்புப் பதாகைகள், கொடிகளுடன் அணிவகுத்து நின்ற போது, மக்கள் கடலாக அவ்விடம் காட்சியளித்தது.

‘பாரத மாதா’ என்றாலே, சாந்தமான ஒரு பெண் கையில் இந்தியக் கொடியுடன் நிற்கும் படம் நினைவுக்கு வரும். ஆனால், ஒரு கையில் தமிழீழத் தமிழர் என்ற பெயரைத் தாங்கிய தலை, இன்னொரு கையில் தமிழ்நாட்டுத் தமிழர் என்ற பெயரைத் தாங்கிய தலை, ஒரு கையில் மனுதர்மம், இந்துத்துவ மதவெறி, ஆரிய இனவாதம் என்ற வாள், காவிரி உரிமை – முல்லைப் பெரியாறு உரிமை உள்ளிட்ட உரிமைகளை காலில் மிதித்துக் கொண்டு நிற்கும் ஆக்கிரோசம் என புதிய வகைக் ‘காளி’ உருவமாக ‘பாரத மாதா’ படம் ஒன்றை, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் வடிவமைத்து, இந்தியத் தேசியத்தை அம்பலப்படுத்திக் காட்சிப்படுத்தியிருந்தனர். ‘இந்தியா ஒழிக!’ என்ற முழக்கத்துடன், அப்படம் ஆர்ப்பாட்டத் தோழர்களால் கிழித்தெறிந்து, கொளுத்தப்பட்டது.

பேரணியை, காவல்துறையினர் தடுத்த போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.முருகன் உள்ளிட்ட தோழர்கள் காவல்துறையின் தடுப்பு அரண்கள் மீது ஏற, அவர்களை காவல்துறையினர் கீழே இழுத்துப் பிடித்துத் தள்ளிக் கைது செய்தனர். சற்றோப்ப 25க்கும் மேற்பட்ட காவல்துறை வாகனங்கள் மற்றும், அரசுப் பேருந்துகளைக் கொண்டு தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, நகரின் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

“தோழர்களே! இது இறுதிப் போராட்டமல்ல. இது தொடக்கம் தான். கர்நாடக அரசு காவிரியைத் தடுக்க அணை கட்ட முயன்றால், ஆயுதம் ஏந்தாத கொரில்லாப் போராளிகளாக மாறி, நாம் அணைக் கட்டுமானங்களைத் தகர்ப்போம்! அதற்குத் தயாராகுங்கள்!” என முழங்கினார், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன். அதை ஆமோதித்து, போராட்டத் தோழர்கள் கரவொலி எழுப்பினர்.

தமிழ்நாட்டுத் தமிழர்களின் இந்த எழுச்சிமிகுப் போராட்டம், நிச்சயம் வரலாற்றுப் போக்கை மாற்றும்! காவிரியைக் காக்கும்!

மேக்கேத்தாட்டு முற்றுகைப் போர் - அழைக்கிறது காவிரி உரிமை மீட்புக் குழு!


=============================================
காவிரியில் புதிய அணைகள் - கர்நாடகம் சதி
=============================================
மேக்கே தாட்டுவில் முற்றுகைப் போர்
=============================================
புறப்படட்டும் தமிழர் பேரணி
=============================================
அழைக்கிறது காவிரி உரிமை மீட்புக் குழு
=============================================
புறப்படும் இடம் : தேன்கனிக்கோட்டை
(கிருட்டிணகிரி மாவட்டம்)
=============================================
காலம் : மாசி 23, 2046
07.03.2015 காரி(சனி)க்கிழமை, காலை 10 மணி
=============================================


பன்னிரண்டாம் நூற்றாண்டிலும் கன்னடர்கள் காவிரியின் குறுக்கே அணை கட்டித் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வராமல் தடுத்தார்கள். தண்ணீரைத் திறந்து விடுமாறு ஓலை அனுப்பினான் சோழப் பேரரசன் இரண்டாம் இராசராசன் (கி.பி. 1146 - 1163). மைசூரை ஆண்ட போசள மன்னன் முதலாம் நரசிம்மன் (1141 - 1173) காவிரியை விடுவிக்க மறுத்தான். தஞ்சையிலிருந்து படைகொண்டு சென்று கர்நாடக அணையை உடைத்துக் காவிரியை விடுவித்தான் சோழப் பேரரசன்! மன்னனின் இந்த சமூகப் பொறுப்பை, வீரத்தைத் தக்கயாகப் பரணியில் ஒட்டக்கூத்தர் பாடினார்.

இப்போதும் அதே நிலை உள்ளது. கர்நாடகம் மேக்கேதாட்டு, இராசிமணல் என்ற இரு இடங்களில் புதிய அணைகள் கட்டி, தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வராமல் தடுக்கத் திட்டம் தீட்டிச் செயல்படுகிறது. 
அதே மேக்கே தாட்டில் நாம் பல்லாயிரக்கணக்கானோர் குழுமி, “கர்நாடக அரசே சட்டவிரோத அணைகள் கட்டாதே - தமிழகத்தின் காவிரி நீரைத் திருடாதே!” என்று முழங்கி முற்றுகையிட வேண்டும். இது படையெடுப்பல்ல - அறவழியில் மக்கள் திரள் போராட்டம்!

கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி மிகை நீர் வெளியேற்றப்பட்டால், அத்தண்ணீர் தங்கு தடையில்லாமல் மேட்டூர் வந்து சேரும். அவ்வாறு மிகை நீரும் மேட்டூர் அணைக்குப் வராமல் தடுத்துக் கொள்வதற்காகக் கர்நாடகம் போட்ட சதித்திட்ட அணைகள் தாம் இவை இரண்டும்! 

இப்பொழுது மேட்டூர் வரும் தண்ணீரில் பெரும்பகுதி, கபினி நிரம்பிய பின் திறந்து விடப்படும் வெள்ள நீர் தான்! அந்நீரையும் தடுக்கப் பார்க்கிறார்கள். 

ஆனால் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா புதிய அணைகள் கட்டிய பின் காவிரித் தீர்ப்பாயத் தீர்ப்பின்படி 192 ஆ.மி.க.(டி.எம்.சி.) தண்ணீரைத் தமிழ்நாட்டிற்குத் திறந்து விடுவோம் என்கிறார். இது ஏமாற்றுப் பேச்சு.
காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பின்படி புதிய அணைகள் கட்டவே கூடாது.

1991 சூன் 25-இல் காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில் கூறியபடி, 205 ஆ.மி.க. தண்ணீர் தமிழ்நாட்டிற்குத் திறந்து விடவேண்டும். திறந்துவிட்டார்களா? இல்லை. 

காவிரித் தீர்ப்பாயம் 05.02.2007-இல் வெளியிட்ட இறுதித் தீர்ப்பில் கூறியபடி 192 ஆ.மி.க. தண்ணீர் தமிழ்நாட்டிற்குத் திறந்து விட வேண்டும். உச்ச நீதிமன்றம் கர்நாடகம் இத்தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டும் என்று ஆணையிட்டதுடன் அரசிதழிலும் வெளியிட வேண்டும் என்று இந்திய அரசைப் பணித்தது. இன்றுவரை இத்தீர்ப்பைச் செயல்படுத்தவில்லை கர்நாடகம். 

இந்திய அரசில் ஆட்சி செய்த காங்கிரசு, சனதா தள, பா.ச.க. ஆட்சிகள் இடைக்காலத் தீர்ப்பையும் செயல்படுத்தி வைக்கவில்லை; இறுதித் தீர்ப்பையும் செயல்படுத்தி வைக்கவில்லை. புதிய அணைகள் கட்டிவிட்டால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்காது. 

தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிகள் மாறி மாறி வந்தன. எந்த ஆட்சியும் இடைக்காலத் தீர்ப்பையோ, இறுதித் தீர்ப்பையோ செயல்படுத்திக் காட்ட வில்லை. 
புதிய அணைகள் கட்டக் கர்நாடக அரசு 2007ஆம் ஆண்டு முதல் திட்டம் தீட்டிச் செயல்பட்டது. 2012இல் இரு இ.ஆ.ப.(ஐ.ஏ.எஸ்.) அதிகாரிகள் தலைமையில் 25 நீர்வளத்துறை அதிகாரிகளைக் கொண்ட ஆய்வுக்குழு அமைத்தது. 

அக்குழு கர்நாடகத்தில் 56 இடங்களில் ஆய்வு செய்து, 30 இடங்களில் காவிரிப் படுகையில் சிறிய, பெரிய புதிய அணைகள் கட்டலாம் என்று அறிக்கை அளித்தது. 
கர்நாடக அரசு காவிர நீர்ப்பாசன மேம்பாட்டு வாரியம் ( Karnataka Cauvery Irrigation Development Board ) அமைத்து, புதிய அணைகள் கட்ட உலக அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரியது. 

இக்காலங்களில் தமிழகத்தில் இருந்த ஆட்சிகள், கர்நாடகத்தின் இத்தனை சதி வேலைகளையும் ஏன் கண்டு கொள்ளவில்லை? தமிழக அரசின் உளவுத்துறை என்ன செய்தது? இப்போது, கர்நாடக அரசு வெளிப்படையாக 48 ஆ.மி.க. கொள்ளளவில் மேக்கே தாட்டு - இராசிமணல் பகுதியில் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரு அணைகள் கட்டப்போகிறோம் என்று அறிவித்தபின், தமிழகத்தின் ஆளுங்கட்சியும் ஆண்ட கட்சியும் கண்டனம் தெரிவிக்கின்றன. 

இத்தனை பேராபத்தும் பேரிழப்பும் தமிழகத்தைச் சூழ்ந்துள்ள இத் தருணத்தில் கூட இங்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தவோ - அனைத்துக் கட்சிக் குழுவை அழைத்துச் சென்று தலைமை அமைச்சர் நரேந்திர மோடியைப் பார்த்து அழுத்தம் கொடுக்கவோ தமிழக ஆளுங்கட்சி முன் வரவில்லை; மறுத்து வருகிறது. 

காவிரி நீர்ச்சிக்கல் டெல்டா மாவட்டங்கள் சிலவற்றிற்கு மட்டும் உரிய சிக்கல் அல்ல. பன்னிரண்டு மாவட்டங்களில் பாசன நீர் காவிரி நீர்! பத்தொன்பது மாவட்டங்களில் குடிநீர், காவிரி நீர்! 

ஏற்கெனவே கர்நாடகம் கட்டியுள்ள ஏமாவதி, ஏரங்கி, கபினி ஆகிய அணைகள் சட்ட விரோத அணைகளே! இன்னும் எத்தனை சட்டவிரோத அணைகளைக் கர்நாடகம் கட்டினாலும் இந்திய அரசு தடுக்கப்போவதில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு நேர் எதிராக முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டக் கேரள அரசு ஆய்வுப் பணிகள் செய்யலாம் என்று இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அண்மையில் அனுமதி வழங்கியதில்லையா? 

தமிழகத்தின் கண்ணில் சுண்ணாம்பு வைப்பது, தமிழக உரிமைகளைப் பறிப்போர் கண்ணில் வெண்ணைய் வைப்பது என்பதுதான் இந்திய அரசு காலம் காலமாகக் கடைபிடித்து வரும் (அ)தர்மம்!

எல்லாம் வல்ல இந்தியப் பேரரசு, சட்டத்தின் ஆட்சி, உச்ச நீதிமன்றத்தின் உச்சி அதிகாரம் என்பவையெல்லாம் தமிழக உரிமைச் சிக்கல்களைப் பொறுத்தவரை வெறும் வர்ணனைகள்தான்! 

காவிரி உரிமையை இழந்து விட்டால் கோடிக்கணக்கான மக்கள் ஊரை விட்டு வெளியேற வேண்டிவரும். தமிழ்நாட்டில் எங்கு போனாலும் குடிநீர் கிடைக்காது - தமிழகத்தை விட்டே வெளியேறி அகதிகளாய், அண்டிப் பிழைப்போராய் வாழ வேண்டிய அவலம் நேரும். 
காவிரிப் படுகையில் வேளாண்மை செய்ய முடியாத வகையில் மண்ணையும் நீரையும் நஞ்சாக்கும் மீத்தேன் நச்சுக் காற்றுத் திட்டத்தைக் கொண்டுவர வசதியாக, காவிரி நீரின்றி முன்கூட்டியே வேளாண் மக்கள் வெளியேறிவிட வேண்டும் என்பதுதான் இந்திய ஆட்சியாளர்களின் திட்டம்!

இந்தப் பேரவலம் நேராமல் நம்மால் தடுக்க முடியும்! இந்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் நெருக்குதல்கள் கொடுத்து, நம்மால் நீதியை நிலைநாட்ட முடியும். தமிழகமே கொதித்து எழுந்து மாபெரும் மக்கள் எழுச்சியாகக் காவிரி உரிமை மீட்புப் போராட்டங்களை அடுக்கடுக்காக நடத்த வேண்டும். 

ஏற்கெனவே, இதற்காகக் கடந்த இரண்டாண்டுகளாகக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடந்துள்ளன. பல்வேறு உழவர் அமைப்புகள், அரசியல் இயக்கங்கள், தமிழின உணர்வு அமைப்புகள் இக்கூட்டமைப்பில் இணைந்து போராடி வருகின்றன. 

இப்போது கர்நாடக அரசு அணைகட்ட திட்டமிட்டுள்ள மேக்கே தாட்டு என்ற இடத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்த தேன்கனிக்கோட்டையிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் பேரணியாக நாம் செல்ல வேண்டும். அனைத்துத் தரப்புத் தமிழ் மக்களும் தமிழகம் தழுவிய அளவில் திரளாக வந்து இப்பேரணியில் கலந்து கொள்ள அழைக்கிறோம். 

---------------------------------
நமது கோரிக்கைகள் : 
---------------------------------
1. இந்திய அரசே, கர்நாடகம் புதிதாகச் சட்ட விரோத
அணைகள் கட்டுவதைத் தடுத்து நிறுத்து! 
2. இந்திய அரசே, காவிரி மேலாண்மை வாரியம்,
காவிரி ஒழுங்குமுறைக் குழு இரண்டையும் உடனே அமைத்திடு! 

காவிரியில்லாமல் வாழ்வில்லை
களம் காணாமல் காவிரியில்லை
வாழ்வா சாவா போராட்டம்
மானமா ஈனமா முடிவுக்கு வா!

============================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
============================
பேச: 76670 77075, 94432 74002
============================
Now

மேக்கேத்தாட்டு முற்றுகைப் போராட்டத்திற்கு, தஞ்சையில் தொடங்கிய பரப்புரை இயக்கம்!








காவிரியின் குறுக்கே கர்நாடகம் சட்டவிரோத அணைகள் கட்டுவதைத் தடுக்க, மார்ச் 7 அன்று, தேன்கனிக்கோட்டையிலிருந்து ஆயிரக்கணக்கான உழவர்களுடன் மேக்கேத்தாட்டுவுக்குச் சென்று முற்றுகைப் போராட்டம் நடத்த, காவிரி உரிமை மீட்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது. இப்போராட்டத்திற்கு ஆதரவு திரட்டி, தமிழகமெங்கும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் பரப்புரை இயக்கங்கள் நடைபெறுகின்றன. இதன் தொடக்க விழா, நேற்று (10.02.2015) மாலை தஞ்சையில் நடைபெற்றது. 

தஞ்சை பனகல் கட்டிடம் அருகில் நடைபெற்ற இத்தொடக்க விழாப் பொதுக்கூட்டத்திற்கு, தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த.மணிமொழியன் தலைமையேற்றார். காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் முன்னிலை வகித்தார். தமிழர் தேசிய முன்னணித் தலைவர் திரு. பழ.நெடுமாறன், பரப்புரை இயக்கத்தைத் தொடக்கி வைத்துப் பேசினார். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, எழுச்சி முழக்கங்களை எழுப்பினார். 

கூட்டத்தில், மனித நேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் திரு. தமிமுன் அன்சாரி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அயனாவரம் திரு. சி.முருகேசன், தாளாண்மை உழவர் இயக்கம் பொறியாளர் கோ. திருநாவுக்கரசு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. எஸ்.எஸ். பாண்டியன், திரு. இறைநெறி இமையவன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் பங்கேற்றனர். நிறைவில், தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் துணைத் தலைவர் திரு. ஜெகதீசன் நன்றியுரையாற்றினார். 

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.இராசேந்திரன், தோழர் தோழர் அ.ஆனந்தன் உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்கள் கலந்து கொண்டனர். 

காவிரிச் சிக்கல் என்பது காவிரி டெல்டா மாவட்டங்களின் சிக்கல் மட்டுமல்ல, அது தமிழகம் தழுவிய சிக்கல். ஏனெனில், தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு, காவிரி நீர் தான் குடிநீராகப் பயன்படுகிறது. எனவே,காவிரியைக் காக்கும் மேக்கேத்தாட்டு முற்றுகைப் போராட்டத்தில் தமிழகம் தழுவிய அளவில் தமிழின உணர்வாளர்களும், பொது மக்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென காவிரி உரிமை மீட்புக் குழு வேண்டுகோள் விடுக்கிறது. 

கர்நாடகம் புதிய அணைகள் கட்டும் இடத்தில் ஆயிரம் பேர் பேரணியாகச் சென்று மறியல் போராட்டம்! - தோழர் பெ.மணியரசன் அறிவிப்பு!


கர்நாடகம்  புதிய அணைகள் கட்டும் இடத்தில் 
ஆயிரம் பேர் பேரணியாகச் சென்று மறியல் போராட்டம்!
காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு!
 ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் அறிவிப்பு!

காவிரி உரிமை மீட்புக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம், நேற்று (17.11.2014) காலை, தஞ்சை செஞ்சிலுவைச் சங்கஅரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குக், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன்தலைமையேற்றார்.

இக்கூட்டத்தில் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. துரை. பாலகிருட்டிணன், தமிழர் தேசிய முன்னணிப்பொதுச் செயலாளர் திரு அய்யனாபுரம் சி.முருகேசன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் நிறுவனத் தலைவர் திரு. குடந்தைஅரசன், மூன்று மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திரு. வலிவலம் மு. சேரன், தமிழகவிவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த.மணிமொழியன், காவிரிப் பாசன விவசாயிகள் பாதுகாப்புசங்கத் தலைவர் திரு. காவிரி தனபாலன், தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்டத் தலைவர் திரு.ம.ப.சின்னத்துரை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ. நல்லதுரை, மீத்தேன் திட்ட எதிர்ப்புக்கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் த.செயராமன், மனித நேய மக்கள் கட்சி வணிகப் பிரிவுத் தலைவர் திருகலந்தர், புதிய தமிழகம் கட்சி வழக்கறிஞர் திரு சுகுமார், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் தஞ்சை மாவட்டப்பொருளாளர் திரு வாசு, திருத்துறைப்பூண்டி திரு நெல் செயராமன், திருவாரூர் திரு ஜி. வரதராசன், தமிழ்த் தேசியப்பேரியக்கம் சார்பில் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர்பழ. இராசேந்திரன், தோழர் நா. வைகறை, தோழர் விடுதலைச்சுடர், திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன்,திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர் தோழர் தனபாலன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைபாளர் தோழர்பெ.மணியரசன் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகக் கூறினார்.

1. ஆடுதாண்டு காவிரி என்று அழைக்கபடும் மேகேதாட்டுப் பகுதியில் 48 ஆ.மி.க. கொள்ளவு கொண்ட இரு அணைகள்காவிரியின் குறுக்கே கட்டி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கூட வரமால் தடுக்கும் முயற்சியில்ஈடுபட்டுள்ளது. உச்ச நீதிமன்றம், காவிரித் தீர்பாயம் ஆகிய நீதித்துறை தலைமை அமைப்புகளின் ஆணைகளைத்துச்சமாகத் தூக்கியெறிந்து தமிழர்களுக்கு எதிராக இனப் பகையோடு செயல்படும் கர்நாடக அரசின் இன்னொருஅட்டூழியம் தான் புதிய அணைகள் கட்டும் திட்டம். இரு அணைகளும் கட்டப்பட்டு விட்டால் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட மேட்டூர் அணைக்கு உபரி வெள்ளமாக வராமல் கர்நாடக அரசால் தடுக்க முடியும். அதன் பிறகு தமிழ்நாட்டில்24,00,000 ஏக்கர் சாகுபடி நிலம் பாலை நிலம் ஆவதுடன், காவிரியால் குடி நீர் பெறும் 20 மாவட்டங்களில் உள்ள பலகோடி மக்கள் குடி நீர் இன்றி பெரும் துயரத்துக்கு ஆளாவார்கள். எனவே தேர்ந்தேடுக்கப் பட்ட ஆயிரம் பேரைஒகேநக்கலில் இருந்து பேரணியாக அழைத்துச் சென்று ஆடுதாண்டு காவிரியில் அணைக்கட்டும் இடத்தில் மறியல்போராட்டம் நடத்தி. மக்கள் விரோதத் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவது என்று ஒரு மனதாகக் காவிரி உரிமை மீட்புக்குழு முடிவு செய்துள்ளது.

2. ஆடுதாண்டு காவிரியில் இரண்டு அணைகள் கட்டும் கர்நாடக அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்த்து22.11.2014 அன்று திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்டங்களில்நடத்தவுள்ள முழு அடைப்பு, பொது வேலை நிறுத்தம், தொடர்வண்டி மறியல் போராட்டங்களுக்குக் காவிரி உரிமைமீட்புக் குழு முழு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

3. தமிழ் மக்களைத் தாக்க உள்ள பேராபத்தை உணர்ந்து கொண்டு அவசர நடவடிக்கையாக அனைத்துக் கட்சிக்குழுவினரை அழைத்துக் கொண்டு சென்று தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்களைப் பார்த்துப் பேசி புதியஅணைகள் கட்டும் திட்டத்திற்கு நடுவண் அரசின் சுற்றுச்சூழல் – வனத்துறையினரும் - நடுவண் அரசின்நீர்ப்பாசனத்துறையினரும், அனுமதியளிக்காமல் தடுத்திட வேண்டும் என்று கோரிக்கை விண்ணப்பம் கொடுத்துஅழுத்தம் தரவேண்டும் என்று தமிழக முதல்வர் திரு ஓ. பன்னீர்ச்செல்வம் அவர்களை காவிரி உரிமை மீட்புக் குழுஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது. 

இவண்,
பெ.மணியரசன்,
ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு.

அறிக்கை வெளியீடு
=========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
=========================
பேச: 76670 77075, 9443274002
=========================

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட மறுப்பது ஏமாற்றமளிக்கிறது! - தோழர் பெ.மணியரசன் அறிக்கை


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட மறுப்பது ஏமாற்றமளிக்கிறது!
இதில் ஏட்டிக்குப் போட்டி அரசியல் கூடாது!
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை


காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டுமென தமிழக முதல்வர் செயலலிதா அவர்களுக்கு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வேண்டுகோள் வைத்தோம். அதன்பிறகு, தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களும், அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டுமென்று முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தார்.

தமிழ்நாட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில், எல்லாக் கட்சிகளிடமும் ஒரே கருத்துதான் இருக்கிறது என்றும், எனவே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தத் தேவையில்லை என்றும் முதலமைச்சர் செயலலிதா அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது மிகவும் வேதனையளிக்கிறது, ஏமாற்றமளிக்கிறது என்பதை காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்பதில், கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளிடமும் ஒரே கருத்து தான் இருக்கிறது. இருந்தாலும், அவர்கள் ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுகிறார்கள்? அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு, முதலமைச்சர் சித்தராமையா பிரதமரை சந்திக்க உள்ளாரே, அது ஏன்? ஏனெனில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்பதற்கு மேலும் அழுத்தம் தருவதற்கும், ஒருவேளை வாரியம் அமைத்தால் அதை எதிர்த்து மக்கள் எழுச்சியை உண்டாக்குவதற்கும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்ட உத்தியை கர்நாடக அரசு கடைபிடிக்கிறது.

தொடர்ந்து காவிரி நீர் மறுக்கப்பட்டு, குறுவையும் சம்பாவும் பாதிக்கப்பட்டு குடி தண்ணீரும் இன்றி கோடிக்கணக்கான தமிழக மக்கள் பல ஆண்டுகளாக அல்லலுற்று வருகின்றனர். தமிழக மக்களின் இந்தத் துயரத்தைப் போக்க உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது இந்திய அரசின் சட்டப்படியான கடமையாகும். அந்த சட்டக்கடமையை இந்திய அரசு நிறைவேற்றிட நீதிமன்றத்தின் வழியாக முயல்வது ஒருவகை. அரசியல் ரீதியாக முயல்வது இன்னொரு வகை. கர்நாடக அரசு இந்த இரு வழிமுறைகளையும் தொடர்ந்து கடைபிடிக்கிறது. இந்த இரு வழிகளுக்கும் மேலாக காவிரி உரிமையை தமிழ்நாட்டிற்கு மறுப்பதற்கு, கர்நாடக விவசாயிகளும் இனவெறி அமைப்புகளும் வீதியில் இறங்கி போராடுவதை கர்நாடக அரசும், அரசியல் கட்சிகளும் பல்வேறு வழிகளில் ஊக்குவிக்கின்றன.

ஆனால், பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் சட்டப்படியான உரிமையை நிலைநாட்ட இந்திய அரசுக்கு ஒரு நெருக்கடி கொடுக்கக்கூட முதலமைச்சர் செயலலிதா அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த விரும்பவில்லை.

கர்நாடகத்தைச் சேர்ந்த நடுவண் அமைச்சர்களான அனந்த் குமார், சதானந்த கவுடா ஆகிய இருவரும், இந்திய அரசு காவிரி மேலாண்மையை வாரியம் அமைக்காமல் தடுப்போம் என்று ஒளிவு மறைவின்றி அறிவிக்கின்றனர். அச்செய்தி ஊடகங்களில் வந்துள்ளது. அவ்விருவரும் தமிழ்நாட்டு மக்களுக்கும் சேர்த்துதான் இந்திய அமைச்சர்களாக இருக்கிறார்கள். ஆனால், கன்னட இனச்சார்போடு நடுவண் அமைச்சர் பொறுப்புக்கு முற்றிலும் முரணான வகையில் சட்டப்படியான தமிழ்நாட்டு உரிமைக்கு எதிராக சவால் விடுகிறார்கள். இந்த இரு நடுவண் அமைச்சாகளின் சட்டவிரோதப் போக்கை தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்திக் கண்டிக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. தமிழக முதலமைச்சர் மேற்படி இரு நடுவண் அமைச்சர்களும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவ்வாறு குரல் கொடுக்கிறார்கள் என்று கூறுவது அவர்களின் சட்டவிரோதச் செயலை தமிழக முதல்வர் அனுசரித்துப் போவதுபோல் உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு, கர்நாடகத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், பா.ச.க. நடுவண் அரசு மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்குமா என்பதில் கேள்விகுறி எழுந்துள்ளது.

எனவே, கடந்த காலங்களில் தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும் ஏட்டிக்குப் போட்டி அரசியல் நடத்தி தமிழக மக்களின் உரிமைகளை பலி கொடுத்தது போது்ம். இனிமேலாவது, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட இக்கழகங்கள், ஆக்க வழியில் செயல்பட வேண்டும். அதற்கு, முன் எடுத்துக்காட்டாக முதலமைச்சர் செயலலிதா அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுடன் தமிழக மக்களுக்கு விழிப்புணர்ச்சியையும் எழுச்சியையும் நம்பிக்கையையும் உண்டாக்க வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

இங்ஙனம்,
பெ.மணியரசன்,
ஒருங்கிணைப்பாளர்,
காவிரி உரிமை மீட்புக் குழு

 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger