தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


Home » , , , » "பூதலூர் தொடர்வண்டி மறியல் புதிய வெளிச்சம் காட்டுகிறது!" ---- பெ. மணியரசன் ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு

"பூதலூர் தொடர்வண்டி மறியல் புதிய வெளிச்சம் காட்டுகிறது!" ---- பெ. மணியரசன் ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு


பூதலூர் தொடர்வண்டி மறியல்

புதிய வெளிச்சம் காட்டுகிறது!
=========================
பெ. மணியரசன்
ஒருங்கிணைப்பாளர்,
காவிரி உரிமை மீட்புக் குழு
=========================


கர்நாடகமே, தமிழ்நாட்டுத் தண்ணீரைத் திருடாதே!
இந்திய அரசே, திருட்டுக்குத் துணை போகாதே!
தமிழ்நாடு அரசே, கண்துடைப்பைக் கைவிடு!
காவிரியை மீட்கக் களம் இறங்கு!

இந்தக் கோரிக்கை முழக்கங்களை முன்வைத்து, காவிரி உரிமை மீட்புக் குழு நேற்று (26.09.2023) செவ்வாய்க் கிழமை தஞ்சை மாவட்டம் பூதலூரில் தொடர்வண்டி (இரயில்) மறியல் போராட்டம் நடத்தியது. அது மறியல் போராட்டமா? திருவிழாத் தேரோட்டமா என்று வியக்கும் வகையில் உழவர்களும், உரிமை வேட்கை இளையோரும் பூதலூர் தொடர்வண்டி நிலையம் முன்பாகக் குவிந்தார்கள்!

கட்சி வேறுபாடின்றி, சங்க வேறுபாடின்றி காவிரித் தாயை சிறை மீட்கும் ஆவேசத்துடன் திரண்டனர்.

துல்லியமாக எண்ணிப் பார்த்தால் அறுநூறு பேர் இருக்கும் என்று செய்தியாளர்களில் சிலர் சொன்னார்கள். காவல்துறையினர் நம்மை தொடர்வண்டி நிலையத்திற்குள் போகவே கூடாது என்று கடுமை காட்டினர்; கயிற்றைப் பிடித்துக் கொண்டு தடுத்தனர்.

பயணிகள் செல்லும் வழியாகச் சென்று முன்கூட்டியே தண்டவாளத்தில் நின்று கொள்கிறோம்; நிலையத்தின் நடைமேடை நுழைவுக்கு முன்பகுதியில் நின்று வண்டியை மறிக்கிறோம். தொடர்வண்டியை அங்கு நிறுத்தட்டும் என்று கேட்டோம். காவல்துறையினர் மறுத்து விட்டனர். காவிரியை இழந்து காய்ந்த நெற்பயிரைப் பார்த்து, தண்ணீர் வற்றிப் போன ஆறுகளை – வறண்டு போன வாய்க்கால்களைப் பார்த்து, உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்த உழவர்கள் கொந்தளித்தனர்.

கர்நாடகத்தில் காவிரி நீர்ச் சிக்கலை இனச்சிக்கலாக மாற்றி, கர்நாடகத் தமிழர்களுக்கு எதிரான நஞ்சைக் கக்கி கலாட்டாக்கள் செய்கிறார்கள். முழு அடைப்புகள் நடத்திக் கொண்டிருக்கும் கன்னட இனவெறி அரசியலைக் கண்டு நரம்பு முறுக்கேறி சீறிக் கொண்டிருக்கின்றனர், தமிழின இளைஞர்கள்!

காவல்துறை போட்ட இந்தத் தடைகளை மீறி, வேலியைத் தாண்டி தண்டவாளத்தின் வழியே ஓடி நிலையத்திற்கு அரை கிலோ மீட்டருக்கு முன்பாகவே இருப்புப் பாதையில் படுத்து விட்டனர்! ஆவேச முழக்கங்களை எழுப்பினர். அவர்களைத் தூக்கி அப்புறப்படுத்த காவல்துறையினர் முயன்றனர். ஆனால் முடியவில்லை!

திருச்சியிலிருந்து சென்னை போகும் சோழன் விரைவு வண்டி விடாமல் எச்சரிக்கை ஒலி எழுப்பிக் கொண்டு வருகிறது. நம் இளைஞர்கள், வந்து கொண்டிருக்கும் தொடர்வண்டியை நோக்கி இருப்புப் பாதையில் ஓடுகின்றனர். எட்டி நின்று பார்ப்போர்க்கு என்ன ஆகுமோ என்று அச்சம்! காவல்துறையினர் தலையிட்டு வண்டியை நிறுத்தச் சொல்கின்றனர். வண்டி நிற்கிறது! நம் தோழர்கள் சோழன் தொடர்வண்டி முன் படுக்கிறார்கள். உட்காருகிறாகள். ஆனால் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. ஆத்திரத்தை வெளிப்படுத்த அடையாள மறியல்! ஆனால் அலங்கார மறியல் இல்லை!

நாங்கள் பெரும்பாலோர் தொடர்வண்டி நிலையம் தொடங்கும் பகுதியில் இருப்புப் பாதையில் – உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டோம்! நடைமேடையெங்கும் கூட்டம்! மேற்கே அரை கிலோ மீட்டருக்கு முன் மறியல் செய்தவர்கள், பின்னர் காவல்துறை வேண்டுகோளை ஏற்று, நிலையம் நோக்கி – கிழக்கு நோக்கி தண்டவாளங்களுக்கிடையே நடந்து வருகிறார்கள். அவர்களைப் பின்தொடர்ந்து தொடர்வண்டியும் நகர்ந்து வருகிறது. இங்கும் மறியல் செய்தோம். வண்டி நின்றது. காவல்துறையினர் நம்மைத் தளைப்படுத்தினார்கள். மொத்தம் 45 நிமிடம் பூதலூரில் நிறுத்தி வைக்கப்பட்ட பின் வண்டி புறப்பட்டது. இருநூறு பேர் கைதானோம்!

மற்ற மாநிலங்களில் நடைபெறும் தொடர்வண்டி மறியல்களோடு ஒப்பிடும்போது நாம் நடத்திய மறியல் பெரிதல்ல. பஞ்சாபில் உழவர்கள் வாரக்கணக்கில் தொடர்வண்டி இருப்புப் பாதையில் அடுப்பு வைத்து சமைத்துச் சாப்பிட்டு அங்குள்ள நடைமேடைகளிலேயே தங்கினார்கள். கர்நாடகத்தில் தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைத் தரக்கூடாது என்று சட்டவிரோதக் கோரிக்கை வைத்து அவ்வப்போது தண்டவாளங்களை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். “உழவர்கள்” என்ற பெயரில் உள்ள வெறியர்கள்!

“மாப்பிள்ளை மறியல்கள்”, “அலங்கார மறியல்கள்” அதிகமாக நடைபெறும் தமிழ்நாட்டில் உரிமை மீட்பிற்கான உண்மை மறியல் நடந்தது சிறப்புக்குரியதாகும்!

இதே காவிரி உரிமைக்காக 2019இல் உரிமை மீட்புக் குழு, ஒரு வாரம் டெல்டா மாவட்டங்களில் தொடர்வண்டி மறியல் நடத்தியது. ஒன்றில் கூட, தொடர்வண்டி நிலையத்தில் மறியல் செய்யவில்லை. காடுகளில் – ஓடிவரும் வண்டிகளைத் தான் தஞ்சை – திருவாரூர் – நாகை – திருச்சி மாவட்டங்களில் மறித்துக் கைதானோம்! அதற்கு முன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காவிரிக்காகத் தொடர்ந்து 19 நாள் – இரவு பகல் 24 மணி நேரமும் காத்திருப்புப் போராட்டம் நடத்தினோம். கணக்குக் காட்டவோ, கவர்ச்சி காட்டவோ நாம் ”போராடுவதில்லை”.

நம்மால் இயன்ற அளவு உரிமை மீட்புக்காக உண்மையாகப் போராட வேண்டும் என்ற மெய்ச்சுடர் நம் நெஞ்சில் எரிந்து கொண்டுள்ளது.

காவிரி உரிமை மீட்புக் குழு கட்சி சார்பற்றுச் செயல்படுகிறது. இதில் பல்வேறு கட்சியினர் இருக்கிறார்கள். அதேவேளை எந்தக் கட்சியாவது அல்லது எந்தக் கட்சி ஆட்சியாவது காவிரி உரிமையில் நமக்குப் பாதகமாக நடந்து கொண்டால், உரிமை காக்கச் செயல்படாமல் இருந்தால் அவற்றை விமர்சிப்போம்! கண்டித்தும் போராடுவோம்!

காவிரி உரிமை மீட்புக் குழுத் தலைமை எந்தக் கட்சிக்கும் ஆதரவாக வாக்குக் கேட்காது; எந்தக் கட்சிக்கும் எதிராக வாக்களிக்கக் கோராது. அது அவரவர் உரிமை!

நான் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். எமது தமிழ்த்தேசியப் பேரியக்கம் – காவிரிச் சிக்கலை உழவர் சிக்கலாகவும், தமிழர் உரிமைச் சிக்கலாகவும் – தமிழ்நாட்டுடிக் குடிநீர்ச் சிக்கலாகவும் இணைத்துப் பார்க்கிறது.

இந்தத் தடவை பூதலூர் தொடர்வண்டி மறியலுக்குக், குறிப்பாக, தஞ்சை – திருவாரூர் மாவட்டங்களில் தான் உழவர்களையும், உணர்வாளர்களையும் அழைத்தோம்! ஆனால், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள், சென்னை, கோவை, திருச்சி, ஓசூர், மதுரை, பெண்ணாடம், சிதம்பரம், செய்யாறு போன்ற பல பகுதிகளில் இருந்தெல்லாம் வந்து கலந்து கொண்டார்கள்; கைதானார்கள். அதேபோல், தமிழ்த்தேசியப் பேரியக்கத்திற்கு வெளியே உள்ள உணர்வாளர்கள் பலர் சமூக ஊடகங்களில் செய்தியைப் பார்த்துவிட்டு காஞ்சிபுரம், நாமக்கல், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களிலிருந்து வந்து பங்கேற்றுக் கைதானார்கள்! தஞ்சை மாவட்டத்திலிருந்து, இதுவரை நாம் நடத்திய போராட்டங்களில் கலந்து கொள்ளாத ஊர்களிலிருந்தும் வந்து கலந்து கொண்டார்கள்.

காவிரி உரிமை மீட்புக் குழு பொறுப்பாளர்கள் – முன்னணிச் செயல்பாட்டாளர்கள் பல ஊர்களுக்கும், நேரில் சென்று நம் மக்களை அழைத்தார்கள் – அவர்கள் வந்தார்கள்!

இணக்கமான கூட்டு முயற்சி – கூட்டு உழைப்பு எதையும் சாதிக்கும் என்பதற்கு இப்போராட்டத்தின் சிறப்பே சான்று!

பூதலூர் - இரம்யா திருமண மண்டபத்தில் காவல்துறையினர் நம்மை அடைத்து வைத்திருந்த போது, அங்கே பலர் உரையாற்றினார்கள். கருத்துள்ள உரைகள் – ஆவேச முழக்கங்கள்! கைதான வீராங்களைகளும் முழங்கினர்!

இவ்வளவு பெரிய மறியல் போராட்டத்தை பெரிய கட்சிகள் நடத்தியிருந்தால் இலட்சக்கணக்கில் ரூபாய் செலவு செய்திருப்பார்கள்! நமக்கு மொத்தச் செலவு ரூபாய் 14,200 மட்டுமே! கைது செய்து வைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் இச்செலவுகளுக்காக சில கிராமங்களில் நிதி கேட்டோம். அவர்கள் கொடுத்தது 19,500. மிச்சம் கையிருப்பு ரூபாய் 5,300. இத்தொகை காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் ஐயா த. மணிமொழியன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்செலவில் 4000 துண்டறிக்கைகளுக்கு 3,400 ரூபாயும், பல வண்ண 200 ஒற்றைத் தாள் (Single Bit) சுவரொட்டிகளுக்கும், 200 இரட்டைத் தாள் (Double Bit) சுவரொட்டிகளுக்கும் 6,000 ரூபாயும் போனது. ஆக மொத்தம் 9,400 ரூபாய்! ஊர் ஊராகச் சென்று உழவர்களை அழைத்த முன்னணி இளையோரும், பெரியோரும் அவரவர் சொந்த ஊர்திகளில் சென்றனர். அது பொதுச் செலவில் இல்லை.

மாலை 6.15 மணிக்கு அனைவரையும் காவல்துறையினர் விடுவித்தனர்.

காவிரிக் காப்பு மறியல் போராட்டத்தை முன்கூட்டியே நாளேடுகள் வெளியிட்டன. காவிரி உரிமை மீட்பு மற்றும் தமிழர் உரிமைக் காப்பு உணர்வுமிக்க இளையோரும், பெரியோரும் சமூக வலைத்தள ஊடகங்களில் பரப்பினர். எனது வேண்டுகோள் உரையை எமது தமிழர் கண்ணோட்டம் வலையொளியில் வெளியிட்டார்கள். அதை அப்படியே தம்பி ஏகலைவன் அவர்கள், தமது “ராவணா” வலையொளியில் வெளியிட்டார். தம்பி பிரபாகரன் அவர்கள், ழகரம் வாய்ஸ் வலையொளியில், இப்போராட்டத்திற்கான எனது நேர்காணலை வெளியிட்டார். இவ்வாறாக இப்போராட்டத்தைப் பலரும் நாடறிந்த செய்தியாக மாற்றினார்கள்.

மறியல் போராட்டம் நடக்கும் போதே, அதைப் புதிய தலைமுறைத் தொலைக்காட்சி விரிவாக நேரலை செய்தது. போராட்டத்தை நியூஸ்18, ஜெயா டி.வி. முதலியவை வெளியிட்டன. பெரும்பாலும் எல்லாச் செய்தி ஏடுகளும் வெளியிட்டன. தினத்தந்தி சென்னைப் பதிப்பு உள்ளிட்ட பல பதிப்புகளில் வெளியிட்டது.

சமூக ஊடகங்களில் விரிவாக, காவிரி மீட்பு மறியல் போராட்டக் காட்சிகளை – செய்திகளை நம்முடைய உணர்வாளர்கள் பலர் வெளியிட்டனர்.

இத்தோடு நாம் மன நிறைவடையக் கூடாது. காவிரியில் தமிழ்நாட்டு உரிமையை மீட்கும் வரை நாம் போராட வேண்டும்.

மற்றவரைப் பின்பற்ற மட்டுமே நாம் பிறந்தவர்கள் அல்லர்; மற்றவர்க்கு வழிகாட்டவும் நமக்கு உரிமையுண்டு; அறிவுண்டு! வரலாறு உங்களுக்காக வாசலைத் திறந்து வைத்துள்ளது, வாருங்கள்!

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
www.kaveriurimai.com
==========================
Share this video :

0 கருத்துகள்:

Post a Comment

 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger