தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


Home » » மேக்கேத்தாட்டு முற்றுகைப் போர் - அழைக்கிறது காவிரி உரிமை மீட்புக் குழு!

மேக்கேத்தாட்டு முற்றுகைப் போர் - அழைக்கிறது காவிரி உரிமை மீட்புக் குழு!


=============================================
காவிரியில் புதிய அணைகள் - கர்நாடகம் சதி
=============================================
மேக்கே தாட்டுவில் முற்றுகைப் போர்
=============================================
புறப்படட்டும் தமிழர் பேரணி
=============================================
அழைக்கிறது காவிரி உரிமை மீட்புக் குழு
=============================================
புறப்படும் இடம் : தேன்கனிக்கோட்டை
(கிருட்டிணகிரி மாவட்டம்)
=============================================
காலம் : மாசி 23, 2046
07.03.2015 காரி(சனி)க்கிழமை, காலை 10 மணி
=============================================


பன்னிரண்டாம் நூற்றாண்டிலும் கன்னடர்கள் காவிரியின் குறுக்கே அணை கட்டித் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வராமல் தடுத்தார்கள். தண்ணீரைத் திறந்து விடுமாறு ஓலை அனுப்பினான் சோழப் பேரரசன் இரண்டாம் இராசராசன் (கி.பி. 1146 - 1163). மைசூரை ஆண்ட போசள மன்னன் முதலாம் நரசிம்மன் (1141 - 1173) காவிரியை விடுவிக்க மறுத்தான். தஞ்சையிலிருந்து படைகொண்டு சென்று கர்நாடக அணையை உடைத்துக் காவிரியை விடுவித்தான் சோழப் பேரரசன்! மன்னனின் இந்த சமூகப் பொறுப்பை, வீரத்தைத் தக்கயாகப் பரணியில் ஒட்டக்கூத்தர் பாடினார்.

இப்போதும் அதே நிலை உள்ளது. கர்நாடகம் மேக்கேதாட்டு, இராசிமணல் என்ற இரு இடங்களில் புதிய அணைகள் கட்டி, தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வராமல் தடுக்கத் திட்டம் தீட்டிச் செயல்படுகிறது. 
அதே மேக்கே தாட்டில் நாம் பல்லாயிரக்கணக்கானோர் குழுமி, “கர்நாடக அரசே சட்டவிரோத அணைகள் கட்டாதே - தமிழகத்தின் காவிரி நீரைத் திருடாதே!” என்று முழங்கி முற்றுகையிட வேண்டும். இது படையெடுப்பல்ல - அறவழியில் மக்கள் திரள் போராட்டம்!

கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி மிகை நீர் வெளியேற்றப்பட்டால், அத்தண்ணீர் தங்கு தடையில்லாமல் மேட்டூர் வந்து சேரும். அவ்வாறு மிகை நீரும் மேட்டூர் அணைக்குப் வராமல் தடுத்துக் கொள்வதற்காகக் கர்நாடகம் போட்ட சதித்திட்ட அணைகள் தாம் இவை இரண்டும்! 

இப்பொழுது மேட்டூர் வரும் தண்ணீரில் பெரும்பகுதி, கபினி நிரம்பிய பின் திறந்து விடப்படும் வெள்ள நீர் தான்! அந்நீரையும் தடுக்கப் பார்க்கிறார்கள். 

ஆனால் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா புதிய அணைகள் கட்டிய பின் காவிரித் தீர்ப்பாயத் தீர்ப்பின்படி 192 ஆ.மி.க.(டி.எம்.சி.) தண்ணீரைத் தமிழ்நாட்டிற்குத் திறந்து விடுவோம் என்கிறார். இது ஏமாற்றுப் பேச்சு.
காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பின்படி புதிய அணைகள் கட்டவே கூடாது.

1991 சூன் 25-இல் காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில் கூறியபடி, 205 ஆ.மி.க. தண்ணீர் தமிழ்நாட்டிற்குத் திறந்து விடவேண்டும். திறந்துவிட்டார்களா? இல்லை. 

காவிரித் தீர்ப்பாயம் 05.02.2007-இல் வெளியிட்ட இறுதித் தீர்ப்பில் கூறியபடி 192 ஆ.மி.க. தண்ணீர் தமிழ்நாட்டிற்குத் திறந்து விட வேண்டும். உச்ச நீதிமன்றம் கர்நாடகம் இத்தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டும் என்று ஆணையிட்டதுடன் அரசிதழிலும் வெளியிட வேண்டும் என்று இந்திய அரசைப் பணித்தது. இன்றுவரை இத்தீர்ப்பைச் செயல்படுத்தவில்லை கர்நாடகம். 

இந்திய அரசில் ஆட்சி செய்த காங்கிரசு, சனதா தள, பா.ச.க. ஆட்சிகள் இடைக்காலத் தீர்ப்பையும் செயல்படுத்தி வைக்கவில்லை; இறுதித் தீர்ப்பையும் செயல்படுத்தி வைக்கவில்லை. புதிய அணைகள் கட்டிவிட்டால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்காது. 

தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிகள் மாறி மாறி வந்தன. எந்த ஆட்சியும் இடைக்காலத் தீர்ப்பையோ, இறுதித் தீர்ப்பையோ செயல்படுத்திக் காட்ட வில்லை. 
புதிய அணைகள் கட்டக் கர்நாடக அரசு 2007ஆம் ஆண்டு முதல் திட்டம் தீட்டிச் செயல்பட்டது. 2012இல் இரு இ.ஆ.ப.(ஐ.ஏ.எஸ்.) அதிகாரிகள் தலைமையில் 25 நீர்வளத்துறை அதிகாரிகளைக் கொண்ட ஆய்வுக்குழு அமைத்தது. 

அக்குழு கர்நாடகத்தில் 56 இடங்களில் ஆய்வு செய்து, 30 இடங்களில் காவிரிப் படுகையில் சிறிய, பெரிய புதிய அணைகள் கட்டலாம் என்று அறிக்கை அளித்தது. 
கர்நாடக அரசு காவிர நீர்ப்பாசன மேம்பாட்டு வாரியம் ( Karnataka Cauvery Irrigation Development Board ) அமைத்து, புதிய அணைகள் கட்ட உலக அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரியது. 

இக்காலங்களில் தமிழகத்தில் இருந்த ஆட்சிகள், கர்நாடகத்தின் இத்தனை சதி வேலைகளையும் ஏன் கண்டு கொள்ளவில்லை? தமிழக அரசின் உளவுத்துறை என்ன செய்தது? இப்போது, கர்நாடக அரசு வெளிப்படையாக 48 ஆ.மி.க. கொள்ளளவில் மேக்கே தாட்டு - இராசிமணல் பகுதியில் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரு அணைகள் கட்டப்போகிறோம் என்று அறிவித்தபின், தமிழகத்தின் ஆளுங்கட்சியும் ஆண்ட கட்சியும் கண்டனம் தெரிவிக்கின்றன. 

இத்தனை பேராபத்தும் பேரிழப்பும் தமிழகத்தைச் சூழ்ந்துள்ள இத் தருணத்தில் கூட இங்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தவோ - அனைத்துக் கட்சிக் குழுவை அழைத்துச் சென்று தலைமை அமைச்சர் நரேந்திர மோடியைப் பார்த்து அழுத்தம் கொடுக்கவோ தமிழக ஆளுங்கட்சி முன் வரவில்லை; மறுத்து வருகிறது. 

காவிரி நீர்ச்சிக்கல் டெல்டா மாவட்டங்கள் சிலவற்றிற்கு மட்டும் உரிய சிக்கல் அல்ல. பன்னிரண்டு மாவட்டங்களில் பாசன நீர் காவிரி நீர்! பத்தொன்பது மாவட்டங்களில் குடிநீர், காவிரி நீர்! 

ஏற்கெனவே கர்நாடகம் கட்டியுள்ள ஏமாவதி, ஏரங்கி, கபினி ஆகிய அணைகள் சட்ட விரோத அணைகளே! இன்னும் எத்தனை சட்டவிரோத அணைகளைக் கர்நாடகம் கட்டினாலும் இந்திய அரசு தடுக்கப்போவதில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு நேர் எதிராக முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டக் கேரள அரசு ஆய்வுப் பணிகள் செய்யலாம் என்று இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அண்மையில் அனுமதி வழங்கியதில்லையா? 

தமிழகத்தின் கண்ணில் சுண்ணாம்பு வைப்பது, தமிழக உரிமைகளைப் பறிப்போர் கண்ணில் வெண்ணைய் வைப்பது என்பதுதான் இந்திய அரசு காலம் காலமாகக் கடைபிடித்து வரும் (அ)தர்மம்!

எல்லாம் வல்ல இந்தியப் பேரரசு, சட்டத்தின் ஆட்சி, உச்ச நீதிமன்றத்தின் உச்சி அதிகாரம் என்பவையெல்லாம் தமிழக உரிமைச் சிக்கல்களைப் பொறுத்தவரை வெறும் வர்ணனைகள்தான்! 

காவிரி உரிமையை இழந்து விட்டால் கோடிக்கணக்கான மக்கள் ஊரை விட்டு வெளியேற வேண்டிவரும். தமிழ்நாட்டில் எங்கு போனாலும் குடிநீர் கிடைக்காது - தமிழகத்தை விட்டே வெளியேறி அகதிகளாய், அண்டிப் பிழைப்போராய் வாழ வேண்டிய அவலம் நேரும். 
காவிரிப் படுகையில் வேளாண்மை செய்ய முடியாத வகையில் மண்ணையும் நீரையும் நஞ்சாக்கும் மீத்தேன் நச்சுக் காற்றுத் திட்டத்தைக் கொண்டுவர வசதியாக, காவிரி நீரின்றி முன்கூட்டியே வேளாண் மக்கள் வெளியேறிவிட வேண்டும் என்பதுதான் இந்திய ஆட்சியாளர்களின் திட்டம்!

இந்தப் பேரவலம் நேராமல் நம்மால் தடுக்க முடியும்! இந்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் நெருக்குதல்கள் கொடுத்து, நம்மால் நீதியை நிலைநாட்ட முடியும். தமிழகமே கொதித்து எழுந்து மாபெரும் மக்கள் எழுச்சியாகக் காவிரி உரிமை மீட்புப் போராட்டங்களை அடுக்கடுக்காக நடத்த வேண்டும். 

ஏற்கெனவே, இதற்காகக் கடந்த இரண்டாண்டுகளாகக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடந்துள்ளன. பல்வேறு உழவர் அமைப்புகள், அரசியல் இயக்கங்கள், தமிழின உணர்வு அமைப்புகள் இக்கூட்டமைப்பில் இணைந்து போராடி வருகின்றன. 

இப்போது கர்நாடக அரசு அணைகட்ட திட்டமிட்டுள்ள மேக்கே தாட்டு என்ற இடத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்த தேன்கனிக்கோட்டையிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் பேரணியாக நாம் செல்ல வேண்டும். அனைத்துத் தரப்புத் தமிழ் மக்களும் தமிழகம் தழுவிய அளவில் திரளாக வந்து இப்பேரணியில் கலந்து கொள்ள அழைக்கிறோம். 

---------------------------------
நமது கோரிக்கைகள் : 
---------------------------------
1. இந்திய அரசே, கர்நாடகம் புதிதாகச் சட்ட விரோத
அணைகள் கட்டுவதைத் தடுத்து நிறுத்து! 
2. இந்திய அரசே, காவிரி மேலாண்மை வாரியம்,
காவிரி ஒழுங்குமுறைக் குழு இரண்டையும் உடனே அமைத்திடு! 

காவிரியில்லாமல் வாழ்வில்லை
களம் காணாமல் காவிரியில்லை
வாழ்வா சாவா போராட்டம்
மானமா ஈனமா முடிவுக்கு வா!

============================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
============================
பேச: 76670 77075, 94432 74002
============================
Now
Share this video :

0 கருத்துகள்:

Post a Comment

 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger