தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


Home » » மேக்கேத்தாட்டு முற்றுகைப் போராட்டத்திற்கு, தஞ்சையில் தொடங்கிய பரப்புரை இயக்கம்!

மேக்கேத்தாட்டு முற்றுகைப் போராட்டத்திற்கு, தஞ்சையில் தொடங்கிய பரப்புரை இயக்கம்!
காவிரியின் குறுக்கே கர்நாடகம் சட்டவிரோத அணைகள் கட்டுவதைத் தடுக்க, மார்ச் 7 அன்று, தேன்கனிக்கோட்டையிலிருந்து ஆயிரக்கணக்கான உழவர்களுடன் மேக்கேத்தாட்டுவுக்குச் சென்று முற்றுகைப் போராட்டம் நடத்த, காவிரி உரிமை மீட்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது. இப்போராட்டத்திற்கு ஆதரவு திரட்டி, தமிழகமெங்கும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் பரப்புரை இயக்கங்கள் நடைபெறுகின்றன. இதன் தொடக்க விழா, நேற்று (10.02.2015) மாலை தஞ்சையில் நடைபெற்றது. 

தஞ்சை பனகல் கட்டிடம் அருகில் நடைபெற்ற இத்தொடக்க விழாப் பொதுக்கூட்டத்திற்கு, தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த.மணிமொழியன் தலைமையேற்றார். காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் முன்னிலை வகித்தார். தமிழர் தேசிய முன்னணித் தலைவர் திரு. பழ.நெடுமாறன், பரப்புரை இயக்கத்தைத் தொடக்கி வைத்துப் பேசினார். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, எழுச்சி முழக்கங்களை எழுப்பினார். 

கூட்டத்தில், மனித நேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் திரு. தமிமுன் அன்சாரி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அயனாவரம் திரு. சி.முருகேசன், தாளாண்மை உழவர் இயக்கம் பொறியாளர் கோ. திருநாவுக்கரசு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. எஸ்.எஸ். பாண்டியன், திரு. இறைநெறி இமையவன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் பங்கேற்றனர். நிறைவில், தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் துணைத் தலைவர் திரு. ஜெகதீசன் நன்றியுரையாற்றினார். 

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.இராசேந்திரன், தோழர் தோழர் அ.ஆனந்தன் உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்கள் கலந்து கொண்டனர். 

காவிரிச் சிக்கல் என்பது காவிரி டெல்டா மாவட்டங்களின் சிக்கல் மட்டுமல்ல, அது தமிழகம் தழுவிய சிக்கல். ஏனெனில், தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு, காவிரி நீர் தான் குடிநீராகப் பயன்படுகிறது. எனவே,காவிரியைக் காக்கும் மேக்கேத்தாட்டு முற்றுகைப் போராட்டத்தில் தமிழகம் தழுவிய அளவில் தமிழின உணர்வாளர்களும், பொது மக்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென காவிரி உரிமை மீட்புக் குழு வேண்டுகோள் விடுக்கிறது. 
Share this video :

0 கருத்துகள்:

Post a Comment

 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger