காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்
கோரிய தமிழக அரசின் வழக்கு
உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!
கோரிய தமிழக அரசின் வழக்கு
உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!
அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி
காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்யும்!
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை
காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை 19.02.2013 அன்று தனது அரசிதழில் வெளியிட்டஇந்திய அரசு. அத்தீர்ப்பை செயல்படுத்தும் அதிகாரம் படைத்தகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் ஒதுங்கிக் கொண்டது இந்நிலையில், காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் கூறியுள்ளபடிஉடனடியாகக் காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்கு முறைக் குழுவையும் அமைத்திடுமாறு இந்திய அரசுக்கு ஆணையிட கேட்டுக்கொண்டு தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
இவ்வழக்கு விசாரணை பல முறை நடந்தும் உச்சநீதி மன்றம், கர்நாடக அரசு எதிப்பு தெரிவித்ததாலும், நடுவண் அரசு நழுவிக் கொண்டதாலும் உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல். இடைக்கால ஏற்பாடாக அதிகாரமற்ற மேற்பார்வைக் குழுவை அமைத்தது இக்குழு நடப்பு சாகுபடிஆண்டில் கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இருந்த காலத்தில் கூட சூன், சூலை மாதங்களுக்கு உரிய பங்கு நீரை தமிழகத்திற்கு திறந்து விடுமாறுஆணையிடவில்லை, ஆணையிடும் அதிகாரமும் அதற்கு இல்லை.
இந்நிலையில் தென்மேற்குப் பருவமழை கர்நாடக, கேரள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில்மிக அதிகமாக பெய்து கர்நாடக அணைகள் நிரம்பிவிட்டன.தனது மாநில அணைகள் உடையாமல் பாதுகாக்கப்படவும் தனது மாநில கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுக்காக்கபடவும் தேவைப்பட்ட தற்காப்புநடவடிக்கையாகக் கர்நாடக அரசு மிகை நீரை தமிழகத்திற்குத் திறந்துவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி தமிழ அரசு தொடுத்துள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது உச்சநீதி மன்றம்,இப்போது காவிரிப் படுகையில் நிறைய மழைப்பெய்து தண்ணீர் அதிகமாக உள்ளதால் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்கத் தேவையில்லை. காவிரிதீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பு பற்றி நிலுவையில் உள்ள அசல் வழக்கு 2014 சனவரி மாதம் விசாரணைக்கு வரவுள்ளது, அப்பொழுது காவிரி மேலாண்மைவாரியம் அமைப்பது குறித்து விசாரிக்கலாம் என்று கூறி, தமிழக அரசு தொடுத்த வழக்கை இன்று (05.08.2013) தள்ளுபடி செய்துவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு, தமிழகத்தில் உள்ள காவிரிப் பாசன உழவர்களுக்கும், குடிநீருக்குக் காவிரியை நம்பியுள்ள தமிழக மக்களுக்கும் மிகுந்தஏமாற்றத்தை அளித்துள்ளது.
1990இல் இருந்து உச்சநீதி மன்றத்தில் காவிரி வழக்குகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. அவ்வபோது பல தீர்ப்புகளை உச்சநீதி மன்றம் வழங்கியுள்ளது.இவற்றில் எந்தத் தீர்ப்பையும் கர்நாடகம் செயல்படுத்தியது இல்லை. தண்ணீர்ப் பற்றாகுறை காலத்தில் ஒரு முடிவெடுப்பதைவிட, தண்ணீர் நிரம்பியுள்ள இக்காலத்தில் சட்டப்படி ஒரு முடிவெடுத்து அறிவிப்பது எளிதாக இருக்கும். 1970களில் இருந்து தொடர்ந்து வரும் காவிரிச் சிக்கலுக்கு அரசிதழில் வெளியிடப் பட்ட தீர்ப்பாயத்தின் முடிவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியது உச்சநீதி மன்றத்தின் சட்டப்படியான கடமை.இக்கடமையை உச்சநீதி மன்றம் நிறைவேற்றவில்லை. தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.
ஏற்கனவே இந்திய அரசு காவிரிப் பிரச்சனையில் நடுநிலையோடு செயல்படாமல் தனது சட்டக் கடமையிலிருந்து தவறி தமிழகத்தை வஞ்சித்து விட்டது.இப்பொழுது உச்சநீதி மன்றமும் இன்றைய பாசனத்திற்கு தண்ணீர் இருக்கிறது என்று கூறி தமிழக அரசு தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்திருப்பது தமிழக உழவர்கள் மீது விழுந்த மற்றும் ஒர் அடியாகும் இது பற்றி விவாதிக்க காவிரி உரிமை மீட்புக் குழு விரைவில் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
பெ.மணியரசன்
ஒருங்கிணைப்பாளர்
காவிரி உரிமை மீட்புக் குழு
0 கருத்துகள்:
Post a Comment