தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


Home » » காவிரியிலிந்து கிடைக்கும் உபரி நீரையும் தமிழகத்திற்கு தரவிடாமல் அணை கட்டும் முடிவில் கர்நாடகா!

காவிரியிலிந்து கிடைக்கும் உபரி நீரையும் தமிழகத்திற்கு தரவிடாமல் அணை கட்டும் முடிவில் கர்நாடகா!


கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அருகே நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்க அரசு ஆலோசித்து வருவதாக, அந்த மாநில சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூருவில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
உபரிநீராக தமிழகத்திற்குச் செல்லும் தண்ணீரை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அருகே நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்க அரசு ஆலோசித்து வருகிறது.
இதற்காக மேக்கேதாட்டு அருகே 3 நீர்த்தேக்கங்களைக் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விவாதிப்பதற்காக, நீர்ப்பாசனத் துறை உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை பெங்களூருவில் நடைபெறுகிறது.
நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் திட்டம் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பு யோசிக்கப்பட்டது. ஆனால், அப்போது இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த இயலவில்லை. காவிரி ஆற்றின் உபரிநீரை கர்நாடகம் பயன்படுத்திக் கொள்வதில் காவிரி நடுவர் மன்றத்தில் எந்தவிதத் தடங்கலும் இல்லை. எனவே, மேக்கேதாட்டு அருகே 3 நீர்த்தேக்கங்களைக் கட்டி அங்கு நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும்.
மின் உற்பத்திக்குப் பயன்படுத்திய பிறகு, உபரிநீரை வழக்கம் போல தமிழகத்திற்கு அனுப்பலாம்.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதால், உபரிநீரை பயன்படுத்துவதில் கர்நாடகத்திற்கு எந்தவித சட்ட ரீதியான இடையூறும் இல்லை.
புதிதாகக் கட்டப்படும் நீர்த்தேக்கத்தில் சுமார் 40-50 டிஎம்சி தண்ணீரைத் தேக்கிவைத்து, மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். காவிரி ஆற்றிலிருந்து ஆண்டுக்கு 192 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. நடப்பாண்டு, தமிழகத்திற்கு இதுவரை 151 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், இந்தாண்டு காவிரி நதிநீர் பிரச்னை எழாது.
ஆண்டுதோறும் ஹேமாவதி அணையில் இருந்து கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு திறந்துவிடப்படும் உபரிநீரையும் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஹேமாவதி அணையில் இருந்து வெளியேறும் 26 டிஎம்சி உபரிநீரைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பிருந்தும், இதுவரை 16 டிஎம்சி தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம்.
மீதமுள்ள தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ள ரூ.500 கோடி முதல் ரூ.600 கோடியில் திட்டம் வகுக்கப்படும். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தும்கூர், பெங்களூரு நகரங்கள் எதிர்க்கொண்டுள்ள குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்றார் ஜெயசந்திரா.
Share this video :

0 கருத்துகள்:

Post a Comment

 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger