கர்நாடக கபினி அணையை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரும் காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருகிணைப்பாளருமான தோழர் பெ.மணியரசன், தமிழக உழவர் முன்னணி ஆலோசகரும் காவிரி உரிமை மீட்புக் குழு செயற்குழு உறுப்பினருமான தோழர் கி.வெங்கட்ராமன் உள்ளிட்டோர் அடங்கிய குழு பார்வையிட்டது.
கர்நாடகத்தின் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து கபினி ஆற்றி்ன் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி அணையிலிருந்தும் அருட்காவதி ஆற்றிலிருந்தும் மேட்டூர் அணைக்கு வருகின்ற உபரி நீரையும் தடுக்க திட்டமிட்டுள்ளது கர்நாடக அரசு.
இதற்காக ”மேகத்தாட்டு நீர்த்தேக்கத் திட்டம்” என்ற புதியத் திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்கு காவிரியில் வராது. பாலாற்றுக்கு ஏற்பட்ட கதிதான் காவிரிக்கும் ஏற்படும். இத்திட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் அமைப்புகளும், தமிழக அரசும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
இவ்வாறு முக்கியத்துவம் பெற்றுள்ள கபினி அணையை, காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் - தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையிலான தமிழகக் குழுவினர் 21.10.2013 அன்று பார்வையிட்டனர்.
இக்குழுவில், தமிழக உழவர் முன்னணி ஆலோசகரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளருமான தோழர் கி.வெங்கட்ராமன், பேரறிவாளன் தாயார் திருமதி. அற்புதம் அம்மையார், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழுத் தோழர்கள் கோ.மாரிமுத்து, குழ.பால்ராசு, க.அருணபாரதி, தோழர்கள் மு.வேலாயுதம், பார்த்திபராசன், குழந்தைராசு உள்ளிட்டேர்ர் இருந்தனர்.
பின்னர் தலைவர் பெ.மணியரசன் தலைமையிலான தமிழகக் குழுவினர் அணையின் கீழ் அமைந்துள்ள கர்நாடக அரசு பொதுப்பணித்துறை அலுவலகத்திற்குச் சென்றனர்.
கர்நாடக அரசு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கபினி அணையின் நீர் இருப்பு, அணை கொள்ளளவு நிலவரம், கர்நாடக அரசின் மேகத்தாட்டு நீர்த்தேக்கத் திட்ட நிலை உள்ளிட்டவை குறித்து விவரங்களைக் கேட்டறிந்தனர்.
0 கருத்துகள்:
Post a Comment