தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


தமிழ்நாடு அரசின் செயலற்ற தன்மையால் காவிரி வழக்கு 4 மாதம் தள்ளிப் போனது. ============================== காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கண்டனம்.

                                                                                                                                                                              
தமிழ்நாடு அரசின் செயலற்ற தன்மையால்
காவிரி வழக்கு 4 மாதம் தள்ளிப் போனது!
காவிரி உரிமை மீட்புக் குழு 
ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கண்டனம்!

காவிரி வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் சூலை 19 ஆம் நாளுக்கு ஒத்திவைத்து விட்டது என்ற செய்தி டெல்டா மாவட்டங்களின் உழவர்கள் தலையில் இடி விழுந்தது போல் அதிர்வை உண்டாக்கி விட்டது. சூன் மாதம் தொடங்கும் குறுவைப் பட்டத்தில் இவ்வாண்டாவது சாகுபடி தொடங்கலாம் என்றிருந்த உழவர்களின் எதிர்பார்ப்பைப் பொசுக்குவது போல் உள்ளது இந்த ஒத்திவைப்பு.

2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் நாள் காவிரி இறுதித் தீர்ப்பு வந்தது. இன்றுவரை அத்தீர்ப்பைச் செயல்படுத்த முடியாது என்று மறுக்கிறது கர்நாடக அரசு, காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு தொடர்பாகத் தமிழ்நாடு, கர்நாடம், கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் அதே 2007 இல் வழக்குத் தொடுத்தன. ஒன்பதாண்டுகள் கடந்தும் இதுவரை உச்ச நீதிமன்றம் அவ்வழக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்கவில்லை.

2013 பிப்ரவரி 19 ஆம் நாள் இந்திய அரசு காவிரித் தீர்ப்பைத் தனது அரசிதழில் வெளியிட்டது. அத்தீர்ப்பைச் செயல்படுத்தும் பொறியமைவுகளான காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைக்காமல் ஏட்டுச் சுரைக்காய்போல் வஞ்சகமாக அரசிதழில் வெளியிட்டது அன்றைய காங்கிரசு ஆட்சி.

2013 மார்ச்சு மாதம் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைக்க இந்திய அரசுக்குக் கட்டளை இடுமாறு கோரியது. அவ்வழக்கு இதுவரை விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

இந்திய அரசு மறைமுகமாகக் கொடுத்த துணிச்சலில் ஊக்கம் பெற்று காவிரி இறுதித் தீர்ப்பை நிறைவேற்ற மறுத்து வந்த கர்நாடக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் காலவரம்பற்று விசாரணையைத் தள்ளி வைத்தது மேலும் ஊக்கம் கொடுத்தது. அந்தத் துணிச்சலில் கர்நாடக அரசு மேக்கேதாட்டுப் பகுதியில் காவிரியில் புதிதாக மூன்று அணைகள் கட்டி 50 ஆமிக (டிஎம்சி) அளவிற்குத் தண்ணீர் தேக்கத் திட்டமிட்டு உலக அளவில் ஏலம் கோரி – அவ்வேலையில் மும்முரம் காட்டியது.

கர்நாடகம் காவிரியில் புதிய அணைகள் கட்டத் தடை கோரித் தமிழ்நாடு அரசு 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டது. அவ்வழக்கும் விசாரிக்கப் படாமல் நிலுவையில் உள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்த கர்நாடகத்தின் அப்போதைய ப.ச.க. முதலமைச்சர் செகதீசு செட்டர், இப்போதைய காங்கிரசு முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் மீது தமிழ்நாடு அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்தது. அவ்வழக்குகளும் விசாரிக்கப்படாமல் ஊறப் போடப்பட்டன.

கடந்த 19.03.2016 அன்று உச்ச நீதிமன்றம் காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் தொடர்ந்து விசாரித்து விரைந்து தீர்ப்பளிக்க நீதிபதி ஜே. செலமேசுவர் தலைமையில் நீதிபதி ஆர்.கே. அகர்வால், நீதிபதி அபய் மனோகர் சப்ரே ஆகியோரைக் கொண்ட மூன்று நீதிபதிகள் அமர்வை அமைத்து, அது 28.03.2016 அன்று விசாரணையைத் தொடங்கும் என்று அறிவித்தது.

28.03.2016 அன்று இந்த மூன்று நீதிபதிகள் அமர்வு கூடி வழக்கு விசாரணையை 2016 சூலை 19 ஆம் நாளுக்குத் தள்ளி வைத்து விட்டது. வழக்கு விசாரணையைத் தள்ளி வைக்கும் மனநிலையில் நீதிபதிகள் மூவரும் இருந்துள்ளார்கள். வேறொரு முக்கிய வழக்கு இருப்பதாகக் கூறியுள்ளார்கள். கர்நாடக வழக்கறிஞர் பாலி நாரிமன் வழக்கைத் தள்ளி வைக்கலாம் என்று கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் அவ்வழக்கில் நேர்நின்ற மூத்த வழக்கறிஞர் ராகேசு துவேதி எந்த மறுப்பும் சொல்லவில்லை. நீதிபதிகள் சூலை 19 க்கு வழக்கைத் தள்ளி வைத்து விட்டார்கள். தமிழ்நாடு வழக்கறிஞர் குறுவை சாகுபடி அவசரத்தைச் சுட்டிக் காட்டி கடுமையாக வாதிட்டிருந்தால் 4 மாதங்களுக்கு வழக்கை ஒத்தி வைக்கும் அவலம் நேர்ந்திருக்காது.

காவிரி டெல்டாவில் சூன் மாதம் குறுவை சாகுபடி ஐந்து இலட்சம் ஏக்கரில் தொடங்க வேண்டிய அவசர அவசியம் இருக்கும் போது, குடிநீருக்குக் கூட மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் எடுக்க முடியாத அளவிற்கு நீர்மட்டம் அன்றாடம் வேகமாகக் குறைந்து வரும் நிலையில் (28.03.2016 நீர்மட்டம் 58 அடி ) மூன்றரை மாதங்களுக்கு மேல் சூலை 19 க்கு வழக்கைத் தள்ளி வைப்பதைத் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் எப்படி ஏற்றுக் கொண்டார்? தமிழ்நாடு அரசின் வழிகாட்டல் இதில் என்னவாக இருந்தது?

தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு வேளாண் அமைச்சர், தமிழ்நாடு தலைமைச் செயலாளர், பொதுப் பணித்துறைச் செயலாலர் ஆகியோரே டெல்ட்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடி பாதிக்கப்படுவதற்குப் பொறுப்பேற்க வேண்டிவர்கள்.

காவிரிச் சிக்கலில் தமிழ்நாடு அரசின் செயலற்ற தன்மையைக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் விரைவு மனுப்போட்டு கோடைக் கால விடுமுறைக்கு முன் வழக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்கிட ஏற்பாடு செய்திடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

இணையம்:www.kaveriurimai.com
பேச: 76670 77075, 94432 74002

           

தஞ்சையில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்!



உழவர் பாலனைத் தாக்கிய காவலர்களைக் கைது செய்து சிறையில் அடை !
உழவர் தற்கொலைகளைத் தடுக்க தமிழ்நாட்டை தனி உணவு மண்டலமாக்கு !
தஞ்சையில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக் குழு  ஆர்ப்பாட்டம்

உழவர் பாலனைத் தாக்கிய காவலர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கக் கோரியும்உழவர் தற்கொலைகளைத் தடுக்க தமிழ்நாட்டைத் தனி உணவு மண்டலமாக்க வேண்டுமெனக் கோரியும்தஞ்சையில்,காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில்நேற்று (24.03.2016) காலைஉழவர் ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

·         டிராக்ட்ர் எந்திரத்தை பறிமுதல் செய்கிறோம் என்ற பெயரில்பாப்பாநாட்டில் உழவர் பாலன் மீது கொடுந்தாக்குதல் நடத்திய காவல்துறை ஆய்வாளர் குமாரவேல் மற்றும் காவலர்களை மீது குற்றவழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்,

·         உழவர்களின் வேளாண் கடன்களை முழுவதுமாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்,

·         அரியலூரில் தற்கொலை செய்து கொண்ட உழவர் அழகர் குடும்பத்திற்கு - இழப்பீடு வழங்க வேண்டும்,

·         குண்டர்களை வைத்து கடன் வசூல் செய்யும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைக் கண்டறிந்து அவற்றின் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,

·         இந்திய அரசு நியமித்த முனைவர் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான தேசிய உழவர் ஆணையம்” அளித்துள்ள பரிந்துரையின்படி - உற்பத்திச் செலவில் 50% கூடுதலாக வைத்து வேளாண் விளை பொருட்களுக்கான கொள்முதல் விலையையும்சந்தை விலையையும் நிலைநிறுத்த வேண்டும்,

·         பதுக்கல் – ஊக பேரம் – செயற்கையான விலை வீழ்ச்சி – விலை உயர்வு உள்ளிட்டவைகளுக்கு வாய்ப்பு அளிக்கும் இணையதள வணிகத்தைத் தடை செய்ய வேண்டும்,

·         தமிழ்நாட்டை தனி உணவு மண்டலமாக்க வேண்டும்,

·         சர்க்கரை ஆலைகளில் ஒரு டன் கரும்புக்கான விலை ரூ. 2,750-இல் ரூ. 750 பிடித்தம் செய்யாமல் முழுத் தொகையையும் உழவர்களுக்கு வழங்க வேண்டும்

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துகாவிரி உரிமை மீட்புக் குழு சார்பில்தஞ்சை தொடர்வண்டி நிலையம்அருகில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில், காவிரி உரிமை மீட்புக் குழுவில் உறுப்பு வகிக்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும், உழவர்களும் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும்தமிழ்த் தேசியப் பேரியக்கத்தலைவருமான தோழர் பெமணியரசன் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை கோரிக்கை முழக்கங்களை எழுப்ப, ஆர்ப்பாட்டத் தோழர்கள் அதை விண்ணதிர எதிரொலித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், உழவர் கோரிக்கைகளைத் தீர்மானங்களாக முன்மொழிந்து, தமிழக விவசாயிகள் சங்கத்தஞ்சை மாவட்டத் தலைவர் திருமணிமொழியன் பேசினார். மூன்று மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. வலிவளம் மு. சேரன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளர் திருகாவிரிதனபாலன்தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர்கள் திருஅயனாபுரம் சிமுருகேசன்திரு. சதா முத்துக்கிருட்டிணன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசுதமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் துணைச் செயலாளர் திரு. செகதீசன், இந்திய சனநாயகக் கட்சித் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. சிமியோன் சேவியராஜ், தலைமைக் கழகப் பேச்சாளர் திரு. ஆ.வி. நெடுஞ்செழியன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இலரா.பாரதிச்செல்வன்மனித நேய மக்கள் கட்சி வணிகப்பிரிவுத் தலைவர் திரு. ஜெ. கலந்தர், மனித நேய சனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. அகமது கபீர், விடுதலைத் தமிழ்ப்புலிகள் இணைச் செயலாளர் திரு. சி. அருண் மாசிலாமணி ள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர்.


ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் பேசிய தோழர் பெ. மணியரசன், கடன் நிலுவை தொகைக்காக உழவர்களைஅவமானப்படுத்துவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உழவர் பாலன் தாக்கப்பட்டுள்ளார். அரியலூர் உழவர்அழகர் தர்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபோல் ஒரு சில நிகழ்வுகள் தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வெளிச்சத்திற்கு வராத துயரங்கள் ஏராளம்.

கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் 2,422 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தேசியக் குற்றஆவணக் காப்பகம் (NCRB) கூறுகிறது. ஏன் இந்த நிலைமை?

உழவர்கள் உற்பத்தி செய்யும் விளைப்பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்காததால்தான் உழவர்கள்கடன்சுமையில் சிக்கி வாழ்க்கையை இழக்கிறார்கள். வேளாண் விளை பொருட்களுக்கு உற்பத்தி செலவோடு சேர்த்து கூடுதலாக 50 சதவீதம் விலை நிர்ணயிக்க வேண்டும்.

ஒரு மாதத்திற்கு 2 இலட்சம் டன் அரிசியை பொது வழங்கலுக்குத் தமிழ்நாடு அரசு இந்திய அரசிடமிருந்து வாங்குகிறது. அவை அனைத்தும் பஞ்சாப்அரியானாகர்நாடகாஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் உற்பத்தியானவை. எட்டு கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாடுதமிழ்நாட்டு உழவர்களுக்குதமிழ்நாட்டு வணிகர்களுக்கு சந்தையாக இல்லைவெளி மாநிலங்களுக்குச் சந்தையாக இருக்கிறது.

எனவேதமிழ்நாட்டு வேளாண் விளை பொருட்களுக்கு சந்தை மதிப்பு கிடைக்கும் வகையில் தமிழ்நாட்டைத் தனி உணவு மண்டலமாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு தனி உணவு மண்டலம் ஆனால்வெளி மாநில உணவுப் பொருட்கள் தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் தமிழ்நாட்டுச் சந்தைக்கு வர முடியாது. தமிழ்நாட்டுக்கு பற்றாக்குறையை உள்ள தவசங்களை (தானியங்களை) தமிழ்நாடு அரசு முடிவு செய்துவெளி மாநிலங்களிலிருந்து வாங்கிக் கொள்ளலாம். ஏற்கெனவேஇந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் ஒரு தனி உணவு மண்டலமாகத்தான் இருந்தது. பின்னர்தான் அந்நிலை மாற்றப்பட்டது.

தமிழ்நாட்டைத் தனி உணவு மண்டலமாக்கினால்தான், இங்குள்ள உழவர்களுக்கு லாபகரமான விலை கிடைக்கும். வெளிச்சந்தையிலும் நெல்லுக்கு அதிக விலை கிடைக்கும் என்று தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உழவர்களும், பெண்களும் திரளாகப் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.












==============================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==============================
இணையம்:www.kaveriurimai.com
==============================
பேச: 76670 77075, 94432 74002
==============================

நாகூர் இந்திய அரசு பெட்ரோலிய ஆலை முற்றுகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் இந்திய அரசே!
காவிரிப்படுகைப் பெட்ரோலியத்தை எடுக்காதே!


நாகூர் இந்திய அரசு பெட்ரோலிய ஆலை
முற்றுகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது!


காவிரி உரிமையைப் பாதுகாத்துத் தராத இந்திய அரசே காவிரிப் படுகையிலிருந்து பெட்ரோலியத்தை எடுக்காதே“  என்ற முழுக்கத்தை முன்வைத்து காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில் நேற்று (28.09.2015)காலைநாகை மாவட்டம் – நாகூர் பனங்குடி இந்திய அரசு பெட்ரொலிய ஆலை முற்றுகையிடப்பட்டதில் ஆயிரக்கணக்கான உழவர்களும் உணர்வாளர்களும் கைது செய்யப்பட்டனர். 

காவிரி உரிமையைக் காக்காத இந்திய அரசே – காவிரி பெட்ரொலை எடுக்காதே – காவிரி எங்கள் செவிலித்தாய்! காவிரி எங்கள் குருதி ஒட்டம்“ என்பன உள்ளிட்ட ஆவேச முழக்கங்களோடு காலை 10மணியளவில்நாகூர் – வாஞ்சூர் ரவுண்டானாவில பல்வேறு உழவர் அமைப்புகளைச் சேர்ந்த உழவர்களும்,தோழர்களும் திரளத் தொடங்கினர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வாகனங்களில் வந்த தோழர்களால் அச்சாலை முழுவதுமாக மக்கள் வெள்ளமாகக் காட்சியளித்தது. திட்டச்சேரி சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

அங்கிருந்து தொடங்கிய முற்றுகைப் பேரணிக்கு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார்.

பேரணியின் போதுகர்நாடக முதல்வர் சித்தராமையாநடுவண் சட்ட அமைச்சர் சதானந்த கவுடா உருவப்படங்கள் எரிக்கப்பட்டன. ஆவேச முழக்கங்களை எழுப்பியவாறு வந்த தோழர்களை ஆலையின் வாயிலில் காவல்துறையினர் தடுத்தனர். காவல்துறை தடுப்புகளை உடைத்துக் கொண்டு முன்னேறிய தோழர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர்தோழர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்துசாலை மறியல் செய்தனர். காவல்துறை அனைவரையும் கைது செய்வதாக அறிவித்துஅனைவரையும் தங்கள் வாகனங்களில் ஏற்றினர்.

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளர் திரு. காவிரி தனபாலன்தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன்திருச்சி மாவட்டத் தலைவர் திரு. ம.பா. சின்னதுரைதமிழ்த் தேசியப் பேரிக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன்இந்திய தேசிய லீக் தேசிய பொதுச் செயலாளர் – முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் திரு. எம்.ஜி.கே. நிஜாமுதீன்தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அயனாவரம் சி. முருகேசன்விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் திரு. அருண் மாசிலாமணிஇந்திய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. சிமியோன் சேவியர்ராஜ்மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் த. செயராமன்,மீத்தேன் கூட்டமைப்பு மன்னார்குடி ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் பாரதிச்செல்வன்கூடங்குளம் அணுஉலைக்கு எதிர்ப்புப் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் முகிலன்தமிழக உழவர் முன்னணிப் பொதுச் செயலாளர் திரு. தூருவாசன்துணைப் பொதுச் செயலாளர் திரு. தங்க. கென்னடிதுணைத் தலைவர் திரு. மு. கொள்ளிடம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. சிவப்பிரகாசம் பிள்ளைகா.வி.பா.ச. நாகை மாவட்டச் செயலாளர் திரு. ஆர். இராசேந்திரன்கீழையூர் ஒன்றியச் செயலாளர் திரு. வீ. இராமசாமி,வேதாரணியம் வட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. ஒளிச்சந்திரன்ஒசூர் – தொழிலாளர் பாதுகாப்புப் பேரவை செயல் தலைவர் திரு. முரளிமே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் லேனா குமார் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும்தோழர்களும் இதில் கலந்து கொண்டு கைதாகினர்.












கைதான தோழர்கள் நாகூரிலுள்ள பல்வேறு மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டு மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

காவிரி உரிமை மீட்புக் குழுவின் இப்போராட்டம்காவிரி உரிமை மீட்பில் உழவர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்தது.

==============================
செய்தி வெளியீடு
==============================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==============================
இணையம்:www.kaveriurimai.com
==============================
பேச: 76670 77075, 94432 74002
==============================

செப் - 28 - நாகூர் – பனங்குடி இந்திய அரசு பெட்ரோலிய ஆலை முற்றுகைப் போராட்டம்!



===================================
குறுவை போச்சு! சம்பாவுக்கும் ஆபத்து!!
===================================
காவிரி மேலாண்மை வாரியம்
அமைக்க மறுக்கும் இந்திய அரசே!
காவிரிப்படுகைப் பெட்ரோலியத்தை எடுக்காதே! 
===================================
காவிரி உரிமை மீட்புக் குழு நடத்தும்...
===================================
நாகூர் – பனங்குடி இந்திய அரசு 
பெட்ரோலிய ஆலை முற்றுகைப் போராட்டம்.! 
===================================
காலம்: செப்டம்பர் 28, 2015 திங்கள்
காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
===================================


கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கூறி செப்டம்பர் 1 முதல் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணை மதகுகளை அடைத்துவிட்டது. அடுத்த சில நாட்களில் மேட்டூர் அணை கதவுகளையும் அடைக்க வேண்டிய நிலை உருவாகப் போகிறது. டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி தொடங்கியுள்ள 16 இலட்சம் ஏக்கர் வேளாண்மையின் கதி என்ன? 

ஒரு மாநிலத்திற்கு மேற்பட்ட மாநிலங்களில் ஓடும் ஆறுகளில் சிக்கல்கள் எழுந்தால் அவற்றைத் தீர்க்க இந்திய அரசுக்கு பொறுப்பும் அதிகாரமும் உள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 262-இன்படியும், மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் தகராறுச் சட்டத்தின்படியும் காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய அதிகாரமும் பொறுப்பும் இந்திய அரசிடம் உள்ளது. 

நர்மதை, கிருஷ்ணா போன்ற ஆறுகளில் மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்கள் ஏற்பட்ட போது, தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் தீர்ப்புகளை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பக்ரானங்கல் அணை நீர்ப் பகிர்வில் ஏற்பட்ட சிக்கல்களைத் தீர்க்க இந்திய அரசு மேலாண்மை வாரியம் அமைத்து நிரந்தரத் தீர்வு கண்டுள்ளது.

காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை மட்டும் செயல்படுத்தவும் மேலாண்மை வாரியம் அமைக்கவும் இந்திய அரசு மறுப்பது ஏன்? தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து கர்நாடகத்தின் சட்ட விரோதச் செயல்களுக்கு இந்திய அரசு பக்க பலமாக இருப்பது ஏன்? 

தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் ஓரவஞ்சனையைக் கண்டித்துத் தமிழ்நாட்டில் பெரிய அரசியல் கட்சிகள் போராடவில்லை. எனவே, இந்திய அரசு மேலும் மேலும் துணிச்சல் பெற்று கர்நாடகத்தின் அட்டூழியங்களுக்குத் துணை போகிறது. 

கர்நாடக ஆட்சியாளர்களும் எதிர்கட்சி அரசியல்வாதிகளும் துணிந்து பொய் சொல்கின்றனர். கர்நாடகத்திலுள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஏமாவதி, ஏரங்கி உள்ளிட்ட அணைகளில் 70 டி.எம்.சி. தண்ணீர் இருக்கிறது. இதில் தமிழ்நாட்டிற்குரிய பங்குத் தண்ணீரைத் திறந்துவிட வேண்டியது சட்டப்படி கட்டாயம். ஆனால், தமிழ்நாட்டிற்குரிய நீரைத்திருடி வைத்துள்ளது கர்நாடகம். 

இந்த நிலையில் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் வேளாண்மையைக் காப்பாற்ற, காரைக்கால் உள்ளிட்ட 20 மாவட்டங்களுக்குரிய குடிநீரைக் காப்பாற்ற தமிழ் மக்கள் வீதிக்கு வந்து போராடுவது உடனடிக் கடமையாகும். 

வாழ்வா? சாவா? என்ற நிலையில் தற்காப்புப் போராட்டம் நடத்த, நாகூர் – பனங்குடி பெட்ரோலிய ஆலைக்கு வருமாறு தமிழ் மக்களை அன்புடன் அழைக்கிறோம்! 

நமது எழுச்சி இந்திய அரசை காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட தூண்ட வேண்டும். 

கோரிக்கைகள் :

1. இந்திய அரசே, காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு! சம்பா சாகுபடிக்கு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிடக் கர்நாடகத்திற்கு ஆணையிடு! 
2. காவிரிப் படுகையில் எந்தவகை மீத்தேனும் எடுக்காதே! 
3. கர்நாடகம் காவிரியில் புதிய அணைக் கட்டத் தடை விதி!





காவிரி நீர்: சம்பா சாகுபடிக்கும் ஆபத்து - தமிழக முதலமைச்சர் அலட்சியமின்றி அவசர நடவடிக்கையில் இறங்க வேண்டும் - தோழர் பெ. மணியரசன் அறிக்கை!


காவிரி நீர்:
சம்பா சாகுபடிக்கும் ஆபத்து!
தமிழக முதலமைச்சர் அலட்சியமின்றி
அவசர நடவடிக்கையில் இறங்க வேண்டும்!
=====================================================

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் 
தோழர் பெ. மணியரசன் அறிக்கை! 
=====================================================

கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர் கவுசிக் முகர்ஜி தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளருக்கு 14.09.2015 அன்று எழுதிய கடிதத்தில், கிருஷ்ண ராஜ சாகர் உள்ளிட்ட காவிரி கர்நாடக அணைகளில் கிட்டத்தட்ட முற்றிலுமாக தண்ணீர் இருப்பு இல்லாத நிலை உள்ளதாகவும், எனவே காவிரித் தீர்ப்பாயத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய எஞ்சியுள்ள தண்ணீரைத் தர முடியாது என்றும் கூறியுள்ளார். அத்துடன் பருவமழை பொய்த்துவிட்டதாகவும் அதனால் காவிரிக்குத் தண்ணீர் வரத்து இல்லை என்றும் கூறியுள்ளார்.

இதே கூற்றை 10 நாட்களுக்கு முன்பு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறினார். கடந்த 10.09.2015 அன்று மைசூரில் செய்தியாளர்களிடம், பா.ஜ.க.வைச் சேர்ந்த நடுவண் அரசின் சட்ட அமைச்சர் சதானந்த கவுடா இதே கூற்றைச் சொன்னார்.

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகத்திற்காக வாதாடும் வழக்கறிஞர் பாலி நாரிமன் அவர்களுடன் கலந்து பேசி இப்பொழுது தலைமைச் செயலாளர் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக தமிழ்நாடு அரசுக்குக் கர்நாடகம் தெரிவித்துள்ளது.

சட்டப்படி தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய உரிமை நீரை கர்நாடக அரசு திறந்துவிட ஆணையிடுமாறு வேண்டுகோள் வைத்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை நாடினால் அங்கு உச்ச நீதிமன்ற நகர்வுகளை முடக்கிப்போடும் உத்தியோடு கர்நாடக அரசு இந்தக் கடிதத்தை அனுப்பி உள்ளது.

கர்நாடகத்தில் மழைப் பொய்த்ததால் மண்டியா மாவட்டத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுவது தவறானது. வேளாண் விளைபொருட்களின் கட்டுப்படியாகாத விலைகடன் தொல்லை போன்ற காரணங்கள்தான் விவசாயிகள் தற்கொலைக்குக் காரணம் என்று அங்குள்ள விவசாய சங்கங்களே கூறுகின்றன.

இந்திய அரசின் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளபடி இவ்வாண்டு, சூன் 1 முதல் ஆகஸ்ட்டு 31 வரை காவிரி உற்பத்தி மாவட்டமான குடகில் வழக்கமான சராசரி (Normal) மழை பெய்துள்ளது; அடுத்த காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான மைசூரு, மண்டியா மாவட்டங்களில் இவ்வாண்டு வழக்கத்தைவிட அதிகமாகவே (Excess) மழை பெய்துள்ளது. (ஆதாரம்http://www.imdbangalore.gov.in/monsoon.pdf)

10.09.2015 நிலவரப்படி கிருஷ்ணராஜ சாகர் அணையில் மொத்த உயரமான 124 அடியில் 106 அடி அளவிற்கு நீர் இருப்பு இருந்தது. கபினி அணையின் மொத்த உயரம் கடல் மட்டத்திலிருந்து 2,284 அடி. இதில் 2,276.41 அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பு இருந்தது. ஏமாவதி அணையின் மொத்த உயரம் 2,922 அடி. அதில், 2901.5 அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பு இருந்தது.

மற்றும் ஏரங்கி, அர்க்காவதி அணைகளிலும் கர்நாடக அரசு திட்டமிட்டு கட்டமைத்துள்ள ஏராளமான ஏரிகள் மற்றும் குளங்களிலும் தண்ணீர் கணிசமாக தேக்கப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டால் 80 டி.எம்.சி.க்கு மேல் கர்நாடகத்தின் காவிரி நீர்த் தேக்கங்களில் தண்ணீர் இருப்பு உள்ளது. (ஆதாரம்: நடுவண் நீர் ஆணையம், http://www.cwc.nic.in). இந்த 80 டி.எம்.சி.யில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை திறந்துவிட வேண்டியது சட்டப்படியான கட்டாயக் கடமையாகும்.

கர்நாடக அரசு அம்மாநில நீர்த்தேக்கங்களில் உள்ள உண்மையான நீர் இருப்பை மறைத்துக் கொண்டு பொத்தாம் பொதுவில் நீர் இருப்பு இல்லை என்றும் பருவமழை பொய்த்துவிட்டது என்றும் தவறானத் தகவல்களைக் கூறுகின்றது.

இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருந்தால், அந்த மேலாண்மை வாரியத்திற்கு கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடும் அதிகாரம் வந்திருக்கும். அது நடுநிலையோடு செயல்பட்டிருக்கும். தமிழ்நாட்டிற்கு உரிய நீதி நிலைநாட்டப்பட்டிருக்கும். இவ்வாறெல்லாம் காவிரிச் சிக்கலில் தமிழ்நாடு சட்டப்படியான உரிமையை நிலைநாட்டிவிடக் கூடாது என்ற மறைமுகத் திட்டத்துடன் இந்திய அரசு, உச்ச நீதிமன்றம் ஆணையிட்டும் கூட மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்துவிட்டது.

கர்நாடக பாசன அமைச்சர் எம்.பி. பாட்டீல், முதலமைச்சர் சித்தரமையா, நடுவண் சட்ட அமைச்சர் சதானந்த கவுடா ஆகியோரின் காவிரி நீர் இருப்பு பற்றிய தவறான தகவல்களுக்கும், காவிரி நீர் தர முடியாது என்ற அவர்களின் ஆணவப் பேச்சுகளுக்கும் உரிய பதிலை உடனுக்குடன் கூறி தமிழ்நாட்டின் உரிமைக்கு வாதாடாமல் தமிழ்நாடு முதலமைச்சர் அலட்சியமாக இருந்துவிட்டார்.

தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் பொறியாளர்கள் குழுவை கர்நாடக அணைகளுக்கு அனுப்பி, அவற்றின் நீர் இருப்பின் நிலையை மக்களுக்கும் நடுவண் அரசுக்கும் விளக்கி இருக்கலாம். தமிழ்நாடு முதலமைச்சரின் செயலற்றத்தன்மை காரணமாக கர்நாடக அரசு துணிச்சல் பெற்று அதிகாரப்பூர்வ கடிதத்தின் மூலம் கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்று உண்மைக்குப் புறம்பான தகவலையும் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர முடியாது என்ற சட்ட விரோத முடிவையும் அறிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் 16 இலட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற வேண்டும். குறுவையை இழந்து வறுமையைச் சுமந்து தத்தளித்துக் கொண்டிருக்கும் டெல்டா விவசாயிகள் ஒரு போக சம்பா சாகுபடியாவது செய்து தங்கள் துயரங்களைப் போக்கலாம் என்று சாகுபடி வேலைகளைத் தொடங்கி உள்ளார்கள்.

மேட்டூர் அணையில் நீர் குறைந்து கொண்டே வந்ததால் கடந்த செப்டம்பர் 1 முதல் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் திறந்துவிடும் முறைப் பாசனத்தை தமிழ்நாடு பொதுப்பணித்துறை செயல்படுத்தி வருகிறது. இதனால் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாமல் உழவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். மையப் பகுதிகளிலும் போதிய அளவு தண்ணீரின்றி சாகுபடி பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

இந்நிலையில் செப்டம்பர் 1-லிருந்து கர்நாடக அரசு தண்ணீர் தருவதை நிறுத்திக் கொண்டதால், இப்பொழுது என்ன செய்வதென்று தமிழக உழவர்கள் கதிகலங்கிப் போய் நெஞ்சில் நெருப்பைக் கட்டிக் கொண்டு வேதனையில் துடிக்கின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் சாவகாசமாக செப்டம்பர்  மாதம் பிரதமருக்கு எழுதியக் கடிதத்தில், கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு சூலை மற்றும் ஆகஸ்ட்டு மாதம் தர வேண்டிய தண்ணீரைத் தரவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். சூலை மாதம் தர மறுத்த தண்ணீரைக் கேட்டு சூலை மாதத்திலேயே கர்நாடக முதல்வருக்கு தமிழ்நாட்டு முதல்வர் கடிதம் எழுதியிருக்க வேண்டும் அல்லது நேரில் சென்று கர்நாடக முதல்வரைச் சந்தித்து தண்ணீர் கேட்டிருக்க வேண்டும்.

சூலை, ஆகஸ்ட்டு மாதங்களில் அலட்சியமாக இருந்துவிட்டு செப்டம்பர் தொடக்கத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதி கடமை முடிந்துவிட்டதுபோல், ஓய்ந்துவிட்ட தமிழ்நாடு முதலமைச்சரின் செயலற்ற தன்மைதான் காவிரிச் சிக்கலில் மேலும் மேலும் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட கர்நாடக அரதை தூண்டுகிறதோ என்ற எண்ணம் பரவலாக உழவர்களிடம் உள்ளது.

டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியை மறந்துவிடும் நிலைக்கு கொண்டுவந்து வெற்றிபெற்ற கர்நாடகம், சம்பா சாகுபடியையும் அவர்கள் மறந்துவிட வேண்டும் என்ற முனைப்போடு செயல்படுகிறது.

அபாயத்தின் உச்சத்தில் டெல்டா சாகுபடி உள்ளது. நெருக்கடியின் தீவிரத்தை இப்போதாவது தமிழ்நாடு முதல்வர் உணர்ந்து கொண்டு அனைத்துக்கட்சிக் குழுவினருடன் கர்நாடகம் சென்று அம்மாநில முதல்வரைச் சந்தித்தும், தில்லி சென்று பிரதமரைச் சந்தித்தும் கர்நாடக அணைகளிலுள்ள நீரின் தமிழ்நாட்டுப் பங்கைப் பெற தீவிர முயற்சிகளில் இறங்க வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


(பெ.மணியரசன்)
ஒருங்கிணைப்பாளர்,
காவிரி உரிமை மீட்புக் குழு

நாள்15.09.2015
இடம்தஞ்சை.

==============================
செய்தி வெளியீடு
==============================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==============================
இணையம்:www.kaveriurimai.com
==============================
பேச: 76670 77075, 94432 74002
==============================
 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger