தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


Home » , , , » காவிரி நீர்: சம்பா சாகுபடிக்கும் ஆபத்து - தமிழக முதலமைச்சர் அலட்சியமின்றி அவசர நடவடிக்கையில் இறங்க வேண்டும் - தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

காவிரி நீர்: சம்பா சாகுபடிக்கும் ஆபத்து - தமிழக முதலமைச்சர் அலட்சியமின்றி அவசர நடவடிக்கையில் இறங்க வேண்டும் - தோழர் பெ. மணியரசன் அறிக்கை!


காவிரி நீர்:
சம்பா சாகுபடிக்கும் ஆபத்து!
தமிழக முதலமைச்சர் அலட்சியமின்றி
அவசர நடவடிக்கையில் இறங்க வேண்டும்!
=====================================================

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் 
தோழர் பெ. மணியரசன் அறிக்கை! 
=====================================================

கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர் கவுசிக் முகர்ஜி தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளருக்கு 14.09.2015 அன்று எழுதிய கடிதத்தில், கிருஷ்ண ராஜ சாகர் உள்ளிட்ட காவிரி கர்நாடக அணைகளில் கிட்டத்தட்ட முற்றிலுமாக தண்ணீர் இருப்பு இல்லாத நிலை உள்ளதாகவும், எனவே காவிரித் தீர்ப்பாயத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய எஞ்சியுள்ள தண்ணீரைத் தர முடியாது என்றும் கூறியுள்ளார். அத்துடன் பருவமழை பொய்த்துவிட்டதாகவும் அதனால் காவிரிக்குத் தண்ணீர் வரத்து இல்லை என்றும் கூறியுள்ளார்.

இதே கூற்றை 10 நாட்களுக்கு முன்பு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறினார். கடந்த 10.09.2015 அன்று மைசூரில் செய்தியாளர்களிடம், பா.ஜ.க.வைச் சேர்ந்த நடுவண் அரசின் சட்ட அமைச்சர் சதானந்த கவுடா இதே கூற்றைச் சொன்னார்.

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகத்திற்காக வாதாடும் வழக்கறிஞர் பாலி நாரிமன் அவர்களுடன் கலந்து பேசி இப்பொழுது தலைமைச் செயலாளர் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக தமிழ்நாடு அரசுக்குக் கர்நாடகம் தெரிவித்துள்ளது.

சட்டப்படி தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய உரிமை நீரை கர்நாடக அரசு திறந்துவிட ஆணையிடுமாறு வேண்டுகோள் வைத்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை நாடினால் அங்கு உச்ச நீதிமன்ற நகர்வுகளை முடக்கிப்போடும் உத்தியோடு கர்நாடக அரசு இந்தக் கடிதத்தை அனுப்பி உள்ளது.

கர்நாடகத்தில் மழைப் பொய்த்ததால் மண்டியா மாவட்டத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுவது தவறானது. வேளாண் விளைபொருட்களின் கட்டுப்படியாகாத விலைகடன் தொல்லை போன்ற காரணங்கள்தான் விவசாயிகள் தற்கொலைக்குக் காரணம் என்று அங்குள்ள விவசாய சங்கங்களே கூறுகின்றன.

இந்திய அரசின் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளபடி இவ்வாண்டு, சூன் 1 முதல் ஆகஸ்ட்டு 31 வரை காவிரி உற்பத்தி மாவட்டமான குடகில் வழக்கமான சராசரி (Normal) மழை பெய்துள்ளது; அடுத்த காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான மைசூரு, மண்டியா மாவட்டங்களில் இவ்வாண்டு வழக்கத்தைவிட அதிகமாகவே (Excess) மழை பெய்துள்ளது. (ஆதாரம்http://www.imdbangalore.gov.in/monsoon.pdf)

10.09.2015 நிலவரப்படி கிருஷ்ணராஜ சாகர் அணையில் மொத்த உயரமான 124 அடியில் 106 அடி அளவிற்கு நீர் இருப்பு இருந்தது. கபினி அணையின் மொத்த உயரம் கடல் மட்டத்திலிருந்து 2,284 அடி. இதில் 2,276.41 அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பு இருந்தது. ஏமாவதி அணையின் மொத்த உயரம் 2,922 அடி. அதில், 2901.5 அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பு இருந்தது.

மற்றும் ஏரங்கி, அர்க்காவதி அணைகளிலும் கர்நாடக அரசு திட்டமிட்டு கட்டமைத்துள்ள ஏராளமான ஏரிகள் மற்றும் குளங்களிலும் தண்ணீர் கணிசமாக தேக்கப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டால் 80 டி.எம்.சி.க்கு மேல் கர்நாடகத்தின் காவிரி நீர்த் தேக்கங்களில் தண்ணீர் இருப்பு உள்ளது. (ஆதாரம்: நடுவண் நீர் ஆணையம், http://www.cwc.nic.in). இந்த 80 டி.எம்.சி.யில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை திறந்துவிட வேண்டியது சட்டப்படியான கட்டாயக் கடமையாகும்.

கர்நாடக அரசு அம்மாநில நீர்த்தேக்கங்களில் உள்ள உண்மையான நீர் இருப்பை மறைத்துக் கொண்டு பொத்தாம் பொதுவில் நீர் இருப்பு இல்லை என்றும் பருவமழை பொய்த்துவிட்டது என்றும் தவறானத் தகவல்களைக் கூறுகின்றது.

இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருந்தால், அந்த மேலாண்மை வாரியத்திற்கு கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடும் அதிகாரம் வந்திருக்கும். அது நடுநிலையோடு செயல்பட்டிருக்கும். தமிழ்நாட்டிற்கு உரிய நீதி நிலைநாட்டப்பட்டிருக்கும். இவ்வாறெல்லாம் காவிரிச் சிக்கலில் தமிழ்நாடு சட்டப்படியான உரிமையை நிலைநாட்டிவிடக் கூடாது என்ற மறைமுகத் திட்டத்துடன் இந்திய அரசு, உச்ச நீதிமன்றம் ஆணையிட்டும் கூட மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்துவிட்டது.

கர்நாடக பாசன அமைச்சர் எம்.பி. பாட்டீல், முதலமைச்சர் சித்தரமையா, நடுவண் சட்ட அமைச்சர் சதானந்த கவுடா ஆகியோரின் காவிரி நீர் இருப்பு பற்றிய தவறான தகவல்களுக்கும், காவிரி நீர் தர முடியாது என்ற அவர்களின் ஆணவப் பேச்சுகளுக்கும் உரிய பதிலை உடனுக்குடன் கூறி தமிழ்நாட்டின் உரிமைக்கு வாதாடாமல் தமிழ்நாடு முதலமைச்சர் அலட்சியமாக இருந்துவிட்டார்.

தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் பொறியாளர்கள் குழுவை கர்நாடக அணைகளுக்கு அனுப்பி, அவற்றின் நீர் இருப்பின் நிலையை மக்களுக்கும் நடுவண் அரசுக்கும் விளக்கி இருக்கலாம். தமிழ்நாடு முதலமைச்சரின் செயலற்றத்தன்மை காரணமாக கர்நாடக அரசு துணிச்சல் பெற்று அதிகாரப்பூர்வ கடிதத்தின் மூலம் கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்று உண்மைக்குப் புறம்பான தகவலையும் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர முடியாது என்ற சட்ட விரோத முடிவையும் அறிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் 16 இலட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற வேண்டும். குறுவையை இழந்து வறுமையைச் சுமந்து தத்தளித்துக் கொண்டிருக்கும் டெல்டா விவசாயிகள் ஒரு போக சம்பா சாகுபடியாவது செய்து தங்கள் துயரங்களைப் போக்கலாம் என்று சாகுபடி வேலைகளைத் தொடங்கி உள்ளார்கள்.

மேட்டூர் அணையில் நீர் குறைந்து கொண்டே வந்ததால் கடந்த செப்டம்பர் 1 முதல் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் திறந்துவிடும் முறைப் பாசனத்தை தமிழ்நாடு பொதுப்பணித்துறை செயல்படுத்தி வருகிறது. இதனால் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாமல் உழவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். மையப் பகுதிகளிலும் போதிய அளவு தண்ணீரின்றி சாகுபடி பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

இந்நிலையில் செப்டம்பர் 1-லிருந்து கர்நாடக அரசு தண்ணீர் தருவதை நிறுத்திக் கொண்டதால், இப்பொழுது என்ன செய்வதென்று தமிழக உழவர்கள் கதிகலங்கிப் போய் நெஞ்சில் நெருப்பைக் கட்டிக் கொண்டு வேதனையில் துடிக்கின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் சாவகாசமாக செப்டம்பர்  மாதம் பிரதமருக்கு எழுதியக் கடிதத்தில், கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு சூலை மற்றும் ஆகஸ்ட்டு மாதம் தர வேண்டிய தண்ணீரைத் தரவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். சூலை மாதம் தர மறுத்த தண்ணீரைக் கேட்டு சூலை மாதத்திலேயே கர்நாடக முதல்வருக்கு தமிழ்நாட்டு முதல்வர் கடிதம் எழுதியிருக்க வேண்டும் அல்லது நேரில் சென்று கர்நாடக முதல்வரைச் சந்தித்து தண்ணீர் கேட்டிருக்க வேண்டும்.

சூலை, ஆகஸ்ட்டு மாதங்களில் அலட்சியமாக இருந்துவிட்டு செப்டம்பர் தொடக்கத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதி கடமை முடிந்துவிட்டதுபோல், ஓய்ந்துவிட்ட தமிழ்நாடு முதலமைச்சரின் செயலற்ற தன்மைதான் காவிரிச் சிக்கலில் மேலும் மேலும் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட கர்நாடக அரதை தூண்டுகிறதோ என்ற எண்ணம் பரவலாக உழவர்களிடம் உள்ளது.

டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியை மறந்துவிடும் நிலைக்கு கொண்டுவந்து வெற்றிபெற்ற கர்நாடகம், சம்பா சாகுபடியையும் அவர்கள் மறந்துவிட வேண்டும் என்ற முனைப்போடு செயல்படுகிறது.

அபாயத்தின் உச்சத்தில் டெல்டா சாகுபடி உள்ளது. நெருக்கடியின் தீவிரத்தை இப்போதாவது தமிழ்நாடு முதல்வர் உணர்ந்து கொண்டு அனைத்துக்கட்சிக் குழுவினருடன் கர்நாடகம் சென்று அம்மாநில முதல்வரைச் சந்தித்தும், தில்லி சென்று பிரதமரைச் சந்தித்தும் கர்நாடக அணைகளிலுள்ள நீரின் தமிழ்நாட்டுப் பங்கைப் பெற தீவிர முயற்சிகளில் இறங்க வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


(பெ.மணியரசன்)
ஒருங்கிணைப்பாளர்,
காவிரி உரிமை மீட்புக் குழு

நாள்15.09.2015
இடம்தஞ்சை.

==============================
செய்தி வெளியீடு
==============================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==============================
இணையம்:www.kaveriurimai.com
==============================
பேச: 76670 77075, 94432 74002
==============================
Share this video :

0 கருத்துகள்:

Post a Comment

 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger