தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


Home » » செப் - 28 - நாகூர் – பனங்குடி இந்திய அரசு பெட்ரோலிய ஆலை முற்றுகைப் போராட்டம்!

செப் - 28 - நாகூர் – பனங்குடி இந்திய அரசு பெட்ரோலிய ஆலை முற்றுகைப் போராட்டம்!



===================================
குறுவை போச்சு! சம்பாவுக்கும் ஆபத்து!!
===================================
காவிரி மேலாண்மை வாரியம்
அமைக்க மறுக்கும் இந்திய அரசே!
காவிரிப்படுகைப் பெட்ரோலியத்தை எடுக்காதே! 
===================================
காவிரி உரிமை மீட்புக் குழு நடத்தும்...
===================================
நாகூர் – பனங்குடி இந்திய அரசு 
பெட்ரோலிய ஆலை முற்றுகைப் போராட்டம்.! 
===================================
காலம்: செப்டம்பர் 28, 2015 திங்கள்
காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
===================================


கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கூறி செப்டம்பர் 1 முதல் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணை மதகுகளை அடைத்துவிட்டது. அடுத்த சில நாட்களில் மேட்டூர் அணை கதவுகளையும் அடைக்க வேண்டிய நிலை உருவாகப் போகிறது. டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி தொடங்கியுள்ள 16 இலட்சம் ஏக்கர் வேளாண்மையின் கதி என்ன? 

ஒரு மாநிலத்திற்கு மேற்பட்ட மாநிலங்களில் ஓடும் ஆறுகளில் சிக்கல்கள் எழுந்தால் அவற்றைத் தீர்க்க இந்திய அரசுக்கு பொறுப்பும் அதிகாரமும் உள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 262-இன்படியும், மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் தகராறுச் சட்டத்தின்படியும் காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய அதிகாரமும் பொறுப்பும் இந்திய அரசிடம் உள்ளது. 

நர்மதை, கிருஷ்ணா போன்ற ஆறுகளில் மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்கள் ஏற்பட்ட போது, தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் தீர்ப்புகளை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பக்ரானங்கல் அணை நீர்ப் பகிர்வில் ஏற்பட்ட சிக்கல்களைத் தீர்க்க இந்திய அரசு மேலாண்மை வாரியம் அமைத்து நிரந்தரத் தீர்வு கண்டுள்ளது.

காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை மட்டும் செயல்படுத்தவும் மேலாண்மை வாரியம் அமைக்கவும் இந்திய அரசு மறுப்பது ஏன்? தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து கர்நாடகத்தின் சட்ட விரோதச் செயல்களுக்கு இந்திய அரசு பக்க பலமாக இருப்பது ஏன்? 

தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் ஓரவஞ்சனையைக் கண்டித்துத் தமிழ்நாட்டில் பெரிய அரசியல் கட்சிகள் போராடவில்லை. எனவே, இந்திய அரசு மேலும் மேலும் துணிச்சல் பெற்று கர்நாடகத்தின் அட்டூழியங்களுக்குத் துணை போகிறது. 

கர்நாடக ஆட்சியாளர்களும் எதிர்கட்சி அரசியல்வாதிகளும் துணிந்து பொய் சொல்கின்றனர். கர்நாடகத்திலுள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஏமாவதி, ஏரங்கி உள்ளிட்ட அணைகளில் 70 டி.எம்.சி. தண்ணீர் இருக்கிறது. இதில் தமிழ்நாட்டிற்குரிய பங்குத் தண்ணீரைத் திறந்துவிட வேண்டியது சட்டப்படி கட்டாயம். ஆனால், தமிழ்நாட்டிற்குரிய நீரைத்திருடி வைத்துள்ளது கர்நாடகம். 

இந்த நிலையில் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் வேளாண்மையைக் காப்பாற்ற, காரைக்கால் உள்ளிட்ட 20 மாவட்டங்களுக்குரிய குடிநீரைக் காப்பாற்ற தமிழ் மக்கள் வீதிக்கு வந்து போராடுவது உடனடிக் கடமையாகும். 

வாழ்வா? சாவா? என்ற நிலையில் தற்காப்புப் போராட்டம் நடத்த, நாகூர் – பனங்குடி பெட்ரோலிய ஆலைக்கு வருமாறு தமிழ் மக்களை அன்புடன் அழைக்கிறோம்! 

நமது எழுச்சி இந்திய அரசை காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட தூண்ட வேண்டும். 

கோரிக்கைகள் :

1. இந்திய அரசே, காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு! சம்பா சாகுபடிக்கு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிடக் கர்நாடகத்திற்கு ஆணையிடு! 
2. காவிரிப் படுகையில் எந்தவகை மீத்தேனும் எடுக்காதே! 
3. கர்நாடகம் காவிரியில் புதிய அணைக் கட்டத் தடை விதி!





Share this video :

0 கருத்துகள்:

Post a Comment

 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger