தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


வாழ்வா? சாவா? காவிரியில் உயிர் நீர் கேட்டு தஞ்சையில் உழவர் பேரணி


                 வாழ்வா? சாவா?
காவிரியில் உயிர் நீர் கேட்டு தஞ்சையில் உழவர் பேரணி

காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 16 இலட்சம் ஏக்கர் சம்பாப் பயிர் காய்ந்து சருகாகும் நிலையில் உள்ளது. உடனடியாக மேட்டூரிலிருந்து ஒரு நாளைக்கு 18 ஆயிரம் கன அடி வீதம் (1 ½ டி.எம்.சி) திறந்து விட்டால்தான் சம்பாப் பயிரைக் காக்க முடியும். இந்த அளவில் தண்ணீர் 2013 பிப்ரவரி 15 ஆம் நாள் வரை தேவை ஆனால் மேட்டூரில் நீரோ  இன்றைய (26.11.2012 நிலவரப்படி 50 அடியாகும். இது இன்னும் பத்து நாட்களுக்குக் கூட வராது.

இப்பொழுது மேட்டூரில் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அது கல்லணைக்கு வரும் போது 8 ஆயிரம் கன அடியாக உள்ளது.

ஒரு வாரத்துக்கு ஒரு ஆற்றுக்கு என்ற கணக்கில் காவிரியிலும் வெண்ணாற்றிலும் முறை வைத்துத் தண்ணீர் விடுகிறார்கள். இந்தத் தண்ணீர் பல வாய்க்கால்களுக்குப் போய் சேரவில்லை. போய்ச் சேர்ந்த இடங்களிலும் வயல்வெடிப்பு நிரம்பக் கூடப் போதவில்லை.

திருவாரூர் மாவட்டம் வலிவலம் அருகே உள்ள கூரத்தாங்குடியில் ஆறு ஏக்கர் சம்பாப்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயி ராஜாங்கம், கடந்த ஒரு வாரகால வெண்ணாற்று முறையில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தனது வயலுக்கான வாய்க்காலில் வராததால் காய்ந்து கருகும் சம்பாப்பயிரைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். வெண்ணாற்றுக்கான முறை முடிந்து காவிரியில் ஒரு வாரம் தண்ணீர் திறந்துவிடப் போகிறார்கள்; இன்னும் ஏழு நாட்களுக்குத் தனது வாய்க் காலில் தண்ணீர் வராது; அப்படியானால் சம்பாப்பயிர் முழுவதும் கருகிவிடும் என்று பதை பதைத்து தனக்கு ஏற்படப்போகும் சாகுபடி இழப்பையும் அதனால் ஏற்படும் கடன் தொல்லை, அவமானம், பணநெருக்கடி ஆகியவற்றையும் எண்ணிக் கவலை கொண்டு பூச்சி மருந்தை சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொண்டு விட்டார். இந்த அவலம் மற்ற ஊர்களுக்கும் தொடரும் அபாயம் உள்ளது.

எனவே, இந்திய அரசும், தமிழக அரசும்; காவிரி டெல்டா மாவட்டங்களின் சம்பாப் பயிரை மட்டுமல்ல, உழவர்களின் உயிரையும் காப்பாற்றிட வேண்டிய நெருக்கடியை உணர்ந்து கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்குரிய நீரை உடனே பெற்றுத் தர போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். அரசமைப்புச் சட்ட விதி 355 ஐப்  பயன்படுத்தி கர்நாடகத்தில் தற்போதுள்ள 60 டி.எம்.சி தண்ணீர்லிருந்து உடனடியாக 30 டி.எம்.சி. தண்ணீர் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம். வரும் 8.12.2012 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி அவர்கள் சிலையி லிருந்து பேரணி புறப்படும். பேரணி நிறைவில் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறும்.

உழவர் பெருமக்களும், உரிமை உணர்வு படைத்த தமிழ்ப் பெருங்குடி மக்களும் திரளாகப் பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்ளுமாறு, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
                                                        பெ.மணியரசன்
 காவிரி உரிமை மீட்புக் குழு
ஒருங்கிணைப்பாளர்
இடம்: தஞ்சாவூர்

(செய்தி : த.தே.பொ.க. செய்திப் பிரிவு)


இந்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு காவிரி உரிமை மீட்புக்குழு போராட்டம் - குடந்தையில் வரி அலுவலகம் பூட்டப் பட்டது!

இந்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு காவிரி உரிமை மீட்புக்குழு போராட்டம் - குடந்தையில் வரி அலுவலகம் பூட்டப் பட்டது!

அரசமைப்புச் சட்டவிதி 355-இன்படி இந்திய அரசு கர்நாடகத்திற்குக் கட்டளைத் தாக்கீது அனுப்பி நாள் தோறும் 2 டி.எம்.சி. தண்ணீர் வீதம் 40 நாட்களுக்கு தமிழகத்திற்குத் திறக்கச் செய்ய வேண்டும். அதையும் கர்நாடகம் மீறினால், இந்திய அரசு இராணுவத்தை அனுப்பி அணைகளைத் திறந்து விடச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் 22.10.2012 ஆகிய இன்று காவிரி பாசன மாவட்டங்களில் இந்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இடைவிடாது கொட்டித் தீர்த்த மழைக்கு இடையிலும் இப்போராட்டத்தில் பல்வேறு கட்சியினரும், உழவர் அமைப்பினரும் திரளாக பங்கேற்றனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சை:
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருகிணைப்பாளர் – தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் தஞ்சையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்னாள் மறியல் போராட்டம் நடைபெற்றது, தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருகிணைப்பாளர் வழங்குரைஞர் நல்லதுரை, ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் திரு பாஸ்கரன், துணைத் தலைவர் திருமதி பத்மா, விடுதலை தமிழ் புலிகள் மாநில அமைப்புச் செயலாளர் திரு அருள் மாசிலாமணி, த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் குழ.பால்ராசு, தலைமை செயற்குழு உறுப்பினர் பழ.இராசேந்திரன், தஞ்சை நகரச் செயலாளர் இரா.சு. முனியாண்டி, பூதலூர் ஒன்றியச் செயலாளர் க.காமராசு உள்ளிட்ட 52 பேர் இப்போராட்டத்தில் பங்கேற்று கைதாயினர். போரட்ட அழுத்தம் காரணமாக பி.எஸ்.என்.எல். அலுவலக வாயில் கதவுகளை காவல்துறையினரே பூட்டி விட்டனர். போராட்டத தோழர்களைக் காவல்துறையினர் தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.

குடந்தையில் வரிஅலுவலகம் பூட்டப் பட்டது:
குடந்தையில் 22.10.2012 காலை 11 மணிக்கு வருமானவரி அலுவலகத்தை மறியல் செய்து போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு ம.தி.மு.க. மாநிலத் தணிக்கைக் குழு உறுப்பினர் திரு.முருகன் தலைமை தாங்கினார். விடுதலைத் தமிழ்ப் புலிகள் தலைவர் குடந்தை அரசன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் விடுதலைச் சுடர், தமிழர் வாழ்வுரிமைக் கட்சி பணி. மேரி ராசு உள்ளிட்ட 60க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர், காவல்துறை ஏற்படுத்திய தடைகளைத் தாண்டி முன்னேறிய தோழர்கள் குடந்தை வருமானவரி அலுவலகத்தை இழுத்துப் பூட்டினர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர்:
தஞ்சை – திருவாரூர் – நாகை மாட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவர் திரு மு.சேரன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திருவாரூர் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்னால் மறியல் போராட்டம் நடத்தி கைதாயினர். இதில் பாரதிய கிசான் சங்க பொறுப்பாளர் திரு இராமையா, நாம் தமிழர் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் தென்றல் சந்திரசேகரன் , விவசாயிகள் கூட்டமைப்பின் ஒன்றியத் தலைவர் திரு சுப்பையன், செயலாளர் திரு அகஸ்டின், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் திரு பழனிவேல் உள்ளிட்ட விவசாயிகள் அடங்குவர்.

மன்னார்குடி:
தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் தலைமை அஞ்சலகம் முன்பு கூடிய காவிரி உரிமை மீட்புக் குழுவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு பாரதிய கிசான் சங்கத் துணைத் தலைவர் திரு எம்.சி.பழனிவேல் தலைமை தாங்கினார் . தோழர் அரங்க.குணசேகரன் (தமிழக மக்கள் புரட்சிக் கழகத் தலைவர்), திரு செந்தில் (ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர்), தோழர் ரெ.செ.பாலன் (த.தே.பொ.க) தோழர் காளிதாசு (திராவிடர் விடுதலை கழகம்), திரு வரதராசன் (த.நா.வி.ச.), திரு சத்திய நாராயணன் (விவசாயிகள் கூட்டமைப்பு), உள்ளிட 25 பேர் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர். காவல் துறையினர் இவர்களைக் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி தலைமை அஞ்சலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மூன்று மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு பொறுப்பாளர் ஒய்சூர் கருணை தலைமை தாங்கினார், ம.தி.மு.க. நகரச் செயலாளர் திரு கோ.வி.சேகர், த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர் தோழர் இரா.தனபாலன், நாம் தமிழர் கட்சி மாவட்ட்த் துணைச் செயலாளர் திரு முத்துகுமார், பாரம்பரிய நெல்லைக் காப்போம் இயக்கத் தலைவர் திரு செயராமன், இயற்கை வேளாண் உழவர் இயக்கம் தோழர் வே.இராமதாசு, த.தே.பொ.க ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தோழர் கா.அரசு, வழக்குரைஞர் இ.தனஞ்செயன், நகரச் செயலாளர் தோழர் கு.இரமேசு உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

நாகை:
நாகப்பட்டினம் தலைமை அஞ்சலகம் முன்பு காவிரி உரிமை மீட்பு ஆர்ப்பாட்டத்தில் திரளான உழவர்கள் பங்கேற்றனர். மூன்று மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு பொறுப்பாளர் கீழ்வேளூர் தனபால் தலைமை தாங்கினார்.

(செய்தி : த.தே.பொ.க. செய்திப் பிரிவு, படங்கள் : விஜய்)

காவிரி நீரைப் பெற்றுத் தராத இந்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம்!

காவிரி நீரைப் பெற்றுத் தராத
இந்திய அரசு அலுவலகங்கள்
முன் மறியல் போராட்டம்!


நைல் நதி சூடானுக்கும், எகிப்திற்கும் இடையே ஓடுகிறது. சிந்து நதி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஓடுகிறது. காவிரி ஆறு கர்நாடகத்திலிருந்து, தமிழகத்திற்கு வர முடியாதா?

நர்மதை, கிருஷ்ணா ஆறுகளுக்கு அமைக்கப்பட்ட தீர்ப்பாயங்களின் முடிவுகள், சண்டை இல்லாமல் செயல்படுகின்றன. காவிரித் தீர்ப்பாயத்தின் முடிவு மட்டும், செயல்படுத்தப் படாதது ஏன்? இந்திய அரசின் சட்டங்கள், இங்கு மட்டும் முடமாகிப் போனது ஏன்? நாம் தமிழ் மக்கள் என்பதாலா?

5 இலட்சம் ஏக்கர் குறுவை சாகுபடியை இழந்தோம். 16 இலட்சம் சம்பா சாகுபடியையும் இழக்க வேண்டுமா? 90 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடக அணைகளில் இருக்கும் பொழுது வெறும் 9000 கன அடி தண்ணீரைத் திறக்கச் சொன்னார் பிரதமர். அதையும் ஏற்கவில்லை கர்நாடகம், அடுத்து, காவிரிக் கண்காணிப்புக் குழு அதையும் குறைத்து, 6,800 கன அடி தண்ணீர் திறக்கச் சொன்னது. இதையும் ஏற்க மறுத்தது கர்நாடகம். கர்நாடகத்தை, என்ன செய்து விட்டது இந்திய அரசு? 

இனி வாதாடிப் பயன் இல்லை. போராடித்தான் காவிரி உரிமையை மீட்க வேண்டும். 

ஒரு நாளைக்கு 2 டி.எம்.சி. வீதம் 40 நாட்களுக்குக் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டால்தான், சம்பா சாகுபடியைப் பாதுகாக்க முடியும். நாம் பிச்சை கேட்கவில்லை. சட்டப்படி நமக்குள்ள உரிமைத் தண்ணீரைக் கேட்கிறோம். 

அரசமைப்புச் சட்டவிதி 355-இன்படி கட்டளை தாக்கீது கர்நாடகத்திற்கு அனுப்பி 2 டி.எம்.சி. தண்ணீர் திறக்கச் செய்ய வேண்டும். அதையும் கர்நாடகம் மீறினால், இந்திய அரசு இராணுவத்தை அனுப்பி அணைகளைத் திறந்து விடச் செய்ய வேண்டும். 

இக்கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 22 அன்று தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் நடுவண் அரசு அலுவலகங்கள் முன் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் நடத்துவதென 10.10.2012 அன்று குடந்தையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

காவிரி நம் தாய். அதை நாம் இழக்க முடியாது! 
கெஞ்சிக் கேட்டால் கிடைக்காது, கிளர்ச்சி செய்யாமல் வெல்லாது! 
மறியல் போராட்டத்திற்கு வாருங்கள் தமிழ் மக்களே! 

இங்ஙனம்,
பெ.மணியரசன்
 (ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு)

காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கோரும் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா கைவிட வேண்டும்!



காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில்
வெளியிடக் கோரும் திட்டத்தை
தமிழக முதல்வர் ஜெயலலிதா கைவிட வேண்டும்
இடைக்காலத்தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்ய வேண்டும்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர்
தோழர் பெ.மணியரசன் அறிக்கை



காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பினை இந்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அவர்கள், பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கடிதம் எழுதியிருப்பது தமிழக உரிமைக்கு பாதகம் விளைவிக்கக்கூடியது என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் சுட்டி காட்டுகிறேன்.
காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு தமிழகத்தின் உரிமைகளுக்கு பாதிப்புகளை உண்டாக்கியுள்ளது என்றும் அப்பாதிப்புகளை நீக்கி நீதி வழங்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்துள்ளது. அவ்வழக்கு 18.10.2011 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ள நிலையில் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பிற்கு முழு அதிகாரம் வழங்கும் வகையில் நடுவண் அரசின் அரசிதழில் வெளியிடுமாறு தமிழக முதல்வர் கோருவது தனது வழக்கை தானே கைவிடுவதற்குச் சமம் ஆகும்.
இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பதால் இறுதித் தீர்ப்பு நடைமுறையில் இல்லை. அதேவேளை உச்சநீதி மன்றம் இச்சிக்கலுக்கு தீர்வு கானும் வரை காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு தான் செயலில் இருக்கிறது. இடைக்காலத் தீர்ப்பின்படி 205 டி.எம்.சி காவிரி நீர் கர்நாடகம் தமிழகத்திற்கு தர வேண்டும். இந்த இடைக்காலத் தீர்ப்பு 1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அரசால் அரசிதழில் வெளியிடப்பட்டு அதற்குரிய அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இறுதித் தீர்ப்பு நடைமுறையில் இல்லாத போது இடைக்காலத் தீர்ப்புதான் செயல்படுத்தப்பட வேண்டும்.
கர்நாடக அரசு இடைக்காலத் தீர்ப்பை ஏற்க மறுக்கிறது என்பதற்காக நமக்கு பாதகமாகவும் கர்நாடகத்திற்கு மிகப்பெரிய குலுக்குச்சீட்டு பரிசாகவும் வெளியிடப்பட்டுள்ள இறுதித் தீர்ப்பை செயல்படுத்துமாறு தமிழக அரசு கோருவது தமிழக நலன்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்புகளை ஏற்படுத்தும். மிகப்பெரும் வரலாற்று பிழையாக மாறும்.
 இறுதித் தீர்ப்பு வெறும் 192 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கியது. குரங்கு ஆப்பம் பிரித்த கதையாக அந்த குறைந்த நீரிலும் கர்நாடக குடிநீருக்காக என்று 10 டி.எம்.சியும் கடலில் கலந்து வீணாகும் நீரை தேக்கி வைப்பது என்ற பெயரில் 4டி.எம்.சியும் ஆகமொத்தம் 14 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்தின் பங்கிலிருந்து கழித்து கர்நாடக அணைகளில் தேக்கிகொள்ள தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு வழிசெய்துள்ளது.
இதை கழித்து பார்த்தால் தமிழகத்திற்கென்று இறுதித் தீர்ப்பு வழங்கிய தண்ணீர் 178 டி.எம்.சி மட்டுமே. எனவே இடைக்காலத் தீர்ப்பான 205 டி.எம்.சி தண்ணீர் இறுதி முடிவு வரும்வரை தமிழகத்திற்கு கிடைக்கும் வகையில் அந்த இடைக்காலத் தீர்ப்பை இந்திய அரசு மீண்டும் அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் அது செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க நடுவன் அரசின் அதிகாரிகளை கொண்டு கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என்றும் இந்திய அரசை தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கோரும் அவரது நிலைபாட்டை கைவிட வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறேன்.
தோழமையுடன்,
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
இடம்; தஞ்சை,
நாள்: 18.10.2011

சாயக்கழிவுகளால் மாசுபட்ட காவிரியாறு!


காவிரியாறு சாயக்கழிவுகளால் மாசுபட்டிருப்பதை வெளிப்படுத்தும் நாளேட்டுச் செய்தி. நாள்: 08.05.2011 

காவிரிச்சிக்கல் - ஓர் முழுமையான வரலாறு


காவிரிச்சிக்கல்:
ஏன் தோற்றோம்? எப்போது வெல்வோம்?

பெ.மணியரசன்
  1. காவிரி தமிழரின் செவிலித்தாய்
  2. நடுவர் மன்றத் தீர்ப்பு கூறுவது என்ன?
  3. ஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு
  4. உச்சநீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி
  5. இந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்
  6. போராட மறுக்கும் பெரிய கட்சிகள்
  7. நம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு
  8. மக்கள் என்ன செய்கிறார்கள்?
  9. “காவிரிக் குடும்பம்” எனும் இனத்துரோக அமைப்பு
  10. கங்கை - காவிரி எனும் பித்தலாட்ட சூழ்ச்சித் திட்டம்
  11. பன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதில்லை? 
  12. எப்போது வெல்வோம்? என்ன போராட்டம் நடத்துவது?



காவிரி - ”தமிழரின் செவிலித்தாய்”


சுரண்ட வந்த வெள்ளையர்கள் காலனி ஆட்சி நடத்தியபோது இருந்த மரபு வழிப்பட்ட உரிமைகள் பலவற்றை சொந்த ஆட்சி என்று மகுடம் சூட்டிக்கொண்ட 1947 ஆகஸ்ட் 15க்குப் பிறகு தமிழகம் இழந்துவிட்டது.

காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, கச்சத்தீவு, மீன்பிடிக்கும் கடல் எனப் பல மரபு வளங்களை இழந்துள்ளோம். சுதந்திர இந்தியா தமிழர்களுக்குக் கொடுத்த “பரிசுகள்” இவை!

திராவிடம்தான் தமிழ்நாட்டை முன்னேற்றியது என்று ஒரு சாரார் தம்பட்டம் அடிக்கிறார்கள். மேலே இருந்த மரபு வளங்கள் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்தான் பறிபோயின. அவற்றைக் காப்பாற்றும் ஆற்றல் எந்தத் திராவிட ஆட்சிக்கும் இல்லை.

யுகம் யுகமாய்க் காவிரி தமிழர்களின் தாயாய் இருந்து வளம் சுரந்தது; உணவு புரந்தது

“வாழி அவன்தன் வளநாடு
மகவாய்  வளர்க்கும் தாயாகி
ஊழி உய்க்கும் பேருதவி
ஒழியாய் வாழி காவேரி”
என்றார் இளங்கோவடிகள். காவிரி, தாய் போன்றவள்; சோழ நாட்டு மக்கள் காவிரித் தாயின் பிள்ளைகள்; ஊழி தோறும் ஊழி தோறும் தம்மக்களைக் காவிரித்தாய் வளர்த்து வருகிறாள்; அவள் வாழ்க, என்கிறார் (சிலப்பதிகாரம்).

அந்தக் காவிரியும் மாற்று இனத்தாரால் மறிக்கப்படாமல், திசை மாற்றப்படாமல் அழகாக, கம்பீரமாக, சோழ நாட்டில் ஓடி வருகிற தென்றால் சோழப் பேரரசனின் படை வலிமையின் காரணமாகவும் ஆட்சித் திறமையின் காரணமாகவும் தான் ஓடி வருகிறது என்றார் இளங்கோவடிகள்.

பூவர் சோலை மயிலாலப்
புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய
நடந்தாய் வாழி காவிரி
காமர் மாலை அருகசைய
நடந்த வெல்லாம் நின்கணவன்
நாமவேலின் திறம் கண்டறிந்தேன்
வாழி காவிரி
உன் கணவனாகிய சோழப் பேரரசனின் வேல்படையின் வலிமையால்தான் காவிரியே நீ செம்மாப்போடு ஓடி வருகிறாய்!

மருங்கு வண்டுகள் ஓசையிட மணிப் பூவாடை போர்த்தி ஓடி வரும் காவிரியே, உன் கணவன் சோழப் பேரரசன் திருந்து செங்கோல் வளையாமையால்தான் ஓடி வருகிறாய்! வாழி காவேரி என்றார் இளங்கோவடிகள்!

அரசு வலிமையுள்ளதாக, மக்கள் நலனில் அக்கறையுள்ளதாக இருந்தால்தான் காவிரி உள்ளிட்ட இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும் என்றார்.

பிற்காலத்தில் சோழநாட்டை ஆண்ட இரண்டாம் குலோத்துங்கன் மகன் இரண்டாம் இராசராசன் காலத்தில் (கி.பி.1146 - 1163) மைசூரை ஆண்ட போசள மன்னன் முதலாம் நரசிம்மன் (கி.பி.1141 - 1173) மைசூருக்கு அருகே காவிரியில் அணைகட்டி, சோழமண்டலம் தண்ணீர்ப் பெற முடியாமல் தடுத்தான். அணையை நீக்கி, காவிரியை ஓடிவரச் செய்யுமாறு போசள மன்னனுக்கு ஓலை அனுப்பினான் சோழன். போசள மன்னன் காவிரியை விடுவிக்க மறுத்தான். படை யெடுத்துப் போய் அணையை உடைத்துக் காவிரியை மீட்டான் இரண்டாம் இராசராசன்!

அலைகொன்று வருகங்கை வாராமல் மண்மேல்
அடைக்கின்ற குன்றூடு அறுக்கின்ற பூதம்
மலைகொன்று பொன்னிக்கு வழிகண்ட கண்டன்
வரராசராசன் கை வாளென்ன வந்தே
என்று இவ்வெற்றியைப் பாடினார் ஒட்டக்கூத்தர் (தக்கயாகப் பரணி - 549)

பின்னர் பதினேழாம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட சிக்க தேவ மகாராயர் காவிரியின் குறுக்கே செயற்கை மலை எழுப்பி சோழ நாட்டிற்குத் தண்ணீர் வராமல் தடுத்தான். அப்போது தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னன் சகசி, இராணி மங்கம்மாள் படையின் துணையோடு, மைசூர் அணையை உடைக்கப் படையோடு போயிருக்கிறான். இப்படை அங்கு போய்ச் சேருவதற்குள் பெரு மழையில் அணை உடைந்து காவிரி தன்னைத் தானே விடுவித்துக் கொண்டது என்று வரலாற்றாசி ரியர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல்: காவிரி தமிழகத்தின் உயிரோட்டம் - தமிழ்ப் பல்கலைக் கழகம்)

சுதந்திர இந்தியா, தமிழர்களின் காவிரி உரிமையைப் பறித்து விட்டது. தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக ஆட்சிகள் குறிப்பாக திராவிட ஆட்சிகள் - காவிரியைக் காவு கொடுத்து விட்டன. தலைவர்கள் கங்காணிச் சுகம் அனுபவிக்கின்றனர்.

தண்ணீரை மிகையாகத் தேக்கி வைத்துக் கொண்டு, தமிழகத்தின் நீரை அடைத்து வைத்துக் கொண்டு அநீதிக் கொடி ஏந்தி நிற்கும் கர்நாடகத்தில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒன்றாக உட்கார்ந்து பேசி, “உயர் நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த முடியாது” என்று தீர்மானம் போடுகின்றன; காவிரி ஆணையமா, கண்காணிப்புக் குழுவா, மேற்பார்வைக் குழுவா எதுவாக இருந்தாலும் அது சொல்லும் முடிவை ஏற்க முடியாது என்று ஒற்றைக் குரலில் பேசுகின்றன.

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 25 இலட்சம் ஏக்கர் சாகுபடி நிலம் காவிரி நீரை நம்பியிருக்கிறது. தொடர்ச்சியாகக் கடந்த பல ஆண்டுகளாகக் கர்நாடகம் தமிழகத்திற்குரிய தண்ணீரை மறித்து வைத்துக் கொண்டதால் ஐந்து இலட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பல ஆண்டுகளாக நிறுத்தப் பட்டுவிட்டது. சம்பா சாகுபடிக்கும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாகத் தண்ணீர் வராததால் பல இலட்சம் ஏக்கர் தரிசாகப் போடப்பட்டுவிட்டது. சாகுபடியான சம்பாவும் தண்ணீரின்றி காய்ந்து கருகிப் போகிறது.

சென்னையிலிருந்து இராமநாதபுரம் வரை, திருப்பூரிலிருந்து வேலூர் வரை காவிரி நீர் குடிநீராகப் போகிறது. தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக சில நகரங்களில் பத்து நாளைக்கொரு தடவைதான் குடிநீர் வழங்கப்படுகிறது. மேட்டூர் அணை உள்ள சேலம் மாவட்டத்தில் - சேலம் நகரத்தில் - பத்து நாளைக்கொரு தடவைதான் காவிரி நீர் தரப்படுகிறது.

காவிரி நீர் உரியவாறு வராததால் வேளாண்மை பொய்த்துப் போகிறது. இதனால் கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களை நோக்கி வெளியேறும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இத்தனை அவலங்கள் அன்றாடம் கோரத்தாண்டம் ஆடும்போது. தமிழகக் கட்சித் தலைவர்கள் மனங்கலங்காமல் கல்மனத்தோடு இருக்கிறார்கள். இந்த அவலங்களைப் போக்கிட காவிரி உரிமையை மீட்டிட பெரிய தலைவர்கள் தாங்கள் தலைமை தாங்கி தமிழகம் தழுவியப் போராட்டம் எதையும் நடத்தவில்லை.

கடந்த 2012ஆம் ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரி நீரின்றி மிக மோசமாக பயிர்கள் காய்ந்து கருகிப் போயின. இலட்சக்கணக்கான ஏக்கர் நிலம் தரிசாகப் போடப்பட்டது. அரசு இழப்பீடு தர வேண்டிய அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டது. ஏதோ அரை குறையாகத்தான் தமிழக அரசும் இழப்பீடு தந்தது. பாதிக்கப்பட்ட எத்தனையோ கிராமங்கள் இழப்பீடு வழங்கப்படாமல் மொத்தமாக விடுபட்டன.


இந்நிலையில் பிரபலமான தமிழகக் கட்சிகளின் தலைவர்கள் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் வந்து, உழவர்களையும் இதரப்பகுதி மக்களையும் திரட்டி காவிரி நீர் கேட்டும் போராடவில்லை; உரியவாறு இழப்பீடு வழங்கக் கோரியும் போராடவில்லை; அஞ்சாதீர்கள், நாங்கள் இருக்கிறோம்; ஆகவேண்டியதைச் செய்கிறோம் என்று மக்களுக்கு ஆறுதல் கூற, நம்பிக்கையூட்ட எந்தத் தலைவரும் கிராமங்களுக்குப் போகவில்லை! பழங்கால மன்னர்களுக்கும், வெள்ளைக்கார அதிகாரிகளுக்கும் இருந்த அக்கறைகூட சனநாயகத் தலைவர்களுக்கு இல்லை.

அடுத்த பகுதி 

காவிரிச்சிக்கல் - ஓர் முழுமையான வரலாறு
  1. காவிரி தமிழரின் செவிலித்தாய்
  2. நடுவர் மன்றத் தீர்ப்பு கூறுவது என்ன?
  3. ஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு
  4. உச்சநீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி
  5. இந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்
  6. போராட மறுக்கும் பெரிய கட்சிகள்
  7. நம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு
  8. மக்கள் என்ன செய்கிறார்கள்?
  9. “காவிரிக் குடும்பம்” எனும் இனத்துரோக அமைப்பு
  10. கங்கை - காவிரி எனும் பித்தலாட்ட சூழ்ச்சித் திட்டம்
  11. பன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதில்லை? 
  12. எப்போது வெல்வோம்? என்ன போராட்டம் நடத்துவது?
 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger