தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


முதன்மைப் பதிவுகள்

"இந்திய அரசைப் பணிய வைத்தால்தான் தமிழ்நாடு காவிரியை மீட்க முடியும்!" --- ஐயா பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


இந்திய அரசைப் பணிய வைத்தால்தான்
தமிழ்நாடு காவிரியை மீட்க முடியும்!
================================
ஐயா பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
================================


தமிழ்நாட்டிற்குரிய சட்டப்படியான காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு ஆணையிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் போட்ட வழக்கு விசாரணை 12.10.2026 அன்று நடந்தது. உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வகுத்துள்ள பற்றாக்குறைக்காலப் பகிர்வுப்படி கூட, கர்நாடகம் இவ்வாண்டு காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை; தமிழ்நாட்டிற்கு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, பற்றாக்குறை கால பகிர்வுத் திட்டப்படி, வழக்கமான அளவு நீரைக் குறைத்துக் கொண்டு தரவேண்டிய தண்ணீரைத் திறந்துவிட ஆணை இடும்படி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் கோரியது.

அதற்கு முன் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 15 வரை நொடிக்கு 4000 கனஅடி நீர் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்குமுறை ஆணையம் ஆணையிட்டிருந்தது. இதை மறுத்து, வறட்சி நிலவுகிறது என்று தவறான தகவல்கள் கொடுத்தது கர்நாடக அரசு. கர்நாடக அரசின் பொய்க் கூற்றையும் உண்மை என்று ஏற்று, காவிரி மேலாண்மை ஆணையம் 8.10.2026 அன்று நடந்த ஆணையக் கூட்டத்தில், 1000 கனஅடி தண்ணீரைக் குறைத்து 3,000 கனஅடி கர்நாடகம் திறந்துவிட்டால் போதும் எனத் தீர்ப்பளித்தது.

கர்நாடக அணைகள் நிரம்பிய நிலையிலும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீரைத் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிடவில்லை கர்நாடக அரசு. 2026 சூன் முதல் தமிழ்நாட்டிற்குத் திறக்க வேண்டிய நீரில் 2026 அக்டோபர் 6 வரை 11.719 டிஎம்சி தண்ணீர் பாக்கி உள்ளது. அதைத் திறந்துவிட ஆணைஇடக் கோரிதான் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டது.

அவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையில் இரு நீதிபதிகள் அமர்வு கூறிய ஒருதலைச் சார்பான கருத்துகள் நடுநிலையாளர்களை நடுங்க வைக்கும் வகையில் உள்ளது. கர்நாடக அரசுத் தரப்புத் தலைமை வழக்கறிஞர் திவான் கூட உச்ச நீதிமன்ற நீதிபதியைப் போல், தமிழ்நாட்டின் கோரிக்கையைச் சாடிப் பேசவில்லை.

பற்றாக்குறைக் காலப் பகிர்வுக் குறைப்புச் செய்து காவிரி ஆணையம் திறக்கச் சொன்ன நீரில்தான் 11 டிஎம்சி பாக்கி என்கிறது தமிழ்நாடு!

தமிழ்நாட்டுத் தரப்பிற்கு எதிராக உச்ச நிதிமன்ற அமர்வின் தலைமை நீதிபதி விக்ரம் நாத் சீறியதைப் பாருங்கள்: ”கர்நாடகத்தின் தேவைக்குப் போக மிகையாகத் தண்ணீர் இருந்தால்தான் தண்ணீர் பாக்கியைத் தமிழ்நாட்டிற்குக் கர்நாடகத்தால் தர முடியும். அங்கேயே மழை குறைவாக இருந்தால், தண்ணீர் பற்றாக்குறை இருந்தால், பகிரப்படாத பழைய பாக்கியை எப்படி அவர்களால் தர முடியும்? அவர்களும் தண்ணீர் பற்றாக் குறையில் தவித்துக் கொண்டுள்ளார்கள். மிச்சமாகக் கூடிய அளவுக்கு அவர்களுக்கு (கர்நாடகத்திற்கு) காவிரி நீர் இருந்தால்தான் அவர்கள் பழைய பாக்கியை உங்களுக்குத் தரமுடியும்.” இது நீதிபதி பேச்சு! கர்நாடக அரசு வழக்கறிஞர் வாதம் அல்ல! (The Hindu, 13.10.2026).

தீர்ப்புக் கூறாமல், பிறகு கூறுவதாகச் சொல்லி வழக்கை ஒத்தி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.

கர்நாடக அரசு தங்கள் பகுதியில் பருவமழை பொய்த்து, வழக்கத்தைவிடக் குறைவாக செப்டம்பர் மாதம் மழைப் பொழிந்துள்ளது; எனவே, உச்ச நீதிமன்றத்தின் 2018-ஆம் ஆண்டு தீர்ப்புப்படி தண்ணீர் திறக்க முடியாது என்று கூறியபின், காவிரி மேலாண்மை ஆ9ணயம் தனது முந்தைய ஆணையை மாற்றி, தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய தண்ணீர் அளவை மேற்கண்டவாறு ஒரு நொடிக்கு 3,000 கன அடி என்று குறைத்தது.

2026 செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 8 வரை 15 நாட்களுக்கு ஒரு நொடிக்கு 4000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்பது பழைய ஆணை.

தேவைக் கேற்ப காவிரி ஆணையம் தண்ணீர் அளவைக் குறைத்த பிறகுதான் கர்நாடக அரசு வழக்கறிஞரும், உச்சநீதிமன்ற நீதிபதி விக்கிரம் நாத் அவர்களும் சீறிச் சினந்து தமிழ்நாட்டிற்கு எதிராகப் பாய்ந்தார்கள்.

எல்லாருக்கும் தெரிகிறது, தமிழ்நாட்டுத் தமிழர்கள் அரசியல் அனாதைகள் என்பது! நாளைக்கு ஒரு நல்மாற்றம் ஏற்பட்டு, அதே உச்சநீதிமன்ற நீதிபதி தமிழ்நாடு அரசின் கோரிக்கை நியாயமானது எனவே கூடுதலாகத் திறந்துவிட வேண்டும் என்று தீர்ப்பளித்தால் கர்நாடகம் செய்படுத்தவா போகிறது? காவிரிப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின் எந்நத் தீர்ப்பைக் கர்நாடக அரசு செயல்படுத்தியது? அத் தீர்ப்பைச் செயல்படுத்தாத இந்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுத்ததுண்டா? தி,மு.க. அல்லது அ.தி.மு.க. ஆட்சிகள் காவிரியில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்த வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தியதுண்டா? இல்லை! (ஒரே ஒரு தடவை அன்றைய முதலமைச்சர் செயலலிதா காவிரிக்காக கால வரம்பற்ற உண்ணாப் போராட்டம் நடத்தினார். நடுவண் அமைச்சர் வந்து வாக்குறுதி கொடுத்து முடித்து வைத்தார்)

இப்போதுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், வாயைத் திறந்து காவிரி என்று உச்சரிக்கமாட்டார்! காவிரி நீர் தமிழ்நாட்டிற்குத் திறக்க மறுக்கும் கர்நாடகத்தைக் கண்டிக்கும் “சட்டவிரோத”ச் செயலைச் செய்யமாட்டார். நானும் காவிரியை மீட்கப்பாடு படுகிறேன் என்று காட்டிக்கொள்ள, உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போடுவது, மனுப்போடுவது என்று போக்குக் காட்டிக் கொள்கிறார்.

இந்தியத் துணைக் கண்டத்தின் ஈ, எறும்பு உட்பட எல்லா உயிர்க்கும் படியளக்கும் ஈசனாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியோ அல்லது அவரது அரசோ, உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும், உச்ச நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆணையையும் செயல்படுத்த முனைந்ததுண்டா? அதைச் செயல்படுத்த மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்ததுண்டா? இல்லை! இரண்டு மாநிலங்களுக்கிடையே தண்ணீர்த் தகராறு இருந்தால், நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு ஒரு மாநிலம் கட்டுப்படவில்லை என்றால், இரண்டு மாநில முதல்வர்களையும் வைத்து, நாட்டின் தலைமை அமைர்சர் பேச்சு நடத்தி இணக்கத்திற்குக் கொண்டுவர முயலக் கூடாதா? நரேந்திர மோடி ஒரு முறையாவது இப்படி முயன்ற துண்டா? இல்லை. ஏன்” தமிழ்நாடு தமிழர்களின் தாயகம். இந்தியத் துணைக் கண்டத்தின் அசல் சொந்தக்கார்ர்கள் தமிழர்கள்: இந்தியத் துணைக் கண்டத்தின் ஒற்றை முதல் தாய்மொழி தமிழ்! இந்தி ஏகாதிபத்திய வாதிகளுக்கு இந்த வரலாற்று உண்மைகள் அச்சமூட்டுகின்றன. இதனால் தமிழ் இனத்தின் மீது உட்பகை வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

தமிழினத்திற்கு எங்கிருந்து ஆபத்து வந்தாலும் அந்தரங்கத்தில் இவர்கள் மகிழ்வார்கள்! சிங்களர்களிடமிருந்து ஆபத்து வந்தாலும் கன்னடர்களிடமிருந்து ஆபத்து வந்தாலும் இந்திய ஏகாதிபத்தியவாதம் உள்ளுரக் களிகொள்ளும்!

இப்போது கோதாவரி – காவிரி இணைப்பு பற்றித் தீவிரமாகப் பேசுகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்! தமிழர்கள் காவிரியை மறக்க வேண்டும் என்பதற்காக, 1970 களில் கங்கை – காவிரி இணைப்பு பேசி அம்பலப் பட்டுப் போனார்கள். அதன்பின் கோதாவரி – காவிரி இணைப்பு பேசி கூட்டங்கள் நடத்தி, தமிழ்நாட்டில் அம்பலப்பட்டு ஓய்ந்தார்கள். கங்கை நீரை ஒரு சொட்டு கூட தென்னிந்தியாவுக்குத் தர மாட்டோம் என்று வட இந்தியத் தலைவர்கள் முழங்கினார்கள்; அதேபோல் ஆந்திர தலைவர்கள் கோதாவரியைப் பிரித்துப்பார் என்று எச்சரித்தார்கள்.

தமிழர்களை ஏமாற்றித் திசைதிருப்ப வேடம் போட்டவர்களின் வேடத்தை அந்தந்த மாநில மக்களே அம்பலப்படுத்தினார்கள். அதன்பின் அடங்கினார்கள். இப்போது அவர்கள் தில்லி வழியாக விஜயைப் பிடித்துள்ளார்கள்! வேடம் போட்டே முதலமைச்சர் ஆனவர் விஜய்! இவர் கோதாவரி – காவிரி இணைமப்பை சித்திரித்து கவர்ச்சி காட்டுகிறார்.

இந்திய ஆட்சியாளர்களுக்குப் பொறுப்பில்லையா?

கர்நாடக ஆட்சியாளர்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் காவிரியில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே செயல்படுத்த மறுப்பார்கள்; உச்ச நீதிமன்றமும் அதனைக் கண்டு கொள்ளாது. இந்திய அரசும் அதைக் கண்டு கொள்ளாது என்றால், எல்லா வழக்குகளிலும் இப்படி உச்ச நீதிமன்றமும் இந்திய அரசும் கண்டு கொள்ளாமல் இருந்து விடுவார்களா? அப்படி எல்லாம் விட்டுவிட மாட்டார்கள்.

திட்டமிட்ட தமிழ்நாடு – தமிழர் புறக்கணிப்பு - தமிழர் பகை வெளிப்பாடு – ஆகியவற்றை உள்நோக்கமாகக் கொண்டுதான், இந்திய அரசு காவிரிச் சிக்கலில் ஒதுங்கிக்கொள்வது போல் நடித்து, மறைமுகமாக, கர்நாடக அராஜகதத்தை ஆதரிக்கிறது!

கர்நாடகத்தைச் சேர்ந்த வி. சோமன்னா என்பவர் இந்திய அரசின் நீர்வளத் துறையின் இணை அமைச்சர். அவர் அண்மையில் நாடாளுமன்றத்தில், கர்நாடகம் மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்குக் காவிரி மேலாண்மை ஆணையம் தடை போட முடியாது. அதற்கு அந்த அதிகாரம் கிடையாது. உச்ச நீதிமன்றத்தின் 16.2.2018 ஆம் ஆண்டுத் தீர்ப்பின்படி, கர்நாடகம் மேக்கேதாட்டில் அணைகட்ட எந்தத் தடையும் இலாலை என்று அறிவித்தார்! நரேந்திர மோடியின் கருத்தைத்தான் இந்த அமைச்சர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.

மேக்கேதாட்டு அணை கட்டப்படாமல் தடுக்கவும், 16.2.2018 உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வரவும் இந்திய அரசுக்குத்தான் இறுதி அதிகாரம் இருக்கிறது. அது தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, கர்நாடக அரசின் உச்ச நீதிமன்றப் தீர்ப்புப் புறக்கணிப்பு போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க முடியும். அதையும் மீறினால் அந்த ஆட்சியின் மீது நடவடிக்கை எடுக்க இந்தியத் தலைமை அமைச்சருக்கும், இந்திய அரசுக்கும் முழு அதிகாரம் இருக்கிறது.

கர்நாடகத்தின் காவிரிப் பறிப்பு அராஜகத்தை – அரசமைப்புச் சட்ட விரோதச் செயலைத் தடுக்க, அந்த ஆட்சியின் மீது தலைமை அமைச்சர் நரேந்திர மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோர்ரிக்கை தமிழ்நாடெங்கும் எதிரொலிக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் 16.02.2018 அன்று வழங்கிய காவிரித் தீர்ப்பை இந்திய அரசு உடனடியாக செயல்படுத்திக் காட்ட வேண்டும்.

எனவே, தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைப் பெற கர்நாடகத்தை எதிர்த்துப் போராடுவதுடன், முதன்மையாக இந்திய அரசை எதிர்த்தும் போராட வேண்டும். அது தமிழ்நாடு தழுவியதாக இருக்க வேண்டும். காவிரி உரிமை மீட்புப் போராட்டம், தமிழர் தாயகம் காக்கும் போராட்டம் என்பதைப் புதுதில்லிக்குப் புரிய வைக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களுக்குப் பாசன நீர் காவிரி நீர்; தமிழ்நாட்டின் 28 மாவட்டங்களுக்குக் குடிநீர் காவிரி நீர்! உச்ச நீதிமன்றம் 16.02.2018 இல் வழங்கிய காவிரித் தீர்ப்பைச் செயல்படுத்தித் தர இந்திய அரசை வலியுறுத்தி ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் போராட வேண்டும்.

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===============================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam


ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 

"கர்நாடகத்திற்கு தமிழ்நாடு அரசு வல்லுநர் குழு அனுப்பி அணைகளின் நீர் இருப்பை ஆய்வு செய்ய வேண்டும்!" ---- தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!"

கர்நாடகத்திற்கு தமிழ்நாடு அரசு
வல்லுநர் குழு அனுப்பி அணைகளின்
நீர் இருப்பை ஆய்வு செய்ய வேண்டும்!
======================================
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
======================================


கடந்த 22.07.2026 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்குமுறை ஆணையும் (Cauvery Water Management Authority - CWMA) கூட்டத்தில், தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரை உடனடியாகத் திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கையை கர்நாடக அரசு வழக்கம் போல மறுத்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும், காவிரி மேலாண்மை ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணைகளையும் ஒருபோதும் மதிக்காமல், காவிரி ஒழுங்குமுறைக்குழுக் கூட்டத்திலேயே தண்ணீர் தர முடியாது எனத் திமிராக அறிவித்த கர்நாடக அரசின் செயல்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் சூன் மாதத்திற்கு 9.19 ஆ.மி.க. (டி.எம்.சி) மற்றும் சூலை மாதத்திற்கு 31.24 ஆ.மி.க. என மொத்தம் இந்த இரண்டு மாதங்களில் மட்டும் 40.43 ஆ.மி.க. தண்ணீரை கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், இதையெல்லாம் கர்நாடகம் எப்போதும் மதித்ததில்லை! குறுவை சாகுபடி பொய்த்துப் போகும் அபாயத்தில் இருக்கும் நிலையில், சட்டப்பூர்வமாகத் தரவேண்டிய தண்ணீரைத் தராமல் பிடிவாதம் பிடிப்பது தமிழ்நாட்டின் மீது தொடுக்கப்படும் வாழ்வாதாரப் போராகும்.

தற்போது கர்நாடகத்தில் உள்ள காவிரி அணைகளான கிருஷ்ணராஜ சாகர் (KRS) அணையில், 17.21 ஆ.மி.க.வும், ஏமாவதி அணையில், 21.15 ஆ.மி.க.வும், கபினி அணையில், 10.35 ஆ.மி.க.வும், ஏரங்கி அணையில் 4.51 ஆ.மி.க.வும் என மொத்தமாக 53 ஆ.மி.க. தண்ணீர் உள்ளது. அதாவது 52% அளவுக்கு அங்கு அணைகளில் தண்ணீர் இருப்பு உள்ளது. இந்நிலையில், இதில் பாதியையாவது கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு கோர வேண்டும்.

கர்நாடக அணைகளின் உண்மை நிலவரத்தையும், அங்குள்ள நீர் இருப்பையும் நேரில் சென்று துல்லியமாக ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு உடனடியாக ஒரு வல்லுநர் குழுவை (Expert Committee) கர்நாடகத்திற்கு அனுப்ப வேண்டும். அக்குழு நேரில் ஆய்வு செய்து, தரவுகளின் அடிப்படையில் நமக்குச் சேர வேண்டிய நீரின் அளவை ஆதாரப்பூர்வமாகப் புள்ளி விவரங்களுடன் முன்வைத்து, இந்திய அரசுக்கும் காவிரி ஒழுங்குமுறைக் குழுவுக்கும் அழுத்தம் கொடுத்துத் தண்ணீரைப் பெற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===============================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 

"பூதலூர் தொடர்வண்டி மறியல் புதிய வெளிச்சம் காட்டுகிறது!" ---- பெ. மணியரசன் ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு


பூதலூர் தொடர்வண்டி மறியல்

புதிய வெளிச்சம் காட்டுகிறது!
=========================
பெ. மணியரசன்
ஒருங்கிணைப்பாளர்,
காவிரி உரிமை மீட்புக் குழு
=========================


கர்நாடகமே, தமிழ்நாட்டுத் தண்ணீரைத் திருடாதே!
இந்திய அரசே, திருட்டுக்குத் துணை போகாதே!
தமிழ்நாடு அரசே, கண்துடைப்பைக் கைவிடு!
காவிரியை மீட்கக் களம் இறங்கு!

இந்தக் கோரிக்கை முழக்கங்களை முன்வைத்து, காவிரி உரிமை மீட்புக் குழு நேற்று (26.09.2023) செவ்வாய்க் கிழமை தஞ்சை மாவட்டம் பூதலூரில் தொடர்வண்டி (இரயில்) மறியல் போராட்டம் நடத்தியது. அது மறியல் போராட்டமா? திருவிழாத் தேரோட்டமா என்று வியக்கும் வகையில் உழவர்களும், உரிமை வேட்கை இளையோரும் பூதலூர் தொடர்வண்டி நிலையம் முன்பாகக் குவிந்தார்கள்!

கட்சி வேறுபாடின்றி, சங்க வேறுபாடின்றி காவிரித் தாயை சிறை மீட்கும் ஆவேசத்துடன் திரண்டனர்.

துல்லியமாக எண்ணிப் பார்த்தால் அறுநூறு பேர் இருக்கும் என்று செய்தியாளர்களில் சிலர் சொன்னார்கள். காவல்துறையினர் நம்மை தொடர்வண்டி நிலையத்திற்குள் போகவே கூடாது என்று கடுமை காட்டினர்; கயிற்றைப் பிடித்துக் கொண்டு தடுத்தனர்.

பயணிகள் செல்லும் வழியாகச் சென்று முன்கூட்டியே தண்டவாளத்தில் நின்று கொள்கிறோம்; நிலையத்தின் நடைமேடை நுழைவுக்கு முன்பகுதியில் நின்று வண்டியை மறிக்கிறோம். தொடர்வண்டியை அங்கு நிறுத்தட்டும் என்று கேட்டோம். காவல்துறையினர் மறுத்து விட்டனர். காவிரியை இழந்து காய்ந்த நெற்பயிரைப் பார்த்து, தண்ணீர் வற்றிப் போன ஆறுகளை – வறண்டு போன வாய்க்கால்களைப் பார்த்து, உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்த உழவர்கள் கொந்தளித்தனர்.

கர்நாடகத்தில் காவிரி நீர்ச் சிக்கலை இனச்சிக்கலாக மாற்றி, கர்நாடகத் தமிழர்களுக்கு எதிரான நஞ்சைக் கக்கி கலாட்டாக்கள் செய்கிறார்கள். முழு அடைப்புகள் நடத்திக் கொண்டிருக்கும் கன்னட இனவெறி அரசியலைக் கண்டு நரம்பு முறுக்கேறி சீறிக் கொண்டிருக்கின்றனர், தமிழின இளைஞர்கள்!

காவல்துறை போட்ட இந்தத் தடைகளை மீறி, வேலியைத் தாண்டி தண்டவாளத்தின் வழியே ஓடி நிலையத்திற்கு அரை கிலோ மீட்டருக்கு முன்பாகவே இருப்புப் பாதையில் படுத்து விட்டனர்! ஆவேச முழக்கங்களை எழுப்பினர். அவர்களைத் தூக்கி அப்புறப்படுத்த காவல்துறையினர் முயன்றனர். ஆனால் முடியவில்லை!

திருச்சியிலிருந்து சென்னை போகும் சோழன் விரைவு வண்டி விடாமல் எச்சரிக்கை ஒலி எழுப்பிக் கொண்டு வருகிறது. நம் இளைஞர்கள், வந்து கொண்டிருக்கும் தொடர்வண்டியை நோக்கி இருப்புப் பாதையில் ஓடுகின்றனர். எட்டி நின்று பார்ப்போர்க்கு என்ன ஆகுமோ என்று அச்சம்! காவல்துறையினர் தலையிட்டு வண்டியை நிறுத்தச் சொல்கின்றனர். வண்டி நிற்கிறது! நம் தோழர்கள் சோழன் தொடர்வண்டி முன் படுக்கிறார்கள். உட்காருகிறாகள். ஆனால் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. ஆத்திரத்தை வெளிப்படுத்த அடையாள மறியல்! ஆனால் அலங்கார மறியல் இல்லை!

நாங்கள் பெரும்பாலோர் தொடர்வண்டி நிலையம் தொடங்கும் பகுதியில் இருப்புப் பாதையில் – உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டோம்! நடைமேடையெங்கும் கூட்டம்! மேற்கே அரை கிலோ மீட்டருக்கு முன் மறியல் செய்தவர்கள், பின்னர் காவல்துறை வேண்டுகோளை ஏற்று, நிலையம் நோக்கி – கிழக்கு நோக்கி தண்டவாளங்களுக்கிடையே நடந்து வருகிறார்கள். அவர்களைப் பின்தொடர்ந்து தொடர்வண்டியும் நகர்ந்து வருகிறது. இங்கும் மறியல் செய்தோம். வண்டி நின்றது. காவல்துறையினர் நம்மைத் தளைப்படுத்தினார்கள். மொத்தம் 45 நிமிடம் பூதலூரில் நிறுத்தி வைக்கப்பட்ட பின் வண்டி புறப்பட்டது. இருநூறு பேர் கைதானோம்!

மற்ற மாநிலங்களில் நடைபெறும் தொடர்வண்டி மறியல்களோடு ஒப்பிடும்போது நாம் நடத்திய மறியல் பெரிதல்ல. பஞ்சாபில் உழவர்கள் வாரக்கணக்கில் தொடர்வண்டி இருப்புப் பாதையில் அடுப்பு வைத்து சமைத்துச் சாப்பிட்டு அங்குள்ள நடைமேடைகளிலேயே தங்கினார்கள். கர்நாடகத்தில் தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைத் தரக்கூடாது என்று சட்டவிரோதக் கோரிக்கை வைத்து அவ்வப்போது தண்டவாளங்களை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். “உழவர்கள்” என்ற பெயரில் உள்ள வெறியர்கள்!

“மாப்பிள்ளை மறியல்கள்”, “அலங்கார மறியல்கள்” அதிகமாக நடைபெறும் தமிழ்நாட்டில் உரிமை மீட்பிற்கான உண்மை மறியல் நடந்தது சிறப்புக்குரியதாகும்!

இதே காவிரி உரிமைக்காக 2019இல் உரிமை மீட்புக் குழு, ஒரு வாரம் டெல்டா மாவட்டங்களில் தொடர்வண்டி மறியல் நடத்தியது. ஒன்றில் கூட, தொடர்வண்டி நிலையத்தில் மறியல் செய்யவில்லை. காடுகளில் – ஓடிவரும் வண்டிகளைத் தான் தஞ்சை – திருவாரூர் – நாகை – திருச்சி மாவட்டங்களில் மறித்துக் கைதானோம்! அதற்கு முன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காவிரிக்காகத் தொடர்ந்து 19 நாள் – இரவு பகல் 24 மணி நேரமும் காத்திருப்புப் போராட்டம் நடத்தினோம். கணக்குக் காட்டவோ, கவர்ச்சி காட்டவோ நாம் ”போராடுவதில்லை”.

நம்மால் இயன்ற அளவு உரிமை மீட்புக்காக உண்மையாகப் போராட வேண்டும் என்ற மெய்ச்சுடர் நம் நெஞ்சில் எரிந்து கொண்டுள்ளது.

காவிரி உரிமை மீட்புக் குழு கட்சி சார்பற்றுச் செயல்படுகிறது. இதில் பல்வேறு கட்சியினர் இருக்கிறார்கள். அதேவேளை எந்தக் கட்சியாவது அல்லது எந்தக் கட்சி ஆட்சியாவது காவிரி உரிமையில் நமக்குப் பாதகமாக நடந்து கொண்டால், உரிமை காக்கச் செயல்படாமல் இருந்தால் அவற்றை விமர்சிப்போம்! கண்டித்தும் போராடுவோம்!

காவிரி உரிமை மீட்புக் குழுத் தலைமை எந்தக் கட்சிக்கும் ஆதரவாக வாக்குக் கேட்காது; எந்தக் கட்சிக்கும் எதிராக வாக்களிக்கக் கோராது. அது அவரவர் உரிமை!

நான் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். எமது தமிழ்த்தேசியப் பேரியக்கம் – காவிரிச் சிக்கலை உழவர் சிக்கலாகவும், தமிழர் உரிமைச் சிக்கலாகவும் – தமிழ்நாட்டுடிக் குடிநீர்ச் சிக்கலாகவும் இணைத்துப் பார்க்கிறது.

இந்தத் தடவை பூதலூர் தொடர்வண்டி மறியலுக்குக், குறிப்பாக, தஞ்சை – திருவாரூர் மாவட்டங்களில் தான் உழவர்களையும், உணர்வாளர்களையும் அழைத்தோம்! ஆனால், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள், சென்னை, கோவை, திருச்சி, ஓசூர், மதுரை, பெண்ணாடம், சிதம்பரம், செய்யாறு போன்ற பல பகுதிகளில் இருந்தெல்லாம் வந்து கலந்து கொண்டார்கள்; கைதானார்கள். அதேபோல், தமிழ்த்தேசியப் பேரியக்கத்திற்கு வெளியே உள்ள உணர்வாளர்கள் பலர் சமூக ஊடகங்களில் செய்தியைப் பார்த்துவிட்டு காஞ்சிபுரம், நாமக்கல், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களிலிருந்து வந்து பங்கேற்றுக் கைதானார்கள்! தஞ்சை மாவட்டத்திலிருந்து, இதுவரை நாம் நடத்திய போராட்டங்களில் கலந்து கொள்ளாத ஊர்களிலிருந்தும் வந்து கலந்து கொண்டார்கள்.

காவிரி உரிமை மீட்புக் குழு பொறுப்பாளர்கள் – முன்னணிச் செயல்பாட்டாளர்கள் பல ஊர்களுக்கும், நேரில் சென்று நம் மக்களை அழைத்தார்கள் – அவர்கள் வந்தார்கள்!

இணக்கமான கூட்டு முயற்சி – கூட்டு உழைப்பு எதையும் சாதிக்கும் என்பதற்கு இப்போராட்டத்தின் சிறப்பே சான்று!

பூதலூர் - இரம்யா திருமண மண்டபத்தில் காவல்துறையினர் நம்மை அடைத்து வைத்திருந்த போது, அங்கே பலர் உரையாற்றினார்கள். கருத்துள்ள உரைகள் – ஆவேச முழக்கங்கள்! கைதான வீராங்களைகளும் முழங்கினர்!

இவ்வளவு பெரிய மறியல் போராட்டத்தை பெரிய கட்சிகள் நடத்தியிருந்தால் இலட்சக்கணக்கில் ரூபாய் செலவு செய்திருப்பார்கள்! நமக்கு மொத்தச் செலவு ரூபாய் 14,200 மட்டுமே! கைது செய்து வைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் இச்செலவுகளுக்காக சில கிராமங்களில் நிதி கேட்டோம். அவர்கள் கொடுத்தது 19,500. மிச்சம் கையிருப்பு ரூபாய் 5,300. இத்தொகை காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் ஐயா த. மணிமொழியன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்செலவில் 4000 துண்டறிக்கைகளுக்கு 3,400 ரூபாயும், பல வண்ண 200 ஒற்றைத் தாள் (Single Bit) சுவரொட்டிகளுக்கும், 200 இரட்டைத் தாள் (Double Bit) சுவரொட்டிகளுக்கும் 6,000 ரூபாயும் போனது. ஆக மொத்தம் 9,400 ரூபாய்! ஊர் ஊராகச் சென்று உழவர்களை அழைத்த முன்னணி இளையோரும், பெரியோரும் அவரவர் சொந்த ஊர்திகளில் சென்றனர். அது பொதுச் செலவில் இல்லை.

மாலை 6.15 மணிக்கு அனைவரையும் காவல்துறையினர் விடுவித்தனர்.

காவிரிக் காப்பு மறியல் போராட்டத்தை முன்கூட்டியே நாளேடுகள் வெளியிட்டன. காவிரி உரிமை மீட்பு மற்றும் தமிழர் உரிமைக் காப்பு உணர்வுமிக்க இளையோரும், பெரியோரும் சமூக வலைத்தள ஊடகங்களில் பரப்பினர். எனது வேண்டுகோள் உரையை எமது தமிழர் கண்ணோட்டம் வலையொளியில் வெளியிட்டார்கள். அதை அப்படியே தம்பி ஏகலைவன் அவர்கள், தமது “ராவணா” வலையொளியில் வெளியிட்டார். தம்பி பிரபாகரன் அவர்கள், ழகரம் வாய்ஸ் வலையொளியில், இப்போராட்டத்திற்கான எனது நேர்காணலை வெளியிட்டார். இவ்வாறாக இப்போராட்டத்தைப் பலரும் நாடறிந்த செய்தியாக மாற்றினார்கள்.

மறியல் போராட்டம் நடக்கும் போதே, அதைப் புதிய தலைமுறைத் தொலைக்காட்சி விரிவாக நேரலை செய்தது. போராட்டத்தை நியூஸ்18, ஜெயா டி.வி. முதலியவை வெளியிட்டன. பெரும்பாலும் எல்லாச் செய்தி ஏடுகளும் வெளியிட்டன. தினத்தந்தி சென்னைப் பதிப்பு உள்ளிட்ட பல பதிப்புகளில் வெளியிட்டது.

சமூக ஊடகங்களில் விரிவாக, காவிரி மீட்பு மறியல் போராட்டக் காட்சிகளை – செய்திகளை நம்முடைய உணர்வாளர்கள் பலர் வெளியிட்டனர்.

இத்தோடு நாம் மன நிறைவடையக் கூடாது. காவிரியில் தமிழ்நாட்டு உரிமையை மீட்கும் வரை நாம் போராட வேண்டும்.

மற்றவரைப் பின்பற்ற மட்டுமே நாம் பிறந்தவர்கள் அல்லர்; மற்றவர்க்கு வழிகாட்டவும் நமக்கு உரிமையுண்டு; அறிவுண்டு! வரலாறு உங்களுக்காக வாசலைத் திறந்து வைத்துள்ளது, வாருங்கள்!

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
www.kaveriurimai.com
==========================
 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger