தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


முதன்மைப் பதிவுகள்

"குறுவை நெல் கொள்முதல் ஈரப்பதம் 20% ஆக்க வேண்டும்! சிப்பத்திற்கு 40 ரூபாய் கையூட்டு வாங்குவதைத் தடை செய்ய வேண்டும்!" ---- முதலமைச்சருக்குக் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கோரிக்கை!


குறுவை நெல் கொள்முதல் ஈரப்பதம் 20% ஆக்க வேண்டும்!

சிப்பத்திற்கு 40 ரூபாய் கையூட்டு வாங்குவதைத் தடை செய்ய வேண்டும்!
=============================================================
முதலமைச்சருக்குக் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் கோரிக்கை!


நெல்லை உற்பத்தி செய்வதிலிருந்து அதை விற்பது வரை, ஒரு வேண்டாத வேலையை உழவர்கள் செய்வது போலவே இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் நடந்து கொள்கின்றன. நெல்லுக்கு இலாப விலை நிர்ணயிக்கக் கூடாது, கட்டுப்படியான விலைதான் நிர்ணயிக்க வேண்டும் என்று இந்திய அரசு வரம்பு வைத்திருக்கிறது. அந்தக் கட்டுபடியான விலையையும் வேளாண் அறிஞர் எம்.எஸ். சுவாமிநாதன் வகுத்தளித்த விலை நிர்ணய அடிப்படையில் இந்திய அரசு தீர்மானிப்பதில்லை. இதனால் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருள்களின் சந்தை விலைஉயர்வு விகிதத்தற்குச் சமமாக நெல்விலை உயர்த்தப்படுவதில்லை.

அடிமாட்டு விலைக்கு நிரணயிக்கப்பட்ட நெல்லையும் ஆட்சியாளர்கள் உரிய அக்கறையுடன், நேர்மையாக, இலஞ்சஊழல் இல்லாமல் கொள்முதல் செய்வதில்லை.
நேரடி நெல் கொள்முதல் நிலையைங்கள் சிலவற்றைத் தஞ்சை, திருவையாறு பூதலூர் ஒன்றியங்களில் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் நான், காவிரி உரிமைமீட்புக்குழு பொருளாளர் த. மணிமொழியன், செயற்குழு உறுப்பினர்கள் துரை. இரமேசு, பொறியாளர் தி. செந்தில்வேலன், பூதலுர் சுந்தரவடிவேலு, பா. தட்சிணாமூர்த்தி ஆகியோர் அண்மையில் பார்வையிட்டோம். நெல்லை விற்பனை செய்த உழவர்கள், கொள்முதல் செய்யும் ஊழியர்கள், கொள்முதல் நிலையத்திலேயே வந்து நெல்லை வாங்கிச் செல்லும் தனியார் வணிகர்கள் என்று பலரையும் சந்தித்தோம்.

ஈரப்பதம் 20 % என மாற்றுக!
==========================
பதினேழு விழுக்காடுவரை ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்கிறார்கள். அங்கு வாங்க மறுத்து குவிக்கப்பட்டிருந்த நெல்லை அள்ளிப் பார்த்தோம். ஈரநெல்லாக இல்லை. கோடைக்கால சம்பா நெல்போல்தான் இருந்தது. ஆனால், அதில் 19 விழுக்காடு ஈரப்பதம் இருப்பதாக வாங்க மறுத்துள்ளனர். குறுவை நெல்லில் கொஞ்சம் கூடுதலாக ஈரப்பதம் இருப்பது இயற்கைதான். அதனால் ஆட்சியாளர்கள் குறுவை நெல் அறுவடை முடியும் தருவாயில் 20 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல்லைக் கொள்முதல் செய்யத் தளர்வு ஏற்படுத்துவது கடந்த ஆண்டுகளில் நடந்து வந்துள்ளது. அத் தளர்வை இப்போதே ஏற்படுத்தி, 20 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல்லைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தொடரும் துயர வாழ்க்கையில் உழலும் உழவர்களுக்கு உழவர்கள் கை கொடுத்து உதவியதாக இருக்கும்.

நெல் விற்கக் கையூட்டு
======================
அடுத்து ஆட்சியாளர்கள் – அதிகாரிகள் ஆகியோரின் மறைமுக அனுமதியோடு நடக்கும் ஓர் அநீதி, 40 கிலோ கொண்ட ஒரு சிப்பம் நெல்லை விற்றால் அதற்கு உழவர்கள் நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர்க்கு 40 ரூபாய் இலஞ்சம் கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இவ்வாறு ஏன் வாங்குகிறீர்கள் என்று ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள், மூட்டை தூக்கும் தொழிலாளிக்கு ஒரு மூட்டை நெல்லுக்கு நிர்ணயித்துள்ள கூலி குறைவு. வெறும் 10 ரூபாய்தான். அதை ஈடுகட்டினால்தான் தொழிலாளிகள் வருவார்கள். அடுத்து கொள்முதல் நிலையத்திற்கு நெல் மூட்டைகளை ஏற்ற வரும் தனியார் சரக்குந்துகளுக்கு ஒரு வண்டிக்கு நான்காயிரம் ரூபாய் நாங்கள் கொடுத்தால்தான் அவர்கள் மூட்டைகளை ஏற்றுவர்கள். அவர்களின் சரக்குந்து, நெல்மூட்டைகளை இறக்கும் சேமிப்புக் கிடங்குகளில், மூன்று நாள்வரை கூட காத்திருக்க வேண்டி வரும். ஓட்டுநர் உள்ளிட்டோர் உணவுச் செலவு கூடுதல் சம்பளம் போன்றவற்றை நாங்கள் கொடுத்தால்தான் சரங்குந்துகள் எங்கள் கொள்முதல் நிலையத்திற்கு வந்து ஏற்றிச் செல்லும். நாங்கள்தான் சரக்குந்துகளை ஏற்பாடு செய்ய வேண்டியதிருக்கிறது என்றார்கள் ஊழியர்கள்.

மேற்கண்டவாறு ஊழியர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்குத் தீர்வுகண்டு இலஞ்ச ஊழல் இல்லாத கொள்முதல் நிர்வாகத்தைத் தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தனியார் வேட்டை
==================
அரசுக் கொள்முதல் நிலையத்தில் மேற்கண்ட சுமைகளச் சுமக்காமல், காலதாமதம் ஆகாமல் நெல்லை விற்பதற்கு உழவர்கள் தனியார் வணிகர்களை நாடுகிறார்கள். தனியார் வணிகர்களும் கொள்முதல் நிலையங்களுக்கே வந்து அரசு நிர்ணயித்த விலையைவிடக் குறைவாகக் கொடுத்து வாங்கிச் செல்கிறார்கள். 1 மூட்டை நெல்லின் எடை 63 கிலோ என்று கூடுதலாக நிர்ணயித்து அவர்கள் வாங்கிச் செல்கிறார்கள். உடனடிப் பணத்தேவை, நெல்லைச் சேமிக்க முடியாத நிலை ஆகியவை காரணமாக அரசு விலைக்கும் குறைவாக – அதிக எடையுடன் நெல்லை விவசாயிகள் விற்கிறார்கள். அப்படி நெல்லை வாங்குவோர் பிளாஸ்டிக் நார் சாக்குகளில் நெல் பிடிக்கிறார்கள். சணல் சாக்குகளைத்தான் பயன்படுத்த வேண்டும்.

தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்களும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும் உலகநாடுகளுக்கெல்லாம் சென்று பெரும்பெருந் தொழில் முதலாளிகளை இங்கு அழைத்து வந்து அவர்கள் தொழில் தொடங்க பல்வேறு சலுகைகள் செய்கிறார்கள். உயிர்காக்கும் உணவு உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு அவர்கள் நீதிவழங்கக் கூடாதா? உழவர்களையும் கவனியுங்கள்!

நெல் கொள்முதல் நிலையங்கள்
=================================
நெல் உற்பத்தி செய்யும் பல்வேறு கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லை. இருக்கும் இடங்களிலும் இரவல் முறையில், பல்வேறு ஊர்களில் சேமிப்புக் கிடங்குகளிலோ மற்ற இடங்களிலோ இருக்கின்றன. உழவர்கள் நெல் கொள்முதல் நிலையம் கோரும் ஊர்களில், 40 சென்ட் நிலம் வாங்கித் தாருங்கள் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் உழவர்களையே கேட்கிறார்கள். நிலத்தின் விலை மிகமிக உயரத்தில் இருக்கிறது. உழவர்கள் வாங்கித்தர வாய்ப்பில்லை. அப்படி உழவர்களிடம் அரசு கேட்பதும் முறைஇல்லை. அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ள பூதலூர், கோயில்பத்து போன்ற கிராமங்களில் கூட நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமாக கொள்முதல் நிலையங்கள் இல்லை என்பது வேதனை அளிக்கும் செய்தியாகும்.

தமிழ்நாடு அரசு நெல்கொள்முதல் செய்யவில்லை. இந்திய அரசுக்குக் கொள்முதல் செய்யும் முகவராக இருக்கிறது என்பதைக் காரணம் காட்டி, தமிழ்நாடு அரசு மேற்படி குறைகளைக் களைய நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது. வெறுந் தரகர் அல்ல தமிழ்நாடு அரசு! மக்கள் குறைகளைக் களைய வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது. எனவே, குறைகளைக் களைய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

......

=============================================================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
www.kaveriurimai.com
==========================

"காவிரி உரிமையை திமுகவும் அதிமுகவும் காக்காது! மக்கள் களம் இறங்கி மீட்க வேண்டும்!"---- பெ. மணியரசன், ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு.


காவிரி உரிமையை திமுகவும் அதிமுகவும் காக்காது!

மக்கள் களம் இறங்கி மீட்க வேண்டும்!

========================================
பெ. மணியரசன்,
ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு.
========================================


கர்நாடகம் சட்டவிரோதமாக தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரைத் தடுத்து வைத்துக் கொண்டதால், மூன்றரை இலட்சம் ஏக்கர் குறுவைப் பயிர் காய்ந்து அழிந்துவிட்டது. மிச்சம் உள்ள இரண்டு இலட்சம் குறுவைப பயிரைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. அத்துடன் 12 இலட்சம் ஏக்கரில் ஒரு போக சம்பா சாகுபடி தொடங்க வேண்டியுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 44 அடிக்குக் கீழே வந்துவிட்டது. கர்நாடக அரசோ கொஞ்ச நஞ்சம் திறந்துவிட்ட தண்ணீரையும் முற்றிலுமாக மதகை மூடித் தடுத்துவிட்டது.

இந்நிலையில், 12.9.2023 அன்று கூடிய காவிரி ஒழுங்காற்றுக் குழு ஒரு நொடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் அடுத்த 15 நாட்களுக்கு தொடர்ந்து காவிரியில் கர்நாடகம் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டும் என்று கட்டளை இட்டுள்ளது. இதனை செயல்படுத்த முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும், நீர்வளத்துறை அமைச்சர் டி.கே. சிவகுமாரும் வெளிப்படையாக செய்தியாளர்களிடம் 13.9.2023 அன்று அறிவித்துவிட்டார்கள்.

இது குறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களிடம் 13.9.2023 அன்று செய்தியாளர்கள் கேட்டபோது, உச்ச நீதிமன்றத்தில் 21.9.2023 அன்று முறையிட்டு உரிய தண்ணீர் கோருவோம் என்று கூறியுள்ளார். உச்ச நீதிமன்றமோ, காயும் பயிரின் உயிர்காக்கும் அவசரத் தேவையைக் கருத்தில் கொள்ளாமல், தமிழ்நாடு அரசு 12.8.2023 அன்று தாக்கல் செய்த காவிரி நீர் கோரும் மனுவை 25.8.2023 அன்று விசாரணைக்கு எடுத்து, முடிவேதும் சொல்லாமல் வாய்தா போட்டுக் கொண்டே வருகிறது. 39 நாள் கழித்து 21.9.2023 அன்று தீர்ப்பு வருமா என்பது ஐயம்.

இப்பொழுதும், உச்ச நீதிமன்றத்தை எதிர்பார்த்துக் காத்திருப்போம் என்று தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் சொல்வது, வேளாண்மைக்கும் குடிநீருக்கும் காவிரியை நம்பியுள்ள மூன்றரைக் கோடி மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.

கர்நாடகத்தில், கடந்த ஆகஸ்ட்டில் இருந்து இன்றுவரை இரண்டு முறை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஆட்சியாளர்கள் கூட்டி, தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூடத் தரக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். 13.9.2023 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, “தமிழ்நாட்டின் திமுகவோடு காங்கிரஸ் கட்சி அரசியல் கூட்டணி சேர்ந்திருப்பது வேறு செய்தி. காவிரி நீர் சிக்கலில், கூட்டணி அரசியல் தலையிட அனுமதிக்க மாட்டோம். தாயகம், தண்ணீர், மொழி, எல்லை ஆகியவற்றில் அரசியல் மோதல் எதுவும் கர்நாடகத்துக்குள் எப்போதும் வராது. நாங்கள் ஒன்றுபட்டு இருக்கிறோம். தலைமை அமைச்சர் நரேந்திர மோடியைச் சந்தித்து எங்களது நிலைபாட்டை வலியுறுத்துவோம்” என்று கூறினார்.

செய்தியாளர்கள் இதைச் சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுவீர்களா என்று துரைமுருகனிடம் கேட்டபோது, இப்போது அதெல்லாம் தேவையில்லை. 21.9.2023 அன்று உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு அதுபற்றி யோசிக்கலாம் என்று கூறியுள்ளார்.

மேட்டூர் அணையில் 13.9.2023-ஆம் நாள் அளவின்படி 14.27 டிஎம்சி தண்ணீர்தான் உள்ளது. மேட்டூர் அணையில் நிரந்தரமாக தேக்கி வைக்கப்பட வேண்டிய நீர் இருப்பு குறைந்தபட்சம் 7 டிஎம்சியாவது இருக்க வேண்டும். கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடுவதை முற்றிலும் நிறுத்திவிட்ட இந்நிலை தொடர்ந்தால், இன்னும் சில நாட்களில் மேட்டூர் அணையை மூடவேண்டி வரும். அதன்பிறகு குறுவை பாதிப்பு மட்டும் அல்ல, ஒரு போக சம்பா, தாளடி முதலிய நெல் சாகுபடிகளும், கரும்பு, வாழை, பருத்தி, பயறு வகைகள் போன்ற சாகுபடிகளும் முற்றிலும் பாதிக்கப்படும். அடுத்து, 22 மாவட்டங்களில் குடிநீர்ச் சிக்கலும் ஏற்படும்.

இவ்வளவு அபாயம் இருக்கும் பொழுது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அசட்டையாக, அலட்சியமாக காவிரிச் சிக்கல் குறித்து பேசிக் கொண்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களோ காவிரிச் சிக்கலைப் பேசுவதைத் தவிர்த்து ஒதுங்கிக் கொள்கிறார்.

இதுவரை ஜூன் 1-லிருந்து கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு 99 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், அது திறந்துவிட்டிருப்பதோ 37 டிஎம்சி மட்டுமே. இவ்வளவு அவலம், சோகம் நடந்து கொண்டிருக்கும்போது, தமிழ்நாடு முதலமைச்சர், நீர்வளத்துறை அமைச்சர் மனங்களில் கொஞ்சம் கூட பதற்றம் இல்லை. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அன்றாடம் அனைத்திந்திய அரசியலை அலசிக் கொண்டிருக்கிறார். இண்டியா கூட்டணியின் பிரச்சார பீரங்கியாகப் பேசி வருகிறார். தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீர்பற்றிப் பேசினால், அனைத்திந்தியத் தலைவராக வளர்த்துவரும் தனது பிம்பம் பாதிக்கப்படுமோ என்று அச்சப்படுகிறார் போலும். அண்மையில் தஞ்சை - திருவாரூர் - நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகளில் 2 நாள் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் காவிரி தண்ணீர் பற்றி எதுவும் பேசவில்லை.

ஆனால் இண்டியா கூட்டணிக்குத் தலைமை தாங்கும் காங்கிரசின் கர்நாடக ஆட்சி, அரசியல் கூட்டணி பற்றிக் கவலைப்படபாமல், சட்டப்படியான தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரைத் தடுத்து கன்னட இனவாத அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது. 12.9.2023 அன்று ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் வினீத் குப்தா ஒரு நொடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் கர்நாடகம் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார். ”இது பரிந்துரை (recommendation) அல்ல, கட்டளை (direction)” என்று தெளிவாகக் கூறியுள்ளார் (The Hindu, 13.9.2023). காவிரி ஒழுங்காற்றுக் குழு கூறியுள்ளது கட்டளை அல்ல, வெறும் பரிந்துரைதான் என்று 13.9.2023 அன்று திரித்துப் பேசியிருக்கிறார் கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர். இதற்குக் கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டாமா?

உச்ச நீதிமன்றத்தை மட்டுமே நாடுவோம் என்று திமுக ஆட்சியாளர்கள் அடம்பிடிப்பதன் சூட்சுமம் என்ன? உச்ச நீதிமன்றம் 16.2.2018 அன்று வழங்கிய காவிரிச் வழக்கு இறுதித் தீர்ப்பில், காவிரி மேலாண்மை ஆணையத்துக்குள்ள அதிகாரத்தைக் கூறிவிட்டு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டளையை, தொடர்புடைய ஏதாவது ஒரு மாநிலம் செயல்படுத்தவில்லை என்றால், அதைச் செயல்படுத்துமாறு ஆணையம் இந்திய அரசைக் கோர வேண்டும், இந்திய அரசு அதைச் செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. (உச்ச நீதிமன்றத் தீர்ப்பு செயலாக்கப் பகுதி VIII) காவிரி ஆணையத்தின் தலைவராக உள்ள சௌமித்ர குமார் ஹல்தர் நடுநிலை தவறிய மனிதர் என்று காவிரி உரிமை மீட்புக் குழு பலதடவை குற்றம் சாட்டியுள்ளது. அவர் தனது உத்தரவைக் கர்நாடகம் மீறும்போது அதைச் செயல்படுத்திட இந்திய அரசின் அதிகாரத்தை நாட வேண்டும். ஆனால் அவர் நாட மாட்டார். அதே வேளை, தமிழ்நாடு முதலமைச்சரும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிட இந்திய அரசு போர்க்கால அடிப்படையில் தலையிட வேண்டும் என்று உரியவாறு ஏன் வலியுறுத்தக் கூடாது? பொது மக்கள் மனு கொடுப்பது போல் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாடு முதலமைச்சரும் நீர்வளத்துறை அமைச்சரும் சம்பிரதாயத்துக்கு மனு கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொண்டது ஏன்?

நரேந்திர மோடி இதில் தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டிருக்கும் போது, தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை நடத்தி, அதில் வலிமையான தீர்மானம் நிறைவேற்றி, தலைமை அமைச்சர் தலையிட வேண்டும் என்று கோரியிருக்கவேண்டும். அனைத்துக் கட்சி குழுவினரை புதுதில்லி அழைத்துச் சென்று தலைமை அமைச்சரைச் சந்தித்துப் பேசியிருக்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்யவில்லையே ஏன்? தண்ணீரைத் திறந்துவிடாமல் வைத்திருக்கும் கர்நாடக முதலமைச்சர், தில்லி சென்று தலைமை அமைச்சரைச் சந்திப்போம் என்கிறார்.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, 13.9.2023 அன்று பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது பருவமழை பொய்த்து கர்நாட அணைகளில் போதிய தண்ணீர் இல்லாத போது அந்நிலையில் காவிரி நீரை எப்படிப் பகிர்ந்து கொள்வது என்பதற்கு வழிகாட்டல் நெறிமுறைகள் வகுக்கப்படவில்லை என்று தவறான செய்தியை வெளியிட்டார். அதற்குக் கூட தமிழ்நாடு முதலமைச்சர் பதில் சொல்லவில்லை. காவிரிச் சிக்கலில் உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பில் வால்யூம் V பக்கம் 212 (Vol. V Page 212 Point 28) பின்வருமாறு கூறுகிறது:

“பருவமழை தவறி பற்றாக்குறை ஏற்படும் ஆண்டில், வழக்கமான நீர்ப்பெருக்கம் குறைந்து போயிருந்தால் அதை விகிதாச்சார அடிப்படையில் கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு, மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதி ஆகியவற்றுக்கு காவிரி ஒழுங்கு முறை ஆணையம் பகிர்ந்து தர வேண்டும்”.

அதாவது மேற்படி நான்கு மாநிலங்களிலும், பல வழிகளில், ஓர் ஆண்டின் சராசரி நீர்ப்பெருக்கம் 740 டிஎம்சி என்று காவிரித் தீர்ப்பாயம் கூறியதை உச்ச நீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொண்டது. இதில் கர்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களின் சராசரி நீர்ப்பெருக்கம், முதலியவை குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த சராசரியை விட கர்நாடக நீர்ப்பெருக்கம் குறைந்திருந்தால், அது எத்தனை விழுக்காட்டு விகிதம் குறைந்திருக்கிதோ அத்தனை விழுக்காட்டு விகிதத்திற்கு ஏற்ப தமிழ்நாட்டுக்குத் திறந்து விட வேண்டிய தண்ணீரைக் குறைத்துக் கொண்டு திறந்துவிட வேண்டும். இவ்வாறு உச்சநீதிமன்றத் தீர்ப்பு வழிகாட்டியிருக்கும்போது பற்றாக்குறை கால பகிர்வு விகிதம் தீர்ப்பில் சொல்லப்படவில்லை என்று முற்றிலும் தவறான செய்தியை கர்நாடக முதல்வர் சொல்கிறார். அதற்குக் கூட தமிழ்நாட்டு முதல்வர் ஏன் எதிர்வினை ஆற்றவில்லை?

தமிழ்நாட்டு மக்களை மயக்கி, வசப்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலையில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக முன்னாள் ஆளுங்கட்சியும் இந்நாள் எதிர்க்கட்சியுமான அஇஅதிமுக காவிரிச் சிக்கலில் பெருமளவுக்கு தமிழ்நாட்டு உழவர்களும், மக்களும் வஞ்சிக்கப்பட்டிருக்கும்போது அதை எதிர்த்து ஏன் போராடவில்லை? காவிரியை மையப்படுத்தி கடுமையான விவாதங்களைக் கூட அரசியல் அரங்கில் அஇஅதிமுக எழுப்பவில்லையே!

தமிழ்நாட்டு மக்களும் உழவர்களும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியும், ஆண்ட கட்சியும் தமிழ்நாட்டு மக்களை எளிதாக வசப்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றன. கர்நாடகத்திலோ, போதிய தண்ணீர் அவர்களது அணைகளில் இருந்தபோதும், மிகமிக அற்ப சொற்பமாக 5 ஆயிரம் கன அடிதண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று ஆணையமும், ஒழுங்காற்றுக் குழுவும் சொன்னதை எதிர்த்து உழவர்களும், மக்களும் பரவலாக பற்பல வடிவங்களில் போராடி வருகிறார்கள். நாமோ சிற்சில அடையாளப் போராட்டங்களை அங்கங்கே நடத்துவதோடு நின்று கொள்கிறோம். பெரும் பெரும் அரசியல் கட்சிகள் இவற்றைக் கையிலெடுப்பதில்லை.

காவிரியில் நாம் இழந்திருப்பது ஏராளம். 1984 வரை ஓராண்டுக்கு சராசரியாக 362 டிஎம்சி தண்ணீர் கர்நாடகத்திலிருந்து தமிழ்நாடு பெற்று வந்தது என்று பொதுப்பணித்துறையின் அதிகாரப்பூர்வ ஆவணம் கூறுகிறது. இப்போது வெறும் 177.25 டிஎம்சி தண்ணீரையும் திறந்துவிட மறுக்கிறார்கள். ஏன்? தமிழ்நாட்டு அரசியலின் தகுதியை கன்னடர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள்தான் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். ஆட்சியாளர்களையும், ஆகப் பெரும் கட்சிகளையும் எதிர்பார்க்காமல் நம்முடைய வாழ்வுரிமை, வேளாண்மை, குடிநீர் ஆகியவற்றைக் காப்பாற்ற நாம் போராட வேண்டும். பெருந்திரள் களப் போராட்டங்கள் தமிழ்நாடெங்கும் பரவினால் ஒழிய கர்நாடகமும் இந்திய அரசும் நீதிக்குத் தலைவணங்காது. நாம் நமது வாழ்வுரிமையைக் காக்கக் களம் இறங்க வேண்டும்.

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
www.kaveriurimai.com
==========================

"திருட்டுப் போன காவிரி உரிமையும் திருடர்களுடன் திராவிட அரசியல் உறவும்"--- ஐயா பெ. மணியரசன், தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


திருட்டுப் போன காவிரி உரிமையும்

திருடர்களுடன் திராவிட அரசியல் உறவும்
=================================
ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
=================================


காவிரி டெல்டாவில் நடப்பாண்டு ஐந்து இலட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. தண்ணீரின்றி 3½ இலட்சம் ஏக்கர் பயிர்கள் காய்ந்து சருகாகிக் கொண்டிருக்கின்றன. மேலும் 16½ இலட்சம் ஏக்கரில் சம்பாவும், தாளடியும் சாகுபடி செய்ய வேண்டியுள்ளது. இதன் கதி என்ன என்ற வினாக்குறி உழவர்களின் கண்முன்னே ஒரு தூக்குக் கயிறு போல் தொங்குகிறது!

ஒப்புக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுவிட்டு, ஒய்யார வசனம் பேசித்திரிகிறார் தமிழ்நாட்டு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்! அதைக் கூட பேசுவதில்லை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்! தமிழினத்தைப் பகை இனமாகப் பார்க்கும் கர்நாடகக் காங்கிரசு - பா.ச.க. உள்ளிட்ட கட்சியினர் கன்னட இனவெறியர்கள்! இவர்கள், திமுக ஆட்சியாளர்களின் திராவிடச் சகோதரர்கள்.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடக ஆளுங்கட்சியான காங்கிரசின் உறவோடு, தலைமை அமைச்சர் அல்லது முக்கியமான துறைகளில் ஒன்றிய அமைச்சர்கள் பதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் மு.க. ஸ்டாலின்! காவிரி உழவர்களுக்காகக் கன்னடத் திராவிடரை, காங்கிரசுத் தோழமையரைப் பகைத்துக் கொள்ள முடியுமா? முடியாது. ஒப்புக்கு உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு ஒதுங்கிக் கொள்வதே உயரிய இராசதந்திரம் என்று முடிவு செய்தது திமுக ஆட்சி!

உச்சநீதிமன்றம் கேட்டதற்காகக் காவிரி மேலாண்மை ஆணையம் 29.8.2023 அன்றுகூடி, “கர்நாடகம் 29.8.2023 லிருந்து 12.9.2023 வரை 15 நாட்களுக்கு 1 நொடிக்கு 5000 கனஅடி காவிரி நீர் தமிழ்நாட்டிற்குத் திறந்து விடவேண்டும் என்று கூறியது. தமிழ் நாட்டு அதிகாரிகள் ஆணையக் கூட்டத்தில் வைத்த கோரிக்கை 1 நொடிக்கு 24000 கன அடி வீதம் 15 நாட்களுக்குக் கர்நாடகம் திறக்க வேண்டும் என்பதாகும். கர்நாடமோ 1 நொடிக்கு 3000 கனஅடிக்கு மேல் திறக்க முடியாது என்று அக்கூட்டத்தில் கூறியது. கர்நாடகத்தின் கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய அணைகளில் 90 விழுக்காட்டுக்கு மேல் தண்ணீர் உள்ளது. ரி.ஸி. சாகரில் 80 விழுக்காடு தண்ணீர் உள்ளது. பற்றாக்குறை அங்கு இல்லை.

இதற்கிடையே அமைச்சர் துரைமுருகன் 29.8.2023 அன்று செய்தியாளர்களுக்குக் கொடுத்த செவ்வியில், காவிரி ஆணையம் ”மந்தமாக (lethargic) செயல்படுகிறது” என்று நேசமுறையில் விமரிசனம் செய்துள்ளார். நடுநிலை தவறி, நயவஞ்சகமாகச் செயல்படுகிறார் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் சௌமித்திர குமார் ஹல்தர்! இதற்கு முன் நடந்த 22 ஆணையக் கூட்டங்களிலும் அவர் அறிவித்த தண்ணீரைத் திறந்துவிடக் கர்நாடகம் மறுத்துவிட்டது. அந்த விதிமீறல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஹல்தர். ஆணையம் கூறிய முடிவைக் கர்நாடகம் செயல்படுத்தவில்லை என்றால், உடனடியாக இந்திய அரசைத் தலையிடச் செய்து, அம்முடிவை நிறைவேற்ற வேண்டும் என்று 16.2.2018 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உள்ளது. (VIII. If the Board (Authority) finds that either Government of the party States namely Tamil Nadu, Kerala, Karnataka and Union Territory of Pondicherry do not co-operate in implementing the decision/direction of the Tribunal, it can seek the help of the Central Government. XIIV. If any delay/shortfall is caused in release of water on account of default of any party State, the Board (Authority) shall take appropriate action to make good the deficiency by subsequently deducting indented releases of the party State)

காவிரித் தீர்ப்பாயம் தனது இறுதித் தீர்ப்பில் விதித்த இந்த வழிமுறையை அப்படியே ஏற்றுக் கொண்டது, உச்ச நீதிமன்றம் தனது 16.2.2018 தீர்ப்பில். துரைமுருகன் ஹல்தரோடும் கர்நாடகத்தோடும் கொஞ்சுகிறார்!

செய்தியாளர் : கர்நாடகத்திடம் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் பெறுவதில் பிரச்சினை ஏற்படுகிறதே?

துரைமுருகன் : பருவமழை பொய்த்துப் போனால் எல்லா இடங்களிலும் தண்ணீர் குறைந்து போய்விடும். தண்ணீர் அதிகமாக இருக்கிறபோது மாதம் எவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற கணக்குப்டி கொடுத்திருக்கிறார்கள். தண்ணீர் குறைந்து போனால், இருக்கிற தண்ணீரை முன்விகித அடிப்படையில் பங்கிட வேண்டும் என்று சொல்கிறோம். (தினத்தந்தி 30.8.2023).

கர்நாடகம் தனது அணைகளில் தேக்க முடியாத வெள்ள நீரைத்தான் வேறு வழியில்லாமல் திறந்து விட்டிருக்கிறது. ஒருபோதும் தீர்ப்புப்படி தண்ணீரைத் திறந்து விட்டதில்லை. பற்றாக்குறை காலத்தில் விகிதாச்சாரப்படி பகிர்ந்து கர்நாடகம் தண்ணீர் தர உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. (28. In case the yield is less in a distress year, the allocated shares shall be proportionately released amongst the States of Kerala, Karnataka, Tamilnadu, and Union Territory of Pondicherry by the Regulatory Authority - Vol.V Page 212). ஒரு தடவை கூட இதை எடுத்துக் காட்டி அதிமுக அரசோ, திமுக அரசோ கர்நாடகத்திடம் வாதாடித் தண்ணீர் பெற்றதில்லை.

உச்ச நீதிமன்றம் 16.2.2018 அன்று வழங்கிய தீர்ப்பில் மாநிலங்களுக்கிடையே பகிரும் தண்ணீர் அளவை மாற்றியது. ஆனால், தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் கூறிய நடைமுறைச் செயல்திட்டங்கள் அனைத்தும் செல்லும் என்று கூறி தனது தீர்ப்பில் இணைத்துக் கொண்டது. அதில் வால்யூம் ஐந்தில் பத்தி 25 லிருந்து பத்தி 32 வரை கூறியுள்ள வழிகாட்டல்கள் மிகமிகச் சிறப்பானவை. சில ஆண்டுகளில் பருவமழை தொடங்குவது தாமதமாகலாம், அப்பொழுதும் சூன் மாதம் தொடங்க வேண்டிய வேளாண்மைப் பணிகள் பாதிக்கப்படக்கூடாது. அதை ஈடுகட்டும் வகையில் முந்தைய தண்ணீர் ஆண்டின் கடைசி மாதமான மே மாதம் காவிரியின் மேல்பாசனப் பகுதியில் உள்ள (கர்நாடகம்) நீர்த்தேக்கங்களில் தண்ணீரைச் சேமித்து வைத்திருக்க வேண்டும் என்று பத்தி 29 கூறுகிறது.

அதன்பிறகு உள்ள பத்திகளிலும் பற்றாக்குறை ஆண்டுகளில் தண்ணீரை விகிதாச்சாரப்படி பகிர்ந்து கொள்வதற்கு உள்ள வழிமுறைகளைக் கூறியுள்ளது. அத்துடன் மிகமிக முக்கியமாக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் அதன் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அடிக்கடி கர்நாடகத்திலும் தமிழ்நாட்டிலும் கள ஆய்வு செய்து மழையளவு, தண்ணீர் வரத்து, இவ்விரு மாநிலங்களில் உள்ள தண்ணீர் இருப்பு முதலியற்றைக் கணக்கிட்டு, கர்நாடகம் எவ்வளவு தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்று தானே முடிவுசெய்து உத்திரவிட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

ஒரு மாதத்திற்குரிய நீரை அந்த மாதத்திற்குள் பல தவணைகளில் பிரித்துத் தர வேண்டும் என்றும் ஆணை யிட்டுள்ளது. இந்தப் பணிகளைக் காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அவ்வப்போது களத்தில் இறங்கி ஆய்வு செய்து செயல்படுத்தியதே இல்லை. ஏன்? ஏனெனில் கர்நாடகம் அதை விரும்பவில்லை. கர்நாடகத்தின் கைப்பாவைகளாகிவிட்ட காவிரி மேலாண்மை ஆணையமும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அவ்வாறு செயல்படுவதில்லை. மேற்கண்ட நடைமுறைகளைச் செயல்படுத்தத் தமிழ்நாடு அரசும் முற்படுவதில்லை. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் திமுகவும் அதிமுகவும் காவிரி உரிமையைத் தக்கவைக்க களப்போராட்டங்களும், கருத்துப் போராட்டங்களும் நடத்துவதில்லை.

உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் உள்ள மேற்கண்ட பற்றாக் குறைக் காலப் பகிர்வுத் திட்டம் உள்ளிட்ட நடைமுறைச் செயல்திட்டங்கள் துரைமுருகனுக்கும் ஸ்டாலினுக்கும் தெரியாமல் இருக்கலாம். ஏனெனில் அவர்களுக்குக் காவிரிச் சிக்லில் அக்கறை இல்லை. ஆனால், தொடர்புடைய அதிகாரிகளுக்கும், வல்லுநருக்கும் தெரியாதா? நமது காவிரி உரிமை மீட்புக்குழு ஒவ்வொரு தடவையும் பற்றாக்குறைப் பகிர்வுத்திட்டப்படி தண்ணீரைக் கேளுங்கள் என்று வலியுறுத்தி வந்துள்ளதே!

காவிரி ஒழுங்காற்றுக் குழு - 10.08.2023 அன்று கூடி, கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு இன்றிலிருந்து 15 நாட்களுக்கு, நொடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கூறியது. மறுநாள் 11.08.2023 அன்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்ட முடிவில் அதன் ஆணையர் எஸ்.கே. ஹல்தர், கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு - நொடிக்கு 10 ஆயிரம் கன அடி 15 நாட்களுக்குத் திறந்துவிட வேண்டும் என்று மாற்றி ஆணையிட்டார். ஆணைகள் எதையும் செயல்படுத்தவில்லை கர்நாடகம்!

இதே ஹல்தர் 29.08.2023 அன்று கர்நாடகம் நொடிக்கு 5 ஆயிரம் கன அடி 12.09.2023 வரைத் திறந்துவிட வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார். இதையும் செயல்படுத்த முடியாது என்று மறுத்துவிட்டது கர்நாடகம்!

தமிழ்நாட்டு அரசியலின் யோக்கியதை இவர்கள் எல்லோருக்கும் தெரிகிறது.

இந்நிலை தொடர்ந்தால் இன்னும் சில நாட்களில், மேட்டூர் அணை மூடப்படும் அபாயம் உள்ளது. திறப்பு விழாவுக்கு வந்து கவர்ச்சி காட்டிய முதல்வர் ஸ்டாலின் மதகு மூடு விழாவுக்கும் வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

தமிழர்களுக்கு எதிரான கன்னட இனவெறி; இந்திய ஆட்சியாளர்களின் தமிழினப் புறக்கணிப்பு, திராவிட அரசியல் வாதிகளின் கன்னட சகோதரப் பாசம் மற்றும் பதவி, பணவேட்டை அரசியல் ஆகியவற்றால்தான் சட்ட உரிமையுள்ள காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு வராமல் தடுக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகம் துணிச்சலாக காவிரி நீரைக் களவாடிக் கொள்கிறது.

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களின் குடிநீராகவும் 13 மாவட்டங்களின் பாசன நீராகவும் உள்ள காவிரி நீர் நமக்கு உயிர் நீராகும். நம் உயிரைக்காக்க முயல்வதுபோல் காவிரியை மீட்க களமிறங்கி மக்கள் திரள் போராட்டங்கள் நடத்துவோம்.

=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================= 

"காவிரி: கன்னட இனச் சிக்கல் என்கிறார் சித்தராமையா! தமிழர்களே சிந்திப்பீர்!" ---- பெ. மணியரசன் ஒருங்கிணைப்பாளர் காவிரி உரிமை மீட்புக்குழு.


காவிரி: கன்னட இனச் சிக்கல்

என்கிறார் சித்தராமையா!
தமிழர்களே சிந்திப்பீர்!
====================================================
பெ. மணியரசன்
ஒருங்கிணைப்பாளர்
காவிரி உரிமை மீட்புக்குழு
நாள் 24.8.2023
======================================================


தமிழ்நாட்டிற்கு உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி திறந்து விட வேண்டிய காவிரி நீரைத் தடுத்து, தமிழ்நாட்டை வஞ்சிப்பதற்காகக் கர்நாடகத்தில் அம்மாநில காங்கிரசு முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் 23.8.2023 அன்று பெங்களூரில் நடந்துள்ளது. அதில் பாசக உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளார்கள். அனைவரும் ஒருமித்துத் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட முடியாது, கர்நாடகத்திற்கே தண்ணீர் போதாது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். தலைமை அமைச்சர் நரேந்திர மோடியைச் சந்தித்து அவரிடம் வலியுறுத்தி, தங்களின் சட்ட விரோத நடவடிக்கைகளை அரங்கேற்றிக் கொள்ளவும் முடிவு செய்திருக்கிறார்கள். இன்றைய (24.8.2023) நாளேடுகளில் இச் செய்தி வந்துள்ளது.

அந்தக் கூட்டத்தில் அபாண்டமான பொய் ஒன்றையும் கூச்ச நாச்சமில்லாமல் பேசியுள்ளார்கள். அதைச் செய்தியாளர்களிடம் அப்படியே கூறியுள்ளார் சித்தராமையா! “காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை 22 கூட்டங்களையும் ஒழுங்காற்றுக் குழு 84 கூட்டங்களையும் நடத்தியுள்ளது. ஒவ்வொரு கூட்டத்திலும் ஆணையம், ஒழுங்காற்றுக் குழு அளித்துள்ள ஆணையைக் கர்நாடகம் அமுல்படுத்தி வருகிறது” என்று முழுப் பொய்யை முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார். காவிரி ஆணையம், ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றின் ஒரு முடிவைக் கூட – உத்தரவைக் கூட கர்நாடக அரசு செயல்படுத்தியதில்லை. அங்கு காங்கிரசு, பாசக, மதச் சார்பற்ற சனதா தளம் கட்சிகளின் முதலமைச்சர்கள் ஆட்சி செய்த காலங்களில் ஒரு தடவை கூட கர்நாடகம் காவிரி ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு வழங்கிய உத்தரவுகளைச் செயல்படுத்தியதில்லை.

தமிழ்நாட்டிற்கு, சூன் முதல் ஆகத்து 10 வரை கர்நாடகம் திறந்து விட வேண்டிய தண்ணீர் 53.7703 டிஎம்சி. இதில் வெறும் 15.7993 டிஎம்சி மட்டுமே திறந்துவிட்டுள்ளது. பாக்கியுள்ள 37.9710 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும். இதைக் கவனத்தில் கொண்டுதான், 10.8.2023 அன்று கூடிய ஒழுங்காற்றுக் குழு ஒரு நொடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று அறிவுறுத்தியது. ஆனால், கர்நாடகம் திறந்து விடவில்லை. தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றம் போகிறது என்றவுடன் தண்ணீர் கூடுதலாகத் திறந்து விடுவதாகப் பாசாங்கு காட்டி, பின்னர் தண்ணீரைக் குறைத்து விட்டது கர்நாடகம்.

காவிரிச் சிக்கல் இனச் சிக்கல் என்கிறார் சித்தராமையா:

சித்தராமையா அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களுக்குக் கொடுத்த செவ்வியில் முத்தாய்ப்பாக ஒரு கருத்தை அழுத்திச் சொன்னார்.

”கர்நாடகத்தில், தாயகம், தண்ணீர், மொழி ஆகிய சிக்கல்களில் யாரும் அரசியல் செய்வதில்லை” என்றார். இந்தச் சிக்கல்களைப் பயன்படுத்தி இங்கு கட்சிகள் ஒன்றை ஒன்று சாடிக் கொள்வதில்லை, பிளவு படுவதில்லை என்பது இதன் பொருள். அதாவது, கன்னட இனச்சிக்கலில் கர்நாடகக் கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதில்லை என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில், தமிழர் தாயகம், தண்ணீர், தமிழ்மொழி உரிமைகளுக்காக எப்போதாவது சேர்ந்து செயல்பட்டதுண்டா? இங்கே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்கிறதா? கூடினாலும் தாயகம், இனம், மொழி, தண்ணீர் உரிமைச் சிக்கல்களில் ஒன்று சேர்ந்து இக்கட்சிகள் முடிவு எடுக்க முடியுமா?

பதவி வேட்டை, பணவேட்டை இரண்டை மட்டுமே இலட்சியங்களாகக் கொண்டு செயல்படுபவை தமிழ்நாட்டுப் பெரிய கட்சிகள்! கர்நாடகத்திலும் ஊழல் மற்றும் பதவி வேட்டை அரசியல் வாதிகள் இருக்கிறார்கள்! ஆனால், அம்மாநிலத்தில் மொழி, இனச் சிக்கல்களில் கட்சிகள் ஒன்று சேர்ந்து கொள்கின்றன. அப்படி அவை அச்சிக்கல்களில் ஒன்று சேரவில்லை என்றால் அம்மாநில மக்கள் அக்கட்சிகளை எதிர்க்கிறார்கள். தமிழ்நாட்டில் அவ்வாறான மக்கள் விழிப்புணர்ச்சி, மொழி, இனம், தாயகம் ஆகியவற்றில் உண்டா? இல்லை.

தாயகம், தாய்மொழி, ஆற்றுநீர் உரிமை போன்ற அடிப்படை உரிகைளில் தமிழர்களுக்குப் போதிய அக்கறை இல்லை என்பதை நம் மக்கள் உணர்ந்து தங்களின் விழிப்புணர்ச்சியை, பொறுப்புணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அலுவலகத் தேவைகளுக்கு “இந்தியர்“ என்று சொல்லிக் கொண்டு, அடிமனம் முழுவதும் ”கன்னடர்” என்ற இன உணர்ச்சி அவர்களுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் இருப்பது போன்ற குறுக்குச் சால் ஓட்டும் திராவிட இனக் குழறுபடிகள் கர்நாடகத்தில் இல்லை. அவர்களின் கன்னட இனப்பற்றை நாம் எதிர்க்கவில்லை; அவர்களின் கன்னட வெறியையும், தமிழின வெறுப்பையும்தான் நாம் கண்டிக்கிறோம்.

தமிழ்நாடு அரசு இப்போது போட்டுள்ள உச்ச நீதிமன்ற வழக்கிலும், காவிரியில் தமிழ்நாட்டிற்குள்ள தமிழ்நாட்டு உரிமைகளை எதிர்த்தும், உச்ச நீதிமன்றம் தீர்பளித்த காவிரிநீர் பகிர்வைச் செயல்படுத்த முடியாது என்பதை வலியுறுத்தியும் கர்நாடகம் கடுமையாக வாதிடும். உச்சநீதி மன்றம் இடைக்கால நிவாரணமாக ஏதாவது தீர்ப்பளித்தால், அதை எதிர்த்துக் கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கலாம். ஏற்கெனவே 1991 மற்றும் 2016 உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராகத்தான் முறையே தமிழினப்படுகொலைகளும், வன்முறைகளும், தமிழர் சொத்துகள் சூறையாடல்களும் கன்னடர்களால் நடத்தப்பட்டன; அதேபோல் கர்நாடகத் தமிழர்களை இழிவுபடுத்தியதும் அரங்கேறின. கடந்த காலப் படிப்பினைகளைக் கொண்டு இப்போது தமிழ்நாட்டுத் தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கன்னட இனவெறி ஆட்டங்களைத் தடுக்கும் உத்திகள் வகுக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்

தமிழ்நாடு அரசு கர்நாடகத்திற்கு ஆய்வுக்குழுவை அனுப்பி, காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளில் உள்ள நீர்த்தேக்கங்கள் சிறியவை, பெரியவை அனைத்திலும் தண்ணீர் தேக்கப்பட்டுள்ள அளவுகளைத் தெரிந்து வரச் செய்ய வேண்டும். அதேபோல் மழைப் பொழிவு அளவுகளையும் அறிந்துவரச் செய்ய வேண்டும்.

மேகேதாட்டு அணைக்கான அடிப்படைகள் தொடங்கி நடந்து வருகின்றன. அதற்கு உச்சநீதி மன்றத்தில் தடைகோர வேண்டும். தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிகள் மற்றும் உழவர் அமைப்புகள் ஆகியவற்றின் கூட்டம் கூட்டி, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, கர்நாடகம் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைத் திறந்து விடக் கோரி, மக்கள் திரள் போராட்டங்கள் நடத்த வேண்டும்.

நமது காவிரி உரிமை மீட்புக்குழு கடந்த 22.8.2023 அன்று தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தர் நடுநிலை தவறி, கர்நாடகத்திற்குச் சாதகமாக நடந்து கொள்ளும் நயவஞ்சகர். அவரை ஆணையத் தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, நடுநிலைப் பண்புள்ள அதிகாரி ஒருவரைத் தலைவராக்க வேண்டும் என்று அக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை வைத்தோம். தமிழ்நாடு அரசு இக்கோரிக்கையை இந்திய அரசிடம் வைக்க வேண்டும். அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்துக் கொண்டு தலைமை அமைச்சர் மோடியைச் சந்தித்து, உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி காவிரி நீர் திறந்துவிடத் தலையிடும்படிக் கோர வேண்டும்.

தமிழ்நாடு அரசு இவற்றைச் செயல்படுத்த மறுத்தால், தமிழ்நாட்டின் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் உயிர்நாடியாக உள்ள காவிரி உரிமையைக் காக்க, மக்கள் ஒருங்கிணைந்து போராடவேண்டும்.

===============================================================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
www.kaveriurimai.com
==========================
 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger