தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


காவிரி உரிமை மீட்க டெல்டா மாவட்டங்களில் 1000 இடங்களில் சாலை மறியல்! காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு




காவிரி உரிமை மீட்க
டெல்டா மாவட்டங்களில்
1000 இடங்களில் சாலை மறியல்!


காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு


காவிரி உரிமை மீட்புக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம், இன்று (20.08.2016) தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார்.
தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. சி. அயனாவரம் முருகேசன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, மனித நேய மக்கள் கட்சி வணிகப்பிரிவு மாநிலச் செயலாளர் திரு. கலந்தர், மனித நேய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. அகமது கபிர், மீத்தேன் திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் பாரதிச்செல்வன், தமிழக உழவர் முன்னணி தமிழ்நாடு தலைவர் திரு. சி. ஆறுமுகம், தமிழக உழவர் முன்னணி இலால்குடி வட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. நகர். செல்லையா, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர் தோழர் ப. சிவவடிவேலு, தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. செகதீசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்தாய்வில் பங்கேற்றனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
கலந்தாய்வுக் கூட்ட முடிவுகள்
--------------------------------------------------
இவ்வாண்டு சம்பா சாகுபடிக்குக் காவிரி நீர் வராது என்று மறைமுகமாக உணர்த்துவது போல், தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி செயலலிதா காவிரி டெல்டா மாவட்டங்களில் நேரடிப் புழுதி விதைப்பிற்கு நிதி உதவித் திட்டத்தை அறிவித்துள்ளார்.

தொடர்ச்சியாகக் கடந்த ஐந்து பருவங்களில் ஐந்து இலட்சம் ஏக்கர் குறுவை சாகுபடிக்குரிய காவிரி நீரை தமிழ்நாட்டு முதலமைச்சரால் கர்நாடகத்திடமிருந்து பெற முடியவில்லை.
இந்திய அரசை வலியுறுத்தி அல்லது இந்திய அரசின் மீது செல்வாக்கு செலுத்தி, 2013லிருந்து இன்று வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடவும் தமிழ்நாட்டு முதலமைச்சரால் முடியவில்லை.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்திட தமிழ்நாட்டு முதலமைச்சரால் முடியவில்லை. தமிழ்நாட்டு முதலமைச்சர்க்கு இதற்கான ஆற்றல் இல்லை என்பதா அல்லது தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லை என்பதா என்பது புரியாத புதிராக உள்ளது!
காவிரி நீர் தொடர்பாக அவ்வப்போது தலைமை அமைச்சர்க்குக் கடிதம் எழுதுவது, உச்ச நீதிமன்றத்தில் மனுப் போடுவது போன்ற அலுவலக எழுத்தர் அணுகுமுறையை (Clerical Approach) மட்டுமே காவிரி நீர் பெறுவதில் தமிழ்நாடு முதலமைச்சர் கைக்கொண்டுள்ளார்.
கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்துக் கர்நாடக அணைகளில் உள்ள நீரில் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்குரிய பங்கு நீரைக் கேட்கும் அரசியல் நடைமுறையை (Political Approach) செல்வி செயலலிதா கைக்கொள்ளவே இல்லை.
இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்களைக் காவிரி நீர் பெறுவதற்காக மட்டும் நேரில் சந்தித்து, கர்நாடக அணைகளில் உள்ள காவிரி நீரில், தமிழ்நாட்டுக்குரிய பங்கு நீரைத் திறந்துவிட ஆணையிடுமாறும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியமும் ஒழுங்குமுறைக் குழுவும் அமைக்குமாறும் தமிழ்நாடு முதலமைச்சர் ஒருமுறைகூடக் கோரவில்லை.
உச்ச நீதிமன்றத்திலாவது விழிப்போடு திறமையாக வாதாடித் தமிழ்நாடு அரசு அதன்வழி நீதியைப் பெற்றதா? இல்லை. 2013-இல் தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் இன்னும் விசாரணையே தொடங்கவில்லை. 2016 மார்ச்சு 28 அன்று உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு காவிரி வழக்கை 19.07.2016க்கு தள்ளி வைத்த போது, இவ்வளவு நீ்ண்ட காலத் தள்ளிவைப்பைத் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் எதிர்க்காமல் ஏற்றார். அதன் பின்னர் 18.10.2016க்கு தள்ளி வைக்கப்பட்டது. காவிரி வழக்கில் தமிழ்நாடு அரசின் உச்ச நீதிமன்றச் செயல்பாடு மிக மோசமானது.
தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி செயலலிதா காவிரி நீர் பெறுவதில் இவ்வளவு அலட்சியமாக இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
கர்நாடக முதலமைச்சர்க்குக் கண்டனம்
----------------------------------------------------------------
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இவ்வாண்டு தென்மேற்குப் பருவமழை குறைவென்றும் கர்நாடகத்தில் காவிரி நீர்த் தேக்கங்களில் உள்ள தண்ணீர் கர்நாடகத்தின் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் போதாதென்றும், தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடகத்தில் உள்ள காவிரி நீர்த் தேக்கங்களில் உள்ள தண்ணீர் கர்நாடகத்திற்குப் போதுமா போதாதா என்பதல்ல பிரச்சினை! கர்நாடக அணைகளில் இருக்கின்ற தண்ணீரில் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய பங்கு நீரைத் தர வேண்டும் என்பதே இங்குள்ள பிரச்சினை!
கர்நாடகத்தில் காவிரி அணைகளில் தேங்கியுள்ள நீரில் ஓர் ஆண்டுக்குக் கர்நாடகத்திற்குரியது 270 டி.எம்.சி; தமிழ்நாட்டிற்கு 192 டி.எம்.சி; கேரளத்திற்கு 30 டி.எம்.சி. கர்நாடக அணைகளில் இப்போது இருப்பில் உள்ள நீரில் மேற்கண்ட விகிதப்படியான பங்கு நீரைத் தமிழ்நாட்டிற்குக் கர்நாடகம் திறந்துவிட வேண்டும்.
கர்நாடகத்தில் பருவமழை இவ்வாண்டு பத்து விழுக்காடு குறைவு என்கிறார் சித்தராமையா. இந்தக் கணக்கு உண்மையானது என்று ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டால்கூட, பற்றாக்குறைக் காலத்தில் தண்ணீர் பகிர்வுக்குக் காவிரித் தீர்ப்பாயம் காட்டியுள்ள வழியைத்தான் பின்பற்ற வேண்டும். பத்து விழுக்காடு பருவமழை குறைவு என்றால், தனக்குரிய காவிரி நீரில் கர்நாடகம் 5 விழுக்காடு குறைத்துக் கொள்ள வேண்டும்; தமிழ்நாடு 5 விழுக்காடு குறைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவே!
2016 சூன் – 10 டி.எம்.சி, சூலை – 34 டி.எம்.சி., ஆகஸ்ட்டு – 50 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்து விட்டிருக்க வேண்டும். இதில் 5 விழுக்காடு நீர் மட்டுமே குறைத்து விடுவித்திருக்க வேண்டும்.
இந்திய விடுதலைநாள் விழாவில் பெங்களூரில் சித்தராமையா பேசும்போது, கர்நாடக காவிரி நீராவாரி நிகம் 430 ஏரிகளில் காவிரி நீர் நிரப்பும் திட்டத்தைச் செயல்படுத்துகிறது என்றார். கர்நாடக நீர்த் தேக்கங்களில் நீர் நிரம்பி விடாமல் இருக்கவும், அணை நீர் இருப்பைக் குறைத்துக் காட்டவும் இவ்வாறான ஏரிகளை விரிவாக்கி நிரப்பிக் கொள்கிறது கர்நாடகம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் ரூ. 5,912 கோடி மதிப்பீட்டில் புதிய அணை கட்டப்படும் என்றும் சித்தரமையா அவ்விழாவில் அறிவித்தார். வெள்ளப்பெருக்கு காலத்தில் கர்நாடக அணைகள் நிரம்பி மிச்ச நீர் மேட்டூருக்கு வருவதையும் தடுத்துத் தேக்கிக் கொள்ளப் புது அணை கட்டவுள்ளார்கள்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி அமைக்க வேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க விடாமல் தடுக்கிறது கர்நாடகம்.
காவிரிச் சிக்கலில் கர்நாடக அரசு கடைபிடிக்கும் சட்ட விரோதச் செயல்கள் மற்றும் தமிழ்நாட்டு உரிமைப் பறிப்பு வன்செயல்களைக் காவிரி உரிமை மீட்புக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்திய அரசுக்குக் கண்டனம்
----------------------------------------------
இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்ச் சிக்கல் சட்டம் – 1956இன்படி காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டிய அதிகாரமும் பொறுப்பும் இந்திய அரசிடம் உள்ளது.

ஆனால், நடுநிலை தவறி மறைமுகமாகக் கர்நாடகத்தின் சட்ட விரோதச் செயல்களுக்குத் துணை போகும் இந்திய அரசின் நயவஞ்சகச் செயலைக் காவிரி உரிமை மீட்புக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
என்ன செய்ய வேண்டும்?
-----------------------------------------
காரைக்கால் உள்பட தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களுக்குப் பாசன நீராகவும், 20 மாவட்டங்களுக்குக் குடிநீராகவும் பயன்பட்டு தமிழ்நாட்டின் உயிராதாரமாய் உள்ளது காவிரி.
நடப்பு சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கோரியும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்குமுறைக் குழு இந்திய அரசு அமைத்திட வலியுறுத்தியும், காவிரி உரிமையை நிலைநாட்ட தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு அரசியல் தளத்திலும், மக்கள் களத்திலும் துடிப்புடன் செயல்பட வலியுறுத்தியும் போராட வேண்டிய உடனடித் தேவை உள்ளது.

1. தமிழ்நாடு அரசு காவிரி நீர் பெற தவறியதைக் கண்டித்தும் உடனடியாக காவிரி நீர் பெற செயல் தளத்தில் இறங்க வலியுறுத்தியும்
2. இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும்
3. உச்ச நீதிமன்றத் தீர்ப்பளித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்புத் தெரிவிக்கும், தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்புப்படி தமிழ்நாட்டுக்குரியத் தண்ணீரைத் திறந்துவிட மறுக்கும், அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்படும் கர்நாடக அரசை இந்திய அரசு கலைக்க வலியுறுத்தியும்..
2016 – செப்டம்பர் 23 – வெள்ளி அன்று காவிரி டெல்டா மாவட்டங்களில் கிராமங்கள் – நகரங்கள் உட்பட 1000 இடங்களில் மக்கள் தன்னெழுச்சி சாலை மறியல் போராட்டம் நடத்துது என்று காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்துள்ளது. இது குறித்து, கிராமம் கிராமமாக விரிந்த அளவில் பரப்புரைகள் மேற்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டது.


தமிழ்நாடு அரசின் செயலற்ற தன்மையால் காவிரி வழக்கு 4 மாதம் தள்ளிப் போனது. ============================== காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கண்டனம்.

                                                                                                                                                                              
தமிழ்நாடு அரசின் செயலற்ற தன்மையால்
காவிரி வழக்கு 4 மாதம் தள்ளிப் போனது!
காவிரி உரிமை மீட்புக் குழு 
ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கண்டனம்!

காவிரி வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் சூலை 19 ஆம் நாளுக்கு ஒத்திவைத்து விட்டது என்ற செய்தி டெல்டா மாவட்டங்களின் உழவர்கள் தலையில் இடி விழுந்தது போல் அதிர்வை உண்டாக்கி விட்டது. சூன் மாதம் தொடங்கும் குறுவைப் பட்டத்தில் இவ்வாண்டாவது சாகுபடி தொடங்கலாம் என்றிருந்த உழவர்களின் எதிர்பார்ப்பைப் பொசுக்குவது போல் உள்ளது இந்த ஒத்திவைப்பு.

2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் நாள் காவிரி இறுதித் தீர்ப்பு வந்தது. இன்றுவரை அத்தீர்ப்பைச் செயல்படுத்த முடியாது என்று மறுக்கிறது கர்நாடக அரசு, காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு தொடர்பாகத் தமிழ்நாடு, கர்நாடம், கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் அதே 2007 இல் வழக்குத் தொடுத்தன. ஒன்பதாண்டுகள் கடந்தும் இதுவரை உச்ச நீதிமன்றம் அவ்வழக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்கவில்லை.

2013 பிப்ரவரி 19 ஆம் நாள் இந்திய அரசு காவிரித் தீர்ப்பைத் தனது அரசிதழில் வெளியிட்டது. அத்தீர்ப்பைச் செயல்படுத்தும் பொறியமைவுகளான காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைக்காமல் ஏட்டுச் சுரைக்காய்போல் வஞ்சகமாக அரசிதழில் வெளியிட்டது அன்றைய காங்கிரசு ஆட்சி.

2013 மார்ச்சு மாதம் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைக்க இந்திய அரசுக்குக் கட்டளை இடுமாறு கோரியது. அவ்வழக்கு இதுவரை விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

இந்திய அரசு மறைமுகமாகக் கொடுத்த துணிச்சலில் ஊக்கம் பெற்று காவிரி இறுதித் தீர்ப்பை நிறைவேற்ற மறுத்து வந்த கர்நாடக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் காலவரம்பற்று விசாரணையைத் தள்ளி வைத்தது மேலும் ஊக்கம் கொடுத்தது. அந்தத் துணிச்சலில் கர்நாடக அரசு மேக்கேதாட்டுப் பகுதியில் காவிரியில் புதிதாக மூன்று அணைகள் கட்டி 50 ஆமிக (டிஎம்சி) அளவிற்குத் தண்ணீர் தேக்கத் திட்டமிட்டு உலக அளவில் ஏலம் கோரி – அவ்வேலையில் மும்முரம் காட்டியது.

கர்நாடகம் காவிரியில் புதிய அணைகள் கட்டத் தடை கோரித் தமிழ்நாடு அரசு 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டது. அவ்வழக்கும் விசாரிக்கப் படாமல் நிலுவையில் உள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்த கர்நாடகத்தின் அப்போதைய ப.ச.க. முதலமைச்சர் செகதீசு செட்டர், இப்போதைய காங்கிரசு முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் மீது தமிழ்நாடு அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்தது. அவ்வழக்குகளும் விசாரிக்கப்படாமல் ஊறப் போடப்பட்டன.

கடந்த 19.03.2016 அன்று உச்ச நீதிமன்றம் காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் தொடர்ந்து விசாரித்து விரைந்து தீர்ப்பளிக்க நீதிபதி ஜே. செலமேசுவர் தலைமையில் நீதிபதி ஆர்.கே. அகர்வால், நீதிபதி அபய் மனோகர் சப்ரே ஆகியோரைக் கொண்ட மூன்று நீதிபதிகள் அமர்வை அமைத்து, அது 28.03.2016 அன்று விசாரணையைத் தொடங்கும் என்று அறிவித்தது.

28.03.2016 அன்று இந்த மூன்று நீதிபதிகள் அமர்வு கூடி வழக்கு விசாரணையை 2016 சூலை 19 ஆம் நாளுக்குத் தள்ளி வைத்து விட்டது. வழக்கு விசாரணையைத் தள்ளி வைக்கும் மனநிலையில் நீதிபதிகள் மூவரும் இருந்துள்ளார்கள். வேறொரு முக்கிய வழக்கு இருப்பதாகக் கூறியுள்ளார்கள். கர்நாடக வழக்கறிஞர் பாலி நாரிமன் வழக்கைத் தள்ளி வைக்கலாம் என்று கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் அவ்வழக்கில் நேர்நின்ற மூத்த வழக்கறிஞர் ராகேசு துவேதி எந்த மறுப்பும் சொல்லவில்லை. நீதிபதிகள் சூலை 19 க்கு வழக்கைத் தள்ளி வைத்து விட்டார்கள். தமிழ்நாடு வழக்கறிஞர் குறுவை சாகுபடி அவசரத்தைச் சுட்டிக் காட்டி கடுமையாக வாதிட்டிருந்தால் 4 மாதங்களுக்கு வழக்கை ஒத்தி வைக்கும் அவலம் நேர்ந்திருக்காது.

காவிரி டெல்டாவில் சூன் மாதம் குறுவை சாகுபடி ஐந்து இலட்சம் ஏக்கரில் தொடங்க வேண்டிய அவசர அவசியம் இருக்கும் போது, குடிநீருக்குக் கூட மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் எடுக்க முடியாத அளவிற்கு நீர்மட்டம் அன்றாடம் வேகமாகக் குறைந்து வரும் நிலையில் (28.03.2016 நீர்மட்டம் 58 அடி ) மூன்றரை மாதங்களுக்கு மேல் சூலை 19 க்கு வழக்கைத் தள்ளி வைப்பதைத் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் எப்படி ஏற்றுக் கொண்டார்? தமிழ்நாடு அரசின் வழிகாட்டல் இதில் என்னவாக இருந்தது?

தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு வேளாண் அமைச்சர், தமிழ்நாடு தலைமைச் செயலாளர், பொதுப் பணித்துறைச் செயலாலர் ஆகியோரே டெல்ட்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடி பாதிக்கப்படுவதற்குப் பொறுப்பேற்க வேண்டிவர்கள்.

காவிரிச் சிக்கலில் தமிழ்நாடு அரசின் செயலற்ற தன்மையைக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் விரைவு மனுப்போட்டு கோடைக் கால விடுமுறைக்கு முன் வழக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்கிட ஏற்பாடு செய்திடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

இணையம்:www.kaveriurimai.com
பேச: 76670 77075, 94432 74002

           

தஞ்சையில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்!



உழவர் பாலனைத் தாக்கிய காவலர்களைக் கைது செய்து சிறையில் அடை !
உழவர் தற்கொலைகளைத் தடுக்க தமிழ்நாட்டை தனி உணவு மண்டலமாக்கு !
தஞ்சையில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக் குழு  ஆர்ப்பாட்டம்! 

உழவர் பாலனைத் தாக்கிய காவலர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கக் கோரியும், உழவர் தற்கொலைகளைத் தடுக்க தமிழ்நாட்டைத் தனி உணவு மண்டலமாக்க வேண்டுமெனக் கோரியும், தஞ்சையில்,காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், நேற்று (24.03.2016) காலை, உழவர் ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

·         டிராக்ட்ர் எந்திரத்தை பறிமுதல் செய்கிறோம் என்ற பெயரில், பாப்பாநாட்டில் உழவர் பாலன் மீது கொடுந்தாக்குதல் நடத்திய காவல்துறை ஆய்வாளர் குமாரவேல் மற்றும் காவலர்களை மீது குற்றவழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்,

·         உழவர்களின் வேளாண் கடன்களை முழுவதுமாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்,

·         அரியலூரில் தற்கொலை செய்து கொண்ட உழவர் அழகர் குடும்பத்திற்கு - இழப்பீடு வழங்க வேண்டும்,

·         குண்டர்களை வைத்து கடன் வசூல் செய்யும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைக் கண்டறிந்து அவற்றின் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,

·         இந்திய அரசு நியமித்த முனைவர் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான “தேசிய உழவர் ஆணையம்” அளித்துள்ள பரிந்துரையின்படி - உற்பத்திச் செலவில் 50% கூடுதலாக வைத்து வேளாண் விளை பொருட்களுக்கான கொள்முதல் விலையையும், சந்தை விலையையும் நிலைநிறுத்த வேண்டும்,

·         பதுக்கல் – ஊக பேரம் – செயற்கையான விலை வீழ்ச்சி – விலை உயர்வு உள்ளிட்டவைகளுக்கு வாய்ப்பு அளிக்கும் இணையதள வணிகத்தைத் தடை செய்ய வேண்டும்,

·         தமிழ்நாட்டை தனி உணவு மண்டலமாக்க வேண்டும்,

·         சர்க்கரை ஆலைகளில் ஒரு டன் கரும்புக்கான விலை ரூ. 2,750-இல் ரூ. 750 பிடித்தம் செய்யாமல் முழுத் தொகையையும் உழவர்களுக்கு வழங்க வேண்டும்

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், தஞ்சை தொடர்வண்டி நிலையம்அருகில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில், காவிரி உரிமை மீட்புக் குழுவில் உறுப்பு வகிக்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும், உழவர்களும் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தலைவருமான தோழர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை கோரிக்கை முழக்கங்களை எழுப்ப, ஆர்ப்பாட்டத் தோழர்கள் அதை விண்ணதிர எதிரொலித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், உழவர் கோரிக்கைகளைத் தீர்மானங்களாக முன்மொழிந்து, தமிழக விவசாயிகள் சங்கத்தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன் பேசினார். மூன்று மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. வலிவளம் மு. சேரன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளர் திரு. காவிரிதனபாலன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர்கள் திரு. அயனாபுரம் சி. முருகேசன், திரு. சதா முத்துக்கிருட்டிணன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் துணைச் செயலாளர் திரு. செகதீசன், இந்திய சனநாயகக் கட்சித் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. சிமியோன் சேவியராஜ், தலைமைக் கழகப் பேச்சாளர் திரு. ஆ.வி. நெடுஞ்செழியன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இலரா.பாரதிச்செல்வன், மனித நேய மக்கள் கட்சி வணிகப்பிரிவுத் தலைவர் திரு. ஜெ. கலந்தர், மனித நேய சனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. அகமது கபீர், விடுதலைத் தமிழ்ப்புலிகள் இணைச் செயலாளர் திரு. சி. அருண் மாசிலாமணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர்.


ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் பேசிய தோழர் பெ. மணியரசன், “கடன் நிலுவை தொகைக்காக உழவர்களைஅவமானப்படுத்துவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உழவர் பாலன் தாக்கப்பட்டுள்ளார். அரியலூர் உழவர்அழகர் தர்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபோல் ஒரு சில நிகழ்வுகள் தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வெளிச்சத்திற்கு வராத துயரங்கள் ஏராளம்.

கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் 2,422 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தேசியக் குற்றஆவணக் காப்பகம் (NCRB) கூறுகிறது. ஏன் இந்த நிலைமை?

உழவர்கள் உற்பத்தி செய்யும் விளைப்பொருட்களுக்கு இலாபகரமான விலை கிடைக்காததால்தான் உழவர்கள்கடன்சுமையில் சிக்கி வாழ்க்கையை இழக்கிறார்கள். வேளாண் விளை பொருட்களுக்கு உற்பத்தி செலவோடு சேர்த்து கூடுதலாக 50 சதவீதம் விலை நிர்ணயிக்க வேண்டும்.

ஒரு மாதத்திற்கு 2 இலட்சம் டன் அரிசியை பொது வழங்கலுக்குத் தமிழ்நாடு அரசு இந்திய அரசிடமிருந்து வாங்குகிறது. அவை அனைத்தும் பஞ்சாப், அரியானா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் உற்பத்தியானவை. எட்டு கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாடு, தமிழ்நாட்டு உழவர்களுக்கு, தமிழ்நாட்டு வணிகர்களுக்கு சந்தையாக இல்லை; வெளி மாநிலங்களுக்குச் சந்தையாக இருக்கிறது.

எனவே, தமிழ்நாட்டு வேளாண் விளை பொருட்களுக்கு சந்தை மதிப்பு கிடைக்கும் வகையில் தமிழ்நாட்டைத் தனி உணவு மண்டலமாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு தனி உணவு மண்டலம் ஆனால், வெளி மாநில உணவுப் பொருட்கள் தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் தமிழ்நாட்டுச் சந்தைக்கு வர முடியாது. தமிழ்நாட்டுக்கு பற்றாக்குறையை உள்ள தவசங்களை (தானியங்களை) தமிழ்நாடு அரசு முடிவு செய்து, வெளி மாநிலங்களிலிருந்து வாங்கிக் கொள்ளலாம். ஏற்கெனவே, இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் ஒரு தனி உணவு மண்டலமாகத்தான் இருந்தது. பின்னர்தான் அந்நிலை மாற்றப்பட்டது.

தமிழ்நாட்டைத் தனி உணவு மண்டலமாக்கினால்தான், இங்குள்ள உழவர்களுக்கு இலாபகரமான விலை கிடைக்கும். வெளிச்சந்தையிலும் நெல்லுக்கு அதிக விலை கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உழவர்களும், பெண்களும் திரளாகப் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.












==============================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==============================
இணையம்:www.kaveriurimai.com
==============================
பேச: 76670 77075, 94432 74002
==============================

நாகூர் இந்திய அரசு பெட்ரோலிய ஆலை முற்றுகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் இந்திய அரசே!
காவிரிப்படுகைப் பெட்ரோலியத்தை எடுக்காதே!


நாகூர் இந்திய அரசு பெட்ரோலிய ஆலை
முற்றுகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது!


“காவிரி உரிமையைப் பாதுகாத்துத் தராத இந்திய அரசே காவிரிப் படுகையிலிருந்து பெட்ரோலியத்தை எடுக்காதே“  என்ற முழுக்கத்தை முன்வைத்து காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில் நேற்று (28.09.2015)காலை, நாகை மாவட்டம் – நாகூர் பனங்குடி இந்திய அரசு பெட்ரொலிய ஆலை முற்றுகையிடப்பட்டதில் ஆயிரக்கணக்கான உழவர்களும் உணர்வாளர்களும் கைது செய்யப்பட்டனர். 

“காவிரி உரிமையைக் காக்காத இந்திய அரசே – காவிரி பெட்ரொலை எடுக்காதே – காவிரி எங்கள் செவிலித்தாய்! காவிரி எங்கள் குருதி ஒட்டம்“ என்பன உள்ளிட்ட ஆவேச முழக்கங்களோடு காலை 10மணியளவில், நாகூர் – வாஞ்சூர் ரவுண்டானாவில பல்வேறு உழவர் அமைப்புகளைச் சேர்ந்த உழவர்களும்,தோழர்களும் திரளத் தொடங்கினர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வாகனங்களில் வந்த தோழர்களால் அச்சாலை முழுவதுமாக மக்கள் வெள்ளமாகக் காட்சியளித்தது. திட்டச்சேரி சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

அங்கிருந்து தொடங்கிய முற்றுகைப் பேரணிக்கு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார்.

பேரணியின் போது, கர்நாடக முதல்வர் சித்தராமையா, நடுவண் சட்ட அமைச்சர் சதானந்த கவுடா உருவப்படங்கள் எரிக்கப்பட்டன. ஆவேச முழக்கங்களை எழுப்பியவாறு வந்த தோழர்களை ஆலையின் வாயிலில் காவல்துறையினர் தடுத்தனர். காவல்துறை தடுப்புகளை உடைத்துக் கொண்டு முன்னேறிய தோழர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், தோழர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து, சாலை மறியல் செய்தனர். காவல்துறை அனைவரையும் கைது செய்வதாக அறிவித்து, அனைவரையும் தங்கள் வாகனங்களில் ஏற்றினர்.

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளர் திரு. காவிரி தனபாலன், தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், திருச்சி மாவட்டத் தலைவர் திரு. ம.பா. சின்னதுரை, தமிழ்த் தேசியப் பேரிக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், இந்திய தேசிய லீக் தேசிய பொதுச் செயலாளர் – முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் திரு. எம்.ஜி.கே. நிஜாமுதீன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அயனாவரம் சி. முருகேசன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் திரு. அருண் மாசிலாமணி, இந்திய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. சிமியோன் சேவியர்ராஜ், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் த. செயராமன்,மீத்தேன் கூட்டமைப்பு மன்னார்குடி ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் பாரதிச்செல்வன், கூடங்குளம் அணுஉலைக்கு எதிர்ப்புப் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் முகிலன், தமிழக உழவர் முன்னணிப் பொதுச் செயலாளர் திரு. தூருவாசன், துணைப் பொதுச் செயலாளர் திரு. தங்க. கென்னடி, துணைத் தலைவர் திரு. மு. கொள்ளிடம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. சிவப்பிரகாசம் பிள்ளை, கா.வி.பா.ச. நாகை மாவட்டச் செயலாளர் திரு. ஆர். இராசேந்திரன், கீழையூர் ஒன்றியச் செயலாளர் திரு. வீ. இராமசாமி,வேதாரணியம் வட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. ஒளிச்சந்திரன், ஒசூர் – தொழிலாளர் பாதுகாப்புப் பேரவை செயல் தலைவர் திரு. முரளி, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் லேனா குமார் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும், தோழர்களும் இதில் கலந்து கொண்டு கைதாகினர்.












கைதான தோழர்கள் நாகூரிலுள்ள பல்வேறு மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டு மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

காவிரி உரிமை மீட்புக் குழுவின் இப்போராட்டம், காவிரி உரிமை மீட்பில் உழவர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்தது.

==============================
செய்தி வெளியீடு
==============================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==============================
இணையம்:www.kaveriurimai.com
==============================
பேச: 76670 77075, 94432 74002
==============================

செப் - 28 - நாகூர் – பனங்குடி இந்திய அரசு பெட்ரோலிய ஆலை முற்றுகைப் போராட்டம்!



===================================
குறுவை போச்சு! சம்பாவுக்கும் ஆபத்து!!
===================================
காவிரி மேலாண்மை வாரியம்
அமைக்க மறுக்கும் இந்திய அரசே!
காவிரிப்படுகைப் பெட்ரோலியத்தை எடுக்காதே! 
===================================
காவிரி உரிமை மீட்புக் குழு நடத்தும்...
===================================
நாகூர் – பனங்குடி இந்திய அரசு 
பெட்ரோலிய ஆலை முற்றுகைப் போராட்டம்.! 
===================================
காலம்: செப்டம்பர் 28, 2015 திங்கள்
காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
===================================


கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கூறி செப்டம்பர் 1 முதல் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணை மதகுகளை அடைத்துவிட்டது. அடுத்த சில நாட்களில் மேட்டூர் அணை கதவுகளையும் அடைக்க வேண்டிய நிலை உருவாகப் போகிறது. டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி தொடங்கியுள்ள 16 இலட்சம் ஏக்கர் வேளாண்மையின் கதி என்ன? 

ஒரு மாநிலத்திற்கு மேற்பட்ட மாநிலங்களில் ஓடும் ஆறுகளில் சிக்கல்கள் எழுந்தால் அவற்றைத் தீர்க்க இந்திய அரசுக்கு பொறுப்பும் அதிகாரமும் உள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 262-இன்படியும், மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் தகராறுச் சட்டத்தின்படியும் காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய அதிகாரமும் பொறுப்பும் இந்திய அரசிடம் உள்ளது. 

நர்மதை, கிருஷ்ணா போன்ற ஆறுகளில் மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்கள் ஏற்பட்ட போது, தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் தீர்ப்புகளை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பக்ரானங்கல் அணை நீர்ப் பகிர்வில் ஏற்பட்ட சிக்கல்களைத் தீர்க்க இந்திய அரசு மேலாண்மை வாரியம் அமைத்து நிரந்தரத் தீர்வு கண்டுள்ளது.

காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை மட்டும் செயல்படுத்தவும் மேலாண்மை வாரியம் அமைக்கவும் இந்திய அரசு மறுப்பது ஏன்? தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து கர்நாடகத்தின் சட்ட விரோதச் செயல்களுக்கு இந்திய அரசு பக்க பலமாக இருப்பது ஏன்? 

தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் ஓரவஞ்சனையைக் கண்டித்துத் தமிழ்நாட்டில் பெரிய அரசியல் கட்சிகள் போராடவில்லை. எனவே, இந்திய அரசு மேலும் மேலும் துணிச்சல் பெற்று கர்நாடகத்தின் அட்டூழியங்களுக்குத் துணை போகிறது. 

கர்நாடக ஆட்சியாளர்களும் எதிர்கட்சி அரசியல்வாதிகளும் துணிந்து பொய் சொல்கின்றனர். கர்நாடகத்திலுள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஏமாவதி, ஏரங்கி உள்ளிட்ட அணைகளில் 70 டி.எம்.சி. தண்ணீர் இருக்கிறது. இதில் தமிழ்நாட்டிற்குரிய பங்குத் தண்ணீரைத் திறந்துவிட வேண்டியது சட்டப்படி கட்டாயம். ஆனால், தமிழ்நாட்டிற்குரிய நீரைத்திருடி வைத்துள்ளது கர்நாடகம். 

இந்த நிலையில் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் வேளாண்மையைக் காப்பாற்ற, காரைக்கால் உள்ளிட்ட 20 மாவட்டங்களுக்குரிய குடிநீரைக் காப்பாற்ற தமிழ் மக்கள் வீதிக்கு வந்து போராடுவது உடனடிக் கடமையாகும். 

வாழ்வா? சாவா? என்ற நிலையில் தற்காப்புப் போராட்டம் நடத்த, நாகூர் – பனங்குடி பெட்ரோலிய ஆலைக்கு வருமாறு தமிழ் மக்களை அன்புடன் அழைக்கிறோம்! 

நமது எழுச்சி இந்திய அரசை காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட தூண்ட வேண்டும். 

கோரிக்கைகள் :

1. இந்திய அரசே, காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு! சம்பா சாகுபடிக்கு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிடக் கர்நாடகத்திற்கு ஆணையிடு! 
2. காவிரிப் படுகையில் எந்தவகை மீத்தேனும் எடுக்காதே! 
3. கர்நாடகம் காவிரியில் புதிய அணைக் கட்டத் தடை விதி!





 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger