Home »
அறிக்கைகள்
,
காவிரி_உரிமை
,
காவிரி_சிக்கல்
,
விவசாயம்
» "காவிரி மேலாண்மை ஆணையமும் இந்திய அரசும் தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்வதையும் தமிழ்நாடு அரசு பாசாங்கு செய்வதையும் கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம்!" --- காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!
"காவிரி மேலாண்மை ஆணையமும் இந்திய அரசும் தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்வதையும் தமிழ்நாடு அரசு பாசாங்கு செய்வதையும் கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம்!" --- காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!
Posted by Nalla Sivam
Posted on 4:00 PM
with No comments
காவிரி மேலாண்மை ஆணையமும் இந்திய அரசும்தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்வதையும் தமிழ்நாடு அரசு பாசாங்கு செய்வதையும் கண்டித்து
தஞ்சையில் ஆர்ப்பாட்டம்!
=============================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் அறிக்கை!
================================
இன்று (11.8.2023) புதுதில்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு அரசு அதிகாரிகள் சந்தீப் சக்சேனாவும், சுப்பிரமணியமும் அக்கூட்டத்திலிருந்து வெளி நடப்புச் செய்துள்ளார்கள். கடந்த சூன் மாதத்திலிருந்து நடப்பு ஆகஸ்ட்டு வரை கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரில் 38 டிஎம்சி பாக்கி உள்ளது. அதைத் திறந்து விடவேண்டும் என்று தமிழ்நாடு அதிகாரிகள் ஆணையக் கூட்டத்தில் கோரியதாகவும், கர்நாடகம் மறுத்துவிட்டதாகவும் வெளிநடப்புக்கு அதிகாரிகள் காரணம் கூறியுள்ளார்கள்.
காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் தமிழ்நாட்டின் கோரிக்கைக்கு என்ன விடை சொன்னார்? ஆணையர் தலைவர்தானே கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும்! இன்று நடந்தது ஆணையத்தின் 22-வது கூட்டம். இதற்கு முன் நடந்த 21 கூட்டங்களில் எப்போதாவது, ஆணையம் தலையிட்டு, தமிழ்நாட்டிற்கு சட்டப்படி தரவேண்டிய தண்ணீரைக் கர்நாடகத்திடம் இருந்து வாங்கித் தந்திருக்கிறதா? இல்லை. இது வரை தமிழ்நாடு அரசு இந்திய அரசை வலியுறுத்தி தலையிடச் செய்து, தமிழ்நாட்டுக்கு நீர் கிடைக்கும் நீதியைப் பெற்றிருக்கிறதா? இல்லை.
இப்பொழுதுள்ள காவிரி ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தர் நடுநிலை தவறி, கர்நாடகத்தின் சட்டவிரோதச் செயல்களுக்குத் துணை போகிறார். இந்திய அரசு எஸ்.கே. ஹல்தரின் ஒருதலைச் சார்பை ஆதிரிக்கிறது. இந்த நிலையில், நிபந்தனை போட்டு, இந்த 22-வது ஆணையக் கூட்டத்தைப் புறக்கணிக்குமாறு காவிரி உரிமை மீட்புக்குழு 7.8.2023 தஞ்சையில் கூடிய போது, தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் வைத்து தீர்மானம் நிறைவேற்றியது.
ஆனால், தமிழ்நாடு அரசு காவிரி ஆணையக் கூட்டத்தில் கலந்து கொண்டு இப்போது வெளிநடப்பு செய்துள்ளது. ஆணையக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் காவிரி ஆணையம் தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட ஏற்பாடு செய்யவில்லை என்றால், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்போம் என்று அறிவித்திருக்கிறார். இவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இலட்சக் கணக்கான ஏக்கரில் கருகும் குறுவைப் பயிரைக் காப்பாற்ற உடனடியாகத் தண்ணீர் கொண்டுவர முடியுமா; அடுத்துத் தொடங்க வேண்டிய சம்பா சாகுபடிக்கு நீர் கிடைக்குமா என்பதெல்லாம் கேள்விக் குறிகளாக உள்ளன.
இந்திய அரசை அணுகி அழுத்தம் கொடுத்து காவிரி நீர் பெறுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறிவில்லை. இன்று புதுதில்லியில் வெளிநடப்புச் செய்த தமிழ்நாடு அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்ட செய்தியில் ஆணையத்தின் செயல்படாத் தன்மையை, ஒருதலைச் சார்பைச் சுட்டிக் காட்டாமல், கர்நாடகம் தண்ணீர் தர மறுத்ததால் வெளிநடப்புச் செய்தோம் என்று மட்டும் கூறியுள்ளார்.
காவிரி ஆணையம் மற்றும் இந்திய அரசு ஆகியவற்றின் துரோகம், தமிழ்நாடு அரசின் உறுதியற்ற, உரிமை உணர்வற்ற மேம்போக்கு நடவடிக்கைகள் மூன்றையும் கண்டித்து 22.8.2023 அன்று காலை 10.00 மணிக்கு தஞ்சை தலைமை அஞ்சலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
www.kaveriurimai.com
==========================
தலைப்புகள் :
அறிக்கைகள்,
காவிரி_உரிமை,
காவிரி_சிக்கல்,
விவசாயம்
0 கருத்துகள்:
Post a Comment