தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


Home » , » " மேக்கேதாட்டைத் தடுக்க சட்டமன்றத் தீர்மானம் பயனில்லை! மக்களே வீதிக்கு வாருங்கள்!"-- காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பளார் ஐயா பெ.மணியரசன் அறிக்கை!

" மேக்கேதாட்டைத் தடுக்க சட்டமன்றத் தீர்மானம் பயனில்லை! மக்களே வீதிக்கு வாருங்கள்!"-- காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பளார் ஐயா பெ.மணியரசன் அறிக்கை!


 மேக்கேதாட்டைத் தடுக்க
சட்டமன்றத் தீர்மானம் பயனில்லை!
மக்களே வீதிக்கு வாருங்கள்!
===========================================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பளார் ஐயா பெ.மணியரசன் அறிக்கை!
============================================

கர்நாடகத்தின் மேக்கேதாட்டு அணைத் திட்டத்திற்கு இந்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று கேட்டுக் கொள்ளும் தீர்மானம் தமிழ்நாடு சட்டப் பேரவையில் 21.03.2022 அன்று ஒருமனமாக நிறைவேற்றப்பட்டது. இதை முன்மொழிவதற்கு முன் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆற்றிய உரை 1967-லிருந்து இன்று வரை தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீர் உரிமையைத் தி.மு.க. ஆட்சியாலும், அ.இ.அ.தி.மு.க. ஆட்சியாலும் மீட்க முடிய வில்லை என்பதற்கான ஒப்புதல் வாக்கு மூலமாக உள்ளது.

“அண்ணா ஆட்சியிலிருந்து மு.க.ஸ்டாலின் ஆட்சி வரை - இதுவரை காவிரி உரிமையை மீட்க முடியவில்லை; என்று தணியும் காவிரித் தாகம்; நமது கொள்ளுப் பேரன் காலம் வரை காவிரிச் சிக்கல் தீராதோ என்கிற கவலை ஏற்பட்டுள்ளது” என்றெல்லாம் துரைமுருகன் பேசியுள்ளார்.

ஆனால் கடந்த காலங்களில் காவிரி உரிமையை மீட்டதாக தி.மு.க.வினரும் அ.இ.அ.தி.மு.க.வினரும் மாறி மாறி “வெற்றி முழக்கங்கள்“ எழுப்பியுள்ளார்கள். வெற்றி விழாக்கள் கொண்டாடி உள்ளார்கள்.

வாஜ்பாயி தலைமை அமைச்சராக இருந்த போது, 1998 ஆகத்து மாதம் 7,8 இரு நாட்கள் அவர் தலைமையில் கர்நாடகமும் தமிழ்நாடும் காவிரி ஒப்பந்தம் போட்டன. அப்போது தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி. கலைஞர் கருணாநிதி முதலமைச்சர்: அந்த ஒப்பந்தம் தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளைப் பறி கொடுக்கிறது என்று அப்போதே எமது தமிழ்த் தேசியப் பேரியக்கம் (அப்போது தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி) எச்சரித்தது; கண்டனம் செய்தது.

அந்த ஒப்பந்தப்படி அமைக்கப்பட்ட காவிரி ஆணையத்தின் தலைவர், இந்தியத் தலைமை அமைச்சர்; தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், பதுச்சேரி மாநிலங்களின் முதலமைச்சர்கள் உறுப்பினர்கள். அந்த ஆணையக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து உடன்பாடு (Consensus) ஏற்பட்டால்தான் எந்த முடிவும் எடுக்க முடியும் என்பது நிபந்தனை. தண்ணீர்ப் பகிர்வை அறிவித்துச் செயல்படுத்தும் தற்சார்பு அதிகாரம் அந்த ஆணையத்திற்குக் கிடையாது. “எலி பிடிக்காதது பூனையா, அதிகாரம் இல்லாதது ஆணையமா?” என்று கேட்டு அதை எதிர்த்து மாநாடும் கூட்டங்களும் நடத்தினோம். தஞ்சை பெசன்ட் அரங்கத்தின் வெளித் திடலில் மேடை போட்டு நடந்த மாநாட்டில் தமிழக விவசாய சங்கத் தலைவர் டாக்டர் எம்.ஆர் சிவசாமி அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் ஐயா கி.வீரமணி அவர்கள், காவிரி உரிமை போராளி மூத்த வழக்கறிஞர் ஐயா பூ.அர.குப்புசாமி அவர்கள், விவசாயிகள் சங்கத் தலைவர் ஐயா கோபால தேசிகன் அவர்களும் மற்றும் ஒத்த கருத்துள்ள இயக்கத்தின் தலைவர்களும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் நானும் கண்டன உரையாற்றினோம்.

ஆனால் இந்த ஒப்பந்தத்திற்காக தஞ்சாவூர் திலகர் திடலில் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்குப் பாராட்டுக் கூட்டம் ஏற்பாடு செய்து, “காவிரி கொண்டான்” என்று பட்டம் கொடுக்கச் செய்தார்கள்.

அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் நாள் காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு வந்தது. அது தமிழ் நாட்டிற்குக் கர்நாடகம் திறந்து விட வேண்டிய தண்ணீரை மேலும் குறைத்து 192 டி.எம்.சி. ஆக்கியது. கர்நாடகத்தின் பாசனப் பரப்பை 11.05 இலட்சம் ஏக்கரிலிருந்து 22 இலட்சம் ஏக்கர் வரை உயர்த்தியது. அதையும் வரவேற்ற அப்போதைய முதல்வர் கருணாநிதி. “ஞாயத் தீர்ப்பு; ஆறுதல் அளிக்கிறது” என்று செய்தியாளர்களிடம் கூறினார். “மகிழ்ச்சி, மகிழ்ச்சி” என்று கொண்டாட்ட முழக்கம் எழுப்பினார் அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன். இருவரும் அப்போது புதுதில்லியில் இருந்தார்கள். இடைக்காலத் தீர்ப்பு 205 டி.எம்.சி; இறுதித் தீர்ப்போ 192 டி.எம்.சி. அதையும் ஞாயத் தீர்ப்பு என்றார்கள்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினர் இறுதித் தீர்ப்பு நகலை எரித்துக் கைதானோம். பல்வேறு உழவர் அமைப்புகளும் அத்தீர்ப்பை எதிர்த்துப் போராடின. அதன் பிறகு அத்தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மனு போட்டது தி.மு.க. ஆட்சி.

ஆனால் அந்தத் தீரப்பையும் அரசிதழில் வெளியிட்டுச் செயல்படுத்த மறுத்தது மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரசு ஆட்சி. அந்தக் காங்கிரசு ஆட்சியில் கூட்டணி அமைச்சர்களாக இருந்தனர் தி.முக.வினர்.

பின்னர் 2011-இல் முதல்வரான செயலலிதா வற்புறுத்தலின் பேரில், மன்மோகன் சிங் ஆட்சி 2013-இல் காவிரித் தீர்ப்பாய இறுதித் தீர்ப்பை இந்திய அரசின் அரசிதழில் வெளியிட்டது. ஆனால் செயல்படுத்தும் ஆணையம் அமைக்க மறுத்துவிட்டது.
உச்சநீதிமன்றம் 16.02.2018 அன்று அளித்தத் தீர்ப்புப்படி 18.05.2018-இல் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம், 177.25 டி.எம்.சி.யாகக் குறைக்கப்பட்ட காவிரி நீரை தமிழ்நாட்டிற்குப் பெற்றுத் தரவில்லை. ஆனால் ஒவ்வொரு ஆணையக் கூட்டத்திலும் மேக்கேதாட்டு அணைக்கான அனுமதியை நிகழ்ச்சி நிரலில் ஒரு பொருளாக முன்வைக்கிறது. ஒரு தலைச்சார்பான அந்த ஆணையத் தலைவர் ஹல்தரை நீக்கவோ, அந்த ஆணையத்தைக் கலைத்து, புதிய ஆணையம் அமைக்கவோ அ.இ.அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிகள் கோரிக்கை வைக்கவில்லை. இப்போதைய சட்டமன்றத் தீர்மானமும் அவ்வாறு கோரவில்லை.

“நீங்கள் யோக்கியனா, நான் யோக்கியனா என்று பேசுவதை விட்டுவிட வேண்டும் “ என்று இப்போது பேசுகிறார் துரைமுருகன். “நமது காலத்தில் இந்த காவிரி பிரச்சனையைத் தீர்த்து வைக்காவிட்டால், பின்னர் வரும் சமுதாயம் நம்மைக் காரி துப்பும்” என்கிறார்.

இவ்வளவு தீவிரமாகப் பேசி, மேக்கேதாட்டு தீர்மானத்தை முன்வைத்தனர். அனைத்துக் கட்சிகளும் ஆதரித்த அத்தீர்மானம் மறுபடியும் இந்திய அசுக்கு வேண்டுகோள் வைத்து, மேக்கேதாட்டை அனுமதிக்காதீர் என்ற கோரிக்கையுடன் முடிந்துவிட்டது.

தமிழ்நாடு தழுவிய மக்கள் எழுச்சிப் பேரணி; ஆர்ப்பாட்டம் போன்ற எந்த செயல் திட்டத்தையும் அத்தீர்மானம் முன்வைக்கவில்லை.

ஐம்பதாண்டுகளுக்கு மேலாகக் காவிரிச் சிக்கலில் எதையும் சாதிக்க முடியவில்லை. தமிழ்நாட்டுக்கு வராமல் காவிரி நீரை தடுக்க கர்நாடக அரசு புதிது புதிதாக கட்டிய அணைகளை தமிழ்நாட்டு ஆட்சியாளர்களாலும், கட்சிகளாலும் தடுக்க முடியவில்லை. இந்திய அரசின் சூழ்ச்சிகளைத் தடுக்க முடியாத தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஆட்சிகளையோ, அக்கட்சிகளையோ மீண்டும் எதிர்பார்த்து, செயலற்றுத் தமிழ்நாட்டு மக்கள் இருந்தால், மேக்கேதாட்டு அணையைக் கர்நாடகம் கட்டி முடித்து விடும். அப்படித்தான் 1970 களில் ஏமாவதி, ஏரங்கி, கபினி, இலட்சுமண தீர்த்தா முதலிய சட்ட விரோத அணைகளைக் கட்டி தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீர் வராமல் தடுத்துள்ளது. இந்த அணைகள் கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு அரசும் தஞ்சை மாவட்ட உழவர்கள் அமைப்பும் உச்சநீதி மன்றத்தில் 1971-இல் போட்ட வழக்கை, அன்றைய தலைமை அமைச்சர் இந்திராகாந்தி கேட்டுக் கொண்டதற்கு இணங்கி, வழக்குகளை 1972-இல் திரும்பப் பெற்றார் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

மேக்கேதாட்டு கட்டப்பட்டுவிட்டால் ஒரு சொட்டு நீர் மேட்டூர் வராது.
தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் காவிரி நீர் உரிமை நீர் ஆகும். அது குடிநீராக, பாசன நீராக நம் உயிரோடு கலந்துள்ளது. தமிழ்நாடு தழுவிய அளவில் மக்கள் திரள் எழுச்சியை உருவாக்க வேண்டும். “இனப் பாகுபாடு காட்டும் இந்திய அரசே மேக்கேதாட்டை தடுத்து நிறுத்து” என்று முழங்கி தமிழ்நாடு தழுவிய அளவில் மக்கள் ஆயிமாயிரமாய் அணிவகுக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================

Share this video :

0 கருத்துகள்:

Post a Comment

 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger