Home »
அறிக்கைகள்
,
காவிரி_உரிமை
» "மேக்கேதாட்டில் அணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கிவிட்டது! தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது...?"-- காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை!
"மேக்கேதாட்டில் அணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கிவிட்டது! தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது...?"-- காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை!
Posted by Nalla Sivam
Posted on 8:00 PM
with No comments
மேக்கேதாட்டில் அணை கட்ட
கர்நாடக அரசு நிதி ஒதுக்கிவிட்டது!
தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது?
=======================================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை!
=======================================
கர்நாடக அரசு 2022-2023 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் மேக்கே தாட்டில் அணைகட்ட ரூபாய் 1000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. நிதி நிலை அறிக்கையை முன்வைத்து சட்டப் பேரவையில் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, தமிழ்நாடு அரசு எதிர்த்தாலும் இந்திய அரசு ஒப்புதல் பெற்று அணைகட்டியே தீருவோம் என்று உறுதிபடக் கூறியுள்ளார்.
சட்டவிரோத மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு மோடி அரசு ஒவ்வொரு கட்டத்திலும் துணை நிற்பதை பார்த்து வந்துள்ளோம். ஆனால் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி காலத்திலும் இப்போது தி.மு.க ஆட்சிகாலத்திலும் சட்ட விரோத மேக்கே தாட்டு அணை கட்டப்படாமல் தடுத்து நிறுத்த உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அணை கட்ட விடமாட்டோம் என்று பொத்தாம் பொதுவில் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் அறிக்கை வெளியிடுவது தொடர் சடங்காகிவிட்டது.
கர்நாடகத்துக்கு ஆதரவாக செயல்படும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தரை பணிநீக்கம் செய்யவேண்டும் என்ற ஒரு கோரிக்கையைக் கூட தமிழ்நாடு அரசு முன்வைக்கவில்லை. மேக்கேதாட்டு அணைக்கு தடை வித்திக்கக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் போட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த வழக்கை விரைவு படுத்துவதற்கு சட்ட முயற்சிகள் எதையும் தமிழ்நாடு அரசு செய்யவில்லை.
சட்டத்திற்குப் புறம்பாகக் கர்நாடக அரசு மேக்கேதாட்டில் அணைக்கட்ட மோடி அரசு துணை போகிறது. இந்த அநீதியைக் கண்டித்து தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகள் மற்றும் அனைத்து உழவர் அமைப்புகள் சார்பில் வெகு மக்கள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட சனநாயக போராட்டங்களை நடத்த தமிழ்நாட்டு ஆளும் கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ முன்முயற்சி எடுக்கவில்லை. தி.மு.க.வும் அ.தி.மு.கவும் காவிரி சிக்கலில் ஒருவரை எதிர்த்து ஒருவர் இலாவணி கச்சேரி நடத்திக் கொண்டுள்ளன.
1970-களில் அன்றைய ஒன்றிய காங்கிரசு ஆட்சியின் மறைமுகத் துணையோடு கர்நாடகம் சட்டவிரோதமாக ஹேமாவதி, ஹேரங்கி, கபினி அணைகளைக் கட்டியதை நாம் அறிவோம். அதனால் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தண்ணீரைக் கர்நாடகம் தடுத்துக் கொண்டு நமக்குப் பேரிழப்புகள் உண்டாக்கியுள்ளதை நாம் அறிவோம்.
தமிழ்நாட்டின் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் ஆதாரமாய் உள்ள காவிரி உரிமையைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் முன்வரவேண்டும்; ஆட்சியாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================
தலைப்புகள் :
அறிக்கைகள்,
காவிரி_உரிமை
0 கருத்துகள்:
Post a Comment