========================================
காவிரி டெல்டா மாவட்டங்களில் - மார்ச் - 28 அன்று
========================================
காவிரி அணை கட்ட நிதி ஒதுக்கிய...
கர்நாடக அரசின் பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம்!
========================================
காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு!
========================================
காவிரி டெல்டா மாவட்டங்களில் வரும் மார்ச் 28 ஆம் நாள், காவிரியின் குறுக்கே அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசின் வரவு செலவுத் திட்ட நகலை எரிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்துள்ளது.
காவிரிச் சிக்கல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க, காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம், நேற்று(16.03.2016) மாலை, தஞ்சையில் நடைபெற்றது.
தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, மூன்று மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திரு. வளிவளம் மு. சேரன் தலைமையேற்றார். காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த.மணிமொழியன், திருச்சி மாவட்டத் தலைவர் திரு. ம.ப.சின்னத்துரை,
காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு. காவிரி தனபாலன், தமிழக உழவர் முன்னணி செயற்குழு உறுப்பினர் திரு. சி.ஆறுமுகம், ஏரிப்பாசன - கால்வாய்ப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. புரவலர் விசுவநாதன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஆலோசகர் பொறியாளர் கோ. திருநாவுக்கரசு, தென்பெண்ணை கிளை வாய்க்கால் கோரும் உழவர் அமைப்பு ஆலோசகர் திரு. ஒசூர் கோ.மாரிமுத்து, மூத்த பொறியாளர்கள் சங்கத் தலைவர் திரு. திருச்சி செயராமன், தமிழ்த் தேசியப் பேரியக்க மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் திரு. அயனாவரம் சி. முருகேசன், மனித நேய மக்கள் கட்சி வணிகப்பிரிவுத் தலைவர் திரு. கலந்தர், இந்திய சனநாயகக் கட்சி மாவட்டத் தலைவர் திரு. சிமியோன் சேவியராஜ், விடுதலைத் தமிழ்ப்புலிகள் பொறுப்பாளர் திரு. புலவர் தங்கராசு உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது. அதை தடுக்க விவசாயிகள் பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் காவிரி பிரச்சினையில் மேலும் சிக்கல் ஏற்படுத்தும் வகையில், மேக்கேத்தாட்டுவில் அணை கட்டுவதற்கான திட்டப்பணிகளுக்காக கர்நாடக அரசு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தனது பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.
மேலும் அங்கு அணை கட்டுவதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடமிருந்து தடையில்லா சான்று பெறவில்லை.
இப்படி சட்டவிரோதமாக மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுத்து வரும் கர்நாடக அரசை கண்டித்தும், அணை கட்டுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வருகிற 28-ந் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்ட தலைமையிடங்களில் கர்நாடக அரசின் பட்ஜெட் நகலை எரிக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
மேலும் அடுத்த மாதம்(ஏப்ரல்) 5-ஆம் நாள், விவசாய பிரதிநிதிகள் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். அப்படி அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவர்களை பதவி விலகக் கோரி வலியுறுத்துவோம்.
இவ்வாறு தோழர் பெ.மணியரசன் தெரிவித்தார்.
==============================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==============================
இணையம்:www.kaveriurimai.com
==============================
பேச: 76670 77075, 94432 74002
==============================
0 கருத்துகள்:
Post a Comment