காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு கடந்த 2007-ல் வெளியானது. அதில் ஆண்டுதோறும் தமிழகத்துக்கு காவிரியில் 192 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்றும் ஜூன் மாதம் 10 டிஎம்சி, ஜூலையில் 34 டிஎம்சி, ஆகஸ்டில் 50 டிஎம்சி, செப்டம்பரில் 40 டிஎம்சி என 12 மாதங்களுக்கும் எவ்வளவு தண்ணீர் தரவேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.
6 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரியில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்தும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி வந்தார். ஆனால் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
இதனால் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தற்காலிக கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த 17-ந் தேதி பிரதமருக்கு மீண்டும் கடிதம் எழுதிய ஜெயலலிதா உடனடியாக வாரியம் மற்றும் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிலையில் தற்காலிக காவிரி மேலாண்மை குழுவை மத்திய அரசு அமைத்தது. அதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
0 கருத்துகள்:
Post a Comment