Home »
»
Posted by Nalla Sivam
Posted on 1:00 PM
with No comments
பாசனக் கால்வாய் தூர்வாரும் பணிகளில் கமிஷன்கேட்டு தி.மு.க.,வினர் கோஷ்டி மோதல்! பணிகள் பாதிப்பு!
==========================================================
காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர்
ஐயா பெ. மணியரசன் அறிக்கை!
==========================================================
தஞ்சை மாவட்டத்தில் ஆற்று நீர்க் கால்வாய்களைத் தூர்வருவதற்காக ரூ 20 கோடியே 45 இலட்சம் தமிழ்நாடு பொதுப்பணித் துறை நிதி ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தை தஞ்சை மாவட்டத்தில் 27.04.2023 அன்று அமைச்சர்கள் துரை. முருகன், கே.என். நேரு, அன்பில் மகேசு பொய்யாமொழி ஆகியோர் நேரில் வந்து பூதலூர் ஆனந்த காவேரிக் கால்வாயில் தொடங்கி வைத்தனர்.
அந்த ஆனந்த காவேரி தூர்வாரும் ஒப்பந்தம் எடுத்தவர் பூதலூர் பகுதியைச் சேர்ந்த தி.மு.க., காரர் தாம்! ஆனால், தி.மு.க., வில் இதே வட்டாரத்தைச் சேர்ந்த இன்னொரு கோஷ்டியினர் இந்த ஒப்பந்த வேலைக்கு தங்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் கமிஷன் தொகை தர வேண்டும் என்று கோரி, மேற்படி ஒப்பந்தக்காரரை வேலை செய்ய விடாமல் தடுத்து வந்தனர். தி.மு.க., கோஷ்டிகளிடையே சமரசம் செய்ய முடியவில்லை. மொத்தம் 6 கி.மீட்டர் வேலையில் இதுவரை 2 கிலோ மீட்டர் மட்டுமே தூர்வாரும் பணி முடிந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
இந்நிலையில் 19.05.2023 அன்று இரவு எதிர்க் கோஷ்டியினர் மேற்படி ஆனந்த காவேரியில் தூர்வாரும் பணிக்காக நிறுத்திவைக்கப்படிருந்த பொக்லின் எந்திரத்தை அடித்துச் சேதப்படுத்தியதுடன் பொக்லைனில் உள்ள முக்கியமான பாகங்களைத் திருடிச் சென்றுவிட்டார்கள் என்று சில நபர்கள் பெயரையும் சுட்டிக்காட்டி நடவடிக்கை கோரி வெண்ணாறு – வெட்டாறு பகுதி உதவிப் பொறியாளர் பூதலூர் காவல் நிலையத்தில் எழுத்து வடிவில் புகார் 20.05.2023 அன்று கொடுத்துள்ளார்.
தி.மு.க., வினர் தங்களின் தன்னலத்திற்காகக் கோஷ்டிச் சண்டைப் போட்டுக் கொண்டு உழவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான அரசு திட்டத்தைச் செயல்படுத்தவிடாமல் தடுத்து பொக்லைன் எந்திரத்தையும் சேதப்படுத்தியுள்ளார்கள். மூன்று அமைச்சர்கள் தொடங்கி வைத்த நாளில் இருந்து தி.மு.க., வினரின் கோஷ்டிச் சண்டை தொடர்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் இந்தச் சிக்கலிலும் இது போல் டெல்டாவில் மற்ற இடங்களில் நடைபெறும் பாசன மேம்பாட்டு வேலைகளிலும் தி.மு.க.,வினர் கமிஷன் கேட்டு கோஷ்டிச் சண்டை போடுவதைத் தவிர்க்கவும் இவ்வேலைகளை சூன் மாதம் தண்ணீர் திறப்புக்குள் முடிக்கவும் உரியவாறு நடவடிக்கை எடுக்குமாறு காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் கேட்டுகொள்கிறேன்.
==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
www.kaveriurimai.com
==========================
0 கருத்துகள்:
Post a Comment