தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


Home » , » "மேக்கேதாட்டு அணைக்கு இந்திய அரசு அனுமதி அளிக்க முடிவு : மக்களவையில் அமைச்சர் ஒப்புதல்!"-- காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!

"மேக்கேதாட்டு அணைக்கு இந்திய அரசு அனுமதி அளிக்க முடிவு : மக்களவையில் அமைச்சர் ஒப்புதல்!"-- காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!


மேக்கேதாட்டு அணைக்கு இந்திய அரசு
அனுமதி அளிக்க முடிவு :
மக்களவையில் அமைச்சர் ஒப்புதல்!
========================================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் அறிக்கை!
========================================


நாடாளுமன்ற மக்களவையில் 07.02.2022 அன்று கர்நாடகத்தைச் சேர்ந்த மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சி உறுப்பினர் பிரஜ்வால் ரேவன்ணா மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி கொடுப்பது பற்றிக் கேட்ட வினாவுக்கு, சுற்றுச்சூழல் – வனத்துறை மற்றும் பருவநிலைத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, இந்திய அரசு அனுமதி கொடுப்பதற்கான முயற்சியில் இருக்கிறது என்று விடை அளித்துள்ளார்.

ஒன்றிய அரசின் நீராற்றல் துறையும், காவிரி மேலாண்மை ஆணையமும் கர்நாடக அரசின் வரைவு செயலாக்க அறிக்கையை ஏற்றுக் கொண்ட பின், மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதிப்பது குறித்து ஒன்றிய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலைத் துறை முடிவு செய்யும் என்று அஸ்வினி சௌபே கூறியுள்ளார்.

நடைமுறை உண்மை என்னவெனில், ஒன்றிய நீராற்றல் துறை ஏற்கெனவே மேக்கேதாட்டு அணைக்கான வரைவு செயலாக்க அறிக்கையைத் தன்னளவில் ஏற்றுக் கொண்டதுடன், காவிரி மேலாண்மை ஆணையத்தை ஏற்கச் செய்வதற்காக, அதற்கு அனுப்பி வைத்துள்ளது. அதன்பிறகு, காவிரி மேலாண்மை ஆணையம் ஒவ்வொரு கூட்டத்திலும் மேக்கேதாட்டு அணைக்கு ஒப்புதல் தெரிவிப்பதை தனது பொருள் நிரலில் வலிந்து சேர்த்து வருகிறது. தமிழ்நாட்டு அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவிப்பதால் – அது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாமல் ஆணையத்திடம் நிலுவையில் உள்ளது.

இப்போது, சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலைத் துறை அமைச்சகம் அனுமதி தருவதற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் மட்டுமே பாக்கியாக உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

மேக்கேதாட்டு அணை ஒப்புதல் பற்றி விவாதிக்க முடியாது, அதற்கு ஒப்புதல் தரக்கூடாது என தமிழ்நாடு தடுத்தால் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தையே நடத்த மாட்டோம் என்று காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் சௌமித்ர குமார் ஹல்தர் கூறாமல் கூறுவதுபோல், கடந்த திசம்பரிலிருந்து காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை மூன்று முறை தேதி குறித்துவிட்டு, காலவரம்பின்றி ஒத்தி வைத்து விட்டார்.

இப்போது, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக உள்ள சௌமித்ர குமார் ஹல்தர் இதற்கு முன் ஒன்றிய நீராற்றல் துறையின் தலைவராக இருந்தவர் என்பதும், இவர்தாம் மேக்கேதாட்டு ஒப்புதலுக்கு, அதன் வரைவு செயலாக்க அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி வைத்தவர் என்பதும் நாடறிந்த உண்மை!

மேக்கேதாட்டு அணை கட்டினால் கர்நாடகத்தின் காட்டு உயிரினங்கள் வாழும் 2,925.50 எக்டேர் நிலமும், 1869.50 எக்டேர் காப்புக் காடுகளும், ஐந்து கிராமங்களும் நீரில் மூழ்கும் என்று கர்நாடக அரசு அளித்த வரைவு செயலாக்க அறிக்கை கூறுவதையும் அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே எடுத்துக் கூறுகிறார். ஆனாலும், அனுமதி அளிப்போம் என்று விடையிறுத்துள்ளார்.

மிகை நீர் மற்றும் குடிநீர் அணை என்று மேக்கேதாட்டு அணைக்குப் புனை பெயர் வைத்துள்ளார்கள். இந்த அணையின் கொள்ளளவு 67.15 ஆ.மி.க. (டி.எம்.சி.) காவிரியில் கர்நாடக, மற்றும் மேட்டூர் அணைகள் நிரம்பி 67.15 ஆ.மி.க. அளவுக்கு மிகை நீர் கடலில் கலந்த வரலாற்றைக் கடந்த 60 ஆண்டு காலத்தில் ஒரு தடவை கூட கண்டதில்லை. நடப்புக் காவிரித் தண்ணீர் ஆண்டில் வரலாறு காணாத பெருமழை பெய்து, காவிரியின் மிகை நீர் கடலில் கலந்தது. அதன் அளவு 42 ஆ.மி.க. மட்டுமே! இவ்வளவு பெருமழை பெய்த இந்த ஆண்டும் தமிழ்நாட்டிற்கு மாதாமாதம் திறந்துவிட வேண்டிய காவிரி நீரைக் கர்நாடக அரசு அந்தந்த மாதத்தில் திறந்து விடவில்லை.

எனவே, மேக்கேதாட்டில் அணை கட்டப்பட்டுவிட்டால் ஒரு சொட்டுக் காவிரி நீர் கூடக் கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு வராது. தமிழ்நாட்டுக் குடிநீரையும் பாசன நீரையும் காவு கொள்ள இந்திய – கர்நாடக பா.ச.க. ஆட்சிகளின் சதித் திட்டத்தை முறியடிக்கத் தமிழ்நாடு அரசு என்ன எதிர்வினை ஆற்றப் போகிறது? த.நா. முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.

காவிரி உரிமைச் சிக்கல் டெல்டா மாவட்டங்களின் உழவர்களுக்கு மட்டும் உரியதல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக் குடிநீர் மற்றும் உணவு உற்பத்திக்கான சிக்கல் என்பதையும், தமிழினத்தின் உரிமைச் சிக்கல் என்பதையும் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொண்டு, கிளர்ந்து எழுந்து போராட வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================

Share this video :

0 கருத்துகள்:

Post a Comment

 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger