விதிகளுக்கு முரணாக மேட்டூர் தண்ணீரை தமிழ்நாடு அரசு விரையமாக்குவது ஏன்? காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி!
மேட்டூர் அணையிலிருந்து கடந்த 31.03.2019 முதல் “குடிநீருக்காக” என்று சொல்லி 8,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதற்கு முன்னர் “குடிநீருக்காக” 8,000 கன அடி தண்ணீர் திறந்துவிட்டதில்லை. கடந்த காலத்தில் குடிநீர் பற்றாக்குறைக்காக அதிகபட்சமாக 2,000 கன அடி திறந்துவிட்டிருக்கிறார்கள்.
இந்த 8,000 கன அடி தண்ணீர் - காவிரிப் பாசன வரம்பிற்கு உட்படாத சாகுபடி நிலங்களுக்கு இந்தக் கோடை காலத்தில் திருப்பி விடப்படுகிறதோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. மேட்டூரில் இருக்கின்ற சேமிப்புத் தண்ணீரை விதிமுறைகளுக்குப் புறம்பாக திறந்துவிட்டு காலி செய்து விட்டால், குறுவை சாகுபடிக்கு நீர் சேமிப்பு இருக்காது!
வழக்கமாக, பருவமழை காலத்தில் மேட்டூரில் தேங்கியுள்ள மிச்ச நீரை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான், கர்நாடகத்திலிருந்து வர வேண்டிய தண்ணீரில் ஓரளவைப் பெற்று குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணைத் திறக்கப்பட்டு வந்தது. கடந்த பருவமழை அதிகமாக இருந்ததால், மேட்டூர் அணையில் மார்ச்சு இறுதி வாக்கில் 64 அடி உயரத்திற்குத் தண்ணீர் இருந்தது.
அந்த சேமிப்பைக் காலி செய்கின்ற வகையில், 8,000 கன அடி திறந்துவிட்டதைக் கண்டித்து, கடந்த 02.04.2019 அன்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தஞ்சையில் தொலைக்காட்சி ஊடகத்தினரை சந்தித்து நானும், காவிரி உரிமை மீட்புக் குழு பொறுப்பாளர்களான ஐயனாபுரம் முருகேசன் அவர்களும், மணிமொழியன் அவர்களும் 8,000 கன அடி திறப்பதை நிறுத்த வேண்டும், 2,000 கன அடி திறந்துவிட்டாலே குடிநீருக்குப் போதும் என அறிக்கை கொடுத்தோம்.
அதன்பிறகு, 03.04.2019 முதல் மேட்டூரில் திறந்துவிடப்படும் அளவு 6,000 கன அடியாகக் குறைக்கப்பட்டாலும், இதுவும் அதிகமான வெளியேற்றம்தான். குறைக்கப்பட்ட அளவு போதாது! கிடுகிடுவென்று மேட்டூர் நீர் மட்டம் குறைந்து வருகிறது. இந்த விகிதத்தில் மேட்டூர் அணை நீர் மட்டம் குறைந்துவந்தால், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இருக்குமா என்பது மட்டுமல்ல, கடும் கோடைக்காலத்தில் குடிநீருக்குக்கூட தண்ணீர் இல்லாத நிலை உருவாகும்.
கடந்த 2018 திசம்பரிலிருந்து மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி திசம்பர் மாதம் 7.3 டி.எம்.சி., சனவரி மாதம் – 3 டி.எம்.சி., பிப்ரவரி மாதம் - 2.3 டி.எம்.சி., மார்ச்சு மாதம் – 2.3 டி.எம்.சி. – ஆக மொத்தம் 14.9 டி.எம்.சி. தண்ணீர் வந்திருக்க வேண்டும். இந்தத் தண்ணீரைத் திறந்துவிடும்படி காவிரி மேலாண்மை ஆணையத்தைத் தமிழ்நாடு அரசு ஏன் வலியுறுத்தவில்லை?
இதில் கடமை தவறிய தமிழ்நாடு அரசு, குறைந்தளவு இருக்கின்ற மேட்டூர் நீரையும் விதிகளுக்கு முரணாகத் திறந்து விரையமாக்குவது வன்மையான கண்டனத்திற்குரியது. எனவே, வெளியேற்றும் நீரின் அளவை 2,000 கன அடிக்குள் வைக்குமாறும், மாத வாரியாக கர்நாடகத்திலிருந்து பெற வேண்டிய காவிரி நீரைத் திறந்துவிட மேலாண்மை ஆணையத்தைத் வலியுறுத்திப் பெறுமாறும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
0 கருத்துகள்:
Post a Comment