காவிரி உரிமைப் போராட்டத்தில் சிறையில் உள்ளஅனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்! தமிழகக் காவல்துறை கண்ணாடி இழைத்தடிகளைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள்!
உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடுமாறு இந்திய அரசை வலியுறுத்தியும், தனது சட்டக்கடமையை நிறைவேற்ற மறுக்கும் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியைக் கண்டித்தும் தமிழ்நாடெங்கும் மக்கள் பல வடிவங்களில் எழுச்சிப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இப்போராட்டங்களின் ஒரு பகுதியாகத்தான் சென்னையில் 10.04.2018 அன்று ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை தள்ளி வைக்கக் கோரிய போராட்டமும், 12.04.2018 அன்று தமிழ்நாடு வந்த இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்களுக்குக் கருப்புக் கொடி காட்டும் ஆர்ப்பாட்டமும், காவிரி உரிமை மீட்புக் குழு உட்பட பல்வேறு கட்சிகள் - அமைப்புகள் ஆகியவற்றால் நடத்தப்பட்டன.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் சென்னை அண்ணா சாலை, அண்ணா சிலைப் பகுதியிலிருந்து எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கம் (சேப்பாக்கம் ஸ்டேடியம்) நோக்கி வரும் ஊர்வலத்தினரை குறிப்பிட்ட இடம் வரை காவல்துறை அனுமதிக்க வேண்டும் என்றும் ஊர்வலமாக வருவோர் அந்த எல்லை தாண்டிப் போவதில்லை என்றும் சமரச உடன்பாடொன்று வாய்மொழியாக ஏற்கப்பட்டது.
ஆனால் ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைக்கு முன்பாகவே காவல்துறையினர் தடுப்புக் கட்டைகள் போட்டிருந்தனர். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், தமிழின உணர்வுமிக்கத் தனி நபர்களும் பெரும் எண்ணிக்கையில் பேரணியாகப் புறப்பட்டு வந்த போது தடுப்புக் கட்டைகளை அகற்றிவிட்டு முன்னேறினர். அப்போது காவல் துறையினர் கடுமையாகத் தடியடி நடத்தினர்.
தடி என்பது மரத்தடி அல்ல; கண்ணாடி இழைத்தடி (Fibre Glass)! கண்ணாடி இழைக் குண்டாந் தடியால் தாக்கப்பட்ட பலர் இரத்தம் வழிய வழிய ஓடினர். சிலருக்குத் தலையில் காயம், சிலருக்குக் கைகளில் காயம்! இரமேசு என்ற இளைஞரின் விலாவில் ஒரு காவலர் கண்ணாடி இழைத்தடியால் தாக்கியதில் – அவருடைய விலா எலும்பு ஒடிந்து, நுரையீரல் பகுதிக்குள் ஒடிந்த எலும்பு போனதால் காற்றடைப்பு (Airlog) ஏற்பட்டு அவருக்கு மூச்சுத் திணறல் உண்டானது. அவர் சென்னை அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சிகிச்சை பெற்று வருகிறார்.
திரைப்பட இயக்குநர்கள் மு. களஞ்சியம் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் கண்ணாடி இழைக் குண்டாந்தடியால் கடுமையாகக் காவலர்களால் தாக்கப்பட்டனர். இடது மார்பகத்தில் கடுமையான காயத்துடன் சென்னை தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார் களஞ்சியம்!
காவல்துறையின் தடியடியால் பதற்றமான சூழ்நிலை நிலவியபோது நாம் கைதுக்கு உட்படுவோம் என்று கூறி என் தலைமையில் முதல் அணியினரை அழைத்துக் கொண்டு காவல்துறை வண்டியில் ஏறினேன். பின்னர் பெரும்பாலோர் காவல் வண்டியில் ஏறிவிட்ட நிலையில், இயக்குநர் பாரதிராஜா, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தமிமுன் அன்சாரி (மனித நேய சனநாயக் கட்சி), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), நடிகர் கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை) ஆகியோர் தாமாகவே காவல் வண்டிகளில் ஏறி கைதானார்கள்.
தலைவர்கள் கைதாகிச் சென்றபின் எஞ்சியிருந்த இளைஞர்கள், உணர்வாளர்கள் மீது காவல்துறை கடுமையாகத் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்து விரட்டியது.
இவ்வாறானப் பின்னணியில்தான் பேரணியில் வந்த ஓர் இளைஞர் ஒரு காவலரைப் பிடித்துக் கையால் குத்தித் தாக்கியுள்ளார். இந்த இளைஞரின் இச்செயலை நாங்கள் யாரும் தூண்டவுமில்லை, ஆதரிக்கவுமில்லை. தமிழின உரிமைக்காகப் பேரணியில் வந்தவர்கள். உணர்ச்சிக் கொந்தளிப்பில் – தடைகளை அகற்றியதற்காக பேரணியில் வந்தவர்களையெல்லாம் காவலர்கள் கடுமையாகத் தாக்கி படுகாயப்படுத்தி விட்டார்களே என்ற தனிநபர் ஆத்திரத்தின் விளைவுதான் காவலர் ஒருவர் தக்கப்பட்டது. அதையும் நாங்கள் ஏற்கவில்லை. அதற்காக திரு. சீமான் மீது கொலை முயற்சி (307) வழக்கு போட்டதும், பாரதிராஜா உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பேரணியில் வந்த 780 பேர் மீது வழக்குப் பதிந்திருப்பதும் சரியல்ல!
ஆனால் 10.04.2018 அன்று பேரணியில் வந்தோரை கடுமையாகத் தாக்கியதோடு, காவல் துறையினரின் அத்துமீறல் நிற்கவில்லை. நாம் தமிழர் கட்சித் தொண்டர்களின் வீடுகளில் சென்று காவல்துறையினர் இளைஞர்களைக் காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று விசாரிப்பதும், துன்புறுத்துவதும் சிலரை சிறையில் தள்ளுவதும் அத்துமீறிய செயலாகும்!
நரேந்திர மோடி அவர்களுக்குக் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் 12.04.2018 அன்று கைதாகி பல்லாவரம் திருமண மண்டபம் ஒன்றில் நாங்கள் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது “சீமான் மற்றும் அவர் கட்சியைச் சேர்ந்த 19 பேரை மட்டும் சிறைக்கு அனுப்ப வேண்டும், மற்றவர்களை விடுவிக்கிறோம்” என்று காவல் அதிகாரிகள் கூறினார்கள். திருவாளர்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி, மற்றும் நான் உள்ளிட்ட அனைவரும் வெளியேற மறுத்து, எங்களையும் சிறைக்கு அனுப்புங்கள் என்றோம். பேச்சுவார்த்தை நடத்தி இரவு 9 மணிக்கு எங்கள் அனைவரையும் விடுவித்தார்கள்.
நாங்கள் மட்டும் விடுவிக்கப்படாமல் இருந்த செய்தியறிந்து அங்கு வந்து முழக்கங்கள் எழுப்பிய மனிதநேய சனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களும், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனித நேய சனநாயக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, தமிழ்த்தேசியப் பேரியக்கம், தமிழர் விடுதலைக் கழகம், மற்றும் பல்வேறு தமிழ் இன உணர்வு மற்றும் இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த பலரும் காவிரி உரிமைப் போராட்டத்தையொட்டி இன்னும் தமிழ்நாடெங்கும் சிறைகளில் உள்ளார்கள். இதனால் காவல்துறைக்கும் மக்களுக்குமிடையே முரண்பாடும் பதற்றமும் நிலவுகின்றன.
1. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக இதில் தலையிட்டு காவிரி மேலாண்மை வாரியம் கோரி சனநாயகப் போராட்டங்களில் ஈடுபட்ட போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்து சுமூக நிலையை உண்டாக்க வேண்டும்.
2. வன்முறையில் ஈடுபடாத இரமேசு, களஞ்சியம், வெற்றிமாறன் உள்ளிட்ட பலரை தாக்கி எலும்புமுறிவு ஏற்படுத்தியும், காயப்படுத்தியும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. காவல் துறையினர் கண்ணாடி இழைத்தடிகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்ய வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 76670 77075, 94432 74002
==========================
==========================
0 கருத்துகள்:
Post a Comment