தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


Home » , , , » தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்களை சிறையில் அடைக்காவிட்டால் தமிழ்நாட்டில் இதற்கு எதிர்வினைகள் உருவாவதைத் தவிர்க்க முடியாது! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்களை சிறையில் அடைக்காவிட்டால் தமிழ்நாட்டில் இதற்கு எதிர்வினைகள் உருவாவதைத் தவிர்க்க முடியாது! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்களை
சிறையில் அடைக்காவிட்டால் தமிழ்நாட்டில் இதற்கு எதிர்வினைகள் உருவாவதைத் தவிர்க்க முடியாது!காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
தோழர் பெ. மணியரசன் அறிக்கை! 


பெங்களுருவில் நேற்று (10.09.2016) தமிழ் இளைஞர் ஒருவர், கன்னட வெறியர்களால் அடித்து, மிதித்து, மண்டியிடச் செய்து, மன்னிப்புக் கேட்க வைத்து, கர்நாடகாவிற்கு “ஜே” போட சொல்லி, அத்துடன் நிறைவடையாமல் மேலும் மேலும் தாக்கி செத்த நாயை இழுப்பது போல், இழுத்துச் சென்று தெருவில் போட்டுவிட்டுப் போன கொடும் காட்சியை ஊடகங்களில் கண்டு உள்ளம் கொதிக்கிறது.

அந்தத் தமிழ் இளைஞன் செய்த குற்றம் என்ன? சட்டப்படி தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய காவிரி நீரை அடைத்து வைத்துக் கொண்டுள்ள கர்நாடகம், உச்ச நீதிமன்றம் ஒரு பிரிவு தண்ணீரை தமிழ்நாட்டிற்குத் திறக்க உத்தரவிட்டவுடன் அதைக் கண்டித்து கர்நாடகாவில் முழு அடைப்பை நடத்தியது. அதை முகநூலில் இந்தத் தமிழ் இளைஞர் விமர்சித்திருந்ததாகக் கூறுகிறார்கள். இதனால் ஆத்திரமடைந்து பழிவாங்குவதற்கு அந்த இளைஞனை, பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டமுள்ள சாலையில் மேற்கண்டவாறு தாக்கி சித்திரவதை செய்து இழிவுபடுத்தியுள்ளார்கள்.

நாம் தொடர்ந்து சொல்லி வருவது, காவிரிச் சிக்கல் கன்னடர்களைப் பொறுத்தவரை தண்ணீர் சிக்கல்ல, அது இனச்சிக்கல் என்பதாகும். கன்னடர்களைப் பொறுத்தவரை தமிழ் இனத்தை பழிவாங்கும் சிக்கல்தான் காவிரிச் சிக்கல். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களும், அனைத்து கட்சிகளும், உழவர் இயக்கங்களும் இந்த உண்மையை உணர வேண்டும்.

காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை 1991 திசம்பரில், இந்திய அரசு அரசிதழில் வெளியிட்ட போது, அப்போதிருந்த பங்காரப்பாவின் காங்கிரசு ஆட்சி, அதைக் கண்டித்து கர்நாடகத்தில் முழு அடைப்பு நடத்தியது. அந்த முழு அடைப்பின்போது, கன்னட வெறியர்கள் காலங்காலமாக கர்நாடகத்தில் வாழ்ந்து வரும் அப்பாவித் தமிழர்கள் பலரை இனப்படுகொலை செய்தார்கள். தமிழர்களின் வீடுகளை, வணிக நிறுவனங்களை பல்லாயிரக்கணக்கில் எரித்தார்கள்; சூறையாடினார்கள். தமிழ்ப் பெண்களை மானபங்கப்படுத்தினார்கள். 2 இலட்சம் கர்நாடகத் தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு ஓடி வந்தார்கள். எந்த வித ஆத்திரமூட்டலிலும் ஈடுபடாத கர்நாடகத் தமிழர்கள் அப்போது கன்னட இன வெறியர்கள் இவ்வாறு தாக்கப்பட்டார்கள்.

இப்பொழுது உச்ச நீதிமன்றம் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரை, திறந்துவிட ஆணையிட்ட உடன், உடனே ஆத்திரமடைந்து மாநில அரசின் ஆதரவுடன் முழு அடைப்பு நடத்தி, தமிழ்நாட்டு பதிவெண் கொண்ட வாகனங்களைத் தாக்கி சேதப்படுத்தினார்கள். அடுத்த கட்டமாகத் தமிழ் இளைஞரைத் தாக்கியுள்ளார்கள். அந்த இனவெறிக் கயவர்களை இதுவரை கர்நாடகக் காவல்துறை கைது செய்யவில்லை. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. மாறாக, தமிழர்களுக்கு எதிரான கன்னட இனவெறித் தாக்குதலை கர்நாடக அரசும், காவல்துறையும் மறைமுகமாக ஊக்குவிக்கின்றன.

தமிழ் இளைஞர் கொடூரமாகத் தாக்கி இழிவுபடுத்தப்பட்டக் காட்சியை தொலைக்காட்சியிலும், சமூக வலைத்தளங்களிலும் பார்த்த இலட்சக்கணக்கானத் தமிழ்நாட்டு இளைஞர்கள் இரத்தம் கொதித்துப் போய் உள்ளார்கள். இது 1991 திசம்பர் அல்ல! 2016 செப்டம்பர் என்பதை கன்னட இனவெறியர்களுக்கு எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறேன்.

கர்நாடக அரசு அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கவில்லையென்றால், இது போன்ற தாக்குதல்கள் தொடர்ந்தால். அதற்கான எதிர்வினைகள் தமிழ்நாட்டிலும் பீறிட்டுக் கிளம்பும். வினை விதைத்தவன் வினையை அறுவடை செய்ய வேண்டிய நிலை தமிழ்நாட்டில் உருவாகும். எனவே, கர்நாடக அரசு உடனடியாக தமிழ் இளைஞர்களைத் தாக்கிய கயவர்களை உரியக் குற்றப்பிரிவின் கீழ் கைது செய்து, சிறையிலடைக்க வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டு அரசு, அண்டை மாநிலங்களில் தமிழினம் தாக்கப்படும் போது வேடிக்கைப் பார்க்கக் கூடாது. தமிழ் இளைஞனைத் தாக்கியக் கயவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க, தமிழ்நாடு அரசு கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டிலுள்ள மக்களும், இயக்கங்களும் காவிரிச் சிக்கலில் தமிழின உரிமைச் சிக்கலாக உணர்ந்து, இன அடிப்படையில் ஒன்று திரள வேண்டும் என்ற உண்மையை இனியாவது உணர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
Share this video :

0 கருத்துகள்:

Post a Comment

 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger